சான்று பெற்ற விதையையே விவசாயி விதைக்கும் போது, பாடத்தை விதைக்க சான்று வேண்டாமா?

தகுதியான ஆசிரியர்கள் இருந்ததால் தான் மெட்ரிக், சிபிஎஸ்பி, இன்டர் நேஷனல் என்று விதவிதமான பாடத்திட்டங்கள் இல்லாவி்ட்டால் கூட தமிழர்கள் ஐஏஎஸ் தேர்வில் கூட எளிதில் தேர்ச்சி பெற முடிந்தது.
 | 

சான்று பெற்ற விதையையே விவசாயி விதைக்கும் போது, பாடத்தை விதைக்க சான்று வேண்டாமா?

புதுக்கோட்டை  பிரகதாம்பாள் மேல்நிலைப்பள்ளியில் ஆங்கில ஆசிரியராக இருந்து அதே பள்ளியில் தலைமை ஆசிரியராக பதவி உயர்வு பெற்றுஓய்வு பெற்றவர்  நாராயணன்.  எப்போதும் ஆங்கில மொழி புலமையை வளர்த்துக் கொள்ள படித்துக் கொண்டே இருப்பார். பல ஆண்டுகள் ஒரே பாடத்தை நடத்தினாலும், அவர் படிப்பதை மட்டும் நிறுத்தவே இல்லை.

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தமிழாசிரியராக இருந்தவர்  துரைபிச்சை. அவர் பத்தாம் வகுப்பில் சொல்லிக் கொடுத்த இலக்கணம், பிளஸ் 2 படிக்கும் போது நீ என்ன புலவர் வகுப்பா படிக்கிறாய் என்று கேள்வி எழுப்பும் அளவிற்கு இருந்தது. இந்த இரண்டு ஆசிரியர்கள் என்னுடன் நேரடியாக பரிச்சயம் இருந்ததால் இங்கே குறிப்பிடுகிறேன். ஒவ்வொருவர் வாழ்கையிலும் கடைசி காலம் வரை வியந்து போற்றும் ஆசிரியர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். இவர்கள் மாணவர்களுக்கு இணையாக தங்கள் அறிவையும் எப்போதும் பெருக்கிக் கொண்டே வாழ்ந்தவர்கள். 

இது போன்ற ஆசிரியர்கள் இருந்ததால் தான் மெட்ரிக், சிபிஎஸ்பி, இன்டர் நேஷனல் என்று விதவிதமான பாடத்திட்டங்கள் இல்லாவி்ட்டால் கூட தமிழர்கள் ஐஏஎஸ் தேர்வில் கூட எளிதில் தேர்ச்சி பெற முடிந்தது. டெல்லியில் வெறும் தமிழக ஐஏஎஸ்கள் கூட்டம் வாழ்ந்தது. 
சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்னால் கூட தமிழகத்தின் கல்வித் தரம் மிகச் சிறப்பாகத்தான் இருந்தது. அதன் பின்னர் தனியார் பள்ளிகளின் வளர்ச்சிக்கு பின்னர். இன்றைய நிலை மிகவும் இழிவாக மாறிவிட்டது.

பல்கலைக்கழகத்தில் தங்கப் பதக்கம் பெற்றவன் கூட நாளுவரி ஆங்கிலத்தில் தொடர்ச்சியாக பேச முடியவில்லை.  கட்டாய கல்வி சட்டத்தில் மாணவருக்கு தோல்வியே கிடையாது என்பதாலும், வாத்தியார் அடிப்பது சட்டப்படி குற்றம் என்பதாலும்  கல்வித் தரம் குறைந்துவிட்டது. மாணவர்களுக்கு தேர்வு , ஆசிரியர்  பயம் போயே போச்சு. விளைவு பள்ளி என்ற பொந்தில் புகுந்து வெளியேறும் எலிகள் போலதான் மாணவர்கள் வருகிறார்கள். 

இன்னொருபக்கம் ஆசிரியர்களுக்கும் தங்கள் அறிவை வளர்க்க  வேண்டிய அவசியம் இல்லாமல் போய்விட்டது.  அவர்களும் தங்களை தயார்படுத்தி கொள்வதில்லை.  இதன் விளைவாக  அரசு பள்ளி மாணவர்கள் அறிவே இல்லாவி்டடாலும்  பத்தாம் வகுப்பு, பிளஸ் 2  வரை படித்து வெளியே வந்து விழுகிறார்கள். தனியார் பள்ளிகள்  என்ன என்ன தகிடுதத்தங்கள் செய்ய முடியுமோ அவ்வளவையும் செய்து மாணவர்களை தேர்ச்சி பெற செய்து வெளியே தள்ளுகிறார்கள். 

கல்வியில் இந்த நிலையை மாற்றத்தான் மத்திய அரசு புதிய கல்வி்க் கொள்கையை அறிமுகம் செய்தது. இதில் மாணவர்களை விட அதிகம் வடிகட்டப்படுபவர்கள் ஆசிரியர்கள் தான்.  தகுதி கொண்டவர்களுக்கு மட்டும் ஆசிரியர் பணி என்ற சூழ்நிலை உருவாகிவிட்டது. 
புதிய கல்விக் கொள்கை அமல்படுத்தும் முன்பே தகுதி வாய்ந்த ஆசிரியர்கள் உருவாக்க தேர்வுகள்  வைக்கப்படுகின்றன. இது மாநிலம், நாடு முழுவதும் நடத்தப்படுவதால் தேர்வில் தோல்வி அடைபவர்களால் எந்த கல்வி நிறுவனமும் பாதிக்கப்பட போவது இல்லை. இதனால் தேர்வில் குறுக்கு வழியில் தேர்ச்சி என்பது மிகவும் குறைந்து விட்டது. 

இந்த காரணத்தால் இது வரை நம்மவர்கள் என்ன படித்து கிழித்தார்கள் என்பதை தகுதி தேர்வுகள் வெட்ட வெளிச்சம் போட்டு காட்டுகிறது. 
இந்த ஆண்டு டெட்  முதல் தேர்வில் 551 பேர் தான் தேர்ச்சி பெற்று இருக்கிறார்கள். இந்த தேர்வு முடிவு வெளியான  போது தேர்வு எழுதிய 1 லட்சத்து 62 ஆயிரத்து 314 பேர் தேர்வு எழுதியதில் 1.38  சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. தற்போது ஆசிரியர் தேர்வு வாரியமோ 410 பெண்கள் 141 ஆண்கள் என 541 பேர் தான் வெற்றி பெற்றதாக அறிவித்துள்ளது. கடந்த 2012ம் ஆண்டில் டெட் தேர்வு அறிமுகம் செய்யப்பட்டதில் இருந்து தேர்ச்சி பெறுபவர்கள் எண்ணிக்கை குறைவாக இருந்தாலும் மிக மிக குறைவு இந்த முறைதான். 
அதிலும்  தற்போது பணியில் உள்ள 1500 ஆசிரியர்கள் கதியும் கேள்விக்குறியாகத்தான் இருக்கிறது. 

அரசு தேவையான ஆசிரியர்களை நியமிக்க பல்வேறு முறைகளை விதிகளை தளர்ச்சி தேர்ச்சி பெற்றவர்கள் எண்ணிக்கையை அதிகமாக காட்டி ஆசிரியர்களை நியமனம் செய்கிறது. நமது கேள்வி இது தான்  பொதுவான தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற இயலாத இவர்கள் பள்ளிகளில் வந்து எப்படி பாடம் எடுக்கப் போகிறார்கள்.  இவர்கள் உருவாக்கும் அடுத்த தலைமுறையின் தகுதி எந்த அளவிற்கு இருக்கும். அதைக் கொண்டு எதிர்கால தமிழகம் எந்த விதத்தில் வெற்றிகரமாக நடைபோடும். 

ஆசிரியர் பணிதான் என்று முடிவு செய்த பின்னர் தங்களின்  தகுதியை வளர்த்துக் கொள்ள ஆசிரியர் பயிற்சி மாணவர்கள் முன் வரவேண்டும். அவர்கள் படிக்கும் போதே கடைசி தேர்வை பொதுத் தேர்வாக மாற்றினால் தகுதி கொண்டவர்கள் மட்டும் ஆசியர்களாக வருவார்கள். மற்றவர்கள் தோல்வி அடைவார்கள். இந்த நிலை ஒரு சில ஆண்டுகள் தொடர்ந்தால், தகுதியில்லாத ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் இழுத்து மூடப்படும். அல்லது அவை தகுதியான ஆசிரியர்களை உருவாக்கும் கேந்திரங்களாக மாறும். 

இந்த சூழ்நிலையை உருவாக்குவது தான் அரசின் முதல் கடமை.  100 நாளில் பலன் தரும் பயிருக்கு கூட விவசாயி தேர்ந்தெடுத்த சான்று பெற்ற விதைகளை தான் விதைக்கிறான். இந்த சூழ்நிலையில் அடுத்த தலைமுறையை உருவாக்கும்  விதைகளான ஆசிரியர்கள் தகுதியானவர்களாக இருப்பது நாட்டிற்கு நல்லது. அந்த விதைகளை தரமானதாக உருவாக்க வேண்டிய கடமை சமுதாயத்திற்கும், அரசுக்கும் உள்ளது. இதைஎல்லாம் செய்யாத நிலையில் இவர்களை நம்பியா மாணவர்களை அனுப்புகிறோம் என்ற அச்சம் தான் தோன்றுகிறது. இந்த அச்சம் யாருக்கும் நல்லது இல்லை.

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP