1. Home
  2. தமிழ்நாடு

உலகை இயங்க வைக்கும் ஆதவனுக்கு நன்றி செலுத்தும் நாள்

உலகை இயங்க வைக்கும் ஆதவனுக்கு நன்றி செலுத்தும் நாள்

நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் போன்ற பஞ்சபூதங்களை உள்ளடக்கிய பிரபஞ்சத்தில் வாழும் உயிரினங்கள் அனைத்துக்கும் முதல் தெய்வம் இயற்கை தான் என்று சொல்வார்கள். அந்த வகையில் உலகை இயங்க வைக்கும் ஆதவனுக்கு நன்றி செலுத்தும் நாள் தைத்திருநாளாம் முதல்நாள். சூரியனை ஆதவன், பகலவன், கதிரவன் என்ற பெயர்களிலும் அழைப்பதுண்டு. பொங்கல் திருவிழாவை உழவர் திருநாள், அறுவடைத் திருநாள் என்ற பெயரிலும் அழைக்கலாம். உழவுக்கு மரியாதை செலுத்தும் நாள். இறைவனை நினையாதவர்கள் கூட இந்நாளில் சூரியனை வழிபடுவார்கள். உழவனல்லாதவர்கள் கூட உழவனின் உழைப்பால் வாழ்வதை மனதில் கொண்டு உழவர்களின் பெருமையை உணர்ந்து கொண்டாடும் பெருவிழா பொங்கல் விழா...

பிரபஞ்சத்தை சூரியன் இயக்குவதை நம் முன்னோர்கள் உணர்ந்திருக்கிறார்கள். கும்பகோணத்தில் உள்ள நாகேஸ்வரன் கோயிலில் பிரம்மாண்டமான தேர் உண்டு. உலகம் சூரியனைச் சுற்றி இயங்கிக் கொண்டிருக்கிறது என்பதை உணர்த்தும் வகையில் அமைக்கப்பட்டிருக்கிறது. இரண்டு குதிரைகள் அத்தேரை இழுத்துச் செல்லும்படி அமைக்கப்பட்டுள்ளது. தேரின் சக்கரங்களில் ஆரக்கால்களில் 24 எண்ணிக்கையின் அடிப்படையில் கதிரவ மூர்த்திகள் தேரின் அச்சை தாங்கிப்பிடித்தப்படி நிற்கிறார்கள். இப்படி இரண்டு சக்கரங்களிலும் 48 எண்ணிக்கையில் கதிரவ மூர்த்திகள் தாங்கியபடி நிற்கிறார்கள். தேருக்கு உள்ளே ஆடலரசரான நடராசர் தன்னைச் சுற்றி பிரபஞ்ச பேரியக்கத்தைச் சுழலவிட்டபடி ஆனந்தக் கூத்தாடுகிறார். நம் பூமி இடம் பெற்றிருக்கும் சூரியக் குடும்பம் சூரியனை மையமாக கொண்டே இயங்கிவருகிறது. உலகத்தின் அடிப்படை இயக்க ஆற்றலை கொண்டிருக்கிறான் ஆதவன் என்பதை உணர்த்துகிறார் ஆடலரசர்.

தைத் திருநாளை வரவேற்கும் விதமாக இன்றும் கிராமங்களில் தங்கள் வீடுகளில் சுண்ணாம்பு பூசி வீட்டை அலங்கரிப்பார்கள். ஊரே விழாக்கோலம் பூண்டிருக்கும். வீடுகளில் தோரணங்கள் கட்டப்பட்டிருக்கும். அதில் அவரவர் வழக்கப்படி பானைகள் ஒன்றோ இரண்டோ வைப்பதற்கு ஏற்ப புதிய அடுப்புகளைக் கட்டுவார்கள். அடுப்புக்கு சாணம் மெழுகி, செம்மண் இட்டு கோலம் பூசுவர். ஆடி மாதம் விதைத்த விதை நெல்லில் அறுவடை செய்த அரிசியைக் குத்தி புதிய அரிசியை மணம்மாறாமல் எடுத்து வைப்பர். அதிகாலையில் எழுந்து பகலவனை பொங்கல் படைத்து வரவேற்க குடும்பத்தில் அனைவருமே காத்திருப்பார்கள்.

குடும்பத்தில் அனைவரும் புத்தாடை உடுத்தி, மங்களம் பொங்கும் மனையில் மகிழ்ச்சி பொங்க,புதிய மண் பானையின் கழுத்தில் இஞ்சி கொத்தையும், மஞ்சள் கொத்தையும் மாலையாக்கிச் சூட்டுவார்கள். பசும்பாலை ஊற்றி.. புது அரிசியை இட்டு, நெய் ஊற்றி,இனிப்புக்கு வெல்லம் சேர்ப்பார்கள். இது போல வாழ்க்கையும் இனிப்பாக வைத்திருக்க பானையில் இருபுறமும் கரும்பை வைத்து... சூரியனை வழிபடுவார்கள். பொங்கல் பொங்க பொங்க நாமும் மகிழ்ச்சியில் பொங்கி பொங்கலோ பொங்கல் என்று பகலவனை வழிபடுவோம். பொங்கல் பொங்குச்சா பொங்குச்சா என்று பார்ப்பவர்களிடம் விசாரித்து சூரியப்பொங்கலை வழிப்படுவார்கள். இந்த தைத் திருநாளில் நம் அனைவர் இல்லங்களிலும்,உள்ளங்களிலும் உற்சாகப் பொங்கல் பொங்கட்டும்.

newstm.in

Trending News

Latest News

You May Like