கன்னியாகுமரியில் கலக்கப்போவது யார்? 

மாெத்தத்தில், கன்னியாகுமரி மக்களவை தொகுதியில், பொன் ராதாகிருஷ்ணன் மற்றும் வசந்தகுமார் இடையே கடும் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது. துறைமுக திட்டம் இந்த தேர்தலில் முக்கிய விஷயமாக இருக்கலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
 | 

கன்னியாகுமரியில் கலக்கப்போவது யார்? 

நாட்டின் தென்கோடியில் அமைந்துள்ள மக்களவை தொகுதி கன்னியாகுமரி. கன்னியாகுமரி, நாகர்கோவில், குளச்சல், பத்மநாபபுரம், திருவட்டாறு, விளவங்கோடு, கிள்ளியூர் ஆகிய சட்டசபை தொகுதிகள் அடங்கியது தான், கன்னியாகுமரி மக்களவை தொகுதி. 
முக்கடல் சங்கமிக்கும் பகுதி என்பதால், இந்த தொகுதியில், மீனவர்களின் ஓட்டு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தாக கருதப்படுகிறது. அதே போல், தென்னை விவசாயம், ரப்பர் விவசாயம் ஆகியவையும் அதிக அளவில் நடைபெறுகிறது. 

பொதுவாக, தமிழகத்தின் பிற பகுதிகளில் உள்ள குறிப்பிட்ட தொகுதிகளை, குறிப்பிட்ட கட்சியின் கோட்டை என சொல்வதுண்டு. அந்த அளவுக்கு, குறிப்பிட்ட கட்சியை சேர்ந்த வேட்பாளர் மட்டுமே தொடர்ந்து வெற்றி பெறுவர். ஆனால், கன்னியாகுமரி அப்படிப்பட்ட தொகுதி அல்ல. 

இங்குள்ள மக்கள் எந்த நேரத்தில், யாருக்கு வாக்களிப்பர், எந்த கட்சியை ஆதரிப்பர் என்பதை அவ்வளவு எளிதில் கணித்துவிட முடியாது. எனினும், பொதுவாக கூறப்போனால், திராவிட கட்சிகளை விட, தேசிய கட்சிகளுக்கு இங்கு குறிப்பிட்ட வாக்கு வங்கு உள்ளது. 

குறிப்பாக, காங்கிரஸ் மற்றும் பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த வேட்பாளர்கள் அதிக அளவு ஓட்டுக்களை பெற்று வந்துள்ளனர். இந்த தொகுதியில், கிறிஸ்த்துவர்கள் அதிகம் பேர் வசிக்கின்றனர். அதே சமயம், ஹிந்துக்களின் எண்ணிக்கையும் கணிசமான அளவு உள்ளது. 

கன்னியாகுமரியில் கலக்கப்போவது யார்? 

கடந்த முறை தேர்தலில் போட்டியிட்ட, பா.ஜ.க., வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணன், 3 லட்சத்து 72 ஆயிரம் ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட, காங்கிரஸ் வேட்பாளர் வசந்தகுமார், 2 லட்சத்து 44 ஆயிரம் ஓட்டுகளும் பெற்றார். 

கடந்த தேர்தலில், பா.ஜ., - காங்கிரஸ், தி.மு.க., மற்றும் அதிமுக ஆகியவை தனித்தனியே போட்டியிட்டன. அதிமுக வேட்பாளர், 1.76 லட்சம் ஓட்டுகளும், திமுக வேட்பாளர், 1.17 லட்சம் ஓட்டுகளும் பெற்றனர். 

இம்முறை, பா.ஜ., மற்றும் அதிமுக கூட்டணி அமைத்தும், திமுக மற்றும் காங்கிரஸ் கூட்டணி அமைத்தும் போட்டியிடுகின்றன. கடந்த தேர்தலில் பெற்ற ஓட்டுகளின் அடிப்படையில் பார்த்தால், அதிமுக - பா.ஜ., கூட்டணிக்கு 5.5 லட்சம் ஓட்டுகள் கிடைக்க வேண்டும். 

அதே போல், திமுக - காங்கிரஸ் கூட்டணிக்கு, 3.6 லட்சம் ஓட்டுகள் கிடைக்க வேண்டும். ஆனால், கடந்த தேர்தலில் இருந்த அதே மனநிலையில், இந்த தேர்தலிலும் மக்கள் ஓட்டளிப்பளிரா என்பது மிகப் பெரிய கேள்விக் குறியே. ஆனால், கடந்த முறை போட்டியிட்ட அதே வேட்பாளர்கள் தான் இந்த முறையும் நேரடிப்போட்டியில் உள்ளனர். 

ஒருவர் மத்திய இணையமைச்சர், மற்றொருவர் எம்.எல்.ஏ., இந்த இருவருமே, அந்த தொகுதி மக்களிடையே நன்கு பரிச்சயம் ஆனவர்கள். பொன்.ராதாகிருஷ்ணன், கடந்த ஐந்து ஆண்டுகளில் பல திட்டங்களை நிறைவேற்றியிருப்பதாக கூறப்படுகிறது. 

கன்னியாகுமரியில் கலக்கப்போவது யார்? 

அதே சமயம், கடந்த தேர்தலின் போது அவர் அளித்த பல வாக்குறுதிகள், இன்னும் நிறைவேற்றப்படவில்லை என்ற அதிருப்தியும் நிலவுகிறது. ஆனால், அறிவித்த திட்டங்கள் அனைத்தும் இறுதிகட்டத்தை எட்டியுள்ளதாகவும், மத்தியில் ஆட்சி மாற்றமோ அல்லது தொகுதியில் வேறு நபர் எம்.பி.,யாக தேர்வானாலோ, அந்த திட்டங்கள் அனைத்தும் முடக்கப்படும் அபாயம் இருப்பதாக ராதாகிருஷ்ணன் தரப்பில் கூறப்படுகிறது. 

கிட்டத்தட்ட, 30 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை நிறைவேற்ற, தான் பாடுபட்டு வருவதாக, அவர் தெரிவித்துள்ளார், மேலும், மீனவர்களின் நலனுக்காக பல நடவடிக்கைகள் மேற்கொண்டதாகவும், அவர்களின் பிரச்னைக்கு தீர்வு காண, மத்திய அரசிடம் பேசி, பல நன்மைகளை செய்து கொடுத்திருப்பதாகவும் அவர் கூறி வருகிறார். 


கன்னியாகுமரியில் சரக்கு பெட்டகங்களை கையாளும் துறைமுகம் அமைக்க, மத்திய அரசு தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ள நிலையில், இந்த திட்டம் அமலுக்கு வந்தால், கன்னியாகுமரி, நாகர்கோவில் உட்பட, சுற்றுவட்டார மாவட்டங்களை சேர்ந்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் எனவும் அவர் கூறுகிறார். 

இத்திட்டத்தால் தொழில் வளம் பெரும் எனவும், இதை நிறைவேற்ற விடாமல் தடுக்க, பொய் பிரசாரங்களை செய்து, மக்களை திசை திருப்பும் முயற்சியில், எதிர்க்கட்சியினர் ஈடுபட்டுள்ளதாகவும், ராதாகிருஷ்ணன் தரப்பில் கூறப்படுகிறது. 

ஆனால், துறைமுகம் திட்டத்திற்கு கன்னியாகுமரி, நாகர்கோவில், குளச்சல் உள்ளிட்ட பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருவதாகவும், மத்திய அரசின் நடவடிக்கையால், தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் எனவும், மீனவர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளதாக காங்கிரஸ், திமுகவினர் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். 

துறைமுகம் செயல்பாட்டிற்கு வந்தால், அப்பகுதியில் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும் எனவும் காங்கிரஸ், திமுகவினர் பிரசாரம் செய்து வருகின்றனர். தவிர, மீனவர்கள் நீண்ட துாரம் சென்று மீன்பிடிக்க வேண்டியிருக்கும் எனவும், அவர்கள் கூறி வருகின்றனர்.

ஆனால், இந்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள பா.ஜ., துறைமுகம் திட்டம் அமல்படுத்தப்பட்டால், மீன் வளம் மேலும் அதிகரிக்கும் என கூறி வருகிறது. அதே போல் இதன் மூலம் வேலை வாய்ப்பு பெருகும் எனவும் பா.ஜ., - அதிமுக சார்பில் பிரசாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

கன்னியாகுமரியில் கலக்கப்போவது யார்? 

பிரதான கட்சிளை சேர்ந்த வேட்பாளர்கள் இருவருமே மண்ணின் மைந்தர்களே. இருவருக்கும், அவர்கள் சார்ந்த சமுதாயத்தின் ஓட்டு வங்கி உள்ளது. தவிர, கிறிஸ்த்துவர்களின் ஓட்டுகள் பெரும்பாலும், வசந்தகுமாருக்கு விழும் என்பதால், நடுநிலை ஹிந்துக்கள், பா.ஜ., ஆதரவாளர்கள், திமுக காங்கிரசுக்கு எதிரான மனநிலையில் உள்ளோர், ஆளும் கட்சி அபிமானிகள் ஆகியோரின் ஓட்டுகள் சிந்தாமல் சிதறாமல் கிடைத்தால் மட்டுமே, பொன்னார் மீண்டும் வெற்றி பெற முடியும். 

இவை தவிர, குமரி, நாகர்கோவிலில் ஒக்கி புயல் தாக்கத்தால், ஏராளமான விவசாயிகள் வாழ்வாதாரம் இன்றி தவித்தனர். அவர்களுக்கு மத்திய, மாநில அரசுகள் இழப்பீட்டு தொகை, புயல் நிவாரணத் தொகை வழங்கியது. எனினும், அது தங்களுக்கு போதுமானதாக இல்லை என்றும், அரசு துரித கதியில் செயல்படவில்லை என்றும் அப்போது விவசாயிகள் பலரும் வேதனை தெரிவித்தனர். 

சமீபத்தில், கன்னியாகுமரிக்கு வந்த பிரதமர் நரேந்திர மாேடி, பல கோடி ரூபாய் மதிப்பிலான பல திட்டங்களை துவக்கி வைத்தார். சில திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். 

மொத்தத்தில், மத்திய, மாநில அரசுகள் செய்த நலத்திட்டங்கள், பொன்.ராதாகிருஷ்ணன் செயல்படுத்திய தொகுதி மேம்பாட்டு திட்டங்கள், அவர் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கை போன்றவை, பா.ஜ., அதிமுக கூட்டணிக்கு சாதகமாக அமையலாம். 

அதே சமயம், மத்தியிலும், மாநிலத்திலும் ஆளும் அரசுகளின் மீதான அதிருப்தி, அதிமுகவில் நிலவும் உட்கட்சி பூசல், பிரதமர் நரேந்திர மாேடிக்கு எதிராக செய்யப்படும் அரசியல் பிரசாரம், சந்தகுமார் மீதான எதிர்பார்ப்பு உள்ளிட்ட பல அம்சங்கள் காங்கிரஸ் திமுக கூட்டணிக்கு ஓட்டுகளாக மாறலாம். 


மாெத்தத்தில், கன்னியாகுமரி மக்களவை தொகுதியில், பொன் ராதாகிருஷ்ணன் மற்றும் வசந்தகுமார் இடையே கடும் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது. துறைமுக திட்டம் இந்த தேர்தலில் முக்கிய விஷயமாக இருக்கலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

இத்திட்டத்திற்கு அதிகமான எதிர்ப்பு இருந்தால், அந்த திட்டத்தை எதிர்த்து பிரசாரம் செய்யும் வசந்தகுமார் வாழ்க்கையில் நிச்சயம் புது வசந்தம் வீசும். அதே சமயம், இந்த திட்டத்தால் விளையும் நன்மைகள் குறித்து சரியான முறையில் பிரசாரம் செய்து, அதை மக்கள் மத்தியில், கொண்டு சேர்ப்பதில் வெற்றி அடைந்தால், பொன்னார் பொன்மாலை சூடவும் வாய்ப்புள்ளது. 
 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP