ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் 2020

பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர் கணிப்பில் 2020 புத்தாண்டு பலன்கள்
 | 

english-new-year-horoscope-2020

ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் 2020

கணித்தவர் : பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

நிகழும் மங்களகரமான ஸ்வஸ்திஸ்ரீவிகாரி வருஷம் தக்ஷிணாயணம் ஹேமந்த ரிது மார்கழி மாதம் 15ம் தேதி பின்னிரவு 16ம் தேதி முன்னிரவு, 01 ஜனவரி 2020,  புதன்கிழமையும் சுக்ல சஷ்டியும் சதய  நக்ஷத்ரமும் வ்யதீபாத நாமயோகமும் கௌலவ கரணமும் அமிர்தயோகமும் கூடிய சுபயோக சுபதினத்தில் உதயாதி இரவு 12 மணிக்கு கன்னியா லக்னத்தில் ரிஷப நவாம்சமும் மகர திரிகோணமும் கொண்டு ஆங்கிலப் புத்தாண்டு பிறக்கிறது.

ராசிநிலை - பாதசார விபரம்:
லக்னம் - ஹஸ்தம் 2ம் பாதம் - சந்திரன் சாரம்
சூரியன் - பூராடம் 1ம் பாதம் - சுக்கிரன் சாரம்
சந்திரன் - சதயம் 3ம் பாதம் - ராகு சாரம்
செவ்வாய் - விசாகம் 4ம் பாதம் - குரு சாரம்
புதன் - பூராடம் 2ம் பாதம் - சுக்கிரன் சாரம்
குரு - மூலம் 4ம் பாதம் - கேது சாரம்
சுக்கிரன் - திருவோணம் 3ம் பாதம் - சந்திரன் சாரம்
சனி - பூராடம் 3ம் பாதம் - சுக்கிரன் சாரம்
ராகு - திருவாதிரை 2ம் பாதம் - ராகு சாரம்
கேது - மூலம் 4ம் பாதம் - கேது சாரம்

ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் 2020


ராகுவின் ஆதிக்கம் பெற்ற எண்: 2020:
இந்த வருடத்தின் கூட்டு எண்: 2 + 0 + 2 + 0 = 4. நான்கு என்பது ராகுவின் ஆதிக்கம் பெற்ற எண். துர்க்கைக்கும் வாராகி தேவிக்கும் உகந்த எண் நான்காகும். ஆண்டு பிறக்கும் நேரத்தில் லக்னாதிபதி புதன் சுகஸ்தானத்தில் மிகப் பெரிய கூட்டணியுடன் அமர்ந்திருக்கிறார். லக்னாதிபதி புதன் சுகஸ்தானத்தில் கேது சாரம் பெற்றிருக்கிறார். லக்ன தொழில் அதிபதி புதனும் சுக சப்தமாதிபதி குருவும் சேர்க்கை பெற்றிருக்கிறார்கள். குடும்பாதிபதி பாக்கியாதிபதி சுக்கிரன் பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் இருக்கிறார். தொழில்காரகனான சனி சுக ஸ்தானத்தில் விரையாதிபதி சாரம் பெற்றிருக்கிறார். தொழில் வளர்ச்சி அடையும். பங்குசந்தைகள் நல்ல வளர்ச்சி காணும். பணம் சம்பந்தமான பிரச்சனைகள் அனைத்தும் மெல்ல மெல்ல சரியாகும். இந்த ஆண்டு நடைபெறும் ராகு கேது பெயர்ச்சிக்குப் பிறகு நாட்டின் பொருளாதார நிலைமை உச்ச நிலைக்கு செல்லும். ரியல் எஸ்டேட் துறை படிப்படியாக முன்னேற்றம் அடையும். அதிகமான திருமணங்கள் நடைபெறும். குழந்தைபிறப்பு விகிதம் அதிகமாகும். அதிகமான  கோவில்களுக்கு புணரமைப்பு நடந்து கும்பாபிஷேகங்கள் நடைபெறும்.  அரசாங்கம் ரீதியாக பிரச்சனைகள் அனைத்தும் சரியாகும். இந்தியாவிற்கு வெளிநாடுகளிலிருந்து அதிகமான பிரச்சனைகள் ஏற்படலாம். ராணுவம் பலம் பெற்று நாட்டைக் காப்பாற்றும். மழை வளம் சிறப்பாக இருக்கும். 

ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் 2020

இந்த ஆண்டு நடைபெறும் முக்கிய கிரக பெயர்ச்சிகள் - வாக்கிய பஞ்சாங்கப்படி:
ராகு கேது பெயர்ச்சி:
நிகழும் மங்களகரமான ஸ்வஸ்திஸ்ரீசார்வரி வருஷம் ஆவணி மாதம் 16ம் நாள் (01.09.2020) செவ்வாய்கிழமை அன்று ராகு பகவான் மிதுன ராசியிலிருந்து ரிஷப ராசிக்கும் - கேது பகவான் தனுசு  ராசியிலிருந்து விருச்சிக ராசிக்கும் பெயர்ச்சியாகிறார்கள்.

ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் 2020

குருப் பெயர்ச்சி:
நிகழும் மங்களகரமான ஸ்வஸ்திஸ்ரீசார்வரி வருஷம் ஐப்பசி மாதம் 30ம் நாள் (15.11.2020) ஞாயிற்றுக்கிழ்மை அன்று குரு பகவான் தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்கு மாறுகிறார். மகர ராசிக்கு பெயர்ச்சியாகும் குரு பகவான் தனது ஐந்தாம் பார்வையால் ரிஷப ராசியையும் - ஏழாம் பார்வையால் கடக ராசியையும் - ஒன்பதாம் பார்வையால் கன்னி ராசியையும் பார்க்கிறார்.

சனிப் பெயர்ச்சி:
நிகழும் மங்களகரமான ஸ்வஸ்திஸ்ரீசார்வரி வருஷம் மார்கழி மாதம் 14ம் நாள் (29.12.2020) செவ்வாய்கிழமை அன்று சனி பகவான் தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்கு மாறுகிறார். மகர ராசிக்கு மாறும் சனி பகவான் தனது மூன்றாம் பார்வையால் மீன ராசியையும் - ஏழாம் பார்வையால் கடக ராசியையும் - பத்தாம் பார்வையால் துலா ராசியையும் பார்க்கிறார்.
 

மற்றவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும், மரியாதை கொடுக்கும் மேஷ இராசி வாசகர்களே! நீங்கள் எதிலும் அறிவார்ந்து செயல்படுபவர். வெளிவட்டாரப் பழக்கங்களை விரும்பும் தாங்கள் ஒரு சிறந்த பண்பாளர். வார்த்தைகளில் நிதானம் மிக்கவர். தேவை இல்லாத இடங்களில் கருத்து கூற மாட்டீர்கள். யாரும் கேட்டால் மட்டுமே உதவி செய்வீர்கள். அதிலும் உடல் ஊனமுற்றோருக்கு அள்ளி வழங்குவீர்கள். முயற்சிகள் பல செய்து நல்ல செயல்களைச் செய்து சிறப்படைவீர்கள்.  குடும்பத்தில் சிறு சலசலப்புகள் ஏற்படும். வெளியில் கொடுத்திருந்த பணம் கைக்கு திரும்பி வரத் தாமதமாகும். இதனால் அத்தியாவசியத் தேவைகளுக்கு சிறிது கடன் வாங்க நேரிடலாம். சகோதர, சகோதரி வகையிலும் கருத்து வேறுபாடுகள் உண்டாகலாம். உங்களுக்குக் கீழ் பணிபுரிபவர்களும் உங்களுக்கு சிக்கல்களை ஏற்படுத்த நினைப்பார்கள். மற்றபடி மனதில் ஊக்கத்தை ஏற்படுத்திக்கொண்டு செயல்படுவீர்கள்.  உத்யோகஸ்தர்களுக்கு அலைச்சலும் வேலைப்பளுவும் அதிகரித்தாலும் உங்கள் வேலைகள் மேலதிகாரிகளின் பாராட்டுகளைப் பெறும். உங்களின் ஆற்றல் அதிகரிக்கும். அலுவலக ரீதியான பயணங்களால் பண வரவு உண்டாகும். அதேநேரம் சக ஊழியர்களை நம்பி எந்த வேலையையும் ஒப்படைக்க வேண்டாம். சிலருக்கு இந்த ஆண்டு விரும்பத்தகாத இடமாற்றங்கள் உண்டாகும். வியாபாரிகள் கொடுக்கல், வாங்கல் விஷயங்களில் அனுகூலமான பலன்களைக் காண்பீர்கள். தொழில் ரீதியாக புதிய திருப்பங்கள் ஏற்படும். புதிய சந்தைகளை நாடிச் செல்லும்போது அதீத கவனத்துடன் செயல்பட்டு காரியமாற்றவும். கூட்டுத்தொழில் புரிவோர் சற்று உஷாராக இருப்பது நல்லது. சந்தையில் போட்டிக்குத் தகுந்தவாறு விலையை நிர்ணயம் செய்து விற்றால் நல்ல வருமானத்தைப் பெற முடியும். அரசியல்வாதிகள் இந்த ஆண்டு பொதுச்சேவையில் அனுகூலமான திருப்பங்களைக் காண்பீர்கள். கட்சி மேலிடத்தின் பாராட்டைப் பெறுவீர்கள். இதனால் உங்களுக்கு புதிய பதவிகள் கிடைக்கும். எதிரிகளும் உங்களிடம் அடங்கியே நடப்பார்கள். கலைத்துறையினரைத் தேடிப் புதிய  ஒப்பந்தங்கள் வரும்.ஆனாலும் ரசிகர்களின் ஆதரவு குறைந்தே காணப்படும். எனவே ரசிகர் மன்றங்களுக்கு செலவு செய்து அவர்களை உற்சாகப்படுத்தவும். தொழிலில் கவனமும், செயல்பாட்டில் நிதானமும் தேவை. பெண்மணிகளுக்கு குழந்தைகளால் பெருமை உண்டாகும். அதேசமயம் கணவருடன் வாக்கு வாதங்கள் ஏற்படலாம். அதனால் பொறுப்புடனும், நிதானத்துடனும் நடந்துகொள்ளவும். மற்றபடி பொருளாதார நிலையில் எந்தக் குறைவும் ஏற்படாது. எனவே ஆடை , அணிகலன்களை வாங்கி மகிழ்வீர்கள். மாணவமணிகள் படிப்பில் கவனத்துடன் ஈடுபடவும். சிலர் முதல் தரம் வாங்குவார்கள். விளையாட்டிலும் வெற்றி பெறுவார்கள். அஸ்வினி: இந்த ஆண்டு காரியத்தடைகள் நீங்கி அனுகூலம் பிறக்கும். மதிப்பு மரியாதை சுமாராகவே இருக்கும். வீண் விவாதங்களைத்  தவிர்க்கவும். குடும்பத்தின் தேவைகள் பூர்த்தியாகும். செய்தொழிலில் எதிர்பார்த்த வருமானம் கிடைக்கும். நவீன பொருட்களை வாங்கி இல்லத்தை அலங்கரிப்பீர்கள். முன்பின் அறிமுகம் இல்லாதவர்களுக்கும் உதவி செய்து பெருமையடைவீர்கள். மற்றபடி அலைச்சல் தரும் வேலைகளைக் குறைத்துக்கொள்ளவும். அனாவசியப் பயணங்களையும் தவிர்க்கவும்.  பரணி: இந்த ஆண்டு புதிய வீடு வாங்க வாய்ப்பு உண்டு. குழந்தை பாக்கியம் கிடைக்கும். கணவன் மனைவி இடையே  அன்பு நீடிக்கும் என்றாலும் சிற்சில பிரச்சனைகள் வரத்தான் செய்யும். எனவே ஒருவருக்கொருவர் விட்டுக்  கொடுத்துப் போகவும். பல விஷயங்களை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். மறைமுக எதிர்ப்புகள் நீங்கும். வழக்கு விவகாரங்களில் திடீர் திருப்பங்கள் ஏற்படும். குறைந்த உழைப்பிலும் அதிக ஆதாயம் கிடைக்கும். கார்த்திகை: இந்த ஆண்டு உறவினர் வகையில் அதிக நெருக்கம் வேண்டாம். சிலர் தொழில் நிமித்தமாக குடும்பத்தை விட்டு பிரிய  நேரிடலாம். தூரத்தில் இருக்கும் உறவினரால் நன்மை ஏற்படும். கடினமாக முயற்சி செய்து உங்கள் தேவைகளை நிறைவேற்றிக் கொள்வீர்கள். உடல் ஆரோக்யம் சிறப்பாக இருக்கும். குடும்பத்திலும் மருத்துவச் செலவுகள் ஏற்படாது. யாரையும் புண்படுத்தாமல் உங்கள் அணுகுமுறையால் வெற்றி பெறுவீர்கள். பரிகாரம்: செவ்வாய்கிழமைதோறூம் அருகிலிருக்கும் முருகன் கோவிலுக்குச் சென்று வரவும். முடிந்தவர்கள் அருகிலிருக்கும் அறுபடை ஸ்தலங்களுக்குச் சென்று வாருங்கள்.  ’கந்த ஷஷ்டி கவசம்’ அன்றாடம் பாராயணம் செய்வது. “ஓம் சரவணபவ” என்ற மந்திரத்தை தினமும் 11 முறை சொல்லுங்கள். உங்கள் பிரார்த்தனைகள் நிறைவேறும்.  சொன்ன நேரத்தில் சொன்ன இடத்திற்கு வந்து சேர்ந்து பொறுப்புடன் நடந்து கொள்ளும் ரிஷப ராசி வாசகர்களே! நீங்கள் இராப்பகல் பாராமல் உழைப்பதில் வல்லவர். காசு விஷயத்தில் கறாராக இருப்பவர். வாழ்க்கைத்துணையை அனுசரித்துச் செல்பவர். தன்னை விட தங்கள் குழந்தைகள் நன்றாக வர வேண்டும் என்று விரும்புபவர்கள். வாக்கு வன்மையில் பிரச்சனை வரலாம். மற்றபடி உங்களின் ஆன்மிக சிந்தனைகள் மெருகேறும். புதிய ஆலயங்களைத் தேடிச் சென்று வழிபடுவீர்கள்.  குடும்பத்தின் வளர்ச்சியில் உங்களின் பங்களிப்பு பெருகும். உற்றார் உறவினர்களையும் நண்பர்களையும் அனுசரித்து நடந்துகொள்வீர்கள். அதேநேரம் எவரிடமும் அனாவசிய பேச்சு வேண்டாம். மற்றவர்களின் பேச்சுக்களையும், நடவடிக்கைகளையும் கூர்ந்து கவனித்து அதற்கேற்ப உங்களின் செயல்பாடுகளை வகுத்துக்கொள்ளவும். உத்யோகஸ்தர்கள் இந்த ஆண்டு ஓரளவுக்கு முன்னேற்றம் காண்பார்கள். மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். சக ஊழியர்கள் தக்க சமயத்தில் உதவுவார்கள். அதேநேரம் வேலைப் பளு அதிகரிக்கும். எனவே பொறுப்புடனும், நிதானத்துடனும் நடந்துகொள்ளுங்கள். அலுவலக ரீதியான பயணங்களைச் செய்ய நேரிடும். வியாபாரிகளுக்கு தொடர்ச்சியான லாபம் கிடைக்கும். அதிக முதலீடு செய்யாமல் வியாபாரத்தைப் பெருக்குவீர்கள். போட்டிகளை சாதுர்யத்துடன் சமாளிப்பீர்கள். உபரி வருமானத்தை எதிர்காலத்திற்காக சேமித்து வைப்பீர்கள். கணக்கு வழக்குகளை சரியாக வைத்துக்கொண்டு அரசாங்கத்திடம் சமர்ப்பிப்பீர்கள். உங்களுக்குக் கீழ் பணிபுரிபவர்களுக்கு தேவையான பயிற்சிகளை வழங்குவீர்கள். அரசியல்வாதிகள் மேலிடத்தின் பாராட்டுகளைப் பெறுவீர்கள். கட்சித் தொண்டர்களின் ஆதரவு நன்றாக இருக்கும். எவரையும் பகைத்துக்கொள்ளாமல் உங்கள் செயல்களைச் செய்து நற்பெயர் வாங்குவீர்கள். உங்கள் பேச்சுக்கு மதிப்பு உயரும். கலைத்துறையினருக்கு வாய்ப்புகள் குவியத் தொடங்கும். எனவே வாய்ப்புகளை நன்கு ஆராய்ந்து தேர்வு செய்ய வேண்டிவரும். சக கலைஞர்களின் உதவிகளையும், பாராட்டுகளையும் பெறுவீர்கள். எதிர்பார்த்த வருமானம் கிடைக்கும். பெண்மணிகளின் எண்ணங்கள் அனைத்தும் நிறைவேறும். திருமணம் தடைபட்டவர்களுக்கு இந்தக் காலகட்டத்தில் திருமணம் நடக்கும். உத்யோகமும் கிடைக்கும். புனிதப் பயணங்களை மேற்கொள்வீர்கள். குடும்பத்தில் முன்னேற்றம் ஏற்படும். முக்கியப் பிரச்னைகளில் மௌனம் சாதித்து பிரச்னைகள் பெரிதாகாமல் பார்த்துக் கொள்ளவும். மாணவமணிகள் படிப்பில் அலட்சியம் காட்டாமல், திட்டமிட்டபடி படித்து நல்ல மதிப்பெண்களைப் பெற முயற்சிக்கவும். மற்றபடி உங்கள் படிப்புக்கு அரசாங்கத்திடமிருந்து எதிர்பார்த்த மானியங்கள் கிடைக்கும். கார்த்திகை: இந்த ஆண்டு உத்தியோகம் பார்ப்பவர்களுக்கு வேலைப் பளு அதிகரிக்கும். ஆனாலும் வருமானத்தில்  எந்த குறையும் இருக்காது. உடன் பணிபுரிவோரிடம் அனுசரனையாக நடந்து கொள்ளவும். சிலர் எதிர்பாராத இடமாற்றத்தை சந்திக்கலாம். உங்களுக்கு கீழ் பணிபுரிபவர்களின் குறைகளைக் கண்டறிந்து தயவு தாட்சண்யமின்றி திருத்துவீர்கள். உங்களின் செயல்களுக்கு நண்பர்கள், கூட்டாளிகளிடம் வரவேற்பு கிடைக்கும். பெரியோரைத் தேடிச் சென்று அவர்களின் ஆசிகளைப் பெறுவீர்கள். ரோகினி: இந்த ஆண்டு சொந்தத்  தொழில் புரிவோர் சிறிது சிரத்தை எடுத்து உழைக்க வேண்டியிருக்கும். ஆனாலும் உழைப்புக்கேற்ற லாபம் கிடைக்கும்.  தொழில் நிமித்தமாக நீண்ட  தூரம் பயணம் போக வேண்டி வரும். நேர் வழியில் செயல்பட்டு வெற்றி பெறுவீர்கள். எதிர்பார்த்த அளவுக்கு வருமானம் கிடைக்கும். உங்களின் முடிவுகளை பயமின்றி செயல்படுத்துவீர்கள். குடும்பத்தினரை அனுசரித்து நடந்துகொள்வீர்கள். மிருகசீரிஷம்: இந்த ஆண்டு எதிரிகள் வகையில் அசட்டையாக இருத்தல் கூடாது.  புதிய  முதலீடுகளின் போது ஆலோசனைகள் அவசியமாகிறது. பணவிஷயத்தில் தொடர்ந்து அக்கறை தேவை. புறம் பேசுபவர்களை இனம் கண்டு ஒதுக்கவும். குடும்பத்தில் ஏற்படும் சில அனாவசியப் பிரச்னைகளைக் கண்டும் காணாமல் இருக்கவும். புதுப்புது ஆராய்ச்சிகளில் ஈடுபடுவீர்கள். திடீரென்று தொலை தூரப் பயணம் மேற்கொள்ளும் நிலைமை உருவாகும். பரிகாரம்: வெள்ளிக்கிழமைதோறூம் அருகிலிருக்கும் பெருமாள் கோவிலுக்குச் சென்று வரவும்.  “ஓம் நமோ நாராயணாய” என்ற மந்திரத்தை தினமும் 11 முறை சொல்லுங்கள். உங்கள் பிரார்த்தனைகள் நிறைவேறும்.எதிலும் நிதானத்தைக் கடைபிடித்து காரியங்களை கரை சேர்க்கும் மிதுன ராசி வாசகளே நீங்கள் எதிலும் உங்கள் அறிவை வெளிக்காட்டுபவர். உங்களுடைய சாதுர்யத்தால் காரியங்களை சாத்த்துக் கொள்வீர்கள். இன்முகம் காட்டாது அனைவரையும் அனுசரித்து செல்வீர்கள். உங்களுடைய தாய்மாமனுக்கு அதிர்ஷ்டத்தை அள்ளிக் கொடுப்பீர்கள். சமூகத்தில் உயர்ந்தோரின் நட்பு கிடைக்கும்.  குடும்பத்தில் குதூகலம் நிறையும். உங்களைத் தவறாகப் புரிந்துகொண்டிருந்த நண்பர்கள் மனம் மாறி மீண்டும் நட்புடன் பழகத் தொடங்குவார்கள். கடினமான காரியங்களையும சுலபமாக செய்து முடிப்பீர்கள். உங்களிடம் கடன் வாங்கியவர்கள் குறித்த நேரத்தில் கடனைத் திருப்பிச் செலுத்துவார்கள். வசதி படைத்தவர்கள் உங்களின் நண்பர்கள் ஆவார்கள். உங்களின் எளிமையான பேச்சினால் அனைவரையும் கவர்வீர்கள். சமூகத்தில் உங்களின் பெயரும், புகழும் படிப்படியாக உயரும்.  உத்யோகஸ்தர்களுக்கு அலுவலகத்தில் ஏற்பட்ட கெடுபிடிகள் குறையும். சக ஊழியர்கள் உங்களின் வேலைகளை தாமாகவே முன் வந்து பகிர்ந்துகொள்வார்கள். மேலதிகாரிகள் உங்களின் கோரிக்கைகளை பரிவுடன் பரிசீலிப்பார்கள். உங்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும்.  வியாபாரிகளுக்கு கொடுக்கல், வாங்கல் விஷயங்கள் சுமுகமாக முடியும். கூட்டாளிகள் உங்களிடம் நட்போடு பழகுவார்கள். புதிய சந்தைகளை நாடிச் சென்று வியாபாரத்தைப் பெருக்குவீர்கள். போட்டிகளை சாதுர்யமாக சமாளிப்பீர்கள். வாகனங்களுக்கு சிறிது பராமரிப்பு செலவு செய்ய நேரிடும்.  அரசியல்வாதிகளுக்கு கட்சியில் முக்கியப் பொறுப்புகள் கிடைக்கும். தொண்டர்களின் ஆதரவுடன் பதவியைத் தக்க வைத்துக் கொள்வீர்கள். முக்கியப் பிரச்னைகளில் வாயைக் கொடுத்து மாட்டிக்கொள்ள வேண்டாம். புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும். கலைத்துறையினருக்கு அனுகூலமான திருப்பங்கள் ஏற்படும். பாராட்டும், பணமும் ஒருங்கே கிடைக்கும். சக கலைஞர்களின் மூலம் உங்களைப் புதிய வாய்ப்புகள் தேடி வரும். ரசிகர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். அவர்களின் நலனில் அக்கறை செலுத்துவீர்கள். பெண்மணிகளுக்கு கணவருடனான ஒற்றுமை சுமாராகவே இருக்கும். அதனால் நிதானத்துடன் செயல்படவும். உடல் ஆரோக்யத்தில் கவனம் தேவை. மற்றபடி பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். உங்களின் குடும்பம் நல்ல நிலையை அடையும். மாணவமணிகளுக்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். வெளி விளையாட்டுகளில் ஆர்வத்தைக் குறைத்துக்கொண்டு முன்னேறவும். ஆசிரியர்களின் பாராட்டுகளைப் பெறுவீர்கள். மிருகசீரிஷம்: இந்த ஆண்டு நீண்ட முயற்சிகளின் பேரில்  புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். ஆனால் பொருளாதார ரீதியாக சிறப்பாக இருக்கும். எதிர்பார்த்த புகழ், பாராட்டு கிடைக்கும். எதிர்பார்த்த பதவி கிடைப்பதில் வாக்குவாதம் ஏற்படலாம்.  தொழிலாளர்களுக்கு சலுகைகள் கிடைக்கும். வருமானம் உயரும். குலதெய்வ வழிபாடுகளைச் செய்வீர்கள். சிலர் புதிய தொழில் தொடங்க முயற்சி செய்வார்கள். திருவாதிரை: இந்த ஆண்டு பிற்பாதி மிகவும் சிறப்பாக இருக்கிறது.  வேலையில் தீவிர அக்கறை எடுக்க வேண்டும். பெண்கள் குடும்ப ஒற்றுமைக்காக விட்டுக்  கொடுத்து போக வேண்டியிருக்கும். உங்களை நம்பி வந்தவர்களுக்கு தேவையான உதவிகளைச் செய்வீர்கள். கொடுத்த வாக்கை எப்பாடுபட்டாவது காப்பாற்றி விடுவீர்கள். அனைத்துப் பிரச்னைகளையும் நுட்பமாக ஆராய்ந்து தீர்க்கமாக முடிவெடுக்கும் காலகட்டம் இது. புனர்பூசம்: இந்த ஆண்டு உடல்நலத்தைப் பொறுத்தவரையில் பித்தம் மயக்கம் தொடர்பான பிரச்சனைகள் வரலாம். மருத்துவச் செலவு வெகுவாகக் குறையும். மனதில் பட்டதை பளிச்சென்று சொல்வீர்கள். பழைய வழக்குகள் முடிவதில் காலதாமதம் ஏற்படும். மற்றபடி உழைப்பிற்கேற்ற வருமானம் கிடைக்கும். உங்களின் செயல்களைத் திட்டமிட்டு சரியாகச் செய்து முடித்து விடுவீர்கள். தற்போது வசிக்கும் வீட்டை புதுப்பிப்பீர்கள். ஏழை, எளியவர்களுக்கு உதவி செய்து மகிழ்வீர்கள். பரிகாரம்: புதன்கிழமை தோறும் அருகிலிருக்கும் பெருமாள் ஆலயங்களுக்கு செல்லுங்கள், முடிந்தவர்கள் திவ்ய தேசங்களுக்கும் செல்லலாம். செல்வங்கள் குவியும். ஓம் ஹரி ப்ரும்ஹ வாசினே நமஹ - என்ற மந்திரத்தை தினமும் 27 முறை சொல்லவும் எதிலும் பொறுமையுடனும் தைரியத்துடனும் ஈடுபடும் கடக ராசி வாசகர்களே, நீங்கள் மனசாட்சிக்கி விரோதமான காரியத்தை செய்யமாட்டீர்கள். நீங்கள் எதிலும் ஈடுபடுவதற்குமுன் யோசிப்பீர்கள். தெய்வ சிந்தனை உடையவர்கள், பெற்றோர்களை மதித்து நடப்பீர்கள். உங்கள் வேலைகளை தன்னடக்கத்துடன் செய்து முடிப்பீர்கள். சமுதாயத்தில் உங்களின் நிலையை உயர்த்திக்கொள்வதற்கு ஏதுவான நல்ல காரியங்களைச் செய்வீர்கள். உங்களின் நிர்வாகத் திறமை அதிகரிக்கும். இந்த ஆண்டு முழுவதும் வருமானம் சீராக இருக்கும். வீடு, வாகனம் ஆகியவற்றை வாங்குவீர்கள். இல்லத்திற்குத் தேவையான நவீன உபகரணங்களை வாங்கி மகிழ்வீர்கள். எதிர்வரும் இடையூறுகளை முன்கூட்டியே உணர்ந்து அதற்கேற்ப செயல்முறைகளை மாற்றிக்கொள்வீர்கள். இல்லத்தில் தடைபட்டிருந்த திருமணம் போன்ற சுபகாரியங்கள் நடந்தேறும். குடும்பத்துடன் தெய்வ வழிபாடுகளில் ஈடுபடுவீர்கள். அதேநேரம் சகோதர,சகோதரி வழியில் சிறிது மனத்தாங்கல் ஏற்படலாம். எனவே விட்டுக்கொடுத்து நடந்துகொள்ளவும். அதோடு அனாவசிய வம்பு, வழக்குகளில் ஈடுபட்டு பெயரைக் கெடுத்துக்கொள்ள வேண்டாம். மற்றபடி உங்கள் துறையைச் சேர்ந்தவர்கள் தாமாகவே தேடி வந்து நட்புகொள்வார்கள். உங்களின் வளர்ச்சியைக் கண்டு பொறாமை கொண்டவர்கள்கூட உங்களுக்கு உதவி செய்யும் காலகட்டமாக இது அமைகிறது. உத்யோகஸ்தர்களுக்கு வேலைப் பளு அதிகரித்தாலும் உங்கள் செயல்களை செவ்வனே செய்து முடிக்கும் ஆற்றலைப் பெறுவீர்கள். சக ஊழியர்கள் உங்களுக்கு நேசக்கரம் நீட்டுவார்கள். அலுவலக ரீதியான பயணங்களின் மூலம் ஓரளவுக்குத்தான் நன்மைகள் கிடைக்கும். மற்றபடி உங்கள் கௌரவத்திர்கு எந்தப் பங்கமும் ஏற்படாது. சிலருக்கு விரும்பிய ஊர்களுக்கு இடமாற்றம் கிடைக்கும். வியாபாரிகள் கொடுக்கல், வாங்கல் விஷயங்களில் சிக்கல்களை சந்திப்பீர்கள். அதனால் சிலருக்கு நஷ்டங்கள் உண்டாகலாம். அதேநேரம் கூட்டாளிகள் உங்கள் மீது நம்பிக்கை வைத்து நடந்துகொள்வார்கள். இதனால் உங்களின் செயல்திறன் அதிகரிக்கும். மற்றபடி புதிய முதலீடுகளை நன்கு யோசித்த பிறகே செய்யவும். அரசியல்வாதிகளுக்கு தடைகள் ஏற்பட்டாலும் திட்டமிட்ட வேலைகள் அனைத்தும் வெற்றியடையும். சமூகத்தில் அந்தஸ்தான பதவிகளைப் பெறுவீர்கள். பல வழிகளிலும் வருமானம் பெருகும். தொண்டர்களை அனுசரித்து நடந்துகொள்ளவும். கலைத்துறையினருக்கு புகழும், பாராட்டும் கிடைப்பதில் காலதாமதம் ஏற்படும். திட்டமிட்ட வேலைகளில் பொறுப்புடன் நடந்துகொண்டால் சிரமங்களைத் தவிர்க்கலாம். ரசிகர்களை அனுசரித்து நடந்துகொள்ளவும். சக கலைஞர்கள் நட்பு பாராட்டுவார்கள். பெண்மணிகளுக்கு இது மகிழ்ச்சி நிறைந்த ஆண்டு. குடும்பத்தினரின் ஆதரவு கிடைக்கும். கணவர் உங்களை மதித்து நடப்பார். அவருடனான ஒற்றுமை அதிகரிக்கும். பண வரவு சரளமாகவே இருக்கும். ஆடை, ஆபரணங்களை வாங்கி மகிழ்வீர்கள். மாணவமணிகளுக்கு படிப்பில் ஈடுபாடு அதிகரிக்கும். விளையாட்டுகளில் பங்கேற்று வெற்றி பெறுவீர்கள். சீரிய முயற்சி செய்தால் மேலும் மதிப்பெண்களை அள்ளலாம். பெற்றோர் ஆதரவாக இருப்பார்கள். புனர்பூசம்: இந்த ஆண்டு  இதுவரை இருந்து வந்த பலவிதமான பிரச்சனைகளிலிருந்து விடுபடுவீர்கள்.  பின்தங்கிய நிலையிருப்பவர்கள் முன்னேற்றப் பாதையில் செல்வார்கள். தாயின் உடல்நலத்தில் கவனம் தேவை. நீண்ட காலமாக தடைபட்டு வந்த குழந்தை பாக்கியம் இந்தக் காலகட்டத்தில் கிடைக்கும்.பிள்ளைகளை வெளிநாடுகளுக்கு அனுப்பிப் படிக்க வைப்பீர்கள். எவருக்கும் இந்தக் காலகட்டத்தில் உங்கள் பெயரில் பணம் வாங்கித் தர வேண்டாம். பூசம்: இந்த ஆண்டு உங்களுடைய உடல்நலத்தை  பொறுத்த வரை கால் மற்றும் தோல் சம்பந்தப்பட்ட உபாதைகள் வரலாம். சிலருக்கு ஊர் விட்டு ஊர் செல்லும் நிலை ஏற்படலாம். நல்ல பணப்புழக்கம்  இருக்கும். வங்கிக் கடன்களைத் திருப்பிச் செலுத்துவீர்கள். உடல் ஆரோக்யம் சிறப்பாக இருக்கும். மருத்துவச் செலவுகள் ஏற்படாது. குடும்பத்தார் உங்களுடன் விட்டுக்கொடுத்துப் பழகுவார்கள். உங்கள் தோற்றத்தில் வசீகரம் உண்டாகும். ஆயில்யம்: இந்த ஆண்டு எடுத்த காரியம் அனுகூலத்தைக் கொடுக்கும். மதிப்பு மரியாதை சீராக இருக்கும். வீன்விவாதங்களைத் தவிர்க்கவும். குடும்பத்தில்  தம்பதிகளிடையே இடையே இருந்து வந்த பிரச்சனைகள் சுமூகமாக மறையும். உங்களின் மதிப்பு, மரியாதை உயரும். சிலருக்கு அரசு விருதுகளும், பாராட்டுகளும் கிடைக்கும். சிலருக்கு புதிய வீட்டுக்கு பெயர்ச்சியாகும் வாய்ப்பு கிடைக்கும். பூர்வீகச் சொத்துக்கள் வகையில் இருந்த வில்லங்கம் விலகி, சுமுகமான பாகப்பிரிவினை உண்டாகும். பழைய சொத்துக்களும் விற்பனையாகும். பரிகாரம் : முடிந்தால் திருவண்ணாமலை அல்லது  பர்வதமலையை பௌர்ணமியன்று வலம் வரவும். “அல்லி மலரை”  அம்பாளுக்கு திங்கள் தோறும் சாத்திவர குழப்பங்கள் அகலும். மனம் தெளிவடையும்.எதிலும் தங்களது தனித்தன்மையை வெளிப்படுத்தும் சிம்ம ராசி வாசகர்களே நீங்கள் தர்ம சிந்தனை உடையவர்கள். அனைவரும் எல்லா வளமும் நலமும் பெற வேண்டும் என்று விரும்புவீர்கள். பழமையையும் கலாசாரத்தையும் மதித்து நடப்பீர்கள். முன்னோர்களின் ஆசீர்வாதங்களை முழுமையாக பெற வேண்டும் என்ற எண்ணம் உடையவர்கள். குடும்பத்தில் சூழ்ந்திருந்த பிரச்னைகள் விலகி தெளிவு பிறக்கும். குறிக்கோளை சுலபமாக அடைவீர்கள். பணக் கஷ்டம் நீங்கும். பொதுக்காரியங்களில் உங்கள் நேரத்தை செலவிடுவீர்கள். குடும்பத்தில் தாய் வழி உறவினர்களிடமிருந்து எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வெளியூர் அல்லது வெளிநாட்டிலிருந்து எதிர்பார்த்த நல்ல தகவல் வந்து சேர்ந்து உங்களை மகிழ்ச்சிப்படுத்தும். சமுதாயத்தில் உயர்ந்தவர்களுடன் நெருங்கிய தொடர்பு உண்டாகும். போட்டியாளர்களின் சதிகளை தவிடுபொடியாக்கி விடுவீர்கள். அதேநேரம் அவ்வப்போது உடல் உபாதைகள் தோன்றி மறையும். குறிப்பாக வயிறு, தோல் சம்பந்தப்பட்ட உபாதைகள் உண்டாகலாம். அதனால் உடல் நலத்தில் கவனமாக இருக்கவும். உத்யோகஸ்தர்கள் மேலதிகாரிகளின் கோபத்திற்கு ஆளாவீர்கள். ஆனால் சக ஊழியர்களின் ஒத்துழைப்பினால் அனைத்து இடையூறுகளையும் தாண்டி வந்து விடுவீர்கள். சிலருக்கு அலுவலக ரீதியாக வெளியூர் செல்லும் வாய்ப்பு கிடைக்கும். சிலருக்கு விரும்பத் தகாத இடமாற்றங்கள் உண்டாகலாம். மற்றபடி முயற்சி மேற்கொண்டால்தான் உங்களின் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேறும். வியாபாரிகள் புதிய முயற்சிகளை மேற்கொண்டு பலன் அடைவீர்கள். அதேநேரம் கூட்டாளிகளிடம் விட்டுக்கொடுத்து நடந்துகொள்ளவும். மற்றபடி கொடுக்கல், வாங்கல் விஷயங்கள் சாதகமாக முடியும். புதிய திட்டங்களை செயல்படுத்தி வாடிக்கையாளர்களின் கவனத்தைக் கவர்வீர்கள். அரசியல்வாதிகளுக்கு புதிய பதவிகள் கிடைக்கும். பயணங்களால் நன்மைகள் உண்டாகும். உங்களின் அனைத்து வேலைகளையும் சுறுசுறுப்பாக செய்து முடிப்பீர்கள். அதேநேரம் தொண்டர்கள் உங்களை சிறிது அலட்சியப்படுத்துவார்கள். எனவே அவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யவும். கலைத்துறையினருக்கு அதிக முயற்சிகளுக்குப் பிறகே புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். ரசிகர்களின் பாராமுகத்தால் வேதனை அடைவீர்கள். சக கலைஞர்கள் உங்களுக்கு உதவ மாட்டார்கள். எனவே அவர்களிடம் எந்தக் கோரிக்கையையும் எடுத்துச் செல்ல வேண்டாம். மற்றபடி பொறுப்புடனும், பொறுமையாகவும் நடந்துகொண்டு செயல்படவும். பெண்மணிகள் இந்த ஆண்டு கூடுதல் வருமானத்தைக் காண்பீர்கள். ஆடம்பரப் பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். கணவரிடம் விட்டுக்கொடுத்து நடந்துகொண்டு அவரின் அன்பைப் பெறவும். குடும்பத்தில் சுப காரியங்கள் நடத்த வாய்ப்பு உண்டாகும். மாணவமணிகள் படிப்பில் முழுமையான கவனத்தைச் செலுத்தினால் நல்ல மதிப்பெண்களைப் பெறலாம். எனவே படிப்பைத் தவிர வேறு எதையும் நினைக்க வேண்டாம். மகம்: இந்த ஆண்டு பிரிந்திருந்த குடும்பம் ஒன்று சேரும். முயற்சிகளின் பேரில்  சுபகாரியங்கள் தங்கு தடையின்றி நடைபெறும். குழந்தை பாக்கியம் கிட்டும். வீட்டிற்குத் தேவையான அனைத்து வசதிகளும் கிடைக்கும். அவசியமில்லாத பயணங்களைத் தவிர்க்கவும். அதோடு முக்கிய முடிவுகளை உயர்ந்தோரின் ஆலோசனைகளைக் கேட்டு எடுக்கவும். உடல் ஆரோக்யம்,மன நலம் சீராக யோகா, ப்ராணாயாமம் போன்றவற்றைச் செய்வீர்கள். பூரம்: இந்த ஆண்டு புதிய வீடு,  மனை ஆகியவற்றை வாங்கும் போது கவனம் தேவை. ஒருமுறைக்கு இருமுறை விசாரித்து வாங்குவது நல்லது. நண்பர்கள், உறவினர்கள்  அன்னியோன்னியமாக இருப்பர். உங்களின் தெய்வ நம்பிக்கை பலப்படும். பிறரைச் சார்ந்து செய்து வந்த காரியங்களை தனித்துச் செய்து பெருமையடைவீர்கள். போட்டியாளர்களை சமாளிப்பீர்கள். கொடுக்கல், வாங்கல் விஷயங்களில் கவனமாக செயல்பட்டு வெற்றி பெறுவீர்கள். குடும்பத்தில் குதூகலம் நிறையும். உத்திரம்: இந்த ஆண்டு உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அதிகமாக உழைக்க  வேண்டியிருக்கும். சற்று முயற்சி எடுத்தால் பதவி உயர்வு உங்களை வந்து சேரும். எதிர்பார்திருந்த பணி இடமாற்றம் உங்களை வந்து சேரும்.  உற்றார், உறவினர்களிடம் பக்குவமாக நடந்துகொண்டு அவர்களின் ஆதரவைத் தக்க வைத்துக்கொள்வீர்கள். உங்களின் செல்வாக்கு உயரும். பரிகாரம் : ஞாயிற்றுக்கிழமைதோறும் அருகிலிருக்கும் சிவன் கோவிலுக்கு சென்று நெய் விளக்கு ஏற்றி வழிபடவும். “எருக்க மலரை” சிவனுக்கு அல்லது கணபதிக்கோ அர்ப்பணம் செய்து வணங்கி வர நன்மைகள் கிடைக்கப் பெறுவீர்கள். மேலும் கோமாதாவிற்கு அமவாசை தோறும் அகத்திக்கீரையும் கொடுக்கலாம். உங்களுக்கு அனைத்து காரியங்களும் தங்குதடையின்றி நடக்கும்.  எதிலும் தங்களது உழைப்பையும் தன்னார்வத்தையும் வெளிப்படுத்தும் கன்னி ராசி வாசகர்களே குடும்பத்தின் மீது அதிக அக்கறை கொண்டவர்கள் நீங்கள். அதீதமான உணர்வுகள் கொண்டவர்கள். கௌரவத்தை அனைத்து இடத்திலும் எதிர்பார்ப்பீர்கள். சிக்கனத்தை கடைபிடிப்பதிலும் வல்லவர்கள். உலகம் முழுவதும் சுற்றிவர வேண்டும் என்று விருப்பம் கொண்டவர்கள். தெளிவாக திட்டமிட்டு உடனுக்குடன் செயல்படுவீர்கள். உங்களுக்குக் கீழ் பணி புரிபவர்களுக்கு மன உற்சாகத்தையும் தைரியத்தையும் கொடுப்பீர்கள். குடும்பத்தில் திருமணம் போன்ற சுப காரியங்கள் நடக்கும். குழந்தைகள் பிறந்து வம்சம் விருத்தியாகும். குடும்பத்தில் உற்றார், உறவினர்கள் முழுமையான ஆதரவைத் தந்து உங்களின் கைகளை பலப்படுத்துவார்கள். அதேநேரம் எதிலும் அவசரமும் பரபரப்பும் வேண்டாம். தவறு செய்பவர்களிடம் கூட்டு சேர வேண்டாம். அவர்களிடமிருந்து சுமுகமாக விலகிவிடவும். கடினமான உழைப்புக்கு நடுவே சற்று ஓய்வெடுத்துக்கொள்ளவும். மற்றபடி முன் அறிமுகம் இல்லாதவர்களும் உங்களுக்கு உதவுவார்கள். உத்யோகஸ்தர்களின் கோரிக்கைகளை மேலதிகாரிகள் சற்று காலதாமதத்துடனே பரிசீலிப்பார்கள். எனவே பொறுமையுடனும் பொறுப்புடனும் நடந்துகொள்ளவும்.  மற்றபடி முடிவு சாதகமாகவே அமையும். வேலையில் திருப்தி காண்பீர்கள். வெளியூர் பயணங்களைச் செய்வீர்கள். சக ஊழியர்களுக்கு உதவுவீர்கள். இதனால் அலுவலகத்தில் உங்களின் அந்தஸ்து உயரும். வியாபாரிகளுக்கு முயற்சிகளுக்குத் தகுந்த   லாபம்   கிடைக்கும். நண்பர்கள் மற்றும் கூட்டாளிகளுடன் ஒற்றுமை அதிகரிக்கும். புதிய வியாபாரம் செய்வதற்கான முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். கொடுக்கல், வாங்கல் விஷயங்கள் சீராக இருக்கும். சிறிய சிரமங்களுக்குப் பிறகே புதிய குத்தகைகள் கிடைக்கும். சிலருக்கு கால்நடைகளால் நல்ல லாபம் கிடைக்கும். பால் வியாபாரம் நன்றாக நடக்கும். அரசியல்வாதிகள் புதிய முயற்சிகளை செயல்படுத்துவீர்கள். மேலிடத்தின் ஆதரவு இருப்பதால் புதிய பதவிகளைப் பெற்று மகிழ்வீர்கள். உங்களின் புகழும், செல்வாக்கும் உயரும். தொண்டர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். அவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்வீர்கள்.  கலைத்துறையினருக்கு பழைய ஒப்பந்தங்களை முடித்துக்கொடுப்பதில் சிரமங்கள் ஏற்படும். என்றாலும் கடினமாக உழைப்பீர்கள். ரசிகர்களின் ஆதரவு சிறப்பாக இருக்கும். அனைத்து விஷயங்களையும் நன்றாக முடித்துவிடுவீர்கள். அதேநேரம் இந்த வருடம் கடினமாக உழைக்க வேண்டி வரும். உங்களின் விடா முயற்சியை சக கலைஞர்கள் பாராட்டுவார்கள்.  அவர்களால் சில வாய்ப்புகளும் கிடைக்கும். பெண்மணிகள் கணவரால் பாராட்டப்படுவார்கள். இதனால் குடும்ப ஒற்றுமை அதிகரிக்கும். பிள்ளைகளால் சந்தோஷம் கிடைக்கும். அவர்களை ஆன்மிகத்தில் ஈடுபடுத்துவீர்கள். மாணவமணிகள் படிப்பில் நல்ல மதிப்பெண்களைப் பெறுவீர்கள். பெற்றோரின் ஆதரவுடன் உங்களின் தேவைகள்  அனைத்தும் பூர்த்தியாகும். நண்பர்கள் உதவி செய்வார்கள். உத்திரம்: இந்த ஆண்டு மேலதிகாரிகளின் அனுசரனை இருந்துவரும். வியாபாரிகள் சிறப்பான முன்னேற்றைப் பெறலாம். லாபம் அதிகரிக்கும். உங்கள் வியாபாரத்தை  விரிவாக்கம் செய்வீர்கள். எதிரிகளை வீழ்த்துவதற்குண்டான பாதைகளை வகுத்துக் கொள்வீர்கள். செய்தொழிலில் அகலக்கால் வைக்க வேண்டாம். மற்றபடி கோயில்களில் நடைபெறும் விசேஷ பூஜைகளில் கலந்துகொள்வதற்கான வாய்ப்பு கிடைக்கும். தர்ம காரியங்களுக்கு செலவு செய்து மகிழ்வீர்கள்.சகோதர சகோதரிகளிடம் ஏற்பட்ட பிணக்குகளைப் பேசித் தீர்த்துக் கொண்டு உறவுகளைப் புதுப்பித்துக்கொள்வீர்கள். ஹஸ்தம்: இந்த ஆண்டு புதியதாக ஆரம்பித்த தொழிலில் ஏற்றம் உண்டு.  இரும்பு தொடர்பான தொழிலில் அதிக வருவாய் வந்து சேரும். கூட்டளிகளிடையே ஒற்றுமை பலம் ஏற்படும். உற்றார், உறவினர்கள் ஒன்றுமில்லாத விஷயத்தைக் கூடப் பெரிதுபடுத்தி விடுவார்கள். எனவே அவர்களிடம்  எச்சரிக்கை தேவை. பிள்ளைகளுக்கு சிறிது பின்னடைவு ஏற்படும். சிலருக்கு அனாவசியச் செலவுகள் செய்ய நேரிடலாம். அதனால் மனச் சோர்வுக்கு ஆளாகாமால் உங்கள் வேலைகளில் கூடுதல் கவனம் செலுத்தவும்.  சித்திரை: இந்த ஆண்டு புதிய  ஒப்பந்தங்கள் சற்று தாமதமாக வந்தாலும் முயற்சிகள் எடுக்க வேண்டியிருக்கும். பொருளாதாரம் எதிர்பார்த்தபடி இருக்காது. உடன் இருப்போரால்  பிரச்சனைகள் வரலாம். உடல் நலத்தில் அக்கறை காட்டவும். குடும்பத்தில் மருத்துவச் செலவுகள் ஏற்படலாம் என்பதால் கவனம் தேவை. இன்பத்தையும் துன்பத்தையும் சமமாக பாவிக்கும் மனப்பக்குவம் கிடைக்கும். வசீகரமான பேச்சும் மிடுக்கான நடையும் உங்களின் தன்னம்பிக்கையைப் பறைசாற்றும். கிடைக்க வேண்டியவை தானாகவே கிடைத்துவிடும். பரிகாரம் : புதன்கிழமைதோறும் அருகிலிருக்கும் பெருமாள் கோவிலுக்கு சென்று தேங்காய் நெய் விளக்கு ஏற்றி வழிபடவும். முடிந்தவர்கள் தினசரி ஸ்ரீவிஷ்ணு ஸகஸ்ரநாமம் பாராயணம் செய்யலாம்.  “துளஸி”யை பெருமாளுக்கு சாத்தி அர்ச்சனை செய்து வணங்கி வர தடைகள் விலகி நன்மைகள் கிடைக்கப் பெறுவீர்கள். சொத்துக்களில் இருந்தவந்த பிரச்சனைகள் மாறும்.  எதிலும் எந்த இடத்திலும் நியாயத்தையும் நீதியையும் நிலைநாட்டுவதற்காக போராடும் துலா ராசி வாசகர்களே நீங்கள் அனைவராலும்  விரும்பப்படுவீர்கள். அதிகம் சுமைகளை எடுத்துக் கொள்வீர்கள். அதே நேரம் சின்ன சின்ன பிரச்சனைகளில் தலையிட்டு வெளியில் வர தள்ளாடுவீர்கள். செய்தொழிலில் சிறிது பின்னடைவுகள் ஏற்பட்டாலும் மன உறுதியுடன் அவற்றை சமாளிப்பீர்கள். உங்களின் குறிக்கோளை மாற்றிக்கொள்ள மாட்டீர்கள். பொருளாதாரம் சீராக இருந்தாலும் பெரிய முதலீடுகளைச் செய்ய வழி ஏற்படாது. குடும்பத்தினர் ஓரளவுக்குத்தான் ஆதரவாக இருப்பார்கள். அதோடு கூட்டாளிகளும் பக்கபலமாக இருக்க மாட்டார்கள். எந்த முக்கிய முடிவையும் ஒருமுறைக்கு இருமுறை யோசித்து எடுக்கவும். குடும்பத்திலும் வெளியிலும் உங்களின் செல்வாக்கு உயரும். இல்லத்திற்குத் தேவையான ஆடம்பரப் பொருட்களை வாங்குவீர்கள். அரசு அதிகாரிகளுடனான உங்கள் தொடர்பு அனுகூலமான திருப்பங்களைக் கொண்டுவந்து சேர்க்கும். அதேநேரம் மனதில் கற்பனை பயங்களும் உண்டாகலாம். அவ்வப்போது எதையோ இழந்துவிட்டது போன்ற மனக் கவலைகளுக்கு ஆளாவீர்கள். இதனால் யோகா, ப்ராணாயாமம் போன்றவற்றைச் செய்யவும். உத்யோகஸ்தர்கள் அனைத்து வேலைகளையும் திருப்திகரமாக முடிப்பீர்கள். வருமானம் படிப்படியாக உயரும். மேலதிகாரிகள் உங்களுக்கு சாதகமாகவும் பக்கபலமாகவும் நடந்துகொள்வார்கள். மேலும் அலுவலக வேலைகளில் பளு இருக்காது. விரும்பிய இடமாற்றம் கிடைக்கும். புதிய பயிற்சிகளை மேற்கொள்வீர்கள். வியாபாரிகளுக்கு இது லாபகரமான புத்தாண்டாக அமைகிறது. பொருட்களின் விற்பனை நல்ல முறையில் நடக்கும். வாடிக்கையாளர்களின் தேவைகளைப் புரிந்துகொண்டு அதற்கேற்ப விற்பனை முறைகளைக் கையாளுவீர்கள். என்றாலும் கூட்டாளிகளை அதிகம் நம்ப வேண்டாம். அரசியல்வாதிகள் சிரமமின்றி வெற்றிகளைப் பெறுவீர்கள். சிலர் புதிய பதவிகளில் அமர்வீர்கள். தொண்டர்களின் ஆதரவும் கட்சி மேலிடத்தின் ஆதரவும் இருப்பதால் உங்களின் எண்ணங்கள் நிறைவேறும். புதிய பயணங்களை மேற்கொள்வீர்கள். கலைத்துறையினருக்கு பண வரவு திருப்திகரமாக இருக்கும். கை நழுவிப்போன ஒப்பந்தங்கள் உங்களைத் தேடி வரும். உங்களின் முயற்சிகள் எதிர்காலத்தில் நல்ல பலனைத் தரும். பெண்மணிகளுக்கு கணவரின் அன்பும் பாசமும் அதிகரிக்கும். புதிய ஆடை, ஆபரணங்களை வாங்கி மகிழ்வீர்கள். மனதிற்கினிய சுற்றுலா சென்று வருவீர்கள். மாணவமணிகள் அதிகமாக உழைத்து நல்ல மதிப்பெண்களைப் பெறுவீர்கள். உள்ளரங்கு விளையாட்டுகளில் ஈடுபட்டு வெற்றி பெறுவீர்கள். பெற்றோரின் ஆதரவுடன் உங்களின் கோரிக்கைகள் நிறைவேறும். சித்திரை: இந்த ஆண்டு சீரான பலனை எதிர்பார்க்கலாம். உங்கள் முயற்சிக்கு தகுந்த பலன்கள் வந்தே தீரும். வழக்கு விவகாரங்கள் மேலும் தள்ளிப் போகும்.  எல்லாம் நல்லதே நடக்கும். சமுதாயத்திற்கு ஏதாவதொரு வகையில் சேவை செய்து பெயரும், புகழும் பெறும் யோகம் உண்டாகும். குறைவான உடல் உழைப்புக்குக்கூட நிறைவான வருமானம் கிடைக்கும். இல்லத்தில் குதூகலம் நிறையும். ஆன்மிகம், தத்துவம் போன்றவற்றில் ஈடுபடுவீர்கள். ஒன்றுக்கும் மேற்பட்ட இனங்களிலிருந்து வருமானம் வரத் தொடங்கும். ஸ்வாதி: இந்த ஆண்டு வீண்கலகமும் அலைச்சலும் இருக்கும், இருப்பினும் குருவின் பார்வை தைரிய வீர்ய ஸ்தான ராசியில் விழுவதால் காரிய அனுகூலமும்  நற்சுகமும் பொருளாதார மேம்பாடும் உண்டாகும். நன்மைகள் கிடைக்கும். உங்கள் மனதில் உள்ளதை சுருங்கச் சொல்லி சரியாக விளக்கும் ஆற்றல் உண்டாகும். கிணற்றுத் தவளையாக இருந்தவர்கள் வெளியூர், வெளிநாட்டுக்குப் பயணம் மேற்கொள்வார்கள். விசாகம்: இந்த ஆண்டு மதிப்பு மரியாதை கூடி செல்வாக்கு அதிகரிக்கும். முயற்சிகளில் சிறுசிறு தடைகள் வரலாம். உங்களைப் பற்றி உங்கள் குடும்பத்தார் புரிந்து கொண்டு அனுசரனையாக  நடந்து கொள்வர்.  மனோ பலத்தை அதிகரிக்க அமைதியாகவும் டென்ஷன் இல்லாமலும் இறைவனின் திருநாமங்களை ஜபித்து வாருங்கள். சிலருக்கு புதிய வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். குலதெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். பரிகாரம் : வெள்ளிதோறும் அருகிலிருக்கும் பெருமாள் கோவிலுக்குச் சென்று ஸ்ரீகருடனை வணங்கி வரவும். நெய் விளக்கு ஏற்றலாம். தினமும் முன்னோர்களை வணங்கவும். வெள்ளிக்கிழமைதோறும் வில்வ இலையை சிவனுக்கு சாத்தி வழிபட்டு வர உங்கள் துக்கங்கள் சந்தோஷமாக மாறும். எதிலும் நெஞ்சுரத்துடன் போராடி வெற்றிகளைக் குவிக்கும் விருச்சிக ராசி வாசகர்ளே நீங்கள் எடுத்த முடிவை யாருக்காகவும் மாற்றிக் கொள்ள  தயங்குவீர்கள். உங்களுக்கென்று ஒரு குறிக்கோளுடன் வாழ்வீர்கள். நினைத்த காரியங்கள் நினைத்தபடி நடந்து மன நிம்மதி அடைவீர்கள். அனைத்து விஷயங்களும் படிப்படியாக சீராகும். வருமானம் உயரும். வீண் விரயம் ஏற்படாத வகையில் புத்திசாலித்தனமாக நடந்துகொள்வீர்கள். செய்தொழிலில் நேர்முக, மறைமுக எதிர்ப்புகள் நீங்கும்.  புதியவர்கள் கூட்டாளிகள் ஆவார்கள். இதனால் கொடுக்கல், வாங்கல் விஷயங்கள் சிறப்பாக இருக்கும். புதிய வாய்ப்புகளும் உங்களைத் தேடி வரும். அதை சரியாகப் பயன்படுத்திக்கொள்வீர்கள். குடும்பத்தில் திருமணம் தடைபட்டவர்களுக்கு இந்த வருடம் திருமணம் நடக்கும். குடும்பத்தாருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். ஆன்மிக சுற்றுலா சென்று வருவீர்கள். மற்றபடி வெளி ஆட்களிடம் உங்களின் தொழில் ரகசியங்களைப் பகிர்ந்துகொள்ள வேண்டாம். பூர்வீகச் சொத்து சம்பந்தப்பட்ட பிரச்னைகளை விட்டுக்கொடுத்து முடித்துக்கொள்ளவும். உத்யோகஸ்தர்கள் இயந்திர வாழ்க்கையிலிருந்து விடுபட்டு சிந்தனைகளுக்கு செயல்வடிவம் கொடுக்க நினைப்பீர்கள். உங்களின் முன்னேற்றத்திற்கு தடையாக இருப்பவர்களை இனம் கண்டு விலக்குவீர்கள். பதவி உயர்வு கிடைக்கும். மேலதிகாரிகள் உங்களுக்கு அனுசரணையாக நடந்துகொள்வார்கள். வியாபாரிகளுக்கு கொடுக்கல், வாங்கல் விஷயங்கள் நல்லபடியாக முடியும். கூட்டாளிகள் உங்களை நம்பிப் புதிய முதலீடுகளில் ஈடுபட சம்மதிப்பார்கள். புதிய சந்தைகளை நாடிச் சென்று உங்களின் வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். இதனால் சக வியாபாரிள் மத்தியில் உங்கள் செல்வாக்கை உயர்த்திக் கொள்வீர்கள். அரசியல்வாதிகள் திட்டமிட்ட காரியங்கள் அனைத்தையும் வெற்றிகரமாக முடிப்பீர்கள். உங்களுக்கு கட்சியில் எதிர்ப்புகள் அதிகரிக்கும் என்பதால் உட்கட்சிப் பூசல்களில் சிக்கிக்கொள்ளாமல் தப்பித்துக் கொள்வதே புத்திசாலித்தனம். கலைத்துறையினர் பழைய ஒப்பந்தங்களை நன்கு முடித்துக் கொடுத்த பிறகே புதிய ஒப்பந்தங்களைப் பெற முயற்சிக்கவும். ரசிகர்களின் மனம் புண்படாத வகையில் நடந்துகொள்ளுங்கள். சக கலைஞர்களும் உங்களுக்கு உதவக் கூடிய நிலையில் இருப்பார்கள். எனவே  அவர்களின் மனம் குளிர நடந்துகொண்டு அவர்களை முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ளுங்கள். பெண்மணிகள் குடும்பத்தில் ஒற்றுமையைக் காண்பீர்கள். கணவரிடம் அன்பு, பாசம்  அதிகரிக்கும். உறவினர்களை அனுசரித்து நடந்துகொண்டு உங்கள் செல்வாக்கை அதிகப்படுத்திக்கொள்ளுங்கள். மாணவமணிகள் படிப்பில் முழு கவனத்தையும் செலுத்தினால் நல்ல முன்னேற்றத்தைக் காணலாம். அதனால் தேவையில்லாத பிரச்னைகளில் சிக்கிக்கொள்ள வேண்டாம். மற்றபடி விளையாட்டுகளில் அதிக ஈடுபாடு செலுத்தி வெற்றி பெறுவீர்கள். சக மாணவர்களிடம் கவனமாகப் பழகவும். விசாகம்: இந்த ஆண்டு தடைகளை முறியடித்து காரிய வெற்றி காணலாம். குடும்பத்தில் மகிழ்ச்சியும்  ஆனந்தமும்  பெருகும். ஏதேனும் ஒரு காரணத்தால் குடும்பத்தைவிட்டு பிரிந்து சென்றவர்கள் சேருவார்கள். அனாவசியமான பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. மேலும் பயணங்களின் போது கவனம் தேவை. மற்றபடி பிள்ளைகளுக்கு சிறப்பான வருமானம் தரும் உத்யோகம் கிடைக்கும். எவருக்கும் இந்தக் காலகட்டத்தில் வாக்குகொடுப்பதோ முன் ஜாமீன் போடுவதோ வேண்டாம். அனுஷம்: இந்த ஆண்டு கணவன்-மனைவி இடையே அன்பும்  பாசமும் பெருகும். திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் இனிதே நடக்கும். நல்ல வரனாகவும் கிடைக்கும். குழந்தை பாக்கியம் கிட்டும். நல்ல நண்பர்களின் ஒத்துழைப்புடன் கடினமான வேலைகளையும் செய்து முடிப்பீர்கள். பெற்றோர் வழியில் சில மருத்துவச் செலவுகள் உண்டாகலாம். உடன் பிறந்தோரால் அனாவசியப் பிரச்னைகள் ஏற்படலாம். கேட்டை: இந்த ஆண்டு உறவினர்கள்,  நண்பர்கள் மூலம் அனுகூலம் கிடைக்கும். உடல்நலனைப் பொறுத்த வரை சிறப்பாக இருக்கும். உத்தியோகம் பார்ப்பவர்களுக்கு முன்னேற்றம் ஏற்படும். கோரிக்கைகள், ஒப்பந்தங்கள் நிறைவேறும். நம்பகமான கூட்டாளிகளிடம் முக்கியமான வேலைகளைப் பிரித்துக் கொடுத்து அவர்களின் விருப்பப்படி செயல்பட அனுமதிப்பீர்கள். அனுபசாலிகளின் வழிகாட்டுதலின்படி குறித்த காலத்தில் திட்டமிட்டு செயல்படுவீர்கள். பரிகாரம் : செவ்வாய்தோறும் அருகிலிருக்கும் அம்மன் கோவிலுக்குச் சென்று வலம் வந்து வணங்கி வரவும். நல்லெண்ணெய் விளக்கு ஏற்றலாம்.  கோளறு பதிகம் பாராயணம் செய்யலாம். செவ்வாய்தோறும் எலுமிச்சைமாலையை அம்மனுக்கு அர்ப்பணித்து வலம் வந்து வணங்குங்கள். முன்னோர் வழிபாடு தினமும் செய்யவும்.  எதிலும் நேர்மையுடனும் விடாமுயற்சியுடனும் செயல்பட்டு முன்னுதாரணமாக வாழும் தனுசு ராசி அன்பர்களே நீங்கள் அனைத்து பிரச்சனைகளையும்  உங்கள் வாக்கு சாதுர்யத்தால் சமாளீப்பீர்கள். ஆனால் எந்தக் காரியத்தையும் தள்ளிப் போடுதல் கூடாது என்பதனை கவனித்துக் கொள்ள வேண்டும். உங்களின் சுய முயற்சியினால் செயற்கரிய செயல்களைச் செய்வீர்கள். அதிக வேகமில்லாமல் நிதானமாகவும், பொறுப்புடனும் காரியமாற்றுவீர்கள். உங்களின் புத்திசாலித்தனம் அதிகரிக்கும். தெய்வ வழிபாடுகளில் மனம் ஈடுபடும். வீண் அபவாதங்களிலிருந்து விடுபடுவீர்கள்.  சிலருக்கு வீடு மாற்றம், இடமாற்றம் ஆகியவை நடக்கும். உங்களின் இரக்க குணத்தால் மற்றவர்களுக்கு உதவி செய்வீர்கள். குடும்பத்தில் திருமணம் போன்ற சுபகாரியங்களை நடத்தி மகிழ்வீர்கள். மற்றபடி குடும்பத்தில் அமைதி நிலவும்,. தாயார் வழி உறவுகள் சீராகும். உங்களுக்கு எதிராக கலகம் செய்தவர்கள் அடங்குவார்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து பண வரவு உண்டாகும். புதியவர்களுக்கு உங்களால் இயன்ற உதவிகளைச் செய்து அவர்களின் ஆதரவையும், அன்பையும் பெறுவீர்கள். உத்யோகஸ்தர்களுக்கு வேலைப் பளு அதிகரித்தாலும் சக ஊழியர்களின் உதவியால் வேலைகளைக் குறித்த காலத்திற்குள் முடித்துவிடுவீர்கள். மேலதிகாரிகள் உங்களின் கோரிக்கைகளை உணர்வு பூர்வமாக பரிசீலித்து உங்களுக்கு சாதகமான முடிவுகளை எடுப்பார்கள். இந்த ஆண்டு பணியிட மாற்றம் கிடைக்க வாய்ப்பில்லை. வியாபாரிகளுக்கு வியாபாரத்தில் ஏற்பட்ட தடைகள் நீங்கும். லாபம் பெருகும். கூட்டாளிகளின் ஒத்துழைப்பைப் பெற்று செயல்பட்டால் அனைத்திலும் வெற்றி கிடைக்கும். கொள்முதலில் நல்ல லாபம் கிடைக்கும். குறிப்பாக கால்நடைகளை வைத்திருப்போர் எதிர்பார்த்த வருமானத்தைப் பெறுவீர்கள். அரசியல்வாதிகள் அனைவரையும் அனுசரித்து நடந்துகொள்ளவும். கட்சி மேலிடத்திடம் உங்களின் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேறும். அரசு அதிகாரிகளால் உங்களுக்கு செல்வாக்கு அதிகரிக்கும். எதிரிகளை இனம்கண்டு ஒதுக்குவீர்கள். கலைத்துறையினரின் முயற்சிகள் வெற்றி பெறும். அதனால் புகழைத் தக்க வைத்துக்கொள்வீர்கள். உங்கள் படைப்புகளை புதிய வடிவத்தில் தருவீர்கள். சக கலைஞர்களுடன் நட்புடன் நடந்துகொண்டு புதிய ஒப்பந்தங்களைப் பெறவும். ரசிகர்களின் ஆதரவுடன் இனிய அனுபவம் தரும் பயணங்களை மேற்கொள்வீர்கள். பெண்மணிகள் கணவருடன் விட்டுக்கொடுத்துப் பழகுவீர்கள். குடும்பத்தில் நிம்மதி நிறையும். உடல் ஆரோக்யம் சீராக இருக்கும். ஆன்மிக சுற்றுலா சென்று வருவீர்கள். பிறரிடம் பேசும் நேரத்தில் நிதானம் தேவை. மாணவமணிகள் கல்வியில் எதிர்பார்த்த மதிப்பெண்களைப் பெறுவீர்கள். பெற்றோரின் ஆதரவுடன் வெளிவிளையாட்டுகளில் ஈடுபட்டு வெற்றியடைவீர்கள். ஆசிரியர்களின் ஆதரவும் நன்றாக இருக்கும். அதேநேரம் புதிய நண்பர்களை அதிகம் நம்ப வேண்டாம். மூலம்: இந்த ஆண்டு உடன்பணி செய்வோர், மேலதிகாரிகள்  ஆகியோரிடம் மிகுந்த நல்ல பெயர் ஏற்படும். சம்பள உயர்வு கிடைக்கும். சிலருக்கு பதவி உயர்வு கிடைக்கும். சக ஊழியர்கள் உதவிகரமாக  இருப்பார்கள். உங்களின் முகத்தில் வசீகரம் உண்டாகும். பிறரைக் கவரும் வகையில் பேச்சுத் திறமை அதிகரிக்கும். குடும்பத்தினருடன் ஏற்பட்ட பிரச்னைகள் நீங்கும். கல்வி, கேள்விகளில் அரிய சாதனைகளைச் செய்யும் ஆற்றலைப் பெறுவீர்கள். பூராடம்: இந்த ஆண்டு வேலை இல்லாமல் தவித்தவர்களுக்கு தகுந்த சம்பளத்துடன் சிறந்த வேலை கிடைக்கும். தொழில் செய்வோருக்கு கடந்த காலத்தை விட  வளர்ச்சி விகிதம் அதிகரிக்கும். லாபம் கூடும். உங்களுக்குக் கீழ் பணிபுரிபவர்களுக்கு தக்க அறிவுரைகளை வழங்கி அவர்களை உங்களுக்கு ஆதரவாக்கிக் கொள்வீர்கள். உத்திராடம்: இந்த ஆண்டு புதிய தொழிலால் அனுகூலம் ஏற்படும். எதிரிகளால் இருந்து வந்த தொந்தரவு நீங்கும்.  நீங்கள் தொழிலில் அதிக அக்கறை காட்ட வேண்டியிருக்கும்.  அரசாங்கத்திடமிருந்து பாராட்டும் வெகுமதியும் கிடைக்கும். வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். சிலருக்கு தலைமைப் பொறுப்புகள் கிடைக்கும். முக்கியமான பூஜைகள், ஹோமங்களை இல்லத்தில் நடத்துவீர்கள். அசையாச் சொத்துகளால் வருமானம் வரத் தொடங்கும். பரிகாரம் : வியாழன்தோறும் அருகிலிருக்கும் சிவன் கோவிலுக்குச் சென்று ஸ்ரீகுருபகவானை வணங்கி வரவும். தினமும் முன்னோர்களை வணங்கவும். தினசரி காலை சிவபுராணம் படிக்கவும். வியாழகிழமைதோறும் வினாயகருக்கு அருகம்புல்லை அணிவித்து  வழிபட்டு வர உங்கள் பொருளாதார நிலைமை படிப்படியாக  மூன்னேற்றம் ஏற்படும்.எதிலும் போராட்ட குணத்துடன் ஈடுபட்டு வெற்றிகளைக் குவிக்கும் மகர ராசி அன்பர்களே நீங்கள் தன்னம்பிக்கை மிக்கவர்கள். கடுமையான உழைப்பின்  மூலம் அனைத்து காரியங்களிலும் வாகை சூடுவீர்கள். உங்கள் மனசாட்சிக்கு விரோதமான க்காரியங்களை செய்ய மாட்டீர்கள். உங்களின் செய்தொழிலில் நல்ல  முன்னேற்றம் ஏற்படும். செல்வ வளம் பெருகும். உங்கள் செல்வாக்கு உயரும். உங்களின் பெயரும், புகழும், அந்தஸ்தும் அதிகரிக்கும். புதிய முயற்சிகளில் எதிர்பார்த்த வெற்றியை அடைவீர்கள். வழக்கு விஷயங்களில் வெற்றி உண்டாகும். அனைவரிடமும் மனிதாபிமானத்துடன் நடந்துகொள்வீர்கள். குடும்பத்தில் நிம்மதி நிலவும். உற்றார் உறவினர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். செய்தொழிலில் மாற்றம் செய்ய  நினைக்கும்போது முன் கூட்டியே கூட்டாளிகளுடன் விவாதித்து சுமுகமான நிலைமையை ஏற்படுத்திக்கொள்வீர்கள். உடல் ஆரோக்யம் சீராக இருந்தாலும் அவ்வப்போது உஷ்ணம் சம்பந்தமான உபாதைகளுக்கு ஆளாவீர்கள். எனவே கவனம் தேவை.  உத்யோகஸ்தர்களுக்கு அலுவலகப் பணிகள் அனைத்தும் வெற்றிகரமாக முடியும். எதிர்வரும் இடையூறுகளை சாதுர்யத்துடன் சமாளிப்பீர்கள். உங்களிடம் மேலதிகாரிகள் நட்புடன் நடந்துகொள்வார்கள். உங்களுக்கு சிறு தொல்லைகள் கொடுத்து வந்த சக ஊழியர்கள் அடங்கிவிடுவார்கள். பண வரவிற்கு எந்தக் குறைவும் இருக்காது. வியாபாரிகளுக்கு கொடுக்கல், வாங்கல் விஷயங்கள் சீராக இருந்தாலும் கூடுதல் அக்கறையோடு வியாபாரம் செய்யவும். சில நேரங்களில் கடும்போட்டிகளை சந்திக்க நேரிடும். இதனால் மறைமுக எதிர்ப்புகளையும் சமாளிக்க வேண்டிவரும். எதிலும் விழிப்புடன் இருப்பது நல்லது. நன்கு ஆலோசித்த பிறகே புதிய முதலீடுகளைச் செய்யவும். கால்நடைகளால் நன்மைகள் உண்டாகும். புதிய குத்தகைகளை நாடிச் செல்ல வேண்டாம். நெல் விளைச்சல் சாதகமாக இருக்கும். அரசியல்வாதிகள் தொண்டர்களின் ஆதரவுடன் செயற்கரிய செயல்களைச் செய்வீர்கள். எதிரிகளிடம் கவனமாக இருக்கவும். கட்சித் தலைமையிடம் நல்ல பெயரைக் காப்பாற்றிக்கொள்ளவும். சச்சரவுகள் ஏற்படுத்தும் விஷயங்களில் வாயைக் கொடுத்து மாட்டிக்கொள்ள வேண்டாம். கலைத்துறையினரின் எண்ணங்கள் அனைத்தும் நிறைவேறும். அனைத்து செயல்களையும் நேர்த்தியுடன் முடிப்பீர்கள். புதிய நண்பர்களால் பலனடைவீர்கள். புதிய படைப்புகளை உருவாக்குவதில் முனைப்புடன் ஈடுபடுவீர்கள். சக கலைஞர்களும் உங்களை அனுசரித்து நடந்துகொள்வார்கள். பெண்மணிகளுக்கு கணவரிடம் அன்பு, பாசம் அதிகரிக்கும். உறவினர்கள் உங்களை அனுசரித்து நடந்துகொள்வார்கள். புதிய ஆடை, அணிகலன்களை வாங்கி மகிழ்வீர்கள். மனதிற்கினிய செய்திகளைக் கேட்பீர்கள். மாணவமணிகள் கல்வியிலும் உள்ளரங்கு விளையாட்டிலும் நன்கு தேர்ச்சி பெறுவீர்கள். மேலும் அதிக மதிப்பெண்களைப் பெற போதிய பயிற்சி தேவை. உத்திராடம்: இந்த ஆண்டு வேலை இல்லாமல்  இருப்பவர்கள் குறைந்த முதலீட்டில் புதிய தொழில் தொடங்குவதற்கு ஏற்ற காலகட்டமிது. பணத்தை விட அதிக உழைப்பின் மூலம் செய்யும் தொழில்  அதிக வருவாய் கிடைக்கும். நண்பர்களுக்கிடையே ஏற்படும் பிரச்னைகளை நடுநிலையோடு இருந்து தீர்ப்பீர்கள். அதோடு தீயோரின் நட்பையும் தவிர்ப்பது நல்லது. இதனால் தேவையற்ற சூழ்நிலைகளையும் தவிர்க்கலாம். இந்தக் காலகட்டத்தில் எவருக்கும் வாக்கு கொடுக்க வேண்டாம். உங்களின் பெயரில் பணம் வாங்கித் தரவும் வேண்டாம். திருவோணம்: இந்த ஆண்டு தீவிர முயற்சியின் பேரிலேயே அரசிடம் இருந்துதான் கோரிக்கைகள் நிறைவேறும். புதிய  ஒப்பந்தங்களால் பொருளாதார லாபம் கிடைக்கும். எதிர்பார்த்திருந்த வெற்றி வாய்ப்பு கிடைக்கும். குடும்பத்தில் பிள்ளைகள் வழியில் ஏற்பட்ட கவலைகள் நீங்கும். மன நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அதிலிருந்து மீண்டு விடுவார்கள். அசையும், அசையாச் சொத்துக்களின் சேர்க்கை உண்டாகும். உங்களின் எண்ணங்களில் ஏற்பட்ட தடுமாற்றம் நீங்கும். அவிட்டம்: இந்த ஆண்டு பாராட்டுகளும் விருதுகளும் கிடைக்கும். தொழிலில் சிறப்படைய மிகுந்த முயற்சி தேவை. வழக்கு விவகாரங்கள் சாதகமாக அமையும். கைவிட்டுப் போன சொத்துக்கள் மீண்டும் வந்து சேரும். மனக்குழப்பம் நீங்கி தெளிவுடன் காணப்படுவீர்கள். உங்களின் தேகத்தில் புதிய பொலிவு உண்டாகும். உங்களுக்கென்று தனி பாணியை அமைத்துக்கொண்டு செயல்படுவீர்கள். திட்டமிட்ட காரியங்களில் சில தடுமாற்றங்கள் ஏற்பட்டாலும் நஷ்டங்கள் ஏற்படாமல் தப்பித்துக் கொள்வீர்கள். பரிகாரம் : சனிதோறும் அருகிலிருக்கும் சிவன் கோவிலுக்குச் சென்று ஸ்ரீபைரவரை வணங்கி வரவும். முடிந்தால் மிளகு விளக்கு போடவும். சனிக்கிழமைதோறும் பெருமாள் கோவிலில் இருக்கும் தாயாருக்கு மல்லிகைப் பூவை அர்ப்பணித்து 3 முறை வலம் வரவும். உங்களுக்கு  பொன்னான காலம் கனிந்து வரும்.கடுமையான சூழ்நிலைகளைக் கூட சமயோசிதமாக கையாண்டு மற்றவர்களை ஆச்சர்யத்துடன் பார்க்க வைக்கும் கும்ப ராசி வாசகர்களே நீங்கள் புது  தொழில்நுட்பங்களை கற்பதில் ஆர்வம் உடையவர்கள். எதிலும் போட்டிகள் இருந்தாலும் பொறாமை கொள்ள மாட்டீர்கள். பொறுப்புகளை சரியாக  நிறைவேற்றுவீர்கள்.  செய்தொழிலில் ஆர்வத்துடன் ஈடுபட்டு நற்பெயர் வாங்குவீர்கள். உங்களுக்கு கீழ் பணிபுரிபவர்களுக்கு தக்க உதவிகளைச் செய்து அவர்களை உங்களுக்கு உதவியாக வைத்துக்கொள்வீர்கள். சமூகநோக்குடன் உங்களின் காரியங்களைச் செய்வீர்கள். நீண்ட நாட்களாக துன்புறுத்தி வந்த உடல் உபாதைகளிலிருந்து விடுபடுவீர்கள். வருமானம் சீராக இருக்கும். செய்தொழில் நன்றாக நடப்பதால் புதிய கடன்கள் வாங்க நேரிடாது. குடும்பத்தில் சாதகமான சூழ்நிலை நிலவும். இதனால் உங்கள் தன்னம்பிக்கை அதிகரிக்கும். உற்றார் உறவினர்களிடையே உங்களின் செல்வாக்கு உயரும். உங்களின் பேச்சில் பொறுமையும் நிதானமும் இருக்கும். நினைத்த எண்ணங்கள் கச்சிதமாக செயல்வடிவம் பெறும். கடினமான விஷயங்களிலும் தோலைநோக்குப் பார்வையுடன் செயல்படுவீர்கள். உங்களைப் பற்றி அவதூறு பேசுபவர்களை இனம் கண்டு விலக்குவீர்கள். உத்யோகஸ்தர்கள் அலுவலக வேலைகளை திட்டமிட்டு முன்கூட்டியே செய்யவும். சில நேரங்களில் இடையூறுகளை சந்திக்க நேரிடும். அதேசமயம் பணவரவுக்குத் தடைகள் வராது. எதிர்பார்த்த ஊதிய உயர்வு சரியான நேரத்தில் வந்து சேரும். ஆனாலும் மேலதிகாரிகளின் ஆதரவு குறையும். வியாபாரிகள் விற்பனைப் பிரதிநிதிகளால் வியாபாரத்தைப் பெருக்குவீர்கள். கொடுக்கல், வாங்கல் விஷயங்கள் நன்றாகவே நடக்கும். கடன்களைப் பெற்று கடையைச் சீரமைப்பீர்கள். புதிய சந்தைகளில் உங்கள் பொருட்கள் விற்பனையாகும். அரசியல்வாதிகள் வெற்றிகளைப் பெறுவதில் சிரமம் ஏற்படும். ஆகவே உங்கள் திட்டங்களைப் பொறுமையாக செயல்படுத்தவும். அதேநேரத்தில் தொண்டர்களின் ஆதரவு நன்றாக இருக்கும். சில சமயங்களில்  உங்கள் கருத்துகள் தவறாகப் புரிந்துகொள்ளப்படலாம். எனவே யாரிடமும் மனம் திறந்து பேச வேண்டாம். கலைத்துறையினர் வெற்றி மேல் வெற்றி காண்பீர்கள். புதிய ஒப்பந்தங்களைச் செய்து நல்ல வருமானத்தைக் காண்பீர்கள்.  சக கலைஞர்களால் பாராட்டப்படுவீர்கள். ரசிகர்களின் விருப்பத்தைப் பூர்த்தி செய்வதில் கவனம் செலுத்துவீர்கள். பெண்மணிகளுக்கு கணவரிடம் ஒற்றுமை அதிகரிக்கும். பண வரவு சீராக இருக்கும். அதேசமயம் சிறுசிறு பிரச்னைகள் ஏற்பட வாய்ப்பு இருப்பதால் சூடான வார்த்தைகளைப் பேச வேண்டாம். மாணவமணிகள் படிப்பில் முன்னேற்றம் அடைவீர்கள். விளையாட்டுகளில் ஈடுபட்டு உடல் ஆரோக்யத்தை வளர்த்துக்கொள்வீர்கள். அதேநேரம் பெற்றோரின் ஆதரவு குறையும். அவிட்டம்: இந்த ஆண்டு நன்மைகள் கிடைக்கக் கூடிய காலகட்டமாகும். எடுத்த காரியம் கைகூடும்.  பணப்புழக்கம் அதிகரிக்கும். தேவைகள் பூர்த்தியாகும். மதிப்பும் மரியாதையும் சிறப்பாக இருக்கும். பெற்றோர் வழியில் ஏற்பட்ட மனத்தாங்கல்கள் நீங்கும். உங்களின் நேர்மையான போக்கை அனைவரும் பாராட்டுவார்கள். உங்களின் சூட்சும அறிவு வேலை செய்யத் தொடங்கும். எதிர்பாராத வகையில் சௌபாக்கியங்கள் தேடி வரும். ஸதயம்: இந்த ஆண்டு உங்கள் மீதான அவப்பெயர் மறைந்து செல்வாக்கு  மேம்படும்.  உங்கள் சொல்லுக்குப் பிறர் மரியாதை கொடுப்பர். வீட்டில் மகிழ்ச்சி அதிகரிக்கும். குடும்ப பிரச்சனை கட்டுக்குள் அடங்கி இருக்கும்.  உங்கள் கோரிக்கைகள் அனைத்தும் உடனுக்குடன் நிறைவேறும். வங்கிகளிலிருந்து எதிர்பார்த்த கடன் கிடைக்கும். நெடுநாட்களாக கிடப்பில் போடப்பட்டிருந்த உங்கள் விண்ணப்பம் அரசாங்கத்தால் சாதகமாக பரிசீலிக்கப்படும். இதனால்  சலுகைகள் கிடைக்கும். பூரட்டாதி: இந்த ஆண்டு தேவையான இடங்களில் நீங்கள் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. தேவைகள் ஒவ்வொன்றாகப் பூர்த்தியாகும். நீண்ட நாட்களாக வாங்க  நினைத்த பொருளை வாங்கலாம். மனதிற்கினிய பயணங்களையும் மேற்கொள்வீர்கள். சிலருக்கு வேறு இடங்களுக்கு சென்று வசிக்கும் நிலைமை உண்டாகும். பிறரின் பொறாமைகளுக்கும், போட்டிக்கும் ஆளாக நேரிடும் என்பதால் கவனம் தேவை. நீங்கள் தொடுத்திருந்த வழக்குகளில் சாதகமான திருப்பங்கள் ஏற்படாது. பரிகாரம் : சனிக்கிழமைதோறும் அருகிலிருக்கும் சிவன் கோவிலுக்குச் சென்று 11 முறை வலம் வரவும்.  தினசரி மாலை வேளையில் ஸ்ரீலலிதா ஸகஸ்ரநாமம் பாராயணம் செய்யவும்.  சனிக்கிழமைதோறும் வினாயகருக்கு அருகம்புல்லை அணிவித்து  வழிபட்டு வர உங்கள் பொருளாதார நிலைமை படிப்படியாக  மூன்னேற்றம் ஏற்படும்.கடும்சொற்களால் உங்களை காயப்படுத்துபவர்களைக் கூட அரவனைக்கும் மீன ராசி அன்பர்களே எப்பேர்ப்பட்ட சூழ்நிலையிலும் உங்கள் பொறுப்புகளை  நீங்கள் தட்டிக் கழிக்க மாட்டீர்கள். முடிந்தவரை அனைவருக்கும் நன்மைகள் செய்வதற்கு பாடுபடுவீர்கள். உங்கள் சேமிப்பு விஷயங்களில் முன்னேற்றத்தைக் காண்பீர்கள். உங்கள் பேச்சில் பொறுமையும் நிதானமும் இருக்கும். உற்றார், உறவினர்கள் நண்பர்களிடம் சுமுகமான உறவு தொடரும். உடல் உபாதைகள் நீங்கும்.  எதிர்பாராத புதிய பொறுப்புகள் தேடி வரும். இதனால் கூடுதல் வருமானமும் கிடைக்கும். சமுதாயத்தில் உங்கள் செல்வாக்கு உயரும்.  குடும்பத்தில் திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் நடக்கும். அரசாங்கத்திடமிருந்து எதிர்பார்த்த நல்ல செய்தி இந்தக் காலகட்டத்தில் கிடைக்கும். உறவினர் நலனில் அக்கறை செலுத்துவீர்கள். இல்லத்தில் களவு போயிருந்த பொருட்கள் திரும்பவும் கை வந்து சேரும். சமுதாயத்தில் உயர்ந்தோரின் நட்பு உங்களுக்கு உந்துசக்தியாக அமையும்.   உத்யோகஸ்தர்கள் தங்கள் முன்னேற்றத்திற்குத் தடையாக இருப்பவர்களை இனம் கண்டு விலக்குவீர்கள். வேலைப்பளு அதிகரித்தாலும் அவற்றை சிறப்பாகச் செய்து முடித்து நற்பெயர் வாங்குவீர்கள். எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கும். உங்களின் கோரிக்கைகள் ஒவ்வொன்றாக நிறைவேறும். மதிப்பு மரியாதை உயரும். வியாபாரிகள் திட்டமிட்ட வேலைகளில் கடுமையாக உழைப்பீர்கள். காலதாமதம் ஏற்பட்டாலும் உங்களின் செயல்கள் வெற்றி பெறும். ஆனால் நண்பர்கள், கூட்டாளிகளிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்காது. ஆகையால் புதிய முதலீடுகளைத் தள்ளிப்போடவும். உங்களுக்குக் கீழ் வேலை செய்பவர்களை அனுசரித்து நடந்துகொள்ளவும். அரசியல்வாதிகளின் அந்தஸ்தில் சிறிது குறைபாடுகள் உண்டாகும். ஆகவே கவனமுடன் செயல்படவும். தொண்டர்களின் பாராமுகத்தால் கோபமடையாமல் கடமைகளைச் செய்து வரவும். பேச்சில் கண்ணியம் குறையாது கவனமாக இருக்கவும். கலைத்துறையினர் இந்த ஆண்டு புதிய ஒப்பந்தங்களைச் செய்வீர்கள். அதேசமயம் எதிர்பார்த்த புகழும், பாராட்டும் கிடைப்பதில் காலதாமதம் ஏற்படும். பொறுமையுடன் செயல்பட்டால் பிரச்னைகளைத் தவிர்க்கலாம். போகப் போக உங்களுக்கு சாதகமற்ற நிலைமைகள் மாறிவிடும். பெண்மணிகளுக்கு இது மகிழ்ச்சிகரமான ஆண்டு. புத்தாடை, அணிமணிகளை வாங்கி மகிழ்வீர்கள். கணவரிடம் எதிர்பார்த்த ஆதரவு கிடைக்கும். பண வரவுக்கு எந்தக் குறைவும் இருக்காது. பிள்ளைகளால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிறையும். மாணவமணிகள் முனைப்புடன் செயல்பட்டு நல்ல மதிப்பெண்களைப் பெறுவீர்கள். திட்டமிட்ட வேலைகளில் பதற்றப்படாமல் ஈடுபடவும். அதேசமயம் உங்கள் முயற்சிகளுக்கு ஆசிரியர்களிடம் நல்ல பாராட்டு கிடைக்கும். பூரட்டாதி: இந்த ஆண்டு நண்பர்கள் இடையே அன்னியோன்னியம் அதிகரிக்கும். அவர்களால் உதவிகள் பெறலாம். சுபநிகழ்ச்சிகளுக்கு  இப்போது திட்டமிடலாம். வெகுநாட்களாக தடைப்பட்டு வந்த திருமணத்திற்கு உண்டான முயற்சிகளை இப்போது தொடங்கலாம். உங்கள் செயல்கள் இடையூறுகளின்றி சுலபமாக நிறைவேறும். விரும்பிய இடமாற்றம் கிடைக்கும். குடும்பத்தை விட்டுப் பிரிந்திருந்தவர்கள் மீண்டும் வந்து இணைவார்கள். உறுதியின்றி செய்த செயல்களில் ஒரு நிரந்தரப் பிடிப்பு ஏற்பட்டு மளமளவென்று நடக்கத் தொடங்கும். உத்திரட்டாதி: இந்த ஆண்டு புதிய வீடு  கட்டுவதற்கான வேலைகளை இப்போது  தொடங்கலாம். வசதியான வீட்டிற்கு குடிபுகவும் வாய்ப்புண்டு. புதிய ஆபரணங்கள் வாங்கலாம். விருந்து  விழா என உல்லாசமாக பயணம் மேற்கொள்வீர்கள். சந்தாணபாக்கியம் ஏற்படும். சில அனாவசியச் செயல்களுக்கு கைப்பொருள்களை இழந்த நிலை மாறும். மற்றபடி சகோதர, சகோதரிகளால் சில பிரச்னைகள் ஏற்படலாம். அவர்களுக்கு உதவி செய்ய நினைத்து சிக்கல்களில் மாட்டிக்கொள்ள நேரிடலாம். என்றாலும் அந்தப் பிரச்னைகள் தானாகவே விலகிவிடும். ரேவதி: இந்த ஆண்டு பிள்ளைகளால் பெருமை கிடைக்கும். உத்தியோகம் பார்ப்பவர்களுக்கு நல்ல வளர்ச்சியைக் காணலாம். உங்கள் முன்னேற்றத்திற்கு தடையாக இருந்தவர்கள் விலகுவார்கள். புதிய வாகனங்களை வாங்கி மகிழ்வீர்கள். உங்களின் தேவைகள் எளிதாகப் பூர்த்தியாகும். நீங்கள் சம்பந்தப்பட்ட வழக்குகள் நீதி மன்றத்திற்கு வெளியில் சமாதானமாக முடியும். உங்கள் மீது அபாண்டபழி சுமத்தியவர்கள் தவறுகளை உணர்ந்து வருத்தம் தெரிவிப்பார்கள். பரிகாரம் : வியாழன்தோறும் அருகிலிருக்கும் சிவன் கோவிலுக்குச் சென்று நவகிரகங்களை வலம் வந்து வணங்கி வரவும். தினமும் முன்னோர்களை  வணங்கவும். காக்கைக்கு அன்னமிடவும். ஏழை எளியோர்க்கு உதவவும். வியாழகிழமைதோறும் உங்களால் முடிந்த அளவு அருகம்புல்லை மாலையாகக் கட்டி விணாயகருக்கு சாத்தவும். முடிந்தவர்கள்  தேங்காய் மாலை சாத்தலாம். 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP