தடம் மாறுகிறாரா தங்க தமிழ்செல்வன்?

போர்களத்தில் எல்லா ஆயுதங்களையும் இழந்து நிற்கும் வீரன் போல, எம்எல்ஏ பதவி போனது, எம்பி தேர்தலில் தோல்வி, அதற்கு செலவழித்த பணம் என்று தங்கதமிழ் செல்வனை நெருக்கியது. இந்த சூழ்நிலையில் இருந்து தப்பிக் வேண்டிய கட்டாயத்தில் அவர் மட்டும் அல்ல தினகரனை நம்பி வந்த அனைத்து எம்எல்ஏகளும் இருக்கிறார்கள்.
 | 

தடம் மாறுகிறாரா தங்க தமிழ்செல்வன்?

எம்.ஜி.ஆர்., மறைவுக்கு பின்னர் அதிமுகவில் இரட்டை தலைமை என்பது இயல்பான ஒன்றாகிவிட்டது. ஜெயலலிதா - ஜானகி; ஜெயலலிதா - சசிகலா;  சசிகலா - எடப்பாடி;  எடப்பாடி - பன்னீர் என்று நேரடியாகவோ, மறைமுகமாகவோ அந்த கட்சியில் இரட்டை தலைமை இருந்தது. 

சசிகலா முதல்  அவர் வீட்டு நாய்க்குட்டிவரை பார்க்க மாட்டோமா, எம்எல்ஏ, எம்பி, வட்டம் வாரியம் உட்பட பதவி பெற்றுவிட மாட்டோமா என்று ஜெயலலிதா இருந்த காலத்திலேயே ஏங்கிய அதிமுகவினர் பலர் உண்டு. ஆனால் அவர் இருந்த வரையில் சசிகலா திரை மறைவு இயக்குனராகவே இருந்தார். டான்சி வழக்கில் ஜெயலலிதா பதவியை இழக்க வேண்டிய சூழல் ஏற்பட்ட போது, யாருமே எதிர்பார்க்காத பன்னீர் செல்வம் முதல்வராக மாறினார். 

இதன் பின்னர் அதுவரை கட்சியில் மூத்தவராக, எம்எல்ஏவாக இருந்த தங்கதமிழ்செல்வன் புகழ் மங்கத் தொடங்கியது எனலாம்.  முதல்வர் பதவியில் பன்னீர்செல்வம் இருந்தால் கூட அப்படி ஒரு பதவியை அவர் வகித்தாரா என்று எண்ணத்தக்க விதத்தில் ஆட்சி செய்து பொறுப்புகளை ஜெயலலிதாவிடம் ஒப்படைத்தார். 

இதற்கு மிக முக்கிய காரணம் மக்கள் செல்வாக்கு, ஜெயலலிதாவிற்கு மட்டும் தான் உண்டு என்ற உண்மையை அனைவரும் உணர்ந்தது தான்.ஜெயலலிதா மறைந்த உடன் முதல்வர் பதவிக்கு வர வேண்டும் என்று எண்ணம் இருந்தால் சசிகலா அப்போதே நிறைவேற்றி இருக்க வேண்டும். 

அவ்வாறு நடந்திருந்தால் பன்னீர் செல்வம் உட்படயாரும் எதிர்ப்பு தெரிவித்து இருக்க மாட்டார்கள். அதை விட்டு விட்டு அப்போது பன்னீர் செல்வத்தை முதல்வர் பதவியை அமர்த்தினார்கள். இயல்பு நிலை திரும்பிய பிறகு பன்னீர் செல்வத்தை நீக்கவிட்டு தான் முதல்வர் பதவியில் அமர முயலும் போதுதான், சசிகலாவிற்கு சிக்கல் ஏற்படுகிறது. வேறு வழியில்லாமல்  சசிகலா எடப்பாடியாரை முதல்வராக அமர்த்தினார்.

அது எவ்வளவு தவறு என்பது ஒரு சில நாட்களிலேயே தெரிந்துவிட்டது. சசிகலா பின்னாள் இருந்து இயக்கத்தான் சரியானவர் என்பதை அந்த முடிவு நன்கு விளக்கிவிட்டது.

அதன் பிறகு தினகரனை துணைப் பொதுச் செயலாளராக அறிவித்துவிட்டு, அவர் சிறைக்குகள் சென்றுவிட்டார். ஆனால் அதன் பிறகு அதிமுகவை கைபற்றுவோம் என்று களம் இறங்கிய தினகரன், பின்னர் ஒவ்வொன்றாக பின்வாங்கி அமமுகவை தோற்றுவித்தது. 

பின்னர் தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் செய்து ஆதரவு திரட்டியது போன்ற எல்லாம் தினகரனுக்கு ஆதரவாகவே இருந்தது. அவருக்கு துணையாக வெற்றிவேல், தங்கதமிழ்செல்வன், புகழேந்தி ஆகியோர் செயல்பட்டதால் அமுமுக ஆர்கே நகரைப் போலவே லோக்சபா, சட்டசபை இடைத் தேர்தல் முடிவுகளும் வரும் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. 

அதிலும் தங்கதமிழ்செல்வன் வெற்றி இலக்காக இருந்தாலும், கணிசமான ஓட்டுகள் கிடைக்கும் என்று நினைத்தார். கங்கா சந்திரமுகியாவே மாறிவிட்டது போல, தங்க தமிழ் செல்வன் தேர்தலில் வெற்றி பெற்றது போலவே கருதத் தொடங்கிவிட்டார். ஆனால் முடிவுகள் அவருக்கு 3ம் இடத்தை தந்ததுடன், ஓட்டு எண்ணிக்கை அவரால் நினைத்து கூட பார்க்க முடியாத அளவிற்கு இருந்தது. இதனால் அவர் எந்த அளவிற்கு பாதிக்கப்பட்டார் என்பது தேர்தல் முடிவுகள் வெளியான சில நாட்களிலேயே அவர் அளித்த பேட்டி நன்கு வெளிப்படுத்தியது.

போர்களத்தில் எல்லா ஆயுதங்களையும் இழந்து நிற்கும் வீரன் போல, எம்எல்ஏ பதவி போனது, எம்பி தேர்தலில் தோல்வி, அதற்கு செலவழித்த பணம் என்று தங்கதமிழ் செல்வனை நெருக்கியது. இந்த சூழ்நிலையில் இருந்து தப்பிக் வேண்டிய கட்டாயத்தில் அவர் மட்டும் அல்ல தினகரனை நம்பி வந்த அனைத்து எம்எல்ஏகளும் இருக்கிறார்கள். 

இந்த சூழ்நிலையில், கரூர் செந்தில் பாலாஜி திமுகவில் சேர்ந்து எம்எல்ஏ பதவியை மீண்டும் பிடித்துவிட்டார். அந்த மார்க்கத்தில் செல்வதா, அல்லது சசிகலா, தினகரன் ஆகியோரை தவிர்த்து யார் வந்தாலும் ஏற்பதாக அழைப்பு விடுத்த அதிமுகவில் சேர்வதா என்ற குழப்பத்தில் தினகரன் ஆதரவு எம்எல்ஏகள் உள்ளனர். 

இது சமீபத்தில் தங்கதமிழ்செல்வன் கொடுத்த பேட்டியில் நன்கு தெரிகிறது. சிக்கலான கேள்விகள் எழும் போது பிஎஸ் வீரப்பா போல சிரித்து மழுப்புவது, நடுநிலையாக பேசுவது என அந்த பேட்டி முழுவதும் தங்கதமிழ் செல்வன் அமமுகவில் இருந்து பெட்டியை கட்டிவிட்டார் என்றே எண்ணத் தோன்றுகிறது. அதற்கு ஏற்ப அவர் பேசுவது போன்ற ஒரு ஆடியோ சமுகவலைதளத்தில் பரவி வருகிறது.

இந்த சூழ்நிலையில் அமமுக அவசியமா என்று எண்ணி பார்க்க வேண்டிய நிலையில் தினகரன் உள்ளார். அவரின் வலதுகரம் போல செயல்பட்ட தங்கதமிழ் செல்வன் தடம் மாறும் மனநிலைக்கு வந்த பின்னர் மற்றவர்கள் பற்றி கேட்க வேண்டாம். பேசாமல் தினகரன் அதிமுக, அமமுக கட்சிகளை இணைத்துவிடலாம். இப்போதுள்ள நிலை திமுகவிற்கு தான் லாபம் தரக் கூடியது. அல்லது தங்கதமிழ்செல்வன் கூறுவது போல அனைத்து நிர்வாகிகளையம் அழைத்து பேசி சமாதானம் செய்து கட்சியை தொடர்வது நல்லது. தனக்காக மற்றவர்களை அழிக்கும் நிலைப்பாட்டை எடுத்தால் அது அமமுகவை எழாமல் செய்துவிடும்.

newstm.in

 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP