மக்கள் பார்க்கிறார்கள் மக்கா!

இதனை திமுக தலைவர் ஸ்டாலின் கண்டிக்க வேண்டும். கண்டு கொள்ளலாமல் விட்டால் எதிர்த்து போட்டியிடவே முடியாவிட்டால் தான் திமுக வெற்றி பெறும் நிலை உருவாகிவிடும். இந்த நாடகங்களை மக்கள் பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள் என்பதை அறிந்து கொள்ள வேண்டியது அவசியம் மக்களே.
 | 

மக்கள் பார்க்கிறார்கள் மக்கா!

தமிழகம் தண்ணீர் இல்லாமல் தவிக்கிறது. குறிப்பாக சென்னைவாசிகள் பல கிலோ மீட்டர் துாரத்திற்கு குடங்களை வைத்து காத்திருக்கிறார்கள். இருவரும் வேலைக்கு செல்லும் நடுத்தர வர்க்கத்தின் பாடுதான் சிரமத்தின் உச்சம். பக்கத்து வீட்டினர் கூட துாரத்து நட்பாக மாறிவிட்ட சென்னையில், தண்ணீர் பிரச்னையின் அவதி அனுபவிப்பவர்களுக்கு மட்டும் தான் தெரியும். 

தலைவிரித்தாடும் தண்ணீர் பிரச்னைக்கு தீர்வு காணவில்லை என்று கடந்த 22ம் தேதி திமுக தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தி முடித்தது. ஆளும் கட்சியாக இருப்பதால் அந்த வசதி இல்லாத அதிமுக தன் பங்கிற்கு யாகம் வளர்த்தது. யாகம் கட்டாயம் மழையை தரும் என்றாலும் கூட, அதை யார் எப்படி நடத்துகிறார் என்ற அடிப்படையில் தற்போது நடந்த யாகத்திற்கு பலன் அவ்வளவாக இல்லை.

அதாவது தண்ணீர் பிரச்னையில் தவிக்கும் மக்களுக்கு உடனடி தீர்வு காண வேண்டிய ஆளும் கட்சியும், எதிர்கட்சியும் தங்கள் பங்கிற்கு படம் காட்டி முடித்துள்ளன. தமிழக அரசு எதைத் தின்றால் பித்தம் தெளியும் என்ற நிலையில் இருக்கிறது. இதனால் சென்னைக்கு ஜோலார்பேட்டையில் இருந்து ரயில் தண்ணீர் எடுத்து வரும் முயற்சியை தொடங்கி உள்ளது. 

ஜோலார்பேட்டை தமிழகத்தில் தான் இருக்கிறது. இப்பகுதியின் முக்கிய பிரமுகர் தான் திமுக பொருளாளர் துரை முருகன். திமுக ஆட்சிக்கு வந்தால் பொதுப்பணித்துறை அமைச்சர் பதவியை அலங்கரிக்கும் இவர்; இந்த திட்டத்தை வரவேற்று முன்னின்று நடத்தி சென்னைவாசிகளின் தாகத்தை தீர்த்து இருக்க வேண்டும். அதற்கு பதிலாக இங்கிருந்து தண்ணீர் எடுத்தால் போராட்டம் வெடிக்கும் என்கிறார். 

ஏதோ திமுகவில் சேர்ந்த கிளைச் செயலாளர் இந்த கருத்தைக் கூறியிருந்தால் கூட அவரது அனுபவம் அவ்வளவு தான் என்று ஒதுக்கியிருக்கலாம். ஆனால் ஸ்டாலினுக்கே ஆலோசனை கூறும் நிலையில் உள்ள துரைமுருகன் கூறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. தமிழகத்தில் இருக்கும் இவர்களே தண்ணீர் தர மறுக்கும் போது கர்நாடகா எப்படி தரும் என்ற அமைச்சர் ஒருவரின் கூற்று எந்தளவிற்கு உண்மையானது என்று சிந்திக்க வேண்டும்.

சாதாரண விவசாயி வயலில் நடந்து போகும் போது தன் எதிரி வயலில் பயிர் வாடினால் சுற்றுமுற்றும் பார்த்து விட்டு மடையை லேசாக காலால் உடைத்துவிட்டு காயும் வயலுக்கு தண்ணீர் பாய்ச்சும் கருணை கொண்டவன். உச்சி வெயிலில் திருவிழாவில் நடந்து செல்பவன் தாகம் தணிக்க தன் காசை செலவு செய்து, ஊரி்ல் இருப்பவனிடம் எல்லாம் வசூல் செய்து தண்ணீர் பந்தல் வைத்து தாகம் தணிக்கிறவன் தமிழன். 

சென்னையில் வெள்ளம் என்று கேட்டதும், தன் குழந்தையின் பாலை குறைத்துக் கொண்டு அங்கு அனுப்பி வைத்த மக்கள் இந்த மாநிலத்தில் வாழ்கிறவர்கள். இப்படி வந்தாரை வாழ வைக்கும் தமிழ்நாட்டில் துரைமுருகன் கருத்து கட்டாயம் அந்த கட்சிக்கு பின்னடைவைத்தான் ஏற்படுத்தும்.

கருணாநிதி ஆட்சிக்கு வந்த போது ஏற்பட்ட பஞ்சத்தை சமாளிக்க சோளம், கம்பு என்று சாப்பிட வேண்டிய நிலை. இது எழுதப்படிக்க தெரியாதவர்கள் மத்தியில் சமீப காலம் வரை கருணாநிதி ஆட்சிக்கு வந்தால் சோளம் தான் சாப்பிட வேண்டும் என்று விமர்சனம் செய்யும் அளவிற்கு ஆழமாக பதிவு பெற்றது. க்ஷ

அதே போல ஸ்டாலின் காலத்தில் அவருக்கு அவப்பெயர் ஏற்படுத்தும்வகையில் துரைமுருகன் பேசி இருக்கிறார். தற்போது சென்னையில் தேர்தல் வராமல், வேலுார் தொகுதிக்கு தேர்தல் வரலாம். அதில் அவர் மகனே மீண்டும் போட்டியிட்டு வெற்றி பெறலாம். அதற்காக துரைமுருகன் இப்படி பேசினால் தான் திமுகவிற்கு ஓட்டு விழும் என்று அவர் எதிர்பார்ப்பது அவரி்ன் அரசியல் அனுபவத்தின் மீது சந்தேகம் ஏற்படுகிறது. 

தன் பேச்சு ஊடகங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை கிளப்பிய பின் துாக்கத்திலிருந்து எழுந்த துரைமுருகன், தான் அவ்வாறு பேசவில்லை, ஊடகங்கள் தன் கருத்தை திரித்து வெளியிடுவதாக பிதற்றுகிறார். 

இதனை திமுக தலைவர் ஸ்டாலின் கண்டிக்க வேண்டும். கண்டு கொள்ளலாமல் விட்டால் எதிர்த்து போட்டியிடவே முடியாவிட்டால் தான் திமுக வெற்றி பெறும் நிலை உருவாகிவிடும். இந்த நாடகங்களை மக்கள் பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள் என்பதை அறிந்து கொள்ள வேண்டியது அவசியம் மக்களே.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP