திடீரென முளைக்கும் ‛கருத்து கந்தசாமிகள்’

புதிய கல்விக் கொள்கையை எதிர்ப்பவர்கள், தற்போது இருக்கும் கல்வி முறையே சிறந்தது என்று கூறுபவர்கள் வரும் கல்வியாண்டில் தங்கள் பிள்ளைகளை தற்போது படிக்கும் பள்ளியில் இருந்து விலக்கி, அருகில் உள்ள அரசு பள்ளிகளில் சேர்த்துவிட்டு பேசட்டும். அப்போது மட்டுமே அவர்களை மக்கள் நம்ப வேண்டும். இது நடிகர் சூர்யாவிற்கு விடப்பட்ட சவால் அல்ல, நம்ம தெருவில் இருப்பவர்களுக்கும் தான். சவாலை சந்திக்க தயாரா?
 | 

திடீரென முளைக்கும் ‛கருத்து கந்தசாமிகள்’

‛தன் முதுகில் இருக்கும் உத்திரம் தெரியாதாம்’ என்ற பழமொழி, நம் நடிகர்களுக்கு நன்கு பொருந்தும். ஒரு சில லட்சகணக்கானவர்கள் மனங்களை புரிந்து கொண்டு, அவர்களை இரண்டரை மணி நேரம் அமர வைக்கும் ரகசியம் அவர்களுக்கு தெரியாது. ஆனால், பல லட்சம் கிராமப்புற மக்களின் எதிர்காலத்தை நிர்ணயம் செய்யும் விஷயங்களில் கருத்து சொல்வார்கள்.

இதற்கு தியேட்டர்களில், தலைவர்களை தேடும் நாம் தான் காரணம். நல்லக்கண்ணு, வைகோ, ராமதாஸ், பாஜக, காங்கிரஸ் கட்சியினரை விட நமக்கு நல்லது செய்யப்போகிறவர்கள், தமிழகத்தின் எதிர்காலத்தை நன்கு சிந்தித்தவர்கள், ரஜனி, கமல், விஜய், பா.ரஞ்சித், விஜய்சேதுபதி என்று தேர்தல் வரை நினைக்கிறோமே அதனால் தான் அவர்களும், நமக்கு அறிவுரை சொல்கிறார்கள்.

அந்த வரிசையில் தான், புதிய கல்விக் கொள்கை பற்றி இவர்கள் விமர்சனம் செய்கிறார்கள். அதன் மீது முதற்கல் எறிய இவர்களுக்கு என்ன தகுதி இருக்கிறது.

அகரம் பவுண்டேஷன் மூலம் கல்வி சேவை செய்கிறார். பலரின் வாழ்க்கையில் விளக்கு ஏற்றுகிறார் நடிகர் சூர்யா. இந்த புதிய கல்விக் கொள்கை பற்றி அவர் விமர்சனம் செய்தார். இதையாவது ஏற்கலாம். ஆனால், அவருக்கு ஆதரவாக எத்தனை பேர் களம் இறங்கினார்கள். அவர்களில் பலருக்கு, தங்கள் பிள்ளை எந்த பள்ளியில் எந்த வகுப்பில், எந்த  பாடதிட்டத்தை படிக்கிறான் என்பது கூட தெரியாது.

தமிழகத்தில், இன்ஜினியரிங் கல்லுாரியில் ஒரு லட்சம் இடங்கள் காலியாக இருக்கிறது. அதே நேரத்தில் எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை அண்ணாபல்கலைக்கழகம், அல்லது பிஎஸ்டி கல்லுாரியிலாவது சீட்டு வாங்கி கொடுங்கள் என்று அலையும் பெற்றோர்கள் பலர் இருக்கிறார்கள். 

இரண்டு கல்லுாரிகள் இடையே என்ன வேறுபாடு. அங்க படிச்சா கட்டாயம் வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கைதான் ஒரு கல்லுாரியை நிரம்பி வழியவும், மற்றொரு கல்லுாரியை காலியாகவும் வைக்கிறது. ஆனால் இரண்டு மாணவர்களும் ஒரே வேலை வாய்ப்புக்கான தேர்வில் நிற்கும் போது அவர்களில் ஒருவன் வெளியேற்றப்படுவான்.

இந்த ஒரு வருஷத்திற்கு எங்கேயும் டூர் கிடையாது, வீட்டில் டிவி கனெக்ஷன் எடுத்துவிட்டேன். நல்ல டயட் இருந்தால் தானே மகன், அல்லது மகள் நல்ல மார்க் ஸ்கோர் செய்ய முடியும் என்று பெற்றோர்கள் தவம் இருக்கும் இதே தமிழ்நாட்டில் தான், பாலியல் தொழிலில் தன் உடலை விற்று, அந்த பணத்தில் கட்டுரை நோட்டு வாங்கி செல்லும் பெண்ணும் வாழ்கிறாள். அவள் பிள்ளைக்கோ, பெண்ணுக்கோ ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை எல்லாமே ஒரே கதை தான்.

சமூக நீதி பற்றி பேசும் நம்மவர்கள், நாங்கள் இத்தனை சதவீதம் இருக்கிறோம். ஆனால், இத்தனை சதவீதமே இருக்கும் இவர்கள் நாட்டை ஆளலாமா என்று கத்துவார்கள். அதே போல, பெரும்பான்மையான அரசு பள்ளி மாணவர்கள் வீதியில் நிற்க, 2 அல்லது 3 சதவீதம் படிக்கும் சிபிஎஸ்சி, மெட்ரிக் மாணவர்கள் மட்டும் எளிதில் உயர் கல்வி பெறலாமா, அல்லது வேலைக்கு செல்லலாமா என்று கேள்வி எழுப்பினால் என்ன செய்வது.

கல்லுாரி சேர்க்கை காண கட் ஆப் மதிப்பெண்ணை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் முதல் 100 இடங்களை பிடித்த மாணவர்களில் எத்தனை சதவீதம் பேர் அரசு பள்ளிகளில் படித்தவர்கள் என்று ஆராய்வு செய்யுங்கள். எவனுமே இருக்கமாட்டான். சம்பரதாயத்திற்கு அவனுக்கு மார்க் மட்டும் கிடைக்கும். எந்தக் கல்லுாரியும் இடம் கொடுக்காது.

அப்படிபட்ட அரசு பள்ளி மாணவனை தேர்வுகளுக்கு தயாரிக்க வேண்டியதற்கு பதிலாக; அவனை அடையாளப்படுத்தி தேர்வை ரத்து செய்ய வேண்டிய முயற்சி தான் நடக்கிறது.

புதிய கல்விக் கொள்கை மாணவர்களுக்கு எவ்ளவு வளைந்து கொடுக்கிறதோ, அந்த அளவிற்கு ஆசியர் தகுதித் தேர்வில் கெடு பிடிகாட்டுகிறது. காரணம் நல்ல ஆசரியர்கள் தான் நல்ல மாணவர்களை உருவாக்க முடியும். தனியார் பள்ளிகளில் எல்கேஜி வகுப்புகளைக் கூட பட்டதாரி ஆரிசியர்கள் தான் நடத்துகின்றனர். அதே நேரத்தில் ஆசிரியர் பட்டயப்படிப்பு படித்தால் போதும், 5ம் வகுப்பு வரை பாடம் எடுக்கலாம். தற்போது 3ம் வகுப்பு வரை இந்த ஆசிரியர்கள் பாடம் எடுக்கலாம் என்று மாற்ற முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.

இது முழுமையாக நடைமுறைப்படுத்தப்படும் போது, பல லட்சம் ஆசிரியர் பட்டம், பட்டயப்படிப்பு படித்தவர்கள் வேலையில்லாமல் இருப்பார்கள்.

இன்றைய சூழ்நிலையில், எழுதப்படிக்க தெரியாதவன் வாழ்க்கையில் வெற்றி பெறுகிறான். அது தெரிந்தவன் தெருவில் சுற்றுகிறான் அல்லது கிடைத்த வேலையில் கரை ஒதுங்குகிறான். மும்பையில் டப்பா வாலாக்கள் செய்யும் வேலையை, இன்று நாடு முழுவதும் பட்டதாரிகள் செய்கிறார்கள். 

எல்லா தனியார் நிறுவனங்களும் இன்று பட்டதாரிகளுக்கு மட்டுமே வேலை தருகின்றன. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு எல்லாவற்கும் தீர்வு என அடையாளம் காட்டப்பட்ட எம்பிஏ, இன்று மவுசு இழந்து விட்டது. இன்ஜினியரிங் கல்லுாரிகள் விற்பனைக்கு வந்து விட்டன. இதுவரை இன்ஜினியரிங் கல்லுாரியாக இருந்தவை, தற்போது உண்டு உறைவிடப் பள்ளிகளாக மாறிவிட்டன. கல்வி வியாபாரிகள் சந்தையில் எதற்கு மதிப்பு இருக்கிறதோ, அதற்கு தகுந்த வகையில் கடைவிரிக்கிறார்கள்.

இத்தனைக்கும் தீர்வு கல்வி முறையை மாற்றுவதுதான். அதைத்தான் இப்போது மத்திய அரசு செய்து விவாதத்திற்கு விட்டுள்ளது. இதை விவாதிப்பவர்கள் தான் கல்வியாளர்களா என தெரியவில்லை. மக்களின் மனநிலையை உணர்ந்து எல்லாபடங்களையும் வெற்றிப்படங்களாக கொடுக்க முடியாதவர்கள், கல்வியை பற்றி விமர்சனம் செய்கிறார்கள். அதை மற்றவர்கள் ஆதரிக்கிறார்கள். இதே போல சம்பந்தப்பட்ட துறைக்கே சம்பந்தம் இல்லாதவர்கள், மக்கள் மத்தியில் கருத்துகளை உருவாக்குவது அவர்களை தவறாக வழிநடத்தத்தான் உதவும்.

நீட், நெக்ஸ்ட் தேர்வுகளால் தங்கள் புகழை, வர்த்தகத்தை இழக்கும் மருத்துவ பல்கலைகழகங்கள்  அவற்றை எதிர்க்கின்றன. அதே போல அரசு பள்ளிகள் தரம் பெற்றுவிற்றால் தங்களின் பள்ளிகள் காற்று வாங்கும் என்று எண்ணும் சிபிஎஸ்சி, மெட்ரிக் பள்ளிகள் புதிய கல்விக் கொள்கையை எதிர்த்து லாபி செய்கின்றன. அதன் முகமாகத்தான் சூரியா போன்றவர்கள் அடையாளம் காணப்படுகிறார்கள்.

புதிய கல்விக் கொள்கையை எதிர்ப்பவர்கள், தற்போது இருக்கும் கல்வி முறையே சிறந்தது என்று கூறுபவர்கள் வரும் கல்வியாண்டில் தங்கள் பிள்ளைகளை தற்போது படிக்கும் பள்ளியில் இருந்து விலக்கி, அருகில் உள்ள அரசு பள்ளிகளில் சேர்த்துவிட்டு பேசட்டும். அப்போது மட்டுமே அவர்களை மக்கள் நம்ப வேண்டும். இது நடிகர் சூர்யாவிற்கு விடப்பட்ட சவால் அல்ல, நம்ம தெருவில் இருப்பவர்களுக்கும் தான். சவாலை சந்திக்க தயாரா?

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP