1. Home
  2. தமிழ்நாடு

தனுஷுன் ‘பட்டாஸ்’ வெடிக்குமா? திரை விமர்சனம்!

தனுஷுன் ‘பட்டாஸ்’ வெடிக்குமா? திரை விமர்சனம்!

எந்தவிதமான போட்டியும் இல்லாமல் தன்னந்தனியே இந்த பொங்கலுக்கு களமிறங்கியிருக்கிறார் தனுஷ். தனது தந்தையைக் கொன்றவனை பழிவாங்கி தாயின் சபதத்தை நிறைவேற்றும் அரத பழசான கதை தான் பட்டாஸ். ஆனால், அதை சொல்லியிருக்கும் நேர்த்தி, ரசிகர்களை படம் முழுக்கவே கதையோடு ஒன்றிணைக்கிறது.

நண்பனுடன் சேர்ந்து திருடிக் கொண்டிருக்கும் தனுஷ், தனது எதிர்வீட்டில் குடியிருக்கும் மெஹ்ரீனுக்காக, அவர் வேலை பார்க்கும் இடத்தில் குத்துச் சண்டை பயிற்சி மையத்தில் உள்ள மெடல்களையும், கோப்பைகளையும் திருடுகிறார். மெஹ்ரீனின் சான்றிதழ்களைப் பிடுங்கி வைத்துக் கொள்கிறார் நிர்வாகி. அந்த சான்றிதழ்களைத் திருட மீண்டும் செல்கிறார் தனுஷ்.

மறுபுறம், கொலைக் குற்றத்திற்காக சிறையில் இருக்கும் சினேகா, தண்டனைக் காலம் முடிந்து வெளியே வந்ததும், வில்லன் நவீன் சந்திராவைக் கொல்வதற்காக, அவனுடைய குத்துச்சண்டைப் பயிற்சி மையத்துக்குச் செல்கிறார். அங்கு, இறந்து விட்டதாக நினைத்த தன் மகன் தனுஷைப் பார்க்கிறார் சினேகா. சினேகாவும், தனுஷும் ஏன் பிரிந்தார்கள்? அப்பா தனுஷ் என்னவானார் என்கிற கேள்விகளுக்கு விடை தான் ‘பட்டாஸ்’.

அப்பா, மகன் என இரட்டை வேடங்களில் தனுஷ். அதிகமான மெனக்கெடல் ஏதும் இல்லாமல் மகன் கதாபாத்திரத்தில் பாந்தமாக தனுஷ் பொருந்தி போவது எல்லாம் அவரது உடல்மொழிக்கு கிடைத்த வரம் தான். திருடன் கதாபாத்திரத்தில் தனுஷ் அடிக்கும் லூட்டிகள் தியேட்டரில் பட்டாஸாக வெடிக்கிறது.

தற்காப்புக்கலை வீரனாக தந்தை தனுஷ் மனதில் நிற்கிறார். தனுஷுக்கு மனைவி, அம்மா என சினேகாவின் திரைப்பயணத்தில் பேசப்படுகிற படமாக பட்டாஸ் அமைந்திருக்கிறது. உடல் எடை கூடியிருப்பதால் இனி அம்மா கேரெக்டர்கள் வரிசைக்கட்டி நிற்கும் ஆபத்தும் இருக்கிறது.

அறிமுக வரவான நடிகை மெஹ்ரீன், முதல் பாதியில் சொதப்பியிருந்தாலும் சில காட்சிகளில் கச்சிதம். மனதில் நிற்காத பாடல்களும், பின்னணி இசையும் படத்திற்கு திருஷ்டி பரிகாரமாக இருக்கிறது. அரத பழசான ஒன் லைன் ஸ்டோரியும், எளிதில் யூகிக்க வைக்கிற திரைக்கதையும் சறுக்கல்களாக இருந்தாலும், ரசிகர்களின் மத்தியில் கொண்டாட்டப் படமாகவே பட்டாஸ் நிற்கிறது.

newstm.in

newstm.in

Trending News

Latest News

You May Like