தேவை 4 தொகுதியா அல்லது 40 இடங்களா?

ஒட்டுமொத்த அதிமுக, மற்றும் கூட்டணிக் கட்சிகள் இணைந்தால் மட்டுமே 40ம் நமதே நாடும் நமதே என்று தோள் தட்ட முடியும். அவ்வாறு இல்லாமல் விட்டு விட்டால் தேர்தல் முடிந்து அழுவாச்சி காவியம் பாடுவது யாருக்கும் பலன் இல்லாமல்போய்விடும்
 | 

தேவை 4 தொகுதியா அல்லது 40 இடங்களா?

கோயில் திருவிழாவில் பானை உடைக்கும் விளையாட்டு போல அரசியல் திருவிழாவில்  கூட்டணிக் கட்சிகளின் பேச்சுவார்த்தை இருக்கிறது. அதிமுக பேச்சுவார்த்தை திரை மறைவில் நடந்தாலும் அதில் இருக்கும் ஓட்டைகள் முடிவு இன்னும் சில நாட்களில் வெளிப்படும் என்று காட்டிக் கொடுக்கிறது. 

இந்த கட்டுரையை நீங்கள் படித்துக்கொண்டிருக்கும் போதே யார் யார் எத்தனை இடங்களில் போட்டியிடுகிறார் என்று தெரியவந்திருந்தாலும் வியப்பதற்கு இல்லை. சமீபத்தில் வெளியான  கருத்துக்கணிப்பு ஒன்றில் அதிமுக கூட்டணியில் இருந்தால் பாஜ 2 முதல் 4 இடங்களில் வெற்றி பெறும் என்று தெரியவந்துள்ளது. கடந்த லோக்சபா தேர்தலில் அதிமுக கூட்டணியில் இல்லாவிட்டாலும் பாஜக கூட்டணி 2 இடங்களி்ல வெற்றி பெற்றது. 

இந்த முறை பாஜகவின் ஆஸ்தான வேட்பாளர்களில் சிலரான எச்.ராஜா, இல.கணேசன் போன்றவர்கள் போட்டியிடப்போவது இல்லை என்று தகவல்கள் தெரியவருகிறன்றன. இது போன்ற சூழ்நிலையில் அவர்கள் ஆதரவாளர்கள் எந்த அளவிற்கு தேர்தலில் வேலை செய்வார்கள் என்று தெரியவில்லை.
 
அதிமுக, பாஜகா கூட்டணி பற்றி பேச்சு எழுந்தது தொடங்கி தம்பித்துரை அதற்கு எதிராக தனி கச்சேரியே நடத்தி முடித்துவிட்டார். திமுக அந்த பேச்சுக்களை தனது பிரச்சாரத்தில் பயன்படுத்தினாலே கணிசமான வாக்குகளை பெற முடியும். 

பாமக அனைத்து பெரிய கட்சிகளுடன் கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது. இதில் தினகரன் 20 சீட்டு தருவதாக கூறியுள்ளார். வேறு வழியே இல்லாத பட்சத்தில் அமமுக, பாமக இணைந்து தேர்தலை சந்திக்கும். திராவிட கட்சிகளுடன் கூட்டணி கிடையாது என்று பேசிய பாமக அதன்படி நடந்தது போல ஆகும். மேலும் அதிமுகவின் தினகரன் ஆதரவு ஓட்டும் அந்த கூட்டணிக்கு சென்று சேரும். இதன் மூலம் அன்புமணி மீண்டும் எம்பியாக தேர்வு பெறலாம். கடந்த தேர்தலில் உப்புக்கு சப்பாணி கூட்டணியில் கூட பாமக தர்மபுரியில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. 

தேவை 4 தொகுதியா அல்லது 40 இடங்களா?

கட்டுச் சோற்றுக்குள் பெருச்சாளியை வைத்து கட்டிய கதையாக அதிமுக, அமமுக என்று பிரிந்து விட்ட இன்றைய சூழலில் பலவிதமான நிலைப்பாடுகளை கணக்கிட்டால் அதிமுக கூட்டணி இந்த தேர்தலில் 10 சீட்டுகளை பிடித்தாலே அதிகம். இதை 40 சீட்டாக அதிகரிக்கும் நிலைப்பாடு அதிமுகவிடம் தான் உள்ளது. 

அது தினகரன் அணியை மீண்டும் அதிமுகவில் சேர்ப்பது தான். சசிகலா குடும்பத்திடம் இருந்து அதிமுகவை காப்பாற்றி விட்டோம் என்று மார்தட்டிக் கொள்ளும் எடப்பாடி பழனிசாமி, பன்னீர் செல்லவம் போன்றவர்கள் இதற்கு தயங்கலாம். அவர்கள் யார் தயவும் இல்லாமல் இன்றைக்கு முதல்வர், துணை முதல்வர் பதவியை பிடிக்கவில்லை. சசிகலா தயவுதான், அவரின் தவறான முடிவுதான் எடப்பாடி பழனிச்சாமியை முதல்வராக மாற்றி உள்ளது  என்பது உண்மை. இதுவரையில் மக்களை சந்தித்து ஆட்சியை பிடித்த அனுபவம் எடப்பாடி பழனிசாமிக்கும் கிடையாது, பன்னீர் செல்வதிற்கும் கிடையாது. அப்பா காசில் காதலியிடம் சீன் காட்டும் வாலிபர்கள் தான் பன்னீர் செல்வமும், பழனிசாமியும். ஆனால் அதிமுக, திமுக ஆகிய இரண்டு ஜாம்பவான்களையும் தூக்கி வீசி வெற்றி பெற்றவர் தினகரன். 

ஒண்ட வந்த பிடாரி ஊர் பிடாரியை விரட்டியதாம் என்ற பழமொழிக்கு 100 சதவீதம் பொருத்தமானவர் தான் பழனிசாமி.  அவர் ஆட்சிக்கு வந்ததும் முதல்வேலை சசிகலா குடும்பத்தை வெளியேற்றியது தான். 

தேவை 4 தொகுதியா அல்லது 40 இடங்களா?

ஆர்கே நகர் இடைத்தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்டார் தினகரன். முதல் முறை தேர்தல் அறிவிக்கப்பட்டபோது அவரை இந்திரன், சந்திரன் என்று பாராட்டிய முதல்வர் பழனிசாமி உட்பட அனைத்து அமைச்சர்களும் மீண்டும் தேர்தல் நடந்த போது சீ சீ இந்த பழம் புளிக்கும் என்று தூக்கிவீசினர். அதிமுக வேட்பாளராக அவைத்தலைவர் மதுசூதனன் போட்டியிட்டார். இதில் அதிமுக, அல்லது திமுக வெற்றி பெற்று தினகரன் மண்ணைக் கவ்வி இருக்க வேண்டும்.  ஆனால் இரண்டு கட்சிளும் தோல்வி உற்று தினகரன் வெற்றி பெறுகிறார். அதாவது, திமுகவை விட அதிமுக ஓட்டு அதிகம், அதை விட தினகரன் ஓட்டு அதிகம். இந்த நிலையில் தான் வரும் தேர்தலில் தினகரன் அணி ஓட்டே வேண்டாம் என்று அதிமுக முடிவு செய்துள்ளது.  கண்ணுக்கு தெரிந்தே கிணற்றி்ல விழுந்துள்ளார்கள் அதிமுகவினர். மதுசூதனன் தோல்வியை அடைந்ததற்கு அதிமுகவின் உள்குத்தும் காரணம். இதை அவரே சொல்லி அழுதுள்ளார். சொந்த கட்சி வேட்பாளருக்கு குழிபறித்தது யார் என்று தெரிந்து கொண்டும் கூட அவர்கள் மீது கட்சி தலைமையால் நடவடிக்கை எடுக்க முடியவில்லை. இது போன்ற உள்குத்து லோக்சபா தேர்தலின் போது விழாது என்று என்ன நிச்சயம்? அப்படி விழுந்தால் யார் நடவடிக்கை எடுப்பார்? அதற்காக தைரியம் அதிமுக தலைமையில் உள்ளதா?

தேவை 4 தொகுதியா அல்லது 40 இடங்களா?

இதனிடையே தினகரனுடன் பாமகவும் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது. இது நடந்தால் வடமாவட்டங்களில் இந்த அணி வெற்றி பெறுகிறதோ இல்லையோ, அதிமுகவிற்கு கணிசாமான இழப்பை ஏற்படுத்தும். 

இதன் காரணமாக தினகரன் அணியை வெளியே விட்டு திமுகவிற்கு வெற்றியை தாரை வார்காமல் கூட்டணிக்குள் இழுத்துப் போடும் வேலையை அதிமுக செய்ய வேண்டும். பொன்.ராதாகிருஷ்ணனும், தம்பிதுரையும் அடிக்கடி சந்தித்து பேசிக் கொள்வதை உன்னிப்பாக கவனித்து, அவர்கள் தினகரன் அணியை சேர்க்கும் வேலையை செய்தால் அதை ஊக்கப்படுத்த வேண்டும். 

ஒட்டுமொத்த அதிமுக, மற்றும் கூட்டணிக் கட்சிகள் இணைந்தால் மட்டுமே 40ம் நமதே நாடும் நமதே என்று தோள் தட்ட முடியும். அவ்வாறு இல்லாமல் விட்டு விட்டால் தேர்தல் முடிந்து அழுவாச்சி காவியம் பாடுவது யாருக்கும் பலன் இல்லாமல்போய்விடும். இதற்கு கவலைப்பட வேண்டியது அதிமுகவை விட அவங்க பாஸ் பாஜக தான். கவலைப்படுவார்களா?

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP