நிமிர் –திரை விமர்சனம்

நிமிர் –திரை விமர்சனம்
 | 

நிமிர் –திரை விமர்சனம்


நட்சத்திரங்கள்: உதயநிதி, பார்வதி நாயர், நமீதா பிரமோத், சமுத்திரக்கனி, மகேந்திரன், எம்.எஸ். பாஸ்கர், கருணாகரன், சண்முகராஜா, துளசி, கஞ்சா கருப்பு, இசை: அஜனிஷ் லோக்நாத்-தர்புகா சிவா, ஒளிப்பதிவு: என்.கே. ஏகாம்பரம், இயக்கம்: ப்ரியதர்ஷன், தயாரிப்பு: ரெட்ஜெயண்ட் மூவீஸ்    

மலையாளத்தில் திலீஷ் போத்தன் இயக்கத்தில் ஃபகத் ஃபாசில் நடித்து வெளிவந்த 'மகேஷிண்ட பிரதிகாரம்' படத்தின் ரீமேக் தான் ‘நிமிர்’.

தென்காசியில் ஃபோட்டோ ஸ்டுடியோ வைத்திருக்கும் உதயநிதியை, ஒரு தகராறில், பலர் முன்பு அடித்துத் துவைத்துவிடுகிறார் சமுத்திரக்கனி. அவரைத்  திருப்பி அடித்து வீழ்த்தும்வரை செருப்பு அணியப்போவதில்லை என சபதம் எடுக்கிறார் உதயநிதி. அதற்காக சிறப்புப் பயிற்சியெல்லாம் எடுத்து மல்லுக்கட்டத் தயாராக இருக்கும்போது, வேலைக்காக வெளிநாட்டு சென்றுவிடுகிறார் சமுத்திரக்கனி.  

இதற்கிடையே, போட்டோ எடுக்க வரும் கல்லூரி மாணவி நமீதா பிரமோத்தின் காதலில் விழுகிறார் உதயநிதி. பிறகு தான் தெரிகிறது, அவள் தனது எதிரி சமுத்திரக்கனியின் தங்கையென்று! அந்த சமயத்தில் சமுத்திரக்கனியும் வந்து சேர, அவரை திருப்பியடிக்க ஆவேசமாக கிளம்பும் உதயநிதியை தடுக்கிறார் நமீதா! காதலி பேச்சுக்கு கட்டுப்பட்டாரா? சமுத்திரக்கனியை அடித்துப் புரட்டியெடுத்து தனது சபத்தை நிறைவேற்றினாரா? காதலர்கள் சேர்ந்தார்களா? என்பது மீதிக் கதை.   

சில காட்சிகளை விட்டுவிட்டால், கேரளாவில் நடக்கும் கதையை, அப்படியே மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய தென்காசிக்கு கொண்டுவந்ததைத் தவிர, வேறு எதற்காகவும்  மெனக்கெடாமல் மலையாளப் பட காட்சிகளை அப்படியே 'மகேஷிண்ட பிரதிகாரம்' படம் அப்படியே பிரதி எடுத்திருக்கிறார் இயக்குநர் ப்ரியதர்ஷன்.

ஹீரோயிசம் இல்லாத, அடக்கிவாசிக்க வேண்டிய கதாப்பாத்திரத்தில், எந்த அலட்டலும் இல்லாமல் இயல்பான நடிப்பைக் காட்டியிருக்கிறார் உதயநிதி.    

துறுதுறுவென இருக்கும் காதலி நமீதா பிரமோத், தனது குறும்புத்தனமான நடிப்பால் மனதில் பதிகிறார். உதயநிதியைக் காதலித்துக் கழட்டிவிடும் பார்வதி நாயர் தனக்கு தந்த வேலையை சரியாக செய்திருக்கிறார். ஹீரோவின்  தந்தை மகேந்திரன், போட்டோக்கடை நடத்தும் எம்.எஸ். பாஸ்கர் இருவரும்   குணச்சித்திர நடிப்பைக்காட்டுகின்றனர். நண்பன் கருணாகரன் சில இடங்களில் சிரிக்க வைக்கிறார். நடிப்பில் வில்லத்தனத்தைக் காட்டும் சமுத்திரக்கனி, படத்துக்கு ஷார்ப்பான வசனத்தை எழுதியிருக்கிறார். துளசி, கஞ்சா கருப்பு,  சண்முகராஜா ஆகியோர் சில காட்சிகளில் வந்து போகின்றனர்.

தென்காசியின் அழகை தனது கேமராவில் அள்ளிவந்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் ஏகாம்பரம். இசை இரட்டையர்கள் அஜனிஷ் லோக்நாத்-தர்புகா சிவா இசையில், தாமரையின் வரிகளில் ‘நெஞ்சில் மாமழை’ பாடல் மனதை நனைக்கிறது. 

‘நிமிர்’ ரேட்டிங் 2.5/5


newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP