Logo

தேர்தல் நேரத்தில் மட்டுமின்றி சாட்டை நிரந்தரமாக சுழலுமா?

மக்கள் மனம் மாறி, அரசியல்வாதிகள் திருந்தி, அதன் மூலம், அதிகாரிகள் நல்லவர்களாக செயல்பட்டால்... தேர்தல் சமயத்தில் இது போன்ற கெடுபிடிகள் தேவையில்லாமல் போக வாய்ப்புள்ளது. அதுபோன்ற ஒரு நிலை வரும் வரை, தேர்தல் சமயத்தில் மட்டுமின்றி, எல்லா நேரங்களிலும் சாட்டையை சுழற்றுமா மத்திய, மாநில அரசுகள்?
 | 

தேர்தல் நேரத்தில் மட்டுமின்றி சாட்டை நிரந்தரமாக சுழலுமா?

மக்களவை தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டதும், பொதுமக்களுக்கு வெளிப்படையாக தெரியும் தொல்லை, பறக்கும் படையினர் செய்யும் அதிரடி சோதனைகள். வீதிக்கு வீதி நின்று கொண்டு உரிய ஆவணங்கள் இல்லாமல் பணம்,பொருள் எடுத்து சென்றதாக பிடித்து, அந்த தொகையை அரசு கஜானாவில் சேர்க்கிறார்கள். 

பணம் பிடிபட்டதில் தமிழகம் தான் முதல் இடத்தில் உள்ளது. கடந்த 10ம் தேதி தொடங்கி கடந்த 30ம் தேதி வரை 50 கோடியே 70 லட்சம் பிடிபட்டுள்ளது. தங்கம்  223.5 கிலோ, வெள்ளி 346.7 கிலோ  இவற்றின் மதிப்பு ரூ. 69 கோடி.
இதில் 80 சதவீதம் வியாபாரிகளிடம் பறிமுதல் செய்யப்பட்டது. 

இவர்கள் யாரும், தேர்தலில் ஓட்டுப் போடும் அன்பு உள்ளங்களுக்கு அள்ளித் தருவதற்காக, இந்த தொகையை கொண்டு செல்லவில்லை. இவர்கள் உழைத்து சம்பாதித்தது. ஆனால் அப்படி சொல்ல முடியாத நிலையில் உள்ள பணம். அதாவது, ஆண்டு முழுவதும் இவர்கள் இப்படித்தான் பணத்தை அள்ளி செல்கிறார்கள். 

தற்போது தான் அது பிடிபட்டுள்ளது. நாட்டில் வருமானவரித்துறை, கலால், சுங்கம் என்றெல்லாம் பல துறைகள் இருந்தாலும், எந்தவிதமான ஆவணங்கள் இல்லாமல் கோடிக்கணக்காண ரூபாய் புழக்கத்தில் விடப்படுகிறது. இதில் ஜிஎஸ்டி கணக்கு வேறு புதிதாக முளைத்துள்ளது. 

மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான அரசு இருந்தபோதும் சரி, பாஜக அரசு இருக்கும்போதும் சரி,  அவ்வளவு பேர் கண்ணிலும் மண்ணைத்துாவி பணம் பறக்கிறது. இந்த பணத்தை எப்படி கணக்கில் வரும் வகையில் மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கப் போகின்றன. இதற்காக பறக்கும் படை ஆண்டு தோறும் வீதி வீதியாக சோதனை நடத்துவார்களா? 

இப்படி நாடு முழுவதும் கண்ணுக்கு தெரிந்தே, 2 வது சந்தை கொடி கட்டி பறந்தாலும், அதைப் பற்றி எல்லாமல் யாரும் கவலைப்படுவதில்லை. அதே நேரத்தில் தற்போது பணம் பிடிபட்டாலும், அவர்கள் வாக்காளர்ளுக்கு கொடுக்க தான் எடுத்து செல்கிறார்கள் என்று தான் நினைக்கிறோம். ஆனால் அவர்கள் வருமானவரி செலுத்தியதை பற்றி இவர்கள் கேள்வி எழுப்புகிறார்களாக என்பது தெரியவில்லை. 

தேர்தல் நேரத்தில் மட்டுமின்றி சாட்டை நிரந்தரமாக சுழலுமா?

இது போன்ற சம்பவங்கள் நடக்காமல் தடுத்தால்தான், வர்த்தகம் முறையாக நடப்பதுடன், நாடும் செழிக்கும். அதே நேரத்தில், நாட்டின் உயிர் நாடியாக விளங்கும் வர்த்தகர்கள், நேர்மையாக நடக்க வேண்டும் என்று எதிர்பாக்கும் போது, அவர்கள் வர்த்தகத்தில் நேர்மையாக இருக்க உதவி செய்ய வேண்டும். 

அதற்கு ஏற்ப வரி குறைப்பு, எளிமையான வரி தாக்கல் முறைகள் போன்றவற்றை அறிமுகம் செய்ய வேண்டும். அவற்றையெல்லாம் கோட்டை விட்டு விட்டு, வியாபாரிகளை மட்டும் நேர்மையாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது, கால்களை கட்டிப் போட்டு ஓட்டப்பந்தயத்தில் முதல் இடத்திற்கு வர வேண்டும் என எதிர்பார்ப்பதற்கு சமம்.

ஊழல் அதிகாரிகள் பற்றி கேள்வி எழுப்பினால், அவர்களிடம் நியாயமான காரணங்கள் குவிந்து கிடக்கின்றன. சாலை ஓரத்தில் நின்று 100 ரூபாய் வீதம் 10 ஆயிரம் ரூபாய் வசூல் பார்க்கும் போக்குவரத்து காவலர் வீட்டிற்கு 1000 ரூபாய் தான் எடுத்து செல்ல முடியும் என்கிறார். ஆயிரம் ரூபாய் என்பதே லஞ்சம். இதில், இவ்வளவு தான் கிடைக்கிறது என புலம்பல் வேறு. அப்படியென்றால், மீதம் 9,000 ரூபாய் யார் யாருக்கெல்லாம் செல்லும் என யோசித்து பாருங்கள். 

அரசு அதிாரி ஒருவர், கலெக்டரை மரியாதை நிமித்தமாக பார்க்க வேண்டும் என்றால் ஒரு பவுன் காயின் அவசியம் கொண்டும் செல்ல வேண்டும் என்ற நிலை இன்றும் பல இடங்களில் நிலவுகிறது. இது தான் அதிகாரிகளின் நிலை. இதைத் தவிர அன்றாட நடவடிக்கைகளுக்கு பல துறைகள் பிச்சை எடுத்துக்கொண்டு தான் உள்ளன. 

இவற்றை எல்லாம் துாக்கி எறிந்தால் தான் வியாபாரிகளை நேர்மையாளராக மாற்ற முடியும். மக்கள் கூட கடந்த காலத்தில் வேட்பாளர்களை வீட்டுக்கு அழைத்து, மோர் கொடுத்து, பிரச்சாரத்திற்கு வரும் தொண்டர்களுக்கு சோறு போட்டு அனுப்பியதைப் போல இல்லாவிட்டாலும், ஓட்டுக்கு பணம் எங்கே.... எங்கே.... என கேட்பதை நிறுத்த வேண்டும். 

மக்கள் மனம் மாறி, அரசியல்வாதிகள் திருந்தி, அதன் மூலம், அதிகாரிகள் நல்லவர்களாக செயல்பட்டால்... தேர்தல் சமயத்தில் இது போன்ற கெடுபிடிகள் தேவையில்லாமல் போக வாய்ப்புள்ளது. அதுபோன்ற ஒரு நிலை வரும் வரை, தேர்தல் சமயத்தில் மட்டுமின்றி, எல்லா நேரங்களிலும் சாட்டையை சுழற்றுமா மத்திய, மாநில அரசுகள்?

newstm.in

இந்த கட்டுரையில் இடம் பெறும் அனைத்து கருத்துக்களும் கட்டுரையாளரின் சொந்த கருத்துக்களே.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP