இயன்ற போது அன்னதானம் செய்யுங்கள்,பசியாறுவது இறைவனாக கூட இருக்கலாம்.

பொருளும், செல்வமும் மனிதனை திருப்திபடுத்த முடியாது. ஆனால் அன்னதானத்தின் மூலம் யாரையும் திருப்திபடுத்த முடியும். அதனால்தான் இறைவன் பசி என்று வருபவருக்கு வயிறார உணவளியுங்கள். வருவது நானாகக்கூட இருக்கக்கூடும் என்று பக்தர்களுக்கு சொல்கிறார்.
 | 

இயன்ற போது அன்னதானம் செய்யுங்கள்,பசியாறுவது இறைவனாக கூட இருக்கலாம்.

தானத்தில் சிறந்தது அன்னதானம் என்கிறது தர்மசாஸ்திரம்.. தனக்காக மட்டும் ஆகாரத்தைத் தேடிக்கொண்டு வாழ்பவன் அவனுக்கான பாபங்களையும் தனித்து அவன் ஒருவனே அனுபவிக்க வேண்டும். அவற்றைப் பங்கிட்டுக் கொள்ள எவரும் வரமாட்டார் என்கிறார்  கிருஷ்ண பரமாத்மா கீதையில்.. பொருளும், செல்வமும் மனிதனை திருப்திபடுத்த முடியாது. ஆனால் அன்னதானத்தின் மூலம் யாரையும் திருப்திபடுத்த முடியும். அதனால்தான் இறைவன் பசி  என்று வருபவருக்கு வயிறார உணவளியுங்கள். வருவது நானாகக்கூட இருக்கக்கூடும் என்று பக்தர்களுக்கு சொல்கிறார். 

இதை விளக்கும் புராணக் கதை ஒன்று உண்டு. சிவபக்தராக விளங்கிய மன்னர் சிறப்பாக ஆட்சி புரிந்து  இறைவனின் மீது மிகுந்த பக்தியையும் கொண்டிருந்தார். அவரது பக்தியை உலகுக்கு எடுத்துக்காட்ட வேண்டும் என்று விரும்பிய சிவபெருமான் அதற்கு தக்க சமயத்தை எதிர்பார்த்திருந்தார். மன்னர்  இறைவனது அடியார்களுக்கு  சமாராதனைச்  செய்ய விரும்பினார்.. சமாராதனை செய்வது சாதாரண விஷயமல்ல...சம் என்றால் நல்ல என்று பொருள். ஆராதனை என்றால் வழிபாடு என்று பொருள். ஏழைக்கு சேவை செய்வதே சமாராதனை என்றழைக்கப்படும். 

ஆயிரம் சிவனடியார்களுக்கு அன்னதானம் வழங்கும் "சமாராதனைக்கு' ஏற்பாடு செய்தார் மன்னர்.  அடியார்களை ஆண்டவனாக எண்ணி அன்னதானம் செய்யும் இந்நிகழ்ச்சியை தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டார் கயிலைநாதர்.  மன்னர் உற்சாகத்துடன் விழாவுக்கான ஏற்பாடுகளைச் செய்ய சொன்னார்.  நகரம் விழாக்கோலம் பூண்டது. சமாராதனை  நாளும் வந்தது. மன்னர் நுழைவாயிலில் நின்றபடி வருபவர்களை வரவேற்றார். அன்னதானத்துக்காக. ஆயிரம் இலைகள் போடப்பட்டன.  நுழைவாயிலில் நின்ற மன்னர்  ஒவ்வொருவரையும் கணக்கில் வைத்து உள்ளே அனுப்பினார். 1,2 ,3 என்ற எண்ணிக்கை 900 தாண்டியதும் மன்னனின் மனம் மகிழ்ந்தது. நல்லபடியாக இன்று இந்த சமாராதனை  நடைபெற வேண்டும் என்று சிவனை வேண்டினார். 991,992, 993  வரை கணக்கில் வைத்தார்  999 அடியவர்களை எண்ணி முடித்தார். ஆனால் இறுதியாக ஒருவர் வந்தால்தானே இந்த  சமாராதனை செய்த திருப்தி ஏற்படும்.   என்ன செய்வது இறைவா என்று மனமுருக சிவனைத்துதித்தார்.  உள்ளிருந்த வந்த காவலாளிகள் 1000 இலைகளிலும் அடியார்கள் அமுதுண்ண தயாராகிவிட்டனர் என்றனர்.  மன்னருக்கு புரியவில்லை. இல்லையே நான் சரியாக கணக்கிட்டேனே... ஒருவர் குறைந்து தான் இருந்தார். எப்படி என்று உள்ளே சென்று பார்த்தார். இலைகள் அனைத்திலும் அடியார்கள் இருந்தனர்.  ஓர் இலை கூட காலியாக இருக்கவில்லை.  அனைவரும் உணவை உண்டு முடித்து மன்னரிடம் விடைபெற்று சென்றனர்.

இப்போதாவது என்ன என்று பார்ப்போம் என்று நினைத்த மன்னர்  வாசலில் வந்து அடியார்களை வழியனுப்பும் பொருட்டு மீண்டும் அடியார்களின் எண்ணிக்கையை எண்ண தொடங்கினார். என்ன ஆச்சர்யம்... இப்போதும் இறுதி அடியார் விடைபெறும் தருணம் மன்னரது கணக்குப்படி 999 லேயே முடிந்தது.  ’என்ன விந்தை.. இறைவா.. 1000  அடியார்கள் இலையில் அமர்ந்திருந்தனரே .. ஆனால் வரும்போதும், போகும் போதும் மட்டும்  ஆயிரமாவது அடியவரைக் கண்ணால் கூட காண முடியவில்லையே.. நான் ஏதாவது பிழை செய்துவிட்டேனோ’ என்று கலங்கினார். மன்னரின் புலம்பலைக் கண்டு புன்னைகைத்தப்படி காட்சியளித்தார்.

’உனக்குச் சந்தேகமே வேண்டாம் மன்னா..  நான் தான் அந்த 1000 வது அடியார். உன் பக்தியின் பெருமையை உலகறியச் செய்யவே இந்தத் திருவிளையாடலை நடத்தினேன். அடியாருடன்  அமர்ந்தபடி உணவையும் வயிறார உண்டேன். பசித்தவர்களுக்கு உணவிட்டு பரமனின் வயிற்றையும் திருப்தியடையச் செய்துவிட்டாய். சிவலோகத்தில் வாழும் புண்ணியம் உனக்கு உண்டாகட்டும்” என்று பார்வதிதெவியுடன் வாழ்த்தி  அருளினார்.  மயிலாடுதுறை அருகிலுள்ள ஆக்கூர் என்னூர் திருத்தலத்தில் ஆயிரத்தில் ஒருவர் என்ற  திருநாமத்துடன்  பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.  இயன்ற போது அன்னதானம் செய்யுங்கள். பசியாறுவது இறைவனாக  கூட இருக்கலாம்.  

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP