Logo

இவ்வளவு பயமா ஸ்டாலின்...?

புலிக்கு பயந்தவன் எல்லாம் என் மீது வந்து படுத்து கொள்ளுங்கள் என்று கூச்சலிடுவது பயத்தை வெளிப்படுத்தும். இவ்வளவு பயந்தவர் என்பதை தமிழிசை வெளிப்படுத்தி விட்டார், பாவம் ஸ்டாலின்.
 | 

இவ்வளவு பயமா ஸ்டாலின்...?

தேர்தல் முடிந்தது... அடுத்த கட்ட நகர்வுக்கு அரசியல் கட்சிகள் சென்று கொண்டு இருக்கின்றன. லோக்சபா தேர்தல், இடைத் தேர்தல் ஆகியவற்றில் திமுக, அதிமுக இடையே தான் போட்டி. அதில் அதிமுக தோற்றால் கொடுத்தவனே பறித்துக்கொண்டானே கதை தான். ஆனால் திமுகவிற்கோ நாள் நெருங்க நெருங்க ஸ்டாலின் முதல்வர் நாற்காலியை நெருங்கிக் கொண்டே இருக்கும் நினைப்பு. அதனால் தான் அவர் எங்கே தான் ஆட்சி அமைப்பது கெட்டுவிடப் போகிறேதோ என்ற அச்சத்தின் உச்சத்தில் இருக்கிறார்.

சின்ன அதிர்சியை கூட தாங்க முடியாத இருதய நோயாளியை போன்று ஸ்டாலின் மாறிவிட்டார். யாரும் எதிர்பார்க்காமல் ராகுலை பிரதமர் என்று அறிவித்து தானே சிக்கலில் தலையை கொடுத்தவர் ஸ்டாலின். மற்றவர்கள் தேர்தல் முடிந்த பிறகு பேசிக் கொள்ளலாம் என்று கூறும் வேளையில் ஸ்டாலின் அறிவிப்பு மறற வாய்ப்புகளின் கதவை அடைத்துவிட்டது. மற்ற கட்சிகளை விட தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியின் ஓட்டு வங்கி அதிகம் என்பதால் அவர் இவ்வாறு கூறினார் என்பதை புரிந்து கொள்ள முடியும். அவ்வாறு கூறியவர் அந்த நிலைப்பாட்டில் நின்று இருக்க வேண்டும்.

அதற்கு பதிலாக தெலுங்கானா முதல்வர் சந்திரசேகராவை சந்திக்க வேண்டிய அவசியம் ஸ்டாலினுக்கு எங்கே ஏற்பட்டது. காங்கிரஸ் கூட்டணியில் வலுவாக இருக்கிறார் என்றால் சந்திரசேகரராவை தனியே சந்தித்து 45 நிமிடங்கள் பேசியது என்ன?

இது மரியாதை நிமித்தமான சந்திப்பு என்று கூறினாலும், இதற்கு மறுநாள் திமுக பொருளாளர் துரைமுருகன் ஆந்திராவுக்கு சென்று சந்திரபாபு நாயுடுவை சந்திக்க வேண்டிய அவசியம் என்ன இருக்கிறது. அதிலும் பகுத்தறிவு காற்றில் பறந்தாலும் சரி என்று துரைமுருகன் குடும்பத்தினருடன் கோயிலுக்கு (கவனிக்க) கோயிலுக்கு வந்தேன், மரியாதை நிமித்தமாக சந்திரபாபு நாயுடுவை சந்தித்தேன் என்று பேட்டியளிக்கிறார்.

பனை மரத்தில் அமர்ந்து பால்குடித்தாலும் கள் குடித்தாகத்தான் கருதுவார்கள் என்ற நிலையில் தேர்தலை முடிவுகள் நெருங்கி வரும் போது காங்கிரஸ் கட்சியை எதிர்த்து போட்டியிட்ட தலைவர்களை சந்தித்து திமுகவினர் பேசுவது மரியாதை நிமித்தம் தான் என்பதை எப்படி நம்புவது.

இப்படி அரசியலில் குழப்பத்தை விளைவுக்கும் வகையில் திமுக நடந்து கொண்டு இருப்பதால், தமிழக பாஜக தலைவர் தமிழிசை தன் பங்கிற்கு திமுக பாஜகவுடன் பேசிக்கொண்டு இருக்கிறது என்று கொளுத்தி போட்டிருக்கிறார்.

ஸ்டாலின் இதை கண்டு கொள்ளாமல் இருந்து இருக்க வேண்டும். அதற்கு பதிலாக வேட்டியில் டீ கொட்டியது போல பதறுகிறார். இதுவே அவர் ஏதோ செய்யக் கூடாததை ரகசியமாக செய்கிறார் என்று வெளிச்சம் போட்டு காட்டுகிறது.

இதே சூழ்நிலையில் கருணாநிதி இருந்தால் தமிழர்கள், தமிழகம் என்று எதையாவது கூறி சமாளித்து இருப்பார். இந்த அளவிற்கு பதட்டத்தை வெளிப்படுத்தி இருக்கமாட்டார். 4 சட்டசபைத் இடைத் தேர்தலில் சிறுபான்மையினர் திமுகவிற்கு ஓட்டுப் போடுவதை தடுக்கத்தான் தமிழிசை இந்த பொய் பேட்டி கொடுத்துள்ளார் என்று ஸ்டாலின் கதறி உள்ளார்.

வடமாநிலங்களில் சிறுபான்னையினர் பாஜகவிற்கே ஓட்டுப் போடும் இந்த காலத்தில் ஸ்டாலின் இப்படி பதறுவது சிறுபான்மையினரின் அரசியல் அறிவை கேலி செய்வது போல இருக்கிறது. அவர்களுக்கு யார் நமக்கு நன்மை செய்கிறார்கள், நடிக்கிறார்கள் என்பதை நன்கு அறிந்துள்ளார்கள். ஆனாலும் வேறு வழியில்லாமல் தான் தமிழகத்தில் சிறுபான்மை ஓட்டுகள் திமுகவிற்கு விழுவது போல ஒரு மாயை ஏற்பட்டு இருக்கிறது.

அரசியலில் கொள்கையில் நேர்மை் வேண்டும். அவ்வாறு இல்லாமல் அயோக்கியதனம் செய்தாலும், அதற்கான காரண காரியங்களை விளங்க வைத்து அதையே நேர்மையாக மாற்றும் செயல் திறன் வேண்டும். இவை இரண்டுமே இல்லாமல் புலிக்கு பயந்தவன் எல்லாம் என் மீது வந்து படுத்து கொள்ளுங்கள் என்று கூச்சலிடுவது பயத்தை வெளிப்படுத்துமே தவிர்த்து புத்திசாலி தனத்தை வெளிப்படுப்படுத்தாது. ஸ்டாலின் இவ்வளவு பயந்தவர் என்பதை தமிழிசை வெளிப்படுத்தி விட்டார், பாவம் ஸ்டாலின்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP