முதல் குற்றவாளிக்கு என்ன தண்டனை..?

சம்பந்தப்பட்ட செயலிகளை தடை செய்யவும் அரசு முனைய வேண்டும். அதுதான் பொதுஅமைதிக்கு பங்கம் விளைவிக்கும் இது போன்ற முதல் குற்றவாளிகளுக்கு சரியான தண்டனையாக அமையும்.
 | 

முதல் குற்றவாளிக்கு என்ன தண்டனை..?

நேரடியாக பலர் சம்பந்தப்பட்ட குற்றங்களில் முதல் குற்றவாளி யார் என்பது வெளிப்படையாக தெரியும். ஆனால் ஒரு சில சம்பவங்களி்ல் மர்ம படங்கள் போல முதல்குற்றவாளி வெளிப்படையாக தெரியாது. அந்த குற்றம் நடந்ததே அவருக்கு தெரியாமல் தன் வேலையை செய்து கொண்டிருப்பார். உதாரணமாக ஓட்டை உடசல் அரசு பஸ்சை இயக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்துவது சம்பந்தப்பட்ட கிளை மேலாளர் அல்லது அதனை சரிபார்க்க வேண்டிய பிரிவின் மேலாளர். 

அந்த பஸ்சை டிரைவர் இயக்க மறுத்தால் அன்று அவருக்கு வேலை இல்லை. அதனால் அவர் குலதெய்வத்தை வேண்டிக் கொண்டு ஓட்டை பஸ்சை களம் இறக்குமார். அவர் நேரம், அல்லது விபத்தில் சிக்குபவன் நேரம் டிரைவரின் குலதெய்வம் கைவிட விபத்து ஏற்பட்டால் இதில் முதல் குற்றவாளி அந்த மேலாளர் அல்ல, டிரைவர் தான் அவரும் தொழில்நுட்ப கோளாறு என்று தண்டனையில் இருந்து தப்பி விடுவார்.

இது போல பல சம்பவங்கள் நாடு முழுவதும் நடைபெற்றுக் கொண்டு தான் இருக்கிறது. அதில் சமூக ஊடங்கள் என்று அழைக்கப்படும் பேஸ்புக், வாட்ஸ் அப், டுவிட்டர், இன்ஸ்டாகிராம் ஆகியவற்றின் பங்கு அதிகம்.  கடந்த காலத்தில் சாட்டிங் செய்வதற்காக தனி தனி செயலில் இருந்தன. இதில் உறுப்பினராகி ஒவ்வொரு அறையாக தேடிச் சென்று முகம் தெரியாத நண்பருடன் உரையாட வேண்டும். அறையில் நுழையும் போது இது ஆன்மீக வாதிகள் அறை, ஆபாசவாதிகள் அறை என்று தெரியும். அப்புறம் பாம்பு திங்கிற ஊருக்கு போனால் நடுத்துண்டு நமக்கு கதையாக ஏதாவது ஒரு அறையில் நுழைந்து மன வக்கிரங்களை தனித்துக் கொண்டு வெளியேறிவிடலாம். இந்த செயலிகளில் எந்த உரையாடலையும் பகிர முடியாது என்பதால் எவ்விதமான பிரச்னைகளையும் அது வெளிப்படையாக தோற்றுவிக்கவில்லை. தனிப்பட்ட முறையில் சில, பலர் சிக்கி சின்னாபின்னமாகி இருக்கலாம். 

ஆனால் வாட்ஸ் அப், பேஸ்புக் போன்றவற்றில் அபாய அளவு அதிகம். புறங்கூறாமை என்று திருவள்ளுவர் ஒரு அதிகாரமே எழுதி அறிவுரை கூறிய தமிழ் இனத்தில் இவற்றில் செய்வது எல்லாம் புறக்கூறுதல் மட்டும் தான். இதில் இருப்பதை பகிராவிட்டால் தமிழன் என்றே சமூகம் ஏற்காது. அதற்காகவாவது பகிரவேண்டிய கட்டாயம். எவனோ ஒருவன் அறைக்குள் அமர்ந்துகொண்டு மோடி, ஸ்டாலின், பழனிசாமி ரேஜ்சுக்கு எவ்வளவு நாளைக்கு தான் பின்லேன்டன், டிரம்ப், புட்டின் என்று குறிப்பிடுவது) எதையோ அள்ளவிட அடுத்த நொடிகளில் அது உலகம் முழுவதும் சுற்றிவந்துவிடும். ஆனால் பேசியவன் யார் என்பதை கண்டுபிடிக்க மட்டும் முடியாது. இதில் பதிவை தொடங்கியவனுக்கு எந்த செலவும் கிடையாது. இவன் பற்றவைத்தது சமுதாயத்தில் கலவரமாக வெடிக்கும். அதனால் எவன் எவனோ பாதிக்கப்படுவான். சம்பந்தப்பட்டவன் அது பற்றிய கவலையில்லாமல் கடந்து செல்வான். 

இப்படித்தான் புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் வெடித்த கலவரும், தேர்தல் தொடர்பாக 2 பேர் பேசிக் கொண்டிருந்த போது குறிப்பிட்ட இன பெண்களை இழிவாக பேச அது பரவி கலவரமாக வெடித்தது. இதில் காவல்துறையினர் தாக்கப்பட்டனர். அவர்களின் வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. கடைகள் சேதமாயின. விளைவு 114 தடை உத்தரவு, துப்பாக்கி சூடு வரை சென்று சேர்ந்தது. 1000 பேர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. 

கடந்த 18ம் தேதி பொன்பரப்பியில் ஏற்பட்ட மோதல் தொடர்பாக ஒரு குறிப்பிட்ட இனத்தை சேர்ந்த வாலிபர்கள் தங்கள் பெயர் முகவரியுடன் எதிர்கருத்தை பகிர, போலீசார் அவர்கள் 2 பேரை கைது செய்துள்ளதுள்ளனர். ஆனால் முந்தைய சம்பவத்தில் யாரும் கைது செய்யப்படவில்லை. 

இந்த இரண்டு சம்பவத்திலும் தொடங்கிவைத்தவர்கள் நேரடியாக பார்த்தால் குற்றவாளிகள் போல தெரிந்தாலும், உண்மையில் பேஸ்புக், வாட்ஸ் அப் உரிமையாளர்கள் தான் இதில் முதல் குற்றவாளிகள். எந்த விதமான கண்காணிப்பும் இல்லாமல் எதை வேண்டுமானாலும் இந்த தளங்களில் பகிரலாம், குறைந்தபட்சம் அதற்கு கட்டணம் கூட கிடையாது என்கிற போதுதான் பொறுப்பற்ற தன்மை வெளிப்படுகிறது. 4 பேர் அமர்ந்து சீட்டு விளையாடும் கிளபில் கூட உறுப்பினர் கட்டணம் உண்டு. இவற்றிக்கு உறுப்பினர் கட்டணம் கிடையாது. தன் பாதுகாப்புக்கு துப்பாக்கி வைத்திருப்பவனுக்கு லைசென்ஸ் கட்டாயம். ஆனால் வார்த்தைகளால் சுடும் இது போன்ற செயலிகளை பயன்படுத்த எந்தவிதமான லைசென்ஸ் கிடையாது. அரசாங்கம் கேட்டால் கூட சம்பந்தப்பட்ட தகவல்களை தர பல தடைகள். தனி மனித சுந்திரத்தை பாதுகாக்கிறேன் பேர் வழி என்று பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கிறவர்களை சம்பந்தப்பட்ட நிறுவனம் பாதுகாக்கிறது. 

எவ்விதமான கட்டுப்பாடுகளும் இல்லாத இது போன்ற செயலிகளை முறைப்படுத்த மத்திய அரசு முன்வரவேண்டும். சீனா போன்ற நாடுகள் பேஸ்புக் போன்ற செயலிகளுக்கு தடைவிதித்துள்ளது. அந்த அரசு செய்ய முடியும் என்ற காரியத்தை ஏன் இந்திய அரசு செய்ய முடியவில்லை என்பதை வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும். மேலும் சமூக அமைதிக்கு பங்கம் விளைவிக்காத வகையில் செயல்பட அந்த நிறுவனங்களுக்கு நிபந்தனைகள் விதிக்க வேண்டும். எஸ்எம்எஸ் போல இதற்கும் கட்டணம் விதிக்க வேண்டும்.தொலைபேசி அழைப்பிற்கு இருவரும் கட்டணம் செலுத்த வேண்டும் என்ற காலத்தில் மிஸ்ட் கால் என்ற புதிய முறையை கண்டுபிடித்த இனம் இது என்பதை புரிந்து கொண்டால் போதும்,

வங்கியில் பணம் போடுவதற்கும், பேடிஎம் போன்ற செயலிகளுக்கும் கேஒய்சி என்ற படிவம் கட்டாயம் என்ற நிலையில் சமூக வலைதளங்களிலும்  கணக்கு தொடங்க ஆதார் எண்ணை கட்டாயமாக்கலாம். அல்லது சிம் கார்டு வாங்குவற்கு கொடுக்கும் முகவரி, புகைப்படம், இதர ஆவணங்களை பயன்படுத்தி மட்டுமே கணக்கு தொடங்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தாலாம். இது போன்ற நடவடிக்கைகளை எடுத்தாலே போதும் வம்பர்கள் விளையாட்டு முடிவுக்கு வரும். கத்திய இன்றி ரத்தம் இன்றி சமூக ஊடங்களை கட்டுப்படுத்த பல நடை முறைகள் இருக்கும் போது அவற்றை பயன்படுத்த மத்திய அரசு முன் வர அதையெல்லாம் செய்ய முடியாத போது சம்பந்தப்பட்ட செயலிகளை தடை செய்யவும்  அரசு முனைய வேண்டும். அதுதான் பொதுஅமைதிக்கு பங்கம் விளைவிக்கும் இது போன்ற முதல் குற்றவாளிகளுக்கு சரியான தண்டனையாக அமையும். 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP