தேனி லோக்சபா தொகுதி யாருக்கு தித்திக்கும்? 

தேனி தொகுதியின் தேர்தல் முடிவு, ஓ.பி.எஸ்., மற்றும் தினகரன் ஆகியோரின் தனிப்பட்ட செல்வாக்க நிரூபிக்கும் தேர்தலாக பார்க்கப்படுவதால், இரு தரப்பினருமே பிரசார களத்தில் கடுமையாக பணியாற்றி வருகின்றனர்.
 | 

தேனி லோக்சபா தொகுதி யாருக்கு தித்திக்கும்? 

தமிழகத்தில் அடுத்த மாதம், 18ல் லோக்சபா தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு நடைபெறவுள்ளது. முக்கிய அரசியல் கட்சிகளிடயே கூட்டணி பேச்சுகள் முடிந்து, தொகுதிகள் ஒதுக்கப்பட்டு, வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டாகிவிட்டது. அந்த வேட்பாளர்கள், தங்கள் தாங்கள் போட்டியிடும் தொகுதிகளில் வேட்பு மனுவும் தாக்கல் செய்துவிட்டனர்.

இந்நிலையில், தமிழகத்தின் தென் மாவட்டங்களை உள்ளடக்கிய, தேனி மக்களவை தொகுதி, இம்முறை, வி.ஐ.பி., அந்தஸ்த்து பெற்றுள்ளது. காரணம், துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தின் மகன் ரவீந்திரநாத், அந்த தொகுதியில் அ.தி.மு.க., வேட்பாளராக களம் இறக்கப்பட்டுள்ளார். 

அரசியல் மேடைகளில் வார்த்தைக்கு வார்த்தை, தி.மு.க., வாரிசு அரசியல் செய்வதாக பேசிய ஓ.பிஎஸ்., தற்போது, தன் மகனை வேட்பாளராக களம் இறக்கியதோடு மட்டுமின்றி, ‛வாரிசுகள் அரசியலுக்கு வரக்கூடாது என எந்த சட்டமும் சொல்லவில்லை’ என்கிறார். 

பெரியகுளத்தை சேர்ந்த பன்னீர் செல்வம், அதிமுக சார்பில் பெரியகுளம், போடிநாயக்கனுார் சட்டசபை தொகுதிகளில் போட்டியிட்டு வென்றனர். தேனி மக்களவை தொகுதியின் கீழ் தான் இந்த சட்டசபை தொகுதிகள் வருகின்றன. தவிர, கம்பம், ஆண்டிப்பட்டி தொகுதியிலும், அதிமுகவை சேர்ந்த மூத்த நிர்வாகி என்ற அடிப்படையில் அவருக்கு செல்வாக்கு இருப்பதாக நம்புகிறார். இந்த சட்டசபை தொகுதிகளும் தேனியில் தான் அடங்குகின்றன. 

தேனி லோக்சபா தொகுதி யாருக்கு தித்திக்கும்? 

மதுரை மாவட்டம் சாேழவந்தான் மற்றும் உசிலம்பட்டி சட்டசபை தொகுதிகளும் அடங்கியதே தேனி தொகுதி. மதுரையிலும், அதிமுகவை சேர்ந்த அமைச்சர்கள் பலர் இருப்பதால், அங்கும் பெருவாரியான ஓட்டுகளை பெற்றுவிடலாம் என நினைக்கிறார். 

அந்த நம்பிக்கையில் தான், கட்சியின் ஒருங்கிணைப்பாளராக இருக்கும் போதே, தன் மகன் ரவீந்திரநாத்தை, எம்.பி.,ஆக்கி பார்த்துவிட வேண்டும் என்ற ஆசையில், அவரை, தேனி மக்களவை தொகுதியில் களம் இறக்கியுள்ளார். 


இதுவரையிலான தேர்தல் கணக்குளின் படி பார்த்தால், ஆண்டிப்படி, பெரியகுளம், போநாயக்கனுார் ஆகிய தொகுதிகளில், அதிமுகவுக்கு பெரிய அளவிலான ஆதரவு இருந்திருக்கிறது. அதிமுக நிறுவனரும் மறைந்த முதல்வருமான எம்.ஜி.ஆர்., போட்டியிட்டு வென்ற சட்டசபை தொகுதி ஆண்டிப்பட்டி. 

இங்கு தான் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவும் இருமுறை வெற்றி பெற்றார். ஜெயலலிதா போட்டியிட்டு வெற்றி பெறுவதற்காக, ஆண்டிப்பட்டி எம்.எல்.ஏ.,வாக இருந்த தங்கதமிழ் செல்வன், தன் பதவியை ராஜினாமா செய்தார். 

அதே தங்க தமிழ் செல்வன் தான், தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில், தேனியில் களம் இறக்கப்பட்டுள்ளார். அவருக்கு, ஆண்டிப்பட்டி மட்டுமின்றி, பெரிகுளம், போடிநாயக்கனுார் உள்ளிட்ட சட்டசபை தொகுதிகளிலும் செல்வாக்கு இருப்பதை, முந்தைய தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன. 

அதே போல் தேனி தொகுதியில், அமமுக துணை பொதுசெயலர், ஏற்கனேவ, அதிமுக சார்பில் தினகரன் போட்டியிட்டு வெற்றி பெற்றிருக்கிறார். தினகரன் தரப்பு வேட்பாளராகத் தான், தங்க தமிழ் செல்வன் போட்டியிடுகிறர். பொதுவாக, அதிமுகவின் கோட்டையாக பார்க்கப்படும் தேனி தொகுதியில் இம்முறை, அதிமுக மற்றும் அதிலிருந்து பிரிந்த அமமுக ஆகிய இரு கட்சிகளும் போட்டியிடுகின்றன. 

தேனி லோக்சபா தொகுதி யாருக்கு தித்திக்கும்? 

இதனால் அந்த தொகுதியில் போட்டி கடுமையாக இருக்கும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. அதே சமயம், காங்கிரஸ் கட்சியின் சார்பில், அதன் முன்னாள் மாநில தலைவர் இ.வி.கே.எஸ்.இளங்கோவன் போட்டியிடுகிறார். தி.மு.க., கூட்டணியும் இருப்பதால், அவருக்கும் பிரகாசமான வாய்ப்பு இருப்பதாகவே தெரிகிறது. தவிர, இந்த தொகுயில், ஏற்கனவே, காங்கிரசை சேர்ந்த ஆரூன் போட்டியிட்டு வெற்றி பெற்ற வரலாறும் உண்டு.

எனினும், தேனியில் தற்போது, பிரதான போட்டி, அதிமுக - காங்கிரஸ் இடையிலா என்பதை விட, அதிமுக - அமமுக இடையே தான் என்ற வகையில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. 

குறிப்பாக, தேனி தொகுதியின் தேர்தல் முடிவு, ஓ.பி.எஸ்., மற்றும் தினகரன் ஆகியோரின் தனிப்பட்ட செல்வாக்க நிரூபிக்கும் தேர்தலாக பார்க்கப்படுவதால், இரு தரப்பினருமே பிரசார களத்தில் கடுமையாக பணியாற்றி வருகின்றனர். 

இந்த இருவரிடையிலான போட்டியலால், ஓட்டுகள் பிரிந்து, அது தங்களுக்கு சாதகமாக அமையும் என திமுக கூட்டணியை சேர்ந்த காங்கிரசார் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

எனினும், தேனி தொகுதி யாருக்கு தித்திக்கும் என்பதை மே 23 வரை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP