தேவை...அரசியலில் நேர்மை...!

.....கடந்த சில நாட்களாக இப்படியெல்லாமல் உலாவந்த தகவல்கள் அனைத்தையும் உண்மையாக்கும் விதமாக செந்தில்பாலாஜி தன் ஆதரவாளர்களுடன் திமுகவில் சேர்ந்துவிட்டார். செந்தில் பாலாஜி போன்றவர்களிடம் நாட்டை ஒப்படைத்தது நம் விதி !
 | 

தேவை...அரசியலில் நேர்மை...!

ஒருவருக்கு மட்டும் தெரிந்து இருந்தால் தான் அது ரகசியம். 2வது நபருக்கு தெரிய வரும் போது அது அம்பலமாகிவிடும். ஊரே அறிந்த விஷயத்தை, அது உண்மையானது என்றால், ஒப்புக் கொள்வதற்கு தைரியம் வேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால் பெயர் கெட்டுப் போய்விடும். அப்படி புகழ் கெட்டு நிற்கிறார் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி. அவருக்கு ஏற்கெனவே என்ன புகழ் இருந்து வந்தது என்று கேட்காதீர்கள்.

கடந்த சில நாட்களுக்கு முன்பாகவே அதிமுகவின் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கட்சி மாறப்போகிறார் என்ற தகவல் வதந்தி என்ற அந்தஸ்துடன் வலம் வந்தது. அதற்கு ஏற்ப செந்தில் பாலாஜி, மத்திய முன்னாள் அமைச்சர் ராசாவுடன் இருக்கும் புகைப்படம் வெளிவந்தது. வதந்தி போல உலாவந்த இந்த தகவலை ரகசியம் என்ற அந்தஸ்திற்கு, அந்தப் புகைப்படம் கொண்டு சென்றது.

நாட்டில் மிகப் பெரிய திருப்பதை ஏற்படுத்தப் போகும் இந்த சம்பவம் குறித்து திமுக எவ்வித கருத்தையும் கூறவில்லை. செந்தில்பாலாஜி கூட இந்த சூழ்நிலையில் எந்தவிதமான ஒப்புதலையும் வழங்கவில்லை. இதை விட ஒரு படி மேலே போய், அமமுக கொள்கை பரப்பு செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் இது குறித்து கூறும்போது, செந்தில் பாலாஜி திமுகவில் சேர வாய்ப்பே இல்லை. உளவுத்துறை இது போன்ற செய்திகளை ஊடகங்கள் மூலம் வெளியிட்டு பரபரப்பாக்குகிறது என்றார்.

கடந்த சில மாதங்களாகவே செந்தில் பாலாஜிக்கும், தினகரனுக்கும் இடையே முட்டல்,மோதல் இருந்து வந்தது. 18 எம்எல்ஏகள் தகுதி நீக்கம் செல்லும் என்று உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதும் தினகரன் ஒவ்வொருவருக்கும் 10 கோடி தருவதாக, நீக்கப்பட்ட எம்எல்எக்களிடம் வாக்குறுதி அளித்தாராம். ஆனால் அவர் அந்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லையாம். இது செந்தில் பாலாஜியின் அதிருப்திக்கு முக்கியக் காரணமாக கூறப்படுகிறது. அப்படி என்றால் திமுக இந்த இழப்பீட்டை தருமா என்று கேட்டீர்கள் என்றால் நீங்கள் அரசியல் போதிய தெளிவு இல்லாதவர்கள், குழப்பவாதி, தமிழர்களின் நலனுக்கு விரோதி என்று தான் அர்த்தம் காணப்படும். 

இந்த நேரத்தில் செந்தில் பாலாஜியை சமாதானப் படுத்தும் முயற்சியில் அமமுக நிர்வாகிகள் பாப்பிரெட்டிப்பட்டி பழனியப்பன், அமமுக அமைப்பு செயலாளர் மாணிக்கராஜா ஆகியோர் களம் இறங்கினர். ஆனால் செந்தில் பாலாஜியை செல்போனில் தொடர்பு கொள்ளமுடியவில்லை. நேரிலும் பார்க்க முடியவில்லையாம்.

செந்தில் பாலாஜி இருக்கும் வரை கொங்கு மண்டலத்தில் தங்களால் அரசியல் செய்ய முடியாது என்று நினைக்கும் ஒரு கோஷ்டியினர் தான் அவருக்க எதிராக சதி வலை பின்னி, கட்சியை விட்டு வெளியேற்றும் முயற்சியில் ஈடுபட்டார்களாம். பாவம் அப்பாவி செந்தில்பாலாஜி அவர்கள் சதிக்கு பலியாகிவிட்டார். 

கடந்த சில நாட்களாக இப்படியெல்லாமல் உலாவந்த தகவல்கள் அனைத்தையும் உண்மையாக்கும் விதமாக செந்தில்பாலாஜி தன் ஆதரவாளர்களுடன் திமுகவில் சேர்ந்துவிட்டார்.

இதனால் பங்கு சந்தை புள்ளிகள் வரலாறு காணாத வகையில் மிகக் கடுமையாக உயர்ந்து நாட்டு மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தின. சூரியனில் 2 டிகிரி வெப்பநிலை உயர்ந்து விட்டது. அமெரிக்க அதிபர் நள்ளிரவு நேரத்தில் இந்த நிலையை எப்படி சமாளிப்பது என்று ஆலோசனை நடத்தி ஓரு முடிவுக்கு வராமல் திணறினார். உலக முக்கியத்துவம் வாய்ந்த இந்த இணைப்பு பற்றி இங்கு இத்தனை பெரிய ஆலாபணை செய்ய காரணம் ஒன்று தான்.

நல்லதோ கெட்டதோ, கட்சி மாறும் முடிவுகள் எடுத்துவிட்டீர்கள். இது பற்றிய விவாதம் நடக்கும் போது, ஆம் நான் அந்த சிந்தனையில் தான் இருக்கிறேன், வாய்ப்பு கிடைத்தால் மாறுவேன் என்று வெளிப்படையாக கூறியிருக்கலாம். அதைவிடுத்து இத்தனை பொய்கள் அவசியமா? இந்த சின்னவிஷயத்தில் கூட நேர்மையாக இல்லாத உங்களிடம் வேறு எதில் நேர்மையை எதிர்பார்க்க முடியும்?

காந்தியடிகள் தலைமையில் ஒரு பொதுக்கூட்டம் நடந்தது. அதில் ஒருவர் பேச வேண்டும் என்று காந்தியை வற்புறுத்திக் கொண்டே இருந்தார். ஒரு கட்டத்தில் வெறுப்பின் உச்சத்திற்கு சென்ற காந்தி, அவரை பேச அனுமதித்தார். மைக் கைக்கு வந்ததும், இந்த கூட்டத்தில் நான் பேச வரவே இல்லை, காந்தி கூப்பிட்டதும் தான் பேச வந்தேன் என்று தொடங்கினார். அவரை மறித்து மைக்கை பிடுங்கிய காந்தி. நடந்த சம்பவங்களை பொதுமக்களிடம் போட்டு உடைத்தார். இது சம்பந்தப்பட்டவரை அவமானப்படுத்த வேண்டும் என்று சொல்லவில்லை. சின்ன விஷயத்தில் கூட நேர்மை இருக்க வேண்டும் என்றுதான் கூறுகிறேன் என்றாராம். இது போன்ற தலைவர்கள் போராடி சுந்திரம் பெற்று, செந்தில் பாலாஜி போன்றவர்களிடம் நாட்டை ஒப்படைத்து சென்று இருக்கிறார்கள் என்பது நம் விதியென்பதைத் தவிர வேறு என்ன கூறி நம்மை நாமே சமாதானப்படுத்திக் கொள்ள முடியும் சொல்லுங்கள் பார்ப்போம்!

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP