நீர்த்துப் போகிறதா பாலியல் வழக்குகள்?

பலாத்காரம் செய்ததாக புகார் அளித்தவர்கள் கூட, பாலியல் சீண்டல் செய்ததாக மாற்றிக் கூற வாய்ப்புள்ளது. எனவே, சென்சேஷனல் எனப்படும் இது போன்ற முக்கியமான வழக்குகளை தொடர்ந்து கண்காணிப்பதோடு, அதை செய்தியாக்குவதில் சற்று அடக்கி வாசித்தால் நல்லது.
 | 

நீர்த்துப் போகிறதா பாலியல் வழக்குகள்?

காவல்துறையில் சட்டம் ஒழுங்கு பிரிவை, விட குற்றப்பிரிவு கடினமான வேலைகளை கொண்டது. சட்டம் ஒழுங்கு புகாரில் எதிரி யார் என்று தெரியும். இதனால், காவலர்துறையினர் வேலை பாதி குறைவு. ஆனால் குற்றப்பிரிவு போலீசார் வேலை அப்படி இல்லை. 

சார் வீட்டில் கொள்ளையடித்து சென்று விட்டார்கள், என் செல்போனை பையில் இருந்து திருடிவிட்டார்கள் என்று ஒற்றை வரியில் புகார் கொடுக்கப்படும். நாட்டில் புகார் கொடுத்தவன், அதை விசாரிப்பவன் ஆகிய 2 பேரைத் தவிர்த்து மற்ற அனைவரும் திருடனாகவே தெரியும். அதில் இருந்து உண்மைத் திருடனை கண்டுபிடிக்க வேண்டும். இது குற்றப்பிரிவு போலீஸ் வேலை. 

இந்த அடிப்படையில் பொள்ளாட்சி, பெரம்பலுார், ஈரோடு ஆகிய இடங்களில் நடந்த பாலியல் சம்பவங்களை பார்த்தால், அந்த குற்றவாளிகளை தண்டிக்க உதவி செய்வதற்கு பதிலாக, அவர்களை விடுக்க உதவி செய்கிறோம் என்பது புரியும்.
பாலியல் பலாத்கார வழக்குகளில், ஒரு பெண் இவன் என்னை காதலிப்பதாக கூறி கர்ப்பம் தரிக்க வைத்து கைவிட்டு விட்டான் என்று புகார் கொடுப்பார். 

காவல்துறை, சம்பந்தப்பட்டவனை கைது செய்து நடவடிக்கை எடுக்கும். ஆனால் பொள்ளாச்சி சம்பவத்தில் பல ஆண்டுகளாக பாலியல் பலாத்காரம் நடந்திருப்பதாக கூறப்படுகிறது. சுமார் 200க்கும் மேற்பட்ட பெண்கள் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் பாதிக்கப்பட்டோரில் பெரும்பாலானோர் புகார் அளிக்கவில்லை என்பதே நிதர்சனம்.

சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் மீது விரல் விட்டு எண்ணும் அளவிற்கு தான் புகார் கொடுத்திருக்கிறார்கள். அதுவும் சம்பவம் நடந்த அடுத்த நாள் புகார் வரவில்லை. பொள்ளாட்சி சம்பவத்திலாவது ஒரு சிலர் புகார் கொடுத்தார்கள். பெரம்பலுார் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண் புகார் கூறவே இல்லை. யாரோ ஒரு வக்கீல் தன்னிடம் பெண் தொலைபேசியில் பேசியதை புகாராக கொடுக்கிறாராம். 

மிமிக்கிரி, விடியோ மிக்சிங் போன்ற தொழில்நுட்பங்கள் எளிதாக பயன்படுத்தும் இந்த காலத்தில், இவர்கள் கொடுக்கும் ஆடியோ, வீடியோ உண்மை என்று நம்ப முடியுமா? எவ்வளவு நம்பகத்தன்மை இல்லாத ஆதாரம் இது.  

இந்த ஆடியோவை உண்மை என்று சொன்னால், நாளை யார் வேண்டுமானாலும், யாரை வேண்டுமானாலும் குற்றம்சாட்டி உள்ளே தள்ளும் நிலை ஏற்படும். கோர்ட் இந்த ஆதாரத்தை எப்படி ஏற்கும் என்பது தெரியவில்லை. 

பாதிக்கப்பட்ட பெண்கள் பற்றிய தகவல்களை வெளியிடக் கூடாது என விதி இருக்கும் போது, அதை ஓரளவு கடைபிடிக்கும் ஊடகங்கள், அவர்களின் உறவினர்களை திரையில் காட்டுவதால், பாதிக்கப்பட்ட பெண் யார் என்பது யாருக்கும் சொல்லாமலே தெரிந்துவிடும்.

ஒரு குற்றம் நடைபெறுகிறது. பாதிக்கப்பட்டவர் புகார் அளிக்கிறார் என்றால், போலீசார் அதை விசாரிப்பர். அப்படி விசாரிப்பதில் பாரபட்சம் இருந்தால், அது குறித்து, பாதிக்கப்பட்ட நபரிடம் முழுமையாக விசாரித்து விட்டு, அந்த வழக்கு விசாரணையில் மந்த நிலை இருப்பதாக செய்தி வெளியிடலாம். 

அதை விடுத்து, பாலியல் வழக்குளில், ஒருவர் புகார் அளித்த உடனேயே, உண்மை நிலையை அறியாமல், 200 பேர், 300 பேர் வரை பாதிக்கப்பட்டுள்ளனர் எனக் கூறி, அது குறித்த செய்திகளை, பிரேக்கிங் நியூஸ் என்ற பெயரில், தொடர்ந்து ஒளிபரப்புவதில் எந்த நியாமும் இல்லை. 

ஊடகங்களின் இது போன்ற செயலால், பாதிக்கப்பட்ட பெண்களில் பலர் புகார் அளிக்கவே பயந்து, வீட்டுக்குள் முடங்கிவிடுவர். புகார் அளித்த பெண்களின் உறவினர்களை டிவியில் காட்டுவதால் பாதிக்கப்பட்டோர் பற்றியும் தெரிந்துவிடுவதால், வழக்கு விசாரணையின் போது, புகார் அளித்தவர்களே பிரல் சாட்சிகளாக மாறவும் வாய்ப்புள்ளது. 

பலாத்காரம் செய்ததாக புகார் அளித்தவர்கள் கூட, பாலியல் சீண்டல் செய்ததாக மாற்றிக் கூற வாய்ப்புள்ளது. எனவே, சென்சேஷனல் எனப்படும் இது போன்ற முக்கியமான வழக்குகளை தொடர்ந்து கண்காணிப்பதோடு, அதை செய்தியாக்குவதில் சற்று அடக்கி வாசித்தால் நல்லது. 

அப்போது தான், பாதிக்கப்பட்ட பலரும், தைரியமாக புகார் அளிக்க முன் வருவர். தங்களைப் பற்றிய தகவல்கள் ஒரு சிலர் தவிர வேறு யாருக்கும் தெரியாமல் இருக்கும் என்பதால், அவர்கள் இன்னும் கூடுதல் மனோபலத்துடன் செயல்படுவர். 
எனவே பாலியல் வழக்குகளை நீர்த்துப் போகாமல் பார்த்துக்கொள்வதில், ஊடங்களுக்கு முக்கிய கடமை உள்ளது என்பதை ஊடகவியலாளர்கள் உணர்ந்து செயல்பட வேண்டிய நேரம் இது. 

newstm.in
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP