உபதேசம் ஊருக்கு மட்டுமல்ல... எனக்கும் தான்...!

ஊருக்கு தான் உபதேசம். தனக்கென்று வந்து விட்டால் சமாளிப்பு தான். உபதேசித்த மாதிரி வாழ்ந்து காட்டியவர்களை என்ன சொல்வீர்கள்? ஆனால் பாரதி அப்படியல்ல.... இது குறித்த ஒரு சிறிய கட்டுரை....இதோ உங்களுக்காக !
 | 

உபதேசம் ஊருக்கு மட்டுமல்ல... எனக்கும் தான்...!

ஊருக்கு தான் உபதேசம். தனக்கென்று வந்து விட்டால் சமாளிப்பு தான். உபதேசித்த மாதிரி வாழ்ந்து காட்டியவர்களை என்ன சொல்வீர்கள்?

என்னைப் பொருத்தவரை பாரதி ஏழ்மையாக இருந்ததனால், அள்ளிக் கொடுக்க முடியாமல் போய் விட்டது என்பதை ஒப்புக்கொள்ள மாட்டேன். அவனிடம் இருந்ததை எல்லாம் கொடுத்து விட்டதால் வறுமையில் இருந்தான். விடுதலைப் போராட்டத்திற்காக, சமுதாயச் சீர்திருத்தத்திற்காக யாராவது எங்கேயாவது பத்திரிக்கை ஆரம்பித்தால், முதலில் தான் போய் நின்று உதவ வேண்டும் என்ற அதீத ஆர்வம் கொண்டவன்.

“வயிற்றுக்குச் சோறிட வேண்டும் - இங்கு
வாழும் மனிதர்க்கெல்லாம்;
பயிற்றிப் பல கல்வி தந்து - இந்தப்
பாரை உயர்த்திட வேண்டும்.” 

என்று பாடிய பாரதியைக் கண்டு கடவுளே கொஞ்சம் பயந்திருப்பார். இந்தப் பயலுக்கு மஹாலக்ஷ்மி அருளைக் கொடுத்து விட்டால், உலக மக்கள் கர்மாக்களுக்கு வேலையில்லாமல் செய்து விடுவான் என்ற பயம் இருந்திருக்கும். 

பாரதி வாழ்வில் நிகழ்ந்த சம்பவத்தை ஸ்ரீமதி யதுகிரி அம்மாள் சொன்னதை நினைவு கூர்ந்தால், மேலே சொன்னது எத்தனை உண்மை என்று புரியும்.

பாண்டிச்சேரியில் ஒரு ஞாயிறு காலை, குழந்தைகளான நாங்கள் ஐந்து பேரும் சமுத்திர ஸ்நானத்திற்குச் சென்றோம். போகும் வழியில் ஒரு பாம்பாட்டி பாம்பினை ஆடச் செய்து இரந்து கொண்டிருந்தான். பாரதியிடமோ சல்லி பைசா இல்லை. எனக்கும் என் அண்ணனுக்கும் என் தாயார் கொடுத்து அனுப்பிய காலணா கையில் இருந்தது. என் அண்ணன் தன் கையிலிருந்த காசை பாம்பாட்டியிடம் கொடுத்து விட்டான், என்னிடம் இருந்த காசையும் பாம்பாட்டி இரந்த போது, நான் இது என் தாயார் குளிக்கும் முன் சமுத்திரராஜனுக்கு அர்ப்பணிக்கக் கொடுத்த பணம் ஈயேன் என்று மறுத்து விட்டேன். பாரதியோ,  தன் மேல் வேட்டியை எடுத்து இடையில் கட்டிக் கொண்டு, கட்டியிருந்த வேட்டியை அவிழ்த்து அந்தப் பாம்பாட்டிக்குக் கொடுத்துவிட்டார். 

எங்கள் எல்லாருக்கும் அதிர்ச்சி,  பாரதி தனக்கென்று ஏதும் வாங்கிக்க மாட்டான் என்று என் தந்தையார் வாங்கிக் கொடுத்த வேட்டி அது!  (பிறகு கேட்டதற்கு, எனக்கு வாங்கிக் கொடுக்கவாவது உன் அப்பன் இருக்கான். அவனுக்கு யார் இருக்கிறார்கள்? அதனால் கொடுத்தேன் என்று பதில் சொன்னார்)

சமுத்திரத்திற்கு வந்து குளிக்கும் முன் என் கையிலிருந்த சிறிது மஞ்சள், காலணா பணம் ஆகியவற்றை சமுத்திரத்தில் போட்டு வணங்கினேன். பாரதி கேட்டார், “யதுகிரி, ஏனம்மா அந்தப் பணத்தை கடலில் வீசினாய்?”

நான் : சமுத்திரராஜனுக்கு அர்ப்பணம்.
பாரதி : அந்தக் காலணாவை அந்தப் பாம்பாட்டியிடம் கொடுத்திருந்தால், அவன், அவனுடைய குழந்தைக்கு சாதம் போட்டிருப்பானே? அல்லது அந்தக் காசுக்கு தின்பண்டம் வாங்கிக் கடலில் போட்டிருந்தாலும் மீன்கள் தின்றிருக்கும். இப்பொழுது இந்தக் காசு மணலில் புதைந்து யாருக்கும் பயனில்லாமல் போனதே?

நான் : ஆனால், அம்மா சொன்னாளே? அவளுக்கு எல்லாம் தெரியுமே?

பாரதி : இதெல்லாம் அர்த்தமில்லாத வழக்கம். முன் காலங்களில், குளங்களில் குளிப்பவர்கள் காசுகளைக் குளத்தில் போட்டால், குளத்தைச் சுத்தம் செய்யும் கரையாளர்களுக்கு அந்தத் துட்டுகள் அகப்படும். அதைக் கொண்டு அவர்கள் ஜீவிப்பார்கள். நம் பெரியவர்கள் குளத்திற்குச் செய்தால் நீ சமுத்திரத்திற்கு இப்படி காசு சேர்க்கிறாயே!  இங்கே சுத்தம் செய்வது அலை. அதற்குக் காலணாவால் ஆக வேண்டியது ஒன்றும் இல்லை.

காலணா காசினை பொருளாதாரமாகப் பார்க்காமல், மனிதர்களுக்கு மட்டும் உரியது என்றும் பார்க்காமல், மீனுக்காவது பயன்பட வேண்டும் என்று அனைத்து ஆத்மாவுக்காகவும் யோசிக்கிறான். குழந்தைக்கு வாழ்வியல் பாடத்தை எத்தனை அழகாக எளிமையாக போதித்திருக்கிறான் பாருங்கள்.

இந்த சம்பாஷணையைக் கவனிக்கும் போது, பாரதி ஏதோ கற்பனையில் சஞ்சரித்துக் கொண்டு வார்த்தைகளில் வானம் வளைக்க முயன்ற சராசரிக் கவிஞனல்ல. அவன் உலக நடைமுறை அறிவைக் கொண்ட, உலகை உய்விக்க மெனக்கெட்ட மகாத்மா என்று புரிந்து கொள்ளலாம்.
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP