ஊடகங்கள்... உண்மையின் பக்கமா உள்ளன ...?

செய்திகளால் பாதிக்கப்படும் நபர்கள் அல்லது தலைவர்கள் மரியாதையை இழந்து நிற்பதற்கு யார் பொறுப்பேற்பர். நாட்டில் உள்ள சிஸ்டத்தின் மீதே மக்களை நம்பிக்கை இழக்கச் செய்யும். தமிழக ஊடக ஆசிரியர்கள் விரும்புவதும் அதைத்தானோ..?
 | 

ஊடகங்கள்... உண்மையின் பக்கமா உள்ளன ...?

கோலி சோடா திரைப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சியானது தலைவனாக இருப்பவனுக்கு அடையாளம், மரியாதை எவ்வளவு முக்கியம் என்பது புரியும்படி விளக்கும். திரைப்படத்தில் மட்டும் அல்ல அரசியலிலும் அதுதான் முக்கியம்.

அப்போதுதான் ஓட்டுப் போடுபவன் அடுத்த 5 ஆண்டுகள் நமக்கு இவர் துரோகம் செய்ய மாட்டார் என தைரியம் வரும். இப்போது வாக்காளனுக்கு எந்த தலைவன் மீதும் நம்பிக்கை இல்லை. ஏம்பா ஓட்டு போட்ட என்றால் இவர் நல்லவர் அதனால் போட்டேன் என்று பதில் சொல்வதற்கு பதிலாக இருப்பவர்களில் இவர் பரவாயில்லை என்று தான் கூறுகிறார். இந்த நிலை ஏற்பட ஜனநாயகத்தின் நான்காவது துாண்தான் காரணம்.

புலனாய்வு பத்திரிக்கைகள் வந்த பின்னர் உண்மையான விஷயங்களை பற்றி ஆய்வு செய்து, அவற்றின்மீது, சட்ட ரீதியான நடவடிக்கைகள் எடுக்க முன்வராமல் நாளிதழ்களில் வராத செய்திகளின் பின்புலங்களை கற்பனையாக சேர்த்து எழுதுவது தான் தங்கள் கடமை என்று மாற்றிவிட்டன.

இதனால் தான் கலைஞர் கோடி கோடியாக சம்பாதித்துவிட்டார். ஜெயலலிதா ஊழலுக்கு கணக்கு வழக்கே இல்லை. மோடி மதவாதி, ராகுல் அனுபவம் இல்லாதவர் என்று அனைவரின் மீதும் இயல்பாக இருக்க வேண்டிய மரியாதையைக் கூட இந்த புலனாய்வு பத்திரிகைகள் கெடுத்து விட்டன. (சில தலைவர்கள் அவர்கள் மீதான மரியாதையையே தாமாகக் கெடுத்துக் கொண்டது தனி கதை)

இதனால் எந்த தலைவர் மீதும் நம்பிக்கை இல்லை, அவர் உண்மையிலேயே நல்லது செய்தால் கூட ஏதாவது லாபம் இல்லாமலா செய்வார் என்ற எண்ணம் தான் உயர்ந்து நிற்கிறது.

கடந்த காலத்தில் வெறும் பத்திரிக்கைகள் தான் இருந்தன. தற்போது ஊடகங்கள், சமூக ஊடகங்கள் என்று திரும்பி திசையிலெல்லாம் கேமராக்கள். எவ்விதமான கட்டுப்பாடுகளும் இல்லாமல் தலைவர்களின் சிறிய செயல்கள் கூட பெரிதாக்கப்படுகின்றன. பொய்கள் கூட உண்மையை போலவே திரித்து குழப்பதை ஏற்படுத்தப்படுகின்றன.

ஊடகங்கள்... உண்மையின் பக்கமா உள்ளன ...?

எங்கிருந்தோ ஒருவர் வந்து, நான் தெஹெல்கா பத்திரிகையின் முன்னாள் உதவி ஆசிரியர், நான் ஓர் வீடியோ ஆவணம் எடுத்துள்ளேன். அது தமிழகத்தையே புரட்டுப்போட உள்ளது என்று வெளியிடுவாராம். அதை தமிழக ஊடகங்களும் அப்படியே வெளியிடுமாம்.  இந்த வீடியோ வெளியாவதற்கு முன்பாக, அன்றைய தினம் காலையிலிருந்தே திமுக ஆதரவு ரிப்போர்ட்டர்கள், சக ரிப்போர்ட்டர்களிடம், மதியத்திற்கு மேல், பரபரப்பை ஏறப்டுத்தும் ஓர் எக்ஸ்போஸ் வெளியாக உள்ளது என்று முன்னோட்ட செய்தி வெளியிடுவார்களாம். அதையடுத்து தமிழக ஊடகங்கள் அந்தச் செய்தியை வெளியிடத் தயாராகிவிடுவார்களாம். என்னைய்யா இது கோமாளித்தனமா இருக்கிறது என்று கேட்கிறீர்களா?

நாம் சொல்வதற்கான சமீபத்திய உதாரணம். கோடநாடு கொலைகள் பற்றிய டெகல்கா உதவி ஆசிரியர் வெளியிட்ட வீடியோ. சரி, வெளியிடப்பட்ட வீடியோவில் ஏதாவது புதிதாக இருந்ததா என்றால் ஒன்று கூட இல்லை. ஏற்கெனவே தமிழக செய்தித்தாள்கள், வாராந்திரிகள் மற்றும் ஊடகங்களில் வந்துள்ள புகைப்படங்கள், கொடநாடு எஸ்டேட்டின் முகப்பு ஆகியனதான் அதில் இருந்தன. கூடுதலாக கொடநாடு வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள நபர்கள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி குறித்து  பேசியிருந்தவை மட்டுமே புதிதாக இருந்தன. அந்த நபர்கள் அவர்கள் கூறியதை ஏன் போலீசாரிடமும், நீதிபதிகளிடமும் கூறவில்லை என்பது வேடிக்கையாக உள்ளது.
ஊடகங்கள்... உண்மையின் பக்கமா உள்ளன ...?
ஜெயலலிதா உயிருடன் இருந்த கடைசி நிமிடம் வரை சசிகலா குடும்பத்தினர் கட்டுப்பாட்டில் இருந்தார். அவர் மருத்துவமனையில் 72 நாட்கள் இருந்தார். இத்தனை நாள் இடைவெளியில் கோடநாட்டில் எந்த பொருளையும்  அகற்றாமல் அப்படியே சசிகலா வைத்திருப்பார் என்று எப்படித்தான் நம்புகிறோமோ தெரியவில்லை. ஜெயலலிதா இறந்த சில நாட்களிலேயே அவரின் கால்கள் வெட்டி எடுக்கப்பட்டது. அதைக் கொண்டுதான் அவரின் லாக்கரை திறக்க முடியும் என்றெல்லாம் கூட பத்திரிகையில் செய்திகள் உலா வந்தன.

இந்த சூழ்நிலையில் சிலர் கோடநாடு எஸ்டேட்டில் கொள்ளையடிக்க சென்றார்களாம். அவர்கள் ஆவணங்களையும், ரூ. 2000 கோடியை எடுக்க முயன்று .தோல்வி அடைந்து சில வாட்சுகளையும், பேப்பர் வெயிட்டை மட்டும் திருடிக் கொண்டு தப்பி ஓடிவிட்டார்களாம். தொடர்ந்து சம்பவத்தில் இடம் பெற்ற பெரும்பாலானவர்கள் சந்தேகப்படும் படியாக இறக்கிறார்கள்.

இது தொடர்பான வழக்கு காவல்துறை வசம் உள்ளது. இந்நிலையில் சம்பந்தமே இல்லாமல் நிறுத்தப்பட்ட பத்திரிக்கையான டெகல்காவின் முன்னாள் உதவி ஆசிரியர் மேத்யூஸ் சாமுவேல் ஒரு ஆவணப்படத்தை வெளியிடுவாராம். அதில் முதல்வர் பழனிசாமியை அவர்கள் குற்றம்சாட்டுவார்களாம்.

ஊடகங்கள்... உண்மையின் பக்கமா உள்ளன ...?

உண்மையில் இப்படி நடந்து இருந்தது என்றால் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் போலீஸ் அல்லது நீதிபதியிடம் கூறியிருக்கலாம். அல்லது நம்ம நக்கீரன் கோபாலிடம் சொல்லி இருக்கலாம். ஆனால் இதையெல்லாமல் விடுத்து டில்லியில் இருந்து தேடி வந்து இவர்களை பேட்டி எடுத்து ஒளிபரப்பு செய்துள்ளனர். இந்த வீடியோ வாக்குமூலங்கள் சாட்சிகளாக கோர்ட்டில் நிற்காது என்று தெரிந்தும் கூட ஒளிபரப்பட்டுள்ளது.

சமீபத்திய டுபாக்கூர் புலனாய்வு வீடியோ தயாரிப்பதற்கு கூலியாக சுமார் 50 லட்சத்தை விட சற்றே கூடுதலாக கொடுக்கப்பட்டு இருக்கும் என ஊடகத்துறை நிபுணர்கள் கூறுகிறார்கள். இதை முதலீடு செய்தவர் யார் என்பதும் கேள்விக்குறி.

இதே போல அமைச்சர் ஜெயக்குமார் பெண்ணை பலாத்காரம் செய்தார் என்று தினகரன் அணி ஆடியோ வெளியிட்டது.

சரி இது தான் இப்படி என்றால் அமைச்சர் ஒருவர் இதையும் விசாரிப்போம், 2ஜி வழக்கில் தொடர்புடைய சாதிக்பாட்ஷா தற்கொலையையும் விசாரி்ப்போம் என்று தன் பங்கிற்கு கொளுத்திப் போடுகிறார்.

நீயும் யோக்கியன் இல்லை, நானும் யோக்கியன் இல்லை என்று மாறி மாறி இவர்கள் சாணிவீசிக் கொள்வதால் அவர்களுக்கு அசிங்கமோ இல்லையோ, இவர்களை ஓட்டுப் போட்டு தேர்வு செய்த நமக்கு மிகவும் அசிங்கம் மட்டும் அல்ல மகா கேவலம்.

ஊடகங்கள்... உண்மையின் பக்கமா உள்ளன ...?

இப்படி ஒவ்வொரு தலைவர் மீதும் மரியாதை இழக்கச் செய்வது மக்கள் மத்தியில் குழப்பத்தை தான் ஏற்படுத்தும். அது போன்ற நிலையில் தேச விரோதிகள் தான் கடவுளாகத் தெரிவார்கள். அவர்களிடம் ஆட்சி சென்றால் அதை விட நாசம்  என்று சொல்வதற்கு எதுவும் இல்லை. இனியாவது தலைவர்கள் மரியாதையை காப்பாற்றிக் கொள்வது போல நடக்க வேண்டும் என்பதே நல்ல குடிமகனின் எதிர்பார்ப்பு.

ஆனால் எவ்வித கட்டுப்பாடுகளும் இல்லாத ஊடகங்களுக்கு யார் கடிவாளமிடுவது. யார் மீது வேண்டுமானாலும், அவர்கள் கூட்டாகச் சேர்ந்து கொண்டு சேற்றை வாரி இறைக்கலாம், செய்திகளை உள்நோக்கத்தோடு திரித்து வெளியிடலாம் என்ற ஊடக ஆசிரியர்கள் செயல்பட்டால், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது ஓர் கருத்து. 

ஆனால், அவர்கள் வெளியிடும் செய்திகளால் பாதிக்கப்படும் நபர்கள் அல்லது தலைவர்கள் மரியாதையை இழந்து நிற்பதற்கு யார் பொறுப்பேற்பர். இத்தகைய செயல்கள் நாட்டில் உள்ள சிஸ்டத்தின் மீதே மக்களை நம்பிக்கை இழக்கச் செய்யும். தமிழக ஊடக ஆசிரியர்கள் விரும்புவதும் அதைத்தானோ..?

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP