Logo

ஆட்டுவிக்கும் அணை அரசியல்...!

முதல்வர் நாற்காலிக்கு கோலிவுட்டில் ஆட்களை தேடி அலைவதால் நம் அரசியல்வாதிகள் தங்கள் பங்கிற்கு காவிரி உட்பட பல பிரச்னைகளில் நடித்து காட்டுகிறார்கள்.
 | 

ஆட்டுவிக்கும் அணை அரசியல்...!

காவிரி கரையோர மக்களின் பண்டிகை காலத்தில், தற்போது மேகதாது உற்சவம் என்று தான் சொல்ல வேண்டியிருக்கிறது. தமிழக அரசியல்வாதிகள் காவிரி விவகாரத்தை அணுகும் விதத்தை பார்த்தால் இப்படித்தான் சொல்ல வேண்டியுள்ளது. 

காவிரி என்று பெண் பெயரை வைத்ததாலோ என்னவோ பிறந்த வீடான கர்நாடகாவை விட புகுந்த வீடான தமிழகத்தில் தான் நீண்ட தூரம் பாய்கிறது. இதன் மொத்த நீளமான 800 கி. மீட்டரில் 320 கிமீ கர்நாடகாவிலும், 416 கிமீ தமிழகத்திலும் இருமாநிலங்கள் இடையே 64 கிலோ மீட்டரும் பாய்கிறது.

காவிரி பிரச்னை ஒரு நுாற்றாண்டு பிரச்னை. 1807ம் ஆண்டில்  காவிரி பிரச்னைக்கு பிள்ளையார் சுழி போடப்படுகிறது. பேச்சுவார்த்தைக்குப் பின்னர் 1866ல் மைசூர் பகுதியில் இருந்த ஆங்கிலேய ஆட்சியாளர்கள் அணைகட்ட ஒரு திட்டம் தீட்டுகிறார்கள். அதற்கு தமிழகத்தில் எதிர்ப்பு கிளம்பவே பல சுற்றுப் பேச்சுவார்த்தைக்கு பின்னர் 1892ம் ஆண்டு இரு மாநிலங்கள் இடையே ஒப்பந்தம் ஏற்படுகிறது. இதில் சென்னை மாகாண அரசின் அனுமதியில்லாமல் அணை கட்ட கூடாது என முடிவு எடுக்கப்படுகிறது.
ஆட்டுவிக்கும் அணை அரசியல்...!
மீண்டும் கிருஷ்ணாராஜசாகர்அணை கட்ட முயலும் போது மீண்டும் பிரச்னை வெடிக்கிறது. இந்த முறை பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எட்டப்படாமல் இரு மாநிலங்களும் அணை கட்ட அனுமதி வழங்கி மீண்டும் ஒப்பந்தம் கையெழுத்தானது. இதனால் குறிப்பிட்ட அளவு பாசன பரப்பு அதிகரிக்க அனுமதி கிடைத்தது. மழையால் மட்டும் உருவான நதி என்பதால் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் போது எல்லாம் பிரச்னை உருவானது.  பின்னர் கர்நாடகா, ஆங்கிலேயேர் ஆட்சியில் போடப்பட்ட ஒப்பந்தத்தை ஏற்காததால், அது நிறைவு பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 1990ம் ஆண்டு விசாயிகள் உச்ச நீதிமன்றம் செல்கிறார்கள். அன்று தொடங்கிய சட்டப் போராட்டம்,  இன்று வரை தொடர்கிறது.  நடுவர் மன்றம் அமைக்கப்பட்டது. பின்னர்  இடைக்கால, இறுதி தீர்ப்புகள் வழங்கப்பட்டன. காவிரி  மேலாண்மை வாரியம் அமைக்கபட்டது. இப்படி ஒவ்வொரு சம்பவமும் நடக்கும் போது தமிழகத்தில் அவர்கள் காவி கொண்டான், காவிரி தாய் என்று தலைவர்கள் அழைக்கப்பட்டார்களே தவிர வேறு எந்த பலனும் இது வரையில் கிடைக்க வில்லை.

இப்போது மேகதாசு உற்சவம். அதனால் தான் தற்போது தமிழகத்திலும், கர்நாடகாவிலும் அரசியல் கட்சிகள் கம்பு சுற்றுகின்றன.

காவிரியில் தமிழகத்தின் அனுமதியில்லாமல் அணை கட்ட முடியாது என்று தெரிந்தும், கர்நாடகா அரசு அனைகட்ட முற்கட்ட ஆய்வு, அடுத்த கட்ட ஆய்வு என்று சொல்லி பிரச்னையை கொளுத்திப் போடுகிறது. மத்திய அரசு தற்போது அணை கட்டுவதற்காக முழு ஆய்வுக்கு தான் அனுமதி கொடுத்துள்ளது. 
ஆட்டுவிக்கும் அணை அரசியல்...!
மேகதாது விவகாரத்தில் மத்திய அரசு திடீரென ஒரு மாநிலத்திற்கு ஆதரவாக முடிவு எடுக்க முடியாது. ஆற்றின் வடிநிலப் பகுதியான தமிழகம், புதுச்சேரி மாநிலங்களில் ஒப்புதல் இல்லாமல் காவிரி மேலாண்மை ஆணையத்தின் அனுமதியுடன் தான் அணை கட்ட முடியும். ஒரு அணை கட்டுவதற்கு பல துறைகளின் அனுமதி வேண்டும். மத்திய அரசு சுற்றுச்சூழல் பாதிக்காது என்ற வகையில் தான் அனுமதியளித்துள்ளது. அதைத்தான் செய்துள்ளது.

கர்நாடகா மாநிலம் அணைகட்டுவதற்கான காரணமாக தமிழகத்திற்கு தேவையான தண்ணீ்ர் தர முடியவில்லை. மேலும் உபரி நீர் வீணாக கடலில் போய் கலக்கிறது. அதற்கு பதிலாக நாங்கள் தண்ணீரை தேக்கிவைத்து சரியாக வழங்குகிறோம் என்று கூறுகிறது. அதாவது தமிழகத்திற்கு தர வேண்டிய தண்ணீர் வந்து விடும் என்பதால் ஆணையம் அணை கட்டும் முயற்சியை தடுக்க முடியாது. அடுத்தது அவர்கள் கூறுவது போலவே உபரிநீரை சேமிக்க நம்மிடம் அணை, தடுப்பு அணை, கதவணை போன்ற எதுவும் இல்லை.
ஆட்டுவிக்கும் அணை அரசியல்...!
திருச்சி மாவட்டம் முக்கொம்பை தண்ணீர்  தாண்டிவிட்டால் நேராக கடலுக்குள் தான் செல்லும். இதை தடுத்து சேமிக்க மடைமாற்றம் செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க யாரும் அனுமதிக்கவும் வேண்டாம், யாரும் கைகளை கட்டிப் போடவும் இல்லை. இந்த முயற்சிகள் பற்றி தமிழக அரசு யோசிப்பதே இல்லை. அப்படியே இருந்தாலும் கமிஷன் பேச்சுவார்த்தை ரெக்கை கட்டி பறக்கும்.
ஆட்டுவிக்கும் அணை அரசியல்...!
கர்நாடகா வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் காவிரியில் தனக்கு சாதகமாக நிலைப்பாட்டை செயல்படுத்துகிறது. அதற்கு அங்குள்ள அனைத்து கட்சிகளும் ஒற்றுமையாக இருந்து சாதிக்கிறார்கள். சாகுபடி பரபரப்பும் ஆண்டு தோறும் விரிவடைந்து கொண்டே போகிறது. தமிழகத்தில் இது நேர் மாறாக குறுகிக் கொண்டே போகிறது.

இங்கு காவிரி விவகாரத்தை பற்றி ஆலோசிக்க கூட அனைத்து கட்சி கூட்டம் கூட்டுவதில்லை. அப்படியே கூட்டினாலும் வெற்றுக் காரணங்களை கூறி கூட்டத்தை எதிர்கட்சிகள் புறக்கணிக்கின்றன. திமுக அனைத்து கட்சி கூட்டம் என்று கூட்டினாலும் அந்த கட்சிக்கு ஓட்டு போய்விடுமோ என சில கட்சிகள் புறக்கணித்து தோழமை கட்சி கூட்டமாகத்தான் நடக்கிறது. இதனால் தமிழகம் தனக்கு சாதகமான முடிவை எடுக்க முடியவில்லை.

ஆட்டுவிக்கும் அணை அரசியல்...!

இன்னொருபுறம் திமுக, காங்கிரஸ் கட்சி கூட்டணியில் உள்ளது. கர்நாடகாவில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது. அதனால் திமுக அந்த மாநிலத்தில் நெருக்கடி கொடுத்து அணைகட்டும் முயற்சியை தடுக்க முடியும். ஆனால் திமுக அதை செய்யாது, அதற்கு பதிலாக தமிழகத்தில் போராட்டம், ஆர்ப்பாட்டம் என நாடகம் நடத்தும். இன்று (9ம் தேதி) திமுக தலைவர் ஸ்டாலின், நாடாளுமன்றத் காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியாவை டெல்லியில் சந்தித்து மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி, அண்ணாதுரை சிலைகளை திறக்க அழைப்பு விடுக்க உள்ளார். அப்போது அவரிடம் மேகதாது அணை கட்டும் விவகாரத்தின் நிலையை ஸ்டாலின் எடுத்துக் கூறலாம். அல்லது சோனியா சிலை திறப்பு விழாவில் இது குறித்து பேசுவார். இன்று ஸ்டாலினிடம் நிருபர்கள் மேகதாது அணை விவகாரம் குறித்து சோனியாவிடம் பேசுவீர்களா என்று கேட்டால் நான் இப்போது அதற்காக வரவில்லை என்று பதில் சொல்வார். அதாவது தமிழகத்தின் பிரச்னைகளை குறித்து பேச டெல்லி செல்ல மாட்டார்கள். தமிழக அரசியல்வாதிகள்  தமிழகத்திற்கு எதிராக எடுக்கும் நடவடிக்கை தான் மற்ற மாநிலத்தவருக்கு இந்த தைரியத்தை கொடுக்கிறது. 

முதல்வர் நாற்காலிக்கு கோலிவுட்டில் ஆட்களை தேடி அலைவதால் நம் அரசியல்வாதிகள் தங்கள் பங்கிற்கு காவிரி உட்பட பல பிரச்னைகளில் நடித்து காட்டுகிறார்கள்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP