மீண்டும் மலருமா மக்கள் நல கூட்டணி?

திமுகவுடன் பேச்சு நடத்தும் மதிமுக, கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு கேட்கும் இடங்கள் கிடைக்காத நிலை உள்ளது. தேமுதிகவோ திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளுடனும் பேரம் பேசி வருகிறது. எதுவுமே ஆகாமல் போனால் மீண்டும் ‘மக்கள் நலக் கூட்டணி’ மலரலாம்.
 | 

மீண்டும் மலருமா மக்கள் நல கூட்டணி?

நாடாளுமன்றத் தேர்தல் நடைமுறைகளில் அதிமுக, திமுக ஆகிய கட்சிகள் தீவிரம் காட்டத் தொடங்கிவிட்டன. ஆட்சியை பிடிக்கும் அவசரத்தில் காங்கிரஸும், பாஜகவும் தமிழகத்தில் தங்களுக்கான கூட்டணி பேச்சுவார்த்தையை முடித்துவிட்டன. வழக்கம் போல காங்கிரஸ் இரட்டை இலக்கமும், பாஜக எதிர்பார்த்ததை விட குறைவாகவும் இடங்களை பிடித்தாலும், இருவருக்கும் இது எந்த அளவிற்கு பலன் கொடுக்கும் என்பது இந்த நிமிடத்தில் ( என்ன பண்ணுறது நம்ம அரசியல்வாதிகள் வேகத்தை பார்த்தால் இப்படிதான் சொல்ல வேண்டி இருக்கிறது) கணிக்க முடியாத நிலையே உள்ளது. 

மீண்டும் மலருமா மக்கள் நல கூட்டணி?


இதற்கு அடுத்தபடியாக திமுக, அதிமுக வாக்கு வங்கியை வைத்து வெற்றியை நெருங்க வேண்டிய பிற கட்சிகளும் கொள்கை கூட்டணியை இறுதி செய்ய தீவிர பேச்சுவார்த்தை நடத்துகின்றன. இதில் மதிமுக,, கம்யூனிஸ்ட்களுக்கு அங்கீகாரம் பெற வேண்டிய கட்டாயம் வேறு உள்ளது. இவர்களுக்கு மத்தியில் பேச்சுவார்த்தை நடத்தி இடங்களை முடிவு செய்வதும் நெருப்பு ஆற்றை கடப்பதற்கு ஒப்பாக உள்ளது. நேற்று திமுக, இடதுசாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி உள்ளனர். 4 இடங்களில் தொடங்கி 2 இடம் வரை பேரம் நடந்திருக்கிறது. ஆனால திமுக ஒரு இடத்திற்கு மேல் கொடுக்க மாட்டேன் என்று முரண்டு பிடிக்கிறது. ஒரு இடம் என்று சேரும் கட்சிக்கெல்லாம் கொடுத்தால் திமுக கூட ஒற்றை இலக்கத்தில் தான் போட்டியிட வேண்டும். அது அவர்கள் நிலை. இவர்களுக்கோ கறப்பது உழக்கு பால் உதைக்கிறது பல்லு போக என்ற நிலை. கடந்த 2 ஆண்டுகளாக இவர்களுடன் குப்பை கொட்டி ஒரு சீட்டிற்கு மாரடிக்க வேண்டும். இதே நிலைதான் மதிமுகவிற்கும். மதிமுக அமைத்துள்ள கூட்டணி இறுதி செய்யும் குழுவில் இடம் பெற்றவர்களிலேயே 2 பேர் போட்டியிட சீட்டு கேட்கிறார்கள். வைகோ மகனே உன் சமத்து என்று ஒதுங்கி கொண்டார். 

மீண்டும் மலருமா மக்கள் நல கூட்டணி?


இன்னொரு புறம் அதிமுக கூட்டணியில் தேமுதிக கூடுதல் இடம் கேட்டு முறுக்கி கொண்டிருக்கிறது. இவர்கள் அதிமுகவின் கொள்கையை வளர்க்கப் போகிறார்களா?,அல்லது திமுகவுன் இணையப் போகிறாரா என்று இரு கடைகளிலும் வியாபாரம் பேசி வருகிறார்கள். 2 ஆண்டு குடும்பம் நடத்தியவர்களுக்கே ஒரு சீட்டு , காத்திருந்தவன் பொண்டாட்டியை நேத்து வந்தவன் கொண்டு போனானாம் என்று 8 அல்லது 10 சீட்டு பிடிக்குமா என்பது இன்றோ நாளையோ தெரியும். நேற்றைய நிலை இன்றும் தொடர்ந்தால் முருங்கைகாயுடன் முறிந்ததாம் பத்தியம் என்ற நிலையில் மீண்டும் தேமுதிக, மதிமுக, இடதுசாரிகள் இணைந்து மக்கள் நல கூட்டணியை தொடங்கலாம். தோல்வியை குறைக்க லெட்டர் பேடுகட்சிகளையும் சேர்த்துக் கொண்டால் போதும். ஆனால் கட்சிக்கு அங்கீகாரம் கிடைக்காது. மக்கள் அங்கீகாரத்திற்கே தள்ளாடும் போது தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம் தானா துாக்கி நிறுத்தப் போகிறது. 

மீண்டும் மலருமா மக்கள் நல கூட்டணி?


இன்னமும் கூட தினகரன் தன் அரசியல் நடவடிக்கையை தொடங்கவில்லை. கடந்த லோக்சபா தேர்தலில் பாஜக தலைமையில் கூட்டணி அமைந்தது போல அமமுக, தேமுதிக மதிமுக, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் கூட்டணி அமைத்தால் சுமார் 5 முதல் 10 சதவீதம் வரை ஓட்டு பிடிக்கலாம். கட்சிக்கு ஓரு இடம் என்று முடிவு செய்து 200 ரூபாய் டோக்கன் (விலைவாசி உயர்ந்துவிட்டது) கொடுத்து கூட வெற்றி பெறலாம்.

மீண்டும் மலருமா மக்கள் நல கூட்டணி?

 தமிழர்களை காப்பாற்றுவதற்கான அனைத்து சாத்திய கூறுகளையும் இன்னும் சில மணி நேரம் யோசித்து நிறைவேற்ற முன்வரலாம். அப்படி வந்தால், நமக்கு வெறும் 2 டோக்கன் தான் கிடைக்கும். 
(இந்த கட்டுரை இன்று காலை 9 மணிக்கு எழுதியது. நீங்கள் படிக்கும் போது உயிர் இருக்கிறதா என்பது அரசியல்வாதிகளுக்கே வெளிச்சம். )

newstm.in
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP