1. Home
  2. தமிழ்நாடு

சேவல் சண்டைக்கு தயாராகும் இளைஞர்கள்! அரசு அனுமதி வழங்குமா?

சேவல் சண்டைக்கு தயாராகும் இளைஞர்கள்! அரசு அனுமதி வழங்குமா?

தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு விளையாட்டை மீட்டெடுத்தது போலவே, தற்போது அழிவின் விளிம்பில் இருக்கும் சேவல் சண்டையை மீட்டெடுக்க, சேவல் சண்டைகளுக்கு என பிரத்யேகமாக சேவல்களைத் தயார் செய்து வருகிறார்கள் ராமநாதபுரத்தில் உள்ள பட்டதாரி இளைஞர்கள்.

தமிழக அரசும், உயர் நீதிமன்றமும் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்துவதற்கு அனுமதி அளித்ததைப் போலவே ஒவ்வொரு வருடமும், தமிழர்களின் திருநாளான பொங்கல் பண்டிகையின் போது சேவல் சண்டைகளை நடத்துவதற்கும் அனுமதி தர வேண்டும் என்று அந்த இளைஞர்கள் கோரிக்கை வைத்திருக்கிறார்கள்.

ஜல்லிக்கட்டு காளைகளை எப்படி போட்டிக்காக 3 மாதங்களுக்கு முன்பாகவே தயார்படுத்துகிறார்களோ, அதைப் போலவே சண்டை சேவல்களையும் தயார்படுத்துகின்றனர். அதே கவனத்துடன், சத்தான உணவு வகைகளைக் கொடுத்து தான் இந்த சண்டை சேவல்களையும் வளர்த்து வருகிறார்கள். கம்பு, சோளம், கேழ்வரகு, கோதுமை, பாதாம், பிஸ்தா, முந்திரி, ஈரல், வேகவைத்த இறைச்சி போன்றவை உணவாக கொடுக்கப்படுகிறது.

தமிழகத்தில் முன்னர், ராமநாதபுரம், சேலம், புதுக்கோட்டை, தஞ்சை, மதுரை, பட்டுக்கோட்டை, வாடிப்பட்டி, சோழவந்தான், நாகர்கோயில் மற்றும் வேலூர் உள்ளிட்ட இடங்களில் சேவல் சண்டைப் போட்டிகள் நடத்தப்பட்டு வந்த நிலையில், இந்த சேவல் சண்டைப் போட்டிகளுக்கு, சூதாட்டமாக மாறிவிட்டதாக கூறி 2009ம் ஆண்டு முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது.

தற்போது, இந்த பாரம்பரிய விளையாட்டை மீட்டெடுக்கும் முயற்சியில் ராமநாதபுரத்தில், ராமேஸ்வரம், கீழக்கரை, முதுகுளத்தூர், கீழக்கரை, சிவகங்கை, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள பட்டதாரி இளைஞர்கள் பலரும் சேவல் சண்டைகளுக்கு என பிரத்யேகமாக சேவல்களைத் தயார் செய்து வருகின்றனர். பாரம்பரிய விளையாட்டுகளில் மிக முக்கியமான விளையாட்டான சேவல் சண்டை அழிந்து விட கூடாது என்ற ஒரே நோக்கத்தில் இரவு பகலாக சேவல்களை தயார் செய்து வருகின்றனர். சேவல் சண்டையை போட்டியாகப் பார்க்காமல், இதை ஒரு பாரம்பரிய விளையாட்டாகப் பார்க்க வேண்டும். அழிந்து வரும் பாரம்பரிய விளையாட்டான சேவல் சண்டையை மீட்டெடுக்க வேண்டும் என்பதே இந்த இளைஞர்களின் குரலாக ஒலிக்கிறது.
newstm.in

newstm.in

Trending News

Latest News

You May Like