பத்மாவத் - திரைவிமர்சனம்

பத்மாவத் - திரைவிமர்சனம்
 | 

பத்மாவத் - திரைவிமர்சனம்


நட்சத்திரங்கள்: ஷாஹித் கபூர், ரன்வீர் சிங், தீபிகா படுகோனே, அதிதி ராவ் ஹிடாரி, ஜிம் சர்ப், அனுபிரியா, மஞ்சித்சிங், ரஜாமுரத், இசை: சஞ்சித் பல்ஹரா-சஞ்சய் லீலா பன்சாலி, ஒளிப்பதிவு: சுதீப் சட்டர்ஜி, இயக்கம்: சஞ்சய் லீலா பன்சாலி. 

இஸ்லாமிய மன்னன் அலாவுதீன் கில்ஜி, சித்தூர் மன்னனின் மனைவியான இளவரசி பத்மாவதி மீது கொண்ட மோகத்தால் ஏற்படும் விபரீதங்களை சொல்லும் சரித்திரக் கதை. 

 சிங்கள நாட்டில்உள்ள முத்து வகைகளை கொண்டு வருவதற்காக இலங்கை வரும் ராஜபுத்திர வம்சத்தை சேர்ந்த சித்தூர் மன்னர் ரத்தன், சிங்கள மன்னனின் அழகிய மகள் இளவரசி பத்மாவதியை சந்திக்கிறான். காட்டில் மான் வேட்டையாடிய பத்மாவதி செலுத்திய ஒரு அம்பு, குறிதவறி ரத்தன் சென் தோள்பட்டையை பதம் பார்க்கிறது. இளவரசி பத்மாவதி மன்னிப்பு கேட்பதுடன், ஒரு குகையில் வைத்து மன்னன் ரத்தன் சென்னுக்கு சிகிச்சையும் அளிகிறார். சிகிச்சை காலத்தில் ரத்தன் சென் - பத்மாவதி இடையே காதல் அரும்பி, இருவரும் காந்தர்வ மணம் புரிகின்றனர். 

பிறகு, இளவரசியை மனைவியாக்கி சித்தூருக்கு மன்னன் அழைத்து வர, சித்தூர் மக்களும் பத்மாவதியை தங்களது இளைய ராணியாக ஏற்றுகொண்டு அவர் மீது பாசமும். மரியாதையும்  காட்டுகின்றனர். ஆனால், அரண்மனை தலைமை ராஜகுருக்கு, பத்மாவதியின் அழகு மதிமயங்க செய்கிறது. மன்னனும், இளவரசியும் அந்தப்புரத்தில் இருக்கும்போது அதை மறைந்திருந்து பார்க்கிறார் ராஜகுரு. 

இதையறிந்த மன்னன், இளவரசியின் விருப்பத்திற்கு இணங்க ராஜகுருவை நாடு கடத்த உத்தரவிடுகிறார். அவமானத்துடன் வெளியேறும் ராஜகுரு, பெண் பித்தரான டெல்லி சுல்தான் அலாவுதீன் கில்ஜியிடம் சரணடைந்து, சித்தூர் ராணி பத்மாவதியின் ஒப்பில்லாத அழகை புகழ்ந்து, அவனுக்கு காமவெறியை தூண்டுகிறான். அலாவுதீன் கில்ஜியின் ஆசையை தூண்டி, சித்தூர் மீது படை எடுக்க வைத்து, அந்த சாம்ராஜ்யத்தையும், இளவரசி பத்மாவதியையும் அடைவதற்கு அலாவுதீன் கில்ஜியின் மூளையாக இருந்து செயல்படுகிறான் ராஜகுரு.

பத்மாவதியின் அழகை நேரில் பார்த்து பரவசப்பட வேண்டும் என்ற நோக்கத்தில் டெல்லியில் உள்ள தனது அரண்மனைக்கு குடும்பத்துடன் வருமாறு மன்னர் ரத்தன் செனுக்கு அலாவுதீன் ஓலை அனுப்புகிறான். அந்த அழைப்பை ஏற்க ரத்தன் சென் மறுத்ததால், ஆத்திரம் அடையும் அலாவுதீன் கில்ஜி, சித்தூர் சமஸ்தானத்தின்மீது போர் தொடுக்க முடிவு செய்து தனது படையுடன் சென்று சித்தூர் நகரை முற்றுகையிடுகிறான். தன் மனைவி மீது மோகம் கொண்டு படையெடுத்து வந்த அலாவுதீன் கில்ஜியை, ரத்தன் சிங் வெற்றி பெற்றாரா? அல்லது அலாவுதீன் கில்ஜி தனது ஆசைப்படி பத்மாவதியை அடைந்தாரா? என்பது மீதிக் கதை.


இஸ்லாமிய மன்னன், இந்து மதத்தை சேர்ந்த அதுவும் அடுத்தவனின் மனைவியான பத்மாவதி மீது கொண்ட மோகத்தை பற்றிய கதை என்பதால் இந்தப் படத்துக்கு எதிராக வடநாட்டில் போராட்டங்கள் வெடித்தன. படத்தின் நாயகி தீபிகா படுகோனே தலைக்கு கோடிக்கணக்கில் விலை வைத்து அச்சுறுத்தினர். இதனால் மிரண்டு போன தீபிகா படுகோனே,வெளியே தலை காட்டாமல் இருந்தார். அவருக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. எனவே, படத்தின்  வெளியீட்டை யும் தள்ளி வைத்தனர். தற்போது பிரச்னைகள் ஒரு வழியாக தீர்ந்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுக்குப் பிறகு, தணிக்கை குழு சர்ச்சையான காட்சிகளை வெட்டி படத்தின் தலைப்பை ‘பத்மாவத்’ என்று மாற்றிய பின்பு  படம், இந்தியா முழுவதும் இன்று திரைக்கு வருகிறது. இவ்வளவு களேபரங்களை கடந்த போதிலும் வட நாட்டில் இன்னும் சில இடங்களில் கலவரம் நடக்கவே செய்கிறது. 

ஆனால், இவ்வளவு ஆர்ப்பாட்டம் செய்யவேண்டிய அவசியமே இல்லாத அளவுக்கு கத்தி மேல் நடப்பதைப் போன்று ஒவ்வொரு காட்சியிலும் ராஜபுத்திர வம்சத்தையும், அவர்களது புகழையும் சிறப்பாக காட்டி கச்சிதமாக திரைக்கதை அமைத்திருக்கிறார் இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி. அதிலும், கலாச்சாரம் காக்கும் விதமாக கிளைமாக்ஸ் காட்சியை அமைத்திருப்பது அருமையோ அருமை. அலாவுதீன், சித்தூர் ராணியை நினைத்து உருகும் சில காட்சிகள் படத்தில் இருந்ததாகவும், அதனால் பிரச்னை ஏற்பட்டதாகவும் கூறப்பட்டது. அவை நீக்கப்பட்ட பிறகும் கதை சிறிதும் பிசிறு இல்லாமல் பிரமாண்டமாக அமைந்துள்ளது சிறப்பு. அரண்மனைகள், சிப்பாய்கள், அரங்க அமைப்புகள், போர்க்களக் காட்சிகள் என சரித்திர காலத்தை கண்முன்னே கொண்டுவந்திருக்கிறார் கலை இயக்குநர்.   

கதையின் நாயகி பத்மாவதியாக வரும் தீபிகா படுகோனேவின் அழகும், இளமையும், பாந்துவமான நடிப்பும் பை அந்தக் கதாப்பாத்திரத்தை தாங்கிப் பிடிக்கிறது. ஒரு இளவரசிக்கே உரிய அமைதி, அடக்கம், மன்னனுக்கே ஆலோசனை தரும் மதி நுட்பம், காமுகனை எதிர்க்கும் துணிச்சல், கற்பு நிலை தவறாமை என தனது ஒவ்வொரு அசைவிலும் சித்தூர் ராணியாகவே வாழ்ந்திருக்கிறார் தீபிகா படுகோனே.  


கம்பீரமான நடை, மிடுக்கான உடை, வசீகரமானபேச்சு, வாள் வீச்சு, போர் தர்மம் மூலம் ராஜபுத்திர வம்சத்து சித்தூர் இளவரசனாகவே மாறியிருக்கிறார் நாயகன் ஷாகித் கபூர். மன்னன் அலாவுதீன் கில்ஜியாக, ஒரு மாவீரனாக, அடுத்தவன் மனைவியை அடையத் துடிக்கும் காமுகனாக, கரடு முரடான தோற்றத்தில் வந்து மிரள வைக்கிறார் ரன்வீர் சிங். ரன்வீர் சிங்கின் அடக்கமான மனைவியாக வரும் அதிதி ராவ் ஹிடாரி, பத்மாவதிக்கு உதவும் காட்சியில் மனதில் நிற்கிறார். கதையை முக்கிய திருப்பத்துக்கு திருப்பிவிடும்  ராஜ குருவாக வரும் ஜிம் சர்ப் சைலண்ட் வில்லன்.  அனுபிரியா, மஞ்சித்சிங், ரஜாமுரத் போன்ற நட்சத்திரங்களும் கதைக்கு கை கொடுக்கிறார்கள்..

சஞ்சித் பல்ஹரா-சஞ்சய் லீலா பன்சாலியின் பின்னணி இசை படத்திற்கு பலம். சுதீப் சட்டர்ஜியின் ஒளிப்பதிவில் சரித்திர காலம் கண்முன்னே அழகான காட்சிகளாக விரிகிறது. பல கண்டனங்கள், ஆர்பாட்டங்கள், தடைகளை தாண்டி வந்திருக்கும் 'பத்மாவத்' படத்துக்கு நம்ம ரேட்டிங் 3.5/5 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP