அமாவாசையை விட பௌர்ணமி தினத்துக்கு அதிக பலன்கள் உண்டு ஏன் தெரியுமா?

அமாவாசையை விட பௌர்ணமி தினத்துக்கு அதிக பலன்கள் உண்டு ஏன் தெரியுமா?
X

பௌர்ணமி பூஜை அனைவருக்குமே வேண்டியதை வழங்கிடும் என்றாலும் பெண்களுக்கு கூடுதல் பலன்களை அளிக்கக் கூடியது. கன்னிப்பெண்களுக்கு நல்ல மணவாழ்க்கை அமைந்திடவும், திருமணமான பெண்களுக்கு மாங்கல்ய பாக்கியம் நிலைத்திடவும், குழந்தைப்பேறு கிடைத்திடவும், வீட்டில் ஐஸ்வர்யம் நிலைத்திடவும் இந்த பௌர்ணமி பூஜையை செய்வது நல்லது.

ஒவ்வொரு பௌர்ணமியும் விசேஷம் என்றாலும் சூரியனின் சக்தி உச்சத்தில் இருக்கும் போது வருகிற சித்ரா பௌர்ணமி கூடுதல் விசேஷம்.

சித்திரை மாத பௌர்ணமியில் மஞ்சள் கலந்த சாதம், பானகம், ஏலம், கிராம்பு, பச்சைக் கற்பூரம் சேர்ந்த தாம்பூலம் நைவேத்தியம் செய்திட குழந்தை பாக்கியம் கிட்டும் என்பது ஐதீகம்.

விசாக நட்சத்திரத் துடன் கூடிய வைகாசி பௌர்ணமியில் எலுமிச்சை சாதம், சீரகமும், சர்க்கரையும் கலந்த சாதம், விளாம்பழம் நைவேத்தியம் செய்து அம்பிகையை வழிபட பிறவி எடுக்காத புண்ணிய கதி அடையலாம்.

ஆனி மாத பௌர்ணமியில் வெள்ளெருக்கம்பூ, செண்பகப்பூக்களால் அர்ச்சனை செய்து மா,பலா,வாழை போன்ற முக்கனிகளையும், உளுத்தம் பருப்பு சாதத்தையும் நைவேத்தியம் செய்து வழிபட எடுத்த காரியம் அனைத்திலும் வெற்றி பெறலாம். மேலும், ஆனி மாதப் பௌர்ணமியில் சுமங்கலிகள் சாவித்திரி விரதத்தை கடைப்பிடித்து மாங்கல்ய பலம் அடையலாம்.

ஆடி பௌர்ணமியில் அம்பிகைக்கு பாலாபிஷேகம் செய்து, வாழைப்பழம் கலந்த சாதத்தை நைவேத்தியம் செய்திட இறைவியுடன் கலந்து விடும் புண்ணியப் பேறு அடையலாம்.

அவிட்ட நட்சத்திரத்துடன் கூடிய ஆவணி மாத பௌர்ணமியில் அம்பிகைக்கு நெய் சாதம் நைவேத்தியம் செய்து மனதார பூஜை செய்வதன் மூலம் தீராக் கடன்கள் தீர்ந்து நன்மை அடையலாம்.

புரட்டாசி மாத பௌர்ணமியில் மல்லிகைப் பூவால் அர்ச்சனை செய்து இளநீர் நைவேத்தியம் செய்து வழிபட சகல சௌபாக்கியங்களையும் பெறலாம்.

ஐப்பசி மாதப் பௌர்ணமியில் அன்னாபிஷேகம் செய்து மகிழம்பூ, வில்வத்தால் அர்ச்சித்து மிளகு சாதம், கரும்புச்சாறு நைவேத்தியம் செய்து வழிபட எல்லா காரியங்களிலும் வெற்றி கிட்டும்.

கார்த்திகை மாத பௌர்ணமியில் வெண் பொங்கல், நெய் பொங்கல் நைவேத்தியம் செய்து பிரார்த்தனை செய்தால் வாழ்வின் அனைத்து வளங்களையும் பெற முடியும்.

கார்த்திகை மாதப் பௌர்ணமியில் வீடுகளில் விளக்கேற்றி கார்த்திகை தீபத் திருவிழா கோலாகலமாக கொண்டாடுகிறோம். மங்கல வாழ்வு அமையும்.

மார்கழி மாதப் பௌர்ணமியில் தாமரைப்பூவால் அர்ச்சனை செய்து , களி நைவேத்தியம் செய்ய அம்பிகையின் பூரண அருளைப் பெறுவதோடு வாழ்வின் இன்னல்கள் நீங்கி வளம் பெறலாம்.

தை மாத பௌர்ணமியில் வில்வம், வெள்ளை தாமரைப்பூ, நந்தியாவட்டை பூக்களால் அர்ச்சனை செய்து பாயசம் நைவேத்தியம் செய்திட ஆயுள் விருத்தி உண்டாகும்.

மாசி மாத பௌர்ணமியில் சர்க்கரைப் பொங்கல் நைவேத்தியம் செய்திட விரும்பியது கிட்டும்.

பங்குனி மாத பௌர்ணமியில் தாமரைப்பூவால் அர்ச்சனை செய்து பருப்பும்,நெய்யும் கலந்த சாதம் நைவேத்தியம் செய்திட துயரங்கள் நீங்கப் பெறலாம். ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி தினத்தை சிறப்பான பண்டிகையாகவே வீடுகளில் கொண்டாடி வரும் இல்லங்கள் சுபிட்சம் பெறும்.

துன்பங்கள் தொலைய, துயரங்கள் நீங்க ,நம்மைப் பீடித்த தோஷங்கள் மறைய, வாழ்வில் நிம்மதி நிலைக்க சித்ரா பௌர்ணமி தினத்தில் விரதமிருந்து அம்பிகையை வழிபட்டு அருளைப் பெறலாம்.

Next Story
Share it