முண்டாசைக் கட்டிக்கிட்டு முறுக்கு மீசையுடன் கண்களை உருட்டிக்கிட்டு (பகுதி-2)

பாரதி என் காதலன் முதல் பாகத்தின் தொடர்ச்சி இதோ.... பாரதி தெய்வங்களைக் காதலுடன் துகிக்கவும் தெரிந்தவன், காதலியை தெய்வமாகத் துதிக்கவும் தெரிந்தவன்! முண்டாசுக்காரன் (பாரதியின்) பிறந்ததினத்தைக் கொண்டாடுவோம்
 | 

முண்டாசைக் கட்டிக்கிட்டு முறுக்கு மீசையுடன் கண்களை உருட்டிக்கிட்டு (பகுதி-2)

(பகுதி-1க்கு இங்கு கிளிக் செய்யவும்)

கண்ணம்மாவைக் குழந்தையாகவும் கண்ணனைக் காதலனாகவும் பாடி தன் எண்ணச் சிதறலுக்கு வானம் வரையறுக்காது இருந்தவன். இப்ப கண்ணம்மா பாடல்,
 
காற்று வெளியிடைக் கண்ணம்மா, - நின்றன்
        காதலை யெண்ணிக் களிக்கின்றேன் ; - அமு
தூற்றினை யொத்த இதழ்களும் - நில
        வூறித் ததும்பும் விழிகளும் - பத்து
மாற்றுப்பொன் னொத்தநின் மேனியும் - இந்த
        வையத்தில் யானுள்ள மட்டிலும் - எனை
வேற்று நினைவின்றித் தேற்றியே - இங்கொர்
        விண்ணவ னாகப் புரியுமே! இந்தக் (காற்று)
 
நீயென தின்னுயிர் கண்ணம்மா ! - எந்த
        நேரமும் நின்றனைப் போற்றுவேன் - துயர்
போயின, போயின துன்பங்கள் - நினைப்
        பொன்னெனக் கொண்ட பொழுதிலே - என்றன்
வாயினி லேயமு தூறுதே - கண்ணம்
        மாவென்ற பேர்சொல்லும் போழ்திலே - உயிர்த்
தீயினி லேவளர் சோதியே ! - என்றன்           
        சிந்தனையே, என்றன் சித்தமே! - இந்தக் (காற்று)
 
மேலேயிருக்கும் பாட்டிற்கு விளக்கவுரையும் தேவையோ…? சரி சரி கவிதைனாலே காதல் இருக்கத்தானே செய்யும் என்று முனுமுனுப்பவர்களுக்காக, தான் எழுதிய கதையில் அவர் எழுதிய வரிகளைக் காட்டலாம்.
 
[காதலென்பது தேவலோகத்து வஸ்து. இவ்வுலகத்துக்கு வாழ்க்கை மாறியபோதிலும் அது மாறாது. சாவித்திரியும் சத்யவானும்; லைலாவும் மஜ்னூவும்; ரோமியோவும் ஜூலியெட்டும் கொண்டிருந்தார்களே, அந்த வஸ்துக்குக் காதலென்று பெயர். அது அழியாத நித்ய வஸ்து. இமயமலை கடலில் மிதந்தபோதிலும், காதல் பொய்த்துப் போகாது] என்றும்,


[காதலை எதிர்த்து யாராலும் ஒன்றும் செய்ய முடியாது. அதன் போக்கு காட்டுத் தீயின் போக்கையொத்தது. அது தானாகவே எரிந்து தணியவேண்டும். அல்லது, தெய்வீகச் செயலாகப் பெருமழை பெய்து அதைத் தணிக்கவேண்டும். மற்றபடி, மனிதர் தண்ணீர்விட்டு அணைப்பது என்பது சாத்தியமில்லை.] என்றும்,                  

தன் கதாபாத்திரங்கள் வாயிலாகச் சொல்கிறார். (சந்திரிகையின் கதையில் வரும் வரிகள். இந்தக் கதை முழுதும் எழுதி முடிக்கும் முன்னரே... புறப்பட்டுப் போய்விட்டார்

இத்தனை மென்மையாகக் காதலின் வலிமையைச் சொன்னவர் இளமையிலே காதலின் உச்ச வீரியத்தில் வள்ளிப்பாடலில் வெகுண்டிருக்கிறார்.  

“உனையே மையல் கொண்டேன், -- வள்ளீ!   
உவமையில் அரியாய், உயிரினும் இனியாய்!               
எனையாள்வாய், வள்ளீ, வள்ளீ!       
இளமயிலே, என் இதய மலர்வாழ்வே, 
கனியே, சுவையுறு தேனே, 
கலவியிலே  அமு தனையாய்! - கலவியிலே
தனியே - ஞான விழியாய்! நிலவினில் 
நினைமருவி, வள்ளீ, வள்ளீ!    
நீயாகிடவே வந்தேன்.”  
காதல் காமமாக பெருக்கெடுத்தோடுகிறது இங்கே! வள்ளீ… 

“ளீ” நெடிலாக ஒலிக்கையில் வீரியத்தின் அளவு புரிந்து கொள்ளலாம். ஆண்மையும் பெண்மையும் ஒன்றோடொன்று கலந்து விடத் துடிக்கும். இரண்டறக் கலந்து விட்டால் அது பேரானந்தம் (அர்த்தநாரீஸ்வரம். நமக்குத் தெரிந்து யாரும் அந்நிலை எட்டவில்லை). கலக்க முயன்ற கலவியில் தோல்வியுற்றதால் உண்டாகும் உடற் சிலிர்ப்பு சிற்றின்பம் என்பார்கள். ஆணுடலின் தேடலை எத்தனை விரகத்தோடு கடைசி வரியில் சொல்லியிருக்கிறான் பாருங்கள்.
 
“நிலவினில் நினை மருவி வள்ளீ…வள்ளீ  நீயாகிட வந்தேன்”   நிலவைப் படுக்கையாக்கி உன்னில் கலந்து உனக்குள்ளேயே கரைந்து விடுகிறேன் என்கிறான்.
 
இப்படி உருகி உருகி கருகிப் போயிருக்கிறான். அந்த வேதனையை அனுபவித்ததாலோ என்னவோ இப்படி முரணாகவும், 

“மோகத்தைக் கொன்று விடு அல்லாள் எந்தன் மூச்சை நிறுத்திவிடு என்றும் வெள்ளக் கருணையிலே - இந்நாய் சிறு வேட்கை தவிராதோ” என்று பாடியிருக்கிறான். எத்தனை எத்தனை காதல் மிகுந்திருந்திருந்தால் தன் மூச்சைக் கூட நிறுத்தி விட வேண்டியிருப்பான்? (எனினும் அந்தப் பாடல் மகாசக்தியிடம் விண்ணப்பித்துப் பாடிய பாடல். வீணான உடலை நீக்கி முழு ஞானம் வேண்டிய பாடல்).
 
இந்த வள்ளிப் பாட்டு 1ல் எனக்கென்னவோ பாரதி தன்னை முருகனாகவே உருவகித்துக் கொண்டாரோ என்று சந்தேகமாக இருக்கிறது. வள்ளி மீது இத்தனைக் காதலாக முருகன் ஒருவனால் மட்டுமே இருக்க முடியும். பாடலைப் படித்து விட்டுச் சொல்லுங்கள்.
 
“எந்த நேரமும்நின் மையல் ஏறுதடீ! குற வள்ளீ!சிறு வள்ளீ!   (இந்த)நேரத்திலே மலை வாரத்திலே  நதியோரத்திலே உனைக் கூடி-நின்றன் வீரத் தமிழ்ச் சொல்லின் சாரத்திலே மனம் மிக்க மகிழ்ச்சி கொண்டாடி-குழல் பாரத்திலே இதழ் ஈரத்திலே முலை யோரத்திலே அன்பு சூடி-நெஞ்சம் ஆரத் தழுவி அமரநிலை பெற்று அதன்  பயனையின்று காண்பேன். (எந்தநேரமும்)  வெள்ளை நிலாவிங்கு வானத்தை மூடி விரிந்து பொழிவது கண்டாய்-ஒளிக் கொள்ளையிலே உனைக் கூடி முயங்கிக் குறிப்பினிலேயொன்று பட்டு-நின்தன் பிள்ளைக் கிளி மென் குதலையிலே மனம் பின்ன மறச்செல்ல விட்டு அடி தெள்ளி ஞானப் பெருஞ்செல்வமே! நினைச் சேர விரும்பினன், கண்டாய்! (எந்தநேரமும்)   வட்டங்களிட்டுக் குளமக லாதம ணிப்பெருந் தெப்பத்தைப் போலே-நினை விட்டு விட்டுப்பல லீலைகள் செய்து நின்மேனி தனைவிட லின்றி-அடி எட்டுத் திசையும் ஒளிர்ந்திடுங் காலை யிரவினைப் போன்ற முகத்தாய்! முத்தம் இட்டுப் பலமுத்த மிட்டுப் பலமுத்தம் இட்டுனைச் சேர்ந்திட வந்தேன் (எந்தநேரமும்)        

மேலே சொன்ன பாடலை நீங்களும் தமிழ்க் கடவுள் முருகனாய் உருமாறிப் படித்துணரவும். ஏனெனில் பொருள் விளக்கினால் சென்ஸார் போர்டுல இருந்து நோட்டிஸ் வரும்.
 
மீண்டும் மென்காதலுக்கே வருவோம். எல்லோருக்கும் பிடித்த நன்கு தெரிந்த பாடலான
 
வீணையடி நீயெனக்குப் பாடலில் எத்தனை முறை கேட்டாலும் சிலிர்க்கச் செய்யும் வரிகளாக…   “வாயுரைக்க வருகுதில்லை, வாழிநின்றன் மேன்மை யெல்லாம்;   தூயசுடர் வானொளியே! சூறையமுதே! கண்ணம்மா!”
 
“காணுமிடம் தோறும் நின்றன் கண்ணின் ஒளி வீசுதடி!    மாணுடைய பேரரசே! வாழ்வு நிலையே! கண்ணம்மா!”
 
“எண்ணியெண்ணிப் பார்த்திடிலோர் எண்ணமிலை நின்சுவைக்கே;    கண்ணின் மணி போன்றவளே! கட்டியமுதே! கண்ணம்மா!”  “போதமுற்ற போதியிலே பொங்கி வரும் தீஞ்சுவையே!    நாதவடி வானவளே! நல்ல உயிரே கண்ணம்மா!”
 
“தாரணியில் வானுலகில் சார்ந்திருக்கும் இன்பமெல்லாம்    ஓருருவமாய்ச் சமைத்தாய்! உள்ளமுதே! கண்ணம்மா!”
 
***“ஞான வொளி வீசுதடி, நங்கை நின்றன் சோதிமுகம்;   ஊனமறு நல்லழகே! ஊறு சுவையே கண்ணம்மா!”***
 
கடைசியாக எழுதிய வரிகள் பாடலின் இடையிலேயே வந்து விடும். அந்த வரிகளில் ஓர் அற்புதமான காதல் பொதிந்திருக்கிறது. அதனால் தான் தனித்து எழுதினேன்.
 
காதல் வயப் பட்டால், பொதுவாக புத்தி மயக்கம் கொள்ளும். கொண்டவளின் முகமோ மோகத்தைத் தூண்டி மதிமயக்கும் இல்லையா? ஆனால் இங்கே பாரதி, 

“ ஞான ஒளி வீசுதடி உன் முகத்தில்” என்கிறான்.

ஞானம் கிடைக்கும் போதே காதலால் சிறு குறையுமில்லாத அழகே! ஊறு சுவையே கண்ணம்மா என்று கொஞ்சவும் செய்கிறான். இத்தனை தெளிந்த நிலையில் இத்தனை தூரம் காதல் வயப்பட முடியுமா? முடியும்! பாரதியால் முடியும். ஏனெனில், 

பாரதி தெய்வங்களைக் காதலுடன் துகிக்கவும் தெரிந்தவன்,  காதலியை தெய்வமாகத் துதிக்கவும் தெரிந்தவன்!
 
முண்டாசுக்காரன் பிறந்ததினத்தைக் கொண்டாடுவோம் !

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP