Logo

தமிழன் என்றொரு இனமுண்டு...

‛‛யாதும் ஊரே, யாவரும் கேளிர்’’ என்று பாட்டன் சொன்னதற்கிணங்க, உலகம் முழுவதும் விரவிக் கிடக்கிறான் தமிழன். அவர்கள் அனைவரின் வாழ்வாதாரத்திற்கும், உன் குறுகிய புத்தியின் புதிய கூப்பாடான “தமிழன் வேலை தமிழனுக்கே” விரைவில் வேட்டு வைத்து விடும்.
 | 

தமிழன் என்றொரு இனமுண்டு...


‛‛தமிழன் என்றொரு இனமுண்டு; தனியே அவருக்கொரு குணமுண்டு’’ - சொல்லும் போதே கெத்தா இருக்குல்ல?

‛‛தமிழன் என்று சொல்லடா, தலை நிமிர்ந்து நில்லடா!’’ - செம்ம... செம்ம ப்ரோ....! செம்ம கெத்து ப்ரோ!

அட்ரா அட்ரா விசில… (ஆனால், மேற்சொன்ன வரி போல் தமிழ் இலக்கியத்தில் எங்கும் இல்லை)

இப்ப… ‛‛தமிழன் வேலை தமிழனுக்கே! தமிழன் நாடு தமிழனுக்கே!’’ பெரும்ம்மையா இருக்குல்ல?

தமிழ், தமிழன்னு சொன்னதும், ஜிவ்வுனு ஏறுவது யாருக்கு தெரியுமா? தமிழ் தெரியாத தற்குறிகளுக்குத் தான். பதட்டப்படாதீர்கள்! நிஜமாகவே, தமிழ் இலக்கியம், இலக்கணம் கற்றவன், பிற மொழிகளை தமிழுக்குச் சமமாக மதிப்பவனாகத் தான் இருப்பான். 

தான் செய்யத் தவறிய ஒன்றை, செய்ய முடியாத ஒன்றை, தன்னுடையது இல்லை என்று சொல்லி விடுவார்களோ என்ற பயம் ஒரு பக்கம்! தன்னிடம் இருக்கும் ஒரே பெருமை/அடையாளம் அந்தத் தமிழ் மொழியும், அதன் அடையாளச் சின்னங்கள் நிறைந்த தமிழகம் மட்டுமே. 

தன் பெருமையாகத் தனக்குச் சொல்லிக் கொள்ள வேறு ஏதும் இல்லாததால், தமிழையும், தமிழனையும் தன்னுடையது என்று உரக்க உரக்க கத்திக் கொண்டு திரிகின்றனர்.

ஏய் தமிழா!
கடந்த ஓர் நூற்றாண்டில், இந்திய அரசியலுடன் முழுவதும் ஐக்கியமாகாமல், உனக்குத் தேவையான தலைவர்களை, உன் மாநிலத்திலிருந்து நீயே தான் தேடிக் கொண்டாய். பிற மொழி புகுந்தால், உன் தாய்த் தமிழ் அழிந்து போகும் என்று பிதற்றிடிக் கொண்டு அலைந்தாய். 

உன்னை இது வரை ஆண்டவர்கள், உன் மொழியைக் காக்க, வளர்க்க என்ன செய்தார்கள் என்று நினைத்துப் பார்த்திருப்பாயா? எதுகை மோனையும், சினிமாவில் வரும் அடுக்கு மொழி வசனங்களும், குதர்க்க பதில்களும் உன் தாய் மொழி என்று சிலிர்த்த போதெல்லாம் ஒன்றை கவனிக்கத் தவறி விட்டார். 

அத்தகைய அலங்காரமெல்லாம், தாய்மை பொங்கப் பொங்க அமுதூட்டும் நற்றாயை ஒரு போதும் பெருமை படுத்தப் போவதில்லை. 

தமிழன் என்றொரு இனமுண்டு...
ஏய் தமிழா! 
கல்லூரிகளிலும், பல்கலைக் கழகத்திலும் பயிற்றுவிக்கப்படும் தமிழின் தரம் அறிவாயா? தமிழின் சொற்களஞ்சியங்களான, திவ்ய பிரபந்தமும், பன்னிரு திருமுறையும் அங்கே மருந்துக்குக் கூட கிடையாது!  கம்பனைக் கால்வாசி கூட கற்றுக் கொடுக்க முயலாத அல்லது இயலாத கல்லூரிகள். 

திருக்குறள் என்பது மனப்பாட பகுதி மட்டும் தான்; மறந்தும் அதன் பொருள் உணர்ந்து விடாமல் பார்த்துக் கொள்கிறார்கள். நீதி நூல்கள் எத்தனை இருக்கின்றன என்று ஒரு நாளாவது எண்ணிப் பார்த்திருப்பாயா? அதன் பெயர்களையாவது உன் குழந்தைகள் காதில் விழுமாறு செய்திருக்கிறாயா? அல்லது உனக்குத் தான் அது முழுதும் தெரியுமா?

ஏய் தமிழா!
ஒருவன் இளங்கலை படிப்பாக திருக்குறளை மட்டும் முழுமையாகப் படித்தானென்றால், அதனை, அவனால் வேறொரு மொழியில் முழுமையாகச் சொல்லத் தெரிந்திருந்தால், அவனை அந்த மொழி பேசுபவர்கள் தலையில் வைத்துக் கொண்டாடுவார்கள். ஆனால், இங்கு நடப்பதென்ன? பள்ளிப் பாடம் முதல் கல்லுாரிப் பாடம் வரை, ஊறுகாய் அளவுக்கு கூட திருக்குறளை கற்பதில்லை அல்லது கற்பிக்கப்படுவதில்லை. 

ஏனென்றால், பாடதிட்டத்தை வடிவமைக்கும் ஆசிரிய பெருந்தகைகளுக்கே இதன் அருமை தெரியாதே. அப்புறம் எப்படி அதை உனக்கு கற்பிக்க முன்வருவர்.

உனக்கு ஒரு பத்து அதிகாரமாவது அர்த்தத்துடன் தெரியுமா? தமிழே தெரியாமல், தமிழன் என்று மாரை நிமிர்த்துவது அசிங்கம். அதனினும் அசிங்கம், ‛‛திருக்குறளில் ஒன்றிரண்டைத் தவிர மற்ற எல்லாம் சொன்னதையே சொல்லியிருக்கு.அதொரு அநாவசியம்’’ என்று திருக்குறளை இகழ்ந்து பேசிய நபரை, தன் இனத்திற்குத் தந்தை என்றும் பெரியார் என்றும் கொண்டாடுவது தான்.

ஏய் தமிழா!
உன் முட்டாள்த்தனமான மொழிப் பற்றினை, தூண்டிற் புழுவாகப் பயன்படுத்தி, உன்னையும் உன் சந்ததியையும் அடிமையாக்கி ஆண்டவர்களைப் பற்றி விழிப்புணர்பு கொள்ளாமல், இன்னும் உன் தாழ்வு மனப்பான்மையை மறைக்க, தமிழை ஏன் கேடயமாக்கிக் கொண்டு திரிகிறாய்?

ஏய் தமிழா!
‛‛தமிழன் என்றொரு இனமுண்டு; தனியே அவர்க்கொரு குணமுண்டு’’ என்று பாடிய ராமலிங்கம் பிள்ளை, ‛‛தமிழன் வேலை தமிழனுக்கே’’ என்று நீ கூச்சலிடுவதைக் கேட்டிருந்தால், அடுத்த வரியான “அமிழ்தம் அவனுடைய வழியாகும்; அன்பே அவனுடைய மொழியாகும்!” என்ற வரியை எழுதியதற்காக தலைகுனிந்திருப்பார். 

அதை விட, “ மானம் பெரிதென உயிர்விடுவான், மற்றவர்க்காகத் துயர்படுவான்; தானம் வாங்கிடக் கூசிடுவான், தருவது மேல் எனப் பேசிடுவான்” என்று எழுதிய தன் கையை தானே தீயில் கருக்கியிருப்பார். தமிழனின் வாழ்வியல் பெருமையாக அவர்கள் சொல்லி விட்டுச் சென்றதில், ஏதேனும் ஒன்றையாவது கடைபிடிக்கிறாயா? 

மொழியும் தெரியாமல், முன்னோர்கள் வாழ்க்கை முறையையும் புரியாமல், அதை கடைபிடிக்கவும் செய்யாமல், பெருங்குடிகாரனாகச் சுற்றும் உனக்கு, வெறும் மொழிப் பெருமை மட்டும் எதற்கு?

‛‛யாதும் ஊரே, யாவரும் கேளிர்’’ என்று பாட்டன் சொன்னதற்கிணங்க, உலகம் முழுவதும் விரவிக் கிடக்கிறான் தமிழன். அவர்கள் அனைவரின் வாழ்வாதாரத்திற்கும், உன் குறுகிய புத்தியின் புதிய கூப்பாடான  “தமிழன் வேலை தமிழனுக்கே” விரைவில் வேட்டு வைத்து விடும். 

தன் இனத்திற்குத் தானே சவக்குழி தோண்டும் தமிழா! பின் வரும் சந்ததிகள் “தமிழன் என்றொரு இனமுண்டு; தனியே இழிவான குணமுண்டு” என்று பாட வைத்து விடாதே!

உலகின் பண்டைய மொழியான, தமிழின் அழிவுக்கு நீயே காரணமாக இருந்து விடாதே!


newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP