தாமிரபரணி பாழாகும்... மஹா புஷ்கரத்துக்கு எதிராக சமூக ஆர்வலர்கள்!

மஹா புஷ்கரத்துக்காக லட்சக் கணக்கான மக்கள் தாமிரபரணியில் கூடினால் அதன் இயற்கை அழகு பாழாகும் என்று சமூக ஆர்வலர்கள் போர்க்கொடி தூக்கி உள்ளனர். இது இந்துக்கள், நெல்லை மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
 | 

தாமிரபரணி பாழாகும்... மஹா புஷ்கரத்துக்கு எதிராக சமூக ஆர்வலர்கள்!

தாமிரபரணி நதியில் 3 கோடி பேர் புனித நீராடும் அபூர்வ நிகழ்வு அடுத்த மாதம் நடந்தேற உள்ளது. எதற்காக? 

மஹாபுஷ்கரம் என்கிற கோலாகல திருவிழாவை முன்னிட்டு  நாடு முழுவதிலும் இருந்து  பெரும் ஜனக்கூட்டம் நெல்லை சீமைக்கு வர உள்ளது.

அது என்ன மஹாபுஷ்கரம்?

நதியை வழிபடும் நிகழ்வே அது.

புஷ்கரம் என்கிற நிகழ்வு 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கொண்டாடப்படுகிறது. இந்தியாவில் பிரசித்தி பெற்ற 12 நதிகளின்  கரைகளில் இந்த பண்டிகை அமர்க்களப்படும். மஹாபுஷ்கரம் 144 ஆண்டுகளுக்கு ஒரு முறை வருகிறது.

இந்த அபூர்வு நிகழ்வு அடுத்த மாதம் 12ம் தேதி முதல் 23ம் தேதி வரை தாமிரபரணி நதிக்கரையில் அரங்கேற உள்ளது. இதற்கு முன்பு  கடந்த 1874ம் ஆண்டில் தாமிரபரணி  ஆறு மஹாபுஷ்கரத்தை கண்டுள்ளது.  144 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும், தாமிரபரணிக்கு மஹாபுஷ்கரம். தமிழக எல்லைக்குள் உற்பத்தியாகி தமிழக கடலுக்குள் சங்கமமாகும் ஒரே நதி தாமிரபரணி.

இந்த ஆண்டு மஹாபுஷ்கரம் நடத்த அங்குள்ள சமூக ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்து  ஆட்சியரிடம்  புகார் கொடுக்கும் அளவுக்கு பிரச்னை பெரிதாகியுள்ளது. இந்த விழாவை நடத்த அவர்கள் எதிர்ப்பு தெரிவிப்பது ஏன்?

இந்த விழாவுக்கு 3 கோடி பேர் திரளுவார்கள்  என்று விழா ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். தாமிரபரணி பாய்ந்தோடும் 128 கி.மீ நீள கரையில் இத்தனை பெரிய கூட்டம் திரண்டால் இயற்கை  சூழல் சின்னாபின்னமாகிவிடும். இப்படித்தான்  இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் யமுனா நதிக்கரையில் வாழும் கலை நிறுவனம் ஒரு மெகா  விழாவை நடத்தி அந்த நதியை பாழ் படுத்தியது. அது போல் தாமிரபரணியை  பாழ்படுத்த அனுமதிக்க முடியாது" என்பது சமூக ஆர்வலர்களின்  வாதம்.

இந்த விழாவுக்கு காஞ்சி காமகோடி பீடம் தான்  ஏற்பாடு செய்துள்ளது. சமூக ஆர்வலர்களின் குற்றச்சாட்டை  அவர்கள் மறுக்கிறார்கள்.

இந்த விழாவால்   நதி மாசுபடும் என்பது  ஆதாரமற்ற வாதம். இந்த விழா ஒரே நாளில் மட்டும் நடக்கப்போவதில்லை. தவிர ஒரே இடத்தில் மட்டும் நடைபெறப்போவதில்லை. தாமிரபரணி உற்பத்தியாகும் பாபநாசத்தில் தொடங்கி முடிவடையும் ஆத்தூர் வரை பல்வேறு இடங்களில்  நடைபெற உள்ளது. நாள்  ஒன்றுக்கு குறைந்த பட்சம் ஒரு லட்சம் பேர் மட்டுமே பல்வேறு பகுதிகளில்  நீராடுவார்கள். இந்த விழாவால் தாமிரபரணிக்கு எந்த பாதிப்பும் வராது" என்கிறார்கள்  விழா ஏற்பாட்டாளர்கள்.

ஒரு புனிதமான நிகழ்வு சர்ச்சையாகி இருப்பது நெல்லை மக்களை சங்கடப்படுத்தி இருப்பது நிச்சயம்.

- newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP