உயிர் துடிப்புடன் கிராமசபைக் கூட்டங்கள்!

உயிர் துடிப்புடன் கிராமசபைக் கூட்டங்கள்!
 | 

உயிர் துடிப்புடன் கிராமசபைக் கூட்டங்கள்!

திரைத்துறையில் முதல் படத்தை வெற்றிப் படமாக தருபவர்கள் பலர் உள்ளனர். அவர்கள் அந்த துறையில் காலடி எடுத்து வைக்க வேண்டும் என்று நினைக்கும் போதே, பால பாடமாக தயாரித்ததை பல முறை மெருகு ஊட்டி வாய்ப்பு கிடைக்கும் போது சரியான முறையில் வெளிப்படுத்துவதால் அது வெற்றி படமாக மாறிவிடுகிறது.

இது போலவே, பல அரசியல்வாதிகள் மத்தியில், தானும் அதில் ஈடுபட வேண்டும் என்று நினைத்த கமலஹாசன், தன் பாலபாடமாக பிடித்தது கிராமசபைக் கூட்டங்கள். இது குறித்து அவர் பேச தொடங்கியதற்கு பின்னர் தான், இந்த கூட்டம் பலரின் கவனத்தை திருப்பியது.

ஜனநாயகத்தின் அஸ்திவாரத்தில் நடப்பது தான் கிராமசபைக் கூட்டம். பெரும்பாலும் சம்பரதாயத்திற்கு தான் நடக்கும். இதில் பேசப்படும் விஷயங்கள் மிகப் பெரியது. இந்தியாவின் உயிர்நாடியான கிராமங்கள் பற்றிய தேவைகளை மக்கள் கலந்து பேசி முடிவு எடுக்கத்தான் இந்த கூட்டம் நடக்கிறது.

சுந்திர தினம், குடியரசு தினம், காந்தி ஜெயந்தி, மே தினம் ஆகிய 4 நாட்களில் சிறப்பு கிராமசபைக் கூட்டங்கள் நடக்கிறது.

கடந்த ஆண்டுகளை விட இந்த ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு நடந்த கிராமசபைக் கூட்டங்கள் உயிர் துடிப்புடன் நடந்தது என்று சொன்னால் அது மிகையாகாது.

அரசியல் கூட்டத்தைப் போலவே பல கிராமங்களில் ஏற்கனவே ஏற்பாடு செய்யப்பட்டவர்களை அழைத்து வந்து கூட்டம் நடத்தினார்கள். அதையும் மீறி ஒரு சில கிராமங்களில் கூட்டத்தின் போது மக்கள் புறக்கணிப்பு, சாலை மறியல், உள்ளிருப்பு போராட்டம் என்று கூட்டத்தின் முகத்தையே மாற்றிவிட்டனர்.

ஊராட்சித் தலைவர்கள் இருந்தால் அவர்கள் நடத்த வேண்டிய கூட்டத்தை இந்த முறை ஊராட்சி செயலாளர்கள் நடத்தினர். இதில் ஒரே ஊராட்சி செயலாளர் 2 அல்லது 3 ஊராட்சிகளுக்கு பொறுப்பு வகித்ததால், அவரால் குறிப்பிட்ட நேரத்தில் கூட்டம் நடத்த முடியவில்லை. இதனால் ஏமாற்றம் அடைந்த மக்கள் கூட்டத்தில் கலந்து கொள்ளாமலேயே வீடுதிரும்பினர்.

அரியலுார் மாவட்டம் ஜெயங்கொண்டம் பகுதியில் நடந்த கிராமசபைக் கூட்டத்தில் விலையில்லா ஆடுகள் திட்டத்தின் பயனாளிகள் பட்டியல் வெளியிடப்பட்டது. அதில் வசதி கொண்டவர்கள், ஏற்கனவே ஆடுகள் வாங்கியவர் பெயர்கள் இடம் பெற்றன. விளைவு கிராமமக்கள் போராட்டம் நடத்தினர். கடைசியில் அந்தபட்டியல் ரத்தானது. தேர்வுக்குழு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போராட்டம் நடத்தினர்.

இது போல பல கிராமங்களில் நடந்த கிராமசபைக் கூட்டங்கள் வெறும் சடங்காக நடக்காமல் உயிர் துடிப்புடன் நடந்தன.

வரவேற்க தக்க மாற்றம் இது. இதை அரசு புரிந்து கொண்டு அதற்கு ஏற்ப நடக்க வேண்டும்.

கிராமக்களும் தங்கள் பங்கிற்கு சுயநலத்தை கடைசியாக வைத்து பொதுநலனை பாதுகாக்கும் நடவடிக்கையை தொடர வேண்டும்.

ஜனநாயகத்தின் அஸ்திவாரம் பலப்படத் தொடங்கி இருக்கிறது. இது அங்கிருந்து ஒவ்வொரு மட்டமாக பரவி, மக்கள் பணியாற்றத்தான் அரசு என்கிற நிலை உருவாகும். அப்போது வலிமையான பாரதம் உருவாவது நிச்சயம். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP