செந்தில் பாலாஜி அவ்வளவு பெரிய ஆளா என்ன ?

கட்சித் தாவல் என்பது தமிழகத்திற்குப் புதிதா என்ன? வலதுசாரிய சிந்தனையுள்ள இவரால் திமுகவில் நீண்ட நாட்களுக்கு இருக்க முடியாது. 2021 தேர்தலுக்குள் மீண்டும் அதிமுகவில் இணைய அதிக வாய்ப்பே உள்ளது... பொறுத்திருந்து பார்ப்போம்.
 | 

செந்தில் பாலாஜி அவ்வளவு பெரிய ஆளா என்ன ?

கட்சித் தாவல் என்பது தமிழகத்திற்குப் புதிதா என்ன? அதென்ன செந்தில் பாலாஜி திமுகவுக்குத் தாவியது மட்டும் இத்தனை கவனயீர்ப்பு பெறுகிறது. ஜெயலலிதா, கருணாநிதி உயிரோடு இருந்திருக்கும் காலமாக இருப்பின் , செந்தில் பாலாஜி திமுகவிற்கு தாவியது, தாவலாக இல்லாமல் அடைக்கலமாகத் தான் இருந்திருக்கும்.

 ஐயா, நான் உங்களிடம் தஞ்சம் புகுகிறேன். இத்தனை கோடிகள்/லட்சங்கள் கட்சிக்கு நன்(?)கொடையாகக் கொடுக்கிறேன் என்று அடைக்கலம் வேண்டுபவர் தூது அனுப்பி கோரிக்கை வைப்பார். கப்பம் சிறப்பாக இருப்பின் கட்சியில் சேர்த்துக் கொள்வர். கப்பத்திற்கேற்ப கட்சியில் ஒரு பதவி வழங்கப்படும். இது முழுக்க முழுக்க கட்சி மாறியவரின் உயிர், உடமை மற்றும் அரசியல் பாதுகாப்பிற்காக மட்டுமே! அதன் பிறகு, கட்சி மாறியவர் நிஜமாகவே விசுவாசமாக களப்பணி செய்வாராயின் மெல்ல மெல்ல அடுத்த கட்டத்திற்கு உயர்வார். இது தான் திராவிடக் கட்சிகளின் எழுதப்படாத பை-லா. சில சமயம் சூழலுக்கேற்ப சில விஷயங்கள் மாறும் என்பது எல்லா விதிகளுக்குமான விலக்கு வகை. 

இப்பொழுது செந்தில் பாலாஜியின் கட்சித் தாவல் தமிழக அரசியலில் ஒரு சின்ன  “கேம் – சேஞ்சர்”.  காரணம், செந்தில் பாலாஜியின் பூகோளமும் வரலாறும் தான் காரணம். வரலாற்றின் அடிப்படையில் அவர் கேள்விகளுக்கு  அப்பாற்பட்ட, பொது ஜனங்களுக்கு டிக்கட் விலையை உயர்த்தி அறிவிப்பதைத் தவிர வேறேதும் தெரியாத போக்குவரத்துத் துறை அமைச்சராக  பதவி வகித்தவர். வருவாய் மற்றும் பொதுப்பணித்துறைக்கு அடுத்தபடியாக பணம் கொட்டக் கூடிய துறைக்கு அமைச்சராக இருந்தார். அடுத்ததாக பூகோள அடிப்படையில் கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர். காவிரித்தாயை மணல் அள்ளி யார் கற்பழித்தாலும் திராவிடக் கட்சிகளின் மாவட்டச் செயலாளர்கள், மாவட்ட அமைச்சர்களுக்கு  தனியாக லாரிகளில் வந்துவிடும், மணல் இல்லை, மணி.

இத்தனைச் செல்வச் செழிப்பான மனிதர், ஓபிஎஸ் – இபிஎஸ் – சசிகலா இடையேயான கலவரத்தில் சரியான முடிவெடுக்க முடியாமலோ, அதீத வாக்குறுதியை நம்பியோ, தினகரனிடம் சென்று இணைந்து விட்டார். எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கத்திலிருந்தே செ.பாலாஜியின் குரல் வெளியே ஒலிக்கவில்லை. காரணம் உட்கட்சி கசமுசா. வெளியே இருப்பவர்களுக்குத் தெரியுமோ இல்லையோ, கட்சிக்குள்ளே இருப்பவர்களுக்குத் தெரியும் தினகரனின் வளர்ச்சியும் வீழ்ச்சியும். 

ஜாதிப் பாசத்தில் மற்றவர்கள் எல்லாம் கட்டுண்டு கிடக்க, செ.பாலாஜி மட்டும் தன்னைக் காப்பாற்றிக் கொள்ள வெளியேறி விட்டார்.  பண அளவிலும், கொங்கு மண்டல நட்சத்திர அரசியல்வாதி என்ற அளவிலும் மிகப் பெரிய பலமாக இருந்த  செந்தில் பாலாஜியின் பிரிவு, தினகரன் கட்சிக்கு மிகப் பெரிய பலவீனம் தான். இது தினகரன் கட்சியை சாதிக்கட்சியாக மேலும் சுருக்க வழிவகுக்கும். இன்னொரு விதத்தில் ஜெயலலிதா இருந்த இடத்தில் ஓபிஎஸ், இபிஎஸ் –ஐ வைத்துப் பார்க்க விரும்பாத கொங்கு மண்டல அதிமுகவினர் செ.பாலாஜிக்கு ஆதரவு என்ற பின்புலத்தில் தினகரனை ஆதரித்து வந்தனர். தற்போது அந்த வாக்குகளும் தினகரனுக்கு கிடைக்கப் போவதில்லை. 

செந்தில் பாலாஜி திமுகவில் சேர்ந்து விட்டதால் அக்கட்சியின் வாக்கு வங்கி குறிப்பிடத்தகுந்தளவு கூடப் போவதில்லை. ஆனால், இப்பொழுதைக்கு அதிமுக எதிர்ப்பு வாக்கு வங்கியில் தனக்குப் போட்டியாக இருக்கும் தினகரனை வலுவிழக்கச் செய்தாகி விட்டது. தென் கொங்குப் பகுதியில் கொஞ்சமே கொஞ்சம் கூடுதல் கவனம் பெற வாய்ப்பிருக்கிறது.  ஆக........ திமுகவினைப் பொருத்தவரை நேரடி பலனை விட போட்டியாளரைப் பலவீனப்படுத்தியது மட்டுமே சாதகம். 

ஓபிஎஸ், இபிஎஸ்-ஐப் பொருத்தவரை இந்த நிகழ்வு இரட்டை சந்தோசம் கொடுக்கும். ஒன்று அதிமுகவின் பெரிய தலைவலியான தினகரன் பலவீனப்பட்டது. இரண்டாவது,  செ.பாலாஜியால் பிரிந்து கிடந்த அதிமுக வாக்குகள் கணிசமாக மீண்டும் அதிமுகவிற்கே திரும்புதல். 

செந்தில் பாலாஜியைப் பொருத்தவரை, தற்பொழுதைக்கு அரசியல் அடைக்கலம். குறிப்பாக வருமானவரித்துறை ரைடுக்குப் பிறகு நிறைய சலனப்பட்டிருந்தவருக்கு தினகரனை விட திமுக கூடுதல் பாதுகாப்பு. முழுக்க வலதுசாரிய சிந்தனையுள்ள இவரால் திமுகவில் நீண்ட நாட்களுக்கு இருக்க முடியாது. 2021 தேர்தலுக்குள் மீண்டும் அதிமுகவில் இணைய அதிக வாய்ப்பே உள்ளது. 

பொறுத்திருந்து பார்ப்போம்.!

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP