பல கோடி நுாறாயிரம் ஆண்டுகள் நீடித்து வாழ்வாள் தமிழன்னை!

தமிழன்னை, இன்னும் பல்லாயிரம் பல்லாயிரம், பல கோடி நுாறாயிரம் ஆண்டுகள் செழித்து வாழும் தகுதியும், திறனும் உடையவள். அவளின் குழந்தைகளாக, இன்னும் ஓராயிரம் புதிய மொழிகள் தோன்றலாமே தவிர, மக்கள் மத்தியில் பதற்றத்தை ஏற்படுத்தி, அதன் மூலம் பிரிவினையை துாண்ட நினைப்பவர்களின் குறுகிய எண்ணம் போல், தமிழன்னை ஒன்றும் அவ்வளவு குறுகிவிடவில்லை என்பதே ஆகச்சிறந்த உண்மையும், நிதர்சனமும் ஆகும்.
 | 

பல கோடி நுாறாயிரம் ஆண்டுகள் நீடித்து வாழ்வாள் தமிழன்னை!


கண்ணால் காண்பதும் பொய், காதால் கேட்பதும் பொய், தீர விசாரிப்பதே மெய் என்று மொபைல் போன் கண்டு பிடிப்பதற்கு பல ஆண்டுகளுக்கு முன்பாகவே, நம் முன்னோர்கள் சொல்லி வைத்தார்கள். கண்களை குழப்பத்தில் ஆழ்த்தும் பல படங்கள் இருக்கின்றன. அதே போலத் தான் காதுகளும். ஆனால் சமூக ஊடங்கள் வந்த பின்னால் மூளையை கூட இறுக்கி மூடிவிடுகிறோம். 

யார் என்றே தெரியாத ஒருவன், எதைப்பற்றியோ சொல்லி விட; நமக்கு தெரிந்தவர்கள் கூட பொய் சொல்கிறார்கள், தவறாக சொல்கிறார்கள் என்று கருதுகிறோம். உங்களுக்கு தெரியாது, வாட்ஸ் அப்பில் இப்படிதான் வந்தது என்று அடித்து பேசி, முட்டாள் தனத்தை வெளிப்படுத்தும் பலர் உலாவருகிறார்கள்.
 
வாட்ஸ், பேஸ்புக்கில் சொன்னால் தான் உண்மை என்று நினைக்கும் வெள்ளேந்தி மனசு காரர்களை எப்படி எல்லாம் ஏமாற்றலாம் என்பதற்கு சமீபத்தில் உலா வந்த விடியோ ஒன்றே சாட்சி. 

தஞ்சை பெரிய கோயிலில் உள்ள கல்வெட்டுகளில், தமிழ் கல்வெட்டுகளை இந்தி கல்வெட்டுகளாக மாற்றுகிறார்கள் என்று ஒரு வாலிபர் வீடியோ எடுத்து பரபரவ விடுகிறார். அதற்கு அவர் சுவரில் இருக்கும் இந்தி கல்வெட்டுகள், தமிழ் கல்வெட்டுகள், தனியே இருக்கும் சில கல்வெட்டுக்களை சுட்டிக் காட்டி, இந்தி திணிப்பு என்று கூக்குறள் இடுகிறார். 

இது நாடுமுழுவம் ஒரு சுற்று பரபரப்பை ஏற்படுத்தி விடுகிறது. தஞ்சையிலும், பரபரப்பிற்கு கேட்கவா வேண்டும். இந்த வீடியோவில் கூறியிருப்பது போல கட்டப்பட்ட கோயிலில் கல்வெட்டுக்ளை மாற்ற முடியுா? அதற்கு தொல்பொருள் ஆராய்ச்சி துறை அனுமதிக்குமா? அப்படி என்றால் கோயில் முழுவதும் பிரித்து விட்டு தானே இதனை செய்ய முடியும். 

இந்தி தெரியும் என்று போட்டாலே 5 மதிப்பெண் மருத்துவபடிப்பிற்குரிய கட்ஆப் மதிப்பெண் கூடுதல் என்றால், நம்மவர்கள் பிள்ளை பிறக்கும் முன்பே, இந்தி வகுப்பில் சேர்க்க துடிப்பார்களே, அப்படி இருக்கும் போது கோயில் சுவறில் எழுதி தான் இந்தியை திணிக்க வேண்டும் என்ற அவசியம் என்ன என்ற கேள்வி யாருக்கும் இல்லை. 

பல கோடி நுாறாயிரம் ஆண்டுகள் நீடித்து வாழ்வாள் தமிழன்னை!

உண்மையில் நடந்தது என்ன?
தொல்பொருள் ஆராய்ச்சி துறை பராமரிப்பில் கோயில், அல்லது நினைவிடம் இருந்தால், அதை அப்படியே பாதுகாப்பார்களே தவிர்த்து, எளிதில் பராமரிக்க முடியாது. புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே உள்ள கொடும்பாளூரில் இருக்கும் ஐவர் கோயில், மூவர் கோயில் போன்றவற்றை சென்று பாருங்கள். அங்கு வெறும் அஸ்திவாரம், அதை சுற்றிலும் கற்கள் தான் கிடக்கும்.

இங்குதான்  ஐவர் கோயில் இருந்தது என்று காட்டுவார்கள். அதே போல தான், மற்ற இடங்களும். அது இடிந்து விழுந்தாலும் கவலைப்படமாட்டார்கள். அதையும் மீறி கும்பாபிஷேகம் செய்ய அனுமதி பெற்றால், ஒவ்வொரு கல்லிலும் எண்கள் குறிப்பிட்டு, அவற்றை பிரித்து, பின்னர் அந்த எண்கள் அடிப்படையிலேயே மீண்டும் கட்ட வேண்டும். 

அப்போது தான் பழைய வடிவம் கிடைக்கும். மாற்றி வைத்தால் கோயில் கட்ட முடியாது. இதன் காரணமாக, இந்தி எழுத்தில் உள்ள கல்வெட்டு அந்தப்படியேயும், தமிழ் எழுத்துகள் கொண்ட கல்வெட்டு அந்தப்படியேயும் தான் இருக்கும். அதாவது கும்பாபிஷேகம் நடத்த திருப்பணி செய்யும் நிலையில் கூட இது தான் நிலை. 

அப்படி இல்லாமல், கல்வெட்டுகளை மறைத்து அதன் மேல் வேண்டுமானால், வேறு ஒன்றை பதிக்கலாமே தவிர்த்து, பழைய கல்வெட்டு இருக்கும் இடத்தில் அதை மாற்ற முடியாது. 
அடுத்தது, தஞ்சையை சோழர்கள் மட்டும் ஆட்சி செய்ய வில்லை. மராட்டிய மன்னர்களும் ஆட்சி செய்தார்கள். இன்றைக்கு சரபோஜி மன்னர்களின் வாரிசுகள் தான் மன்னர்களின் வாரிசு என்று அடையாளம் காட்டப்படுபவர்கள். சரபோஜி மன்னர்களின் தாய்மொழி தமிழ் அல்ல. மராட்டியம், அதன் எழுத்து வடிவம் தேவநகரிதான். அது தான் கல்வெட்டுகளில் இடம் பெற்றுள்ளது. 

பல கோடி நுாறாயிரம் ஆண்டுகள் நீடித்து வாழ்வாள் தமிழன்னை!

மன்னர் கால  கோயில் ஒரே ஆட்சியில் கட்டி முடிக்கப்படவில்லை. இரண்டு மூன்று மன்னர்கள் தொடர்ந்து கட்டியது தான் நாம் இன்று காணும் வகையில் இருப்பது. அந்தப்படியே சரபோஜி மன்னர்கள் கட்டிய மண்டபங்களில், மராட்டிய எழுத்துக்கள் கொண்ட கல்வெட்டுக்கள் பதிக்கப்பட்டன. 

தற்போது கோயிலின் உள்ளே உள்ள கூடுதல் கல்வெட்டுகள், பல இடங்களில் கண்டுபிடிக்கப்பட்டவை என்று  தொல்பொருள் ஆராய்ச்சி துறையினர் கூறுகின்றனர். ஆனால், இதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் ஒரு வீடியோ எடுத்து தமிழை காப்பாற்றுங்கள் என்ற ரேஞ்சுக்கு பரவவிட்டவரை என்ன சொல்வது. அதையும் நம்பி, பதட்டத்தில் ஆழ்பவர்களின் அறிவை எப்படி பாராட்டுவது? 

தமிழை அவ்வளவு சீக்கிரம் யாராலும் அழிக்க முடியாது; அதே சமயம், தமிழை யாரும் காப்பாற்றித் தான், அது நிலைத்திருக்க வேண்டும் என்ற அளவுக்கு அது வலுவிழந்துவிடவும் இல்லை. 

தமிழன்னை, இன்னும் பல்லாயிரம் பல்லாயிரம், பல கோடி நுாறாயிரம் ஆண்டுகள் செழித்து வாழும் தகுதியும், திறனும் உடையவள். அவளின் குழந்தைகளாக, இன்னும் ஓராயிரம் புதிய மொழிகள் தோன்றலாமே தவிர, மக்கள் மத்தியில் பதற்றத்தை ஏற்படுத்தி, அதன் மூலம் பிரிவினையை துாண்ட நினைப்பவர்களின் குறுகிய எண்ணம் போல், தமிழன்னை ஒன்றும் அவ்வளவு குறுகிவிடவில்லை என்பதே ஆகச்சிறந்த உண்மையும், நிதர்சனமும் ஆகும். 


newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP