பொன் ஊசிக்கு தான் அடிவிழும்...!

நேற்று முன்தினம் ஒரு விவாதம் தொடங்கி உள்ளது. இடதுசாரி கட்சியின் மூத்த தலைவர்கள் நூற்றாண்டை நெருங்கும் நிலையில் உள்ள தலைவர்களில் ஒருவரான நல்லக்கண்ணுவை வீட்டை விட்டு வெளியேற சொல்லி விட்டார்கள் என்பது தான் அந்த விவாதம்.
 | 

பொன் ஊசிக்கு தான் அடிவிழும்...!

வீட்டின் பெயரோ அன்னை இல்லம், அன்னை இருப்பாள் முதியோர் இல்லம் என்ற புதுக்கவிதையை போல நேற்று முன்தினம் ஒரு விவாதம் தொடங்கி உள்ளது.  இடதுசாரி கட்சியின் மூத்த தலைவர்கள் நூற்றாண்டை நெருங்கும் நிலையில் உள்ள தலைவர்களில் ஒருவரான நல்லக்கண்ணுவை வீட்டை விட்டு வெளியேற சொல்லி விட்டார்கள் என்பது தான் அந்த விவாதம்.​

ஆர்எஸ்எஸ், இடதுசாரி அமைப்புகளில் தான் முழு நேர ஊழியர்கள் என்ற ஏற்பாடு உள்ளது. அவ்வாறு முழுநேர ஊழியர்கள், அமைப்பில் தீவிர நடவடிக்கையில் இல்லாத போது எளிமையான வாழ்க்கை தான் வாழ்வார்கள். அதன்படிதான் சென்னையில் உள்ள வீட்டு வசதி வாரியக்குடியிருப்பில் குறைந்த வருவாய் வாடகை பிரிவு வீட்டில் நல்லகண்ணு வசிக்கிறார். அதே பகுதியில் தான் முன்னாள் அமைச்சர் கக்கன் மகன் வசிக்கிறார். இவர்களை தவிர குறைந்த வருவாய் கொண்ட  398 குடும்பங்கள் அங்கு வசிக்கிறார்கள். அந்த வீட்டின் ஆயுள் முடிவடைந்து விட்டதால் அனைவரும் வீட்டை காலி செய்து தாருங்கள் மீண்டும் கட்டித்தரப்படும்; அப்போது இங்கு குடியிருப்பவர்களுக்கு முன்னுரிமை தரப்படும். என்று கடந்த ஒரு ஆண்டிற்கு முன்பே அரசு கூறிவிட்டது. ​

இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றங்களில் வழக்கு நடக்கிறது. இதில் உச்ச நீதிமன்றம் வரும் 15, 16ம் தேதிக்குள் வீடுகளை காலி செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. அதை அமல்படுத்த வேண்டிய கட்டாயம் வீட்டு வசதி வாரியத்திற்கும், அரசுக்கும் உள்ளது. அதன் அடிப்படையில் இந்த உத்தரவு குடியிருப்போர்களுக்கு தெரிவிக்கப்பட்டு, அதன் அடிப்படையில் நல்லகண்ணு, கக்கன் குடும்பத்தினர் வீட்டை காலி செய்துள்ளனர். நல்லக்கண்ணு சென்னை கேகே நகரில் தன் மகள் வசிக்கும் பகுதியில் உள்ள வாடகை வீட்டிற்கு சென்று விட்டார். மகள் வீட்டிற்கு அல்ல என்பது கவனிக்கப்பட வேண்டிய விஷயம். கக்கன் குடும்பத்தினர் கதி மற்ற 398 குடும்பத்தினர் கதி த்தஎன்ன வென்று தெரியவில்லை. ​

தமிழகத்தின் மூத்த  தலைவருக்கு திமுக ஆட்சியில் தனி வீடு ஒதுக்கியிருக்கலாம், அதைவிடுத்து அரசு குடியிருப்பில் அதுவும் குறைந்த வருவாய் பிரில் வீடு ஒதுக்கியது, ஈயம் பூசியது மாதிரியும் இருக்கணும், பூசாதது மாதிரியும் இருக்க வேண்டும் என்ற கதைதான். அரசுக்கு தான் ஆயிரம் சங்கடங்கள் என்றாலும் இடதுசாரி கட்சிக்கு என்ன வந்தது. நல்லகண்ணு அறிமுகம் செய்தவர்கள் தான் இந்திய கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களாக உள்ளனர். இந்நிலையில் கட்சி சார்பில் நல்லகண்ணுக்கு கொடுத்த ஒரு கோடி ரூபாயை அவர் கட்சிக்கே நன்கொடை கொடுத்தார். அதைப் பெற்றுக் கொண்டாவது அவருக்கு வீடு கொடுத்து இருந்தால் நல்லது. ​

கக்கன் வாரிசுகளுக்கும் அது தான் நிலைமை, காங்கிரஸ் கட்சி அவர்களை கண்டு கொள்ள வில்லை என்பது வேதனைக்குறியது. அன்னையர் தினத்தன்று சமூக ஊடகங்களில் தாய்க்காக உருகி ஊற்றினார்களே, அவர்களில் எத்தனை பேர் தங்கள் வீடுகளில் அன்னையை வைத்து இருப்பார்கள். அதே போல தான் நல்லகண்ணுவிற்கும், கக்கன் வாரிசுகளுக்கும் கண்ணீர் வடித்ததும். ​

தற்போது அரசு இருவருக்கும் வீடு ஒதுக்க உள்ளதாக அறிவித்துள்ளது. அதில் கூட ஒரு நிபந்தனையை மறைத்து வைத்து இருக்கிறது. சமுகத்தில் முக்கிய பங்காற்றியவர்களுக்கு மாதவாடகைக்கு வீடு ஒதுக்குவது தொடர்பாக ஐகோர்ட் கொள்கை வழிகாட்டுதல் படி அரசு முடிவு எடுக்க இருக்கிறதாம். அது விரைவில் முடிந்த உடன் வீடுகள் ஒதுக்கப்படும் என்று கூறி இருக்கிறது. இந்த கொள்கை படி நல்லகண்ணு, கக்கன் குடும்பத்தினருக்கு வீடு ஒதுக்குவது தவறில்லை. ஆனால் இந்த கொள்கை முடிவு இத்துடன் முடிவுக்கு வருமா என்பது தான் கேள்விக்குறி. நாட்கள் செல்ல செல்ல நம் அரசியல் கட்சி பிரமுகர்கள்  அனைவரும் சமுகத்தில் முக்கிய பங்காற்றியவர்களாக மாறிவிடுவார்கள். அவர்களுக்கு வீடு ஒதுக்குவது என்பது எழுதப்படாத விதியாக மாறிவிடும்.. அப்புறம் தகுதி உள்ள பயனாளிகள் உள்வாடகைக்கு தான் இருக்க வேண்டி வரும். ​

இதே போல தானே மாவட்டங்களுக்கும்,போக்குவரத்து கழகங்களுக்கும் தலைவர்கள் பெயர் வைப்பதும் நடந்தது. சேரன், சோழன், பாண்டியன் என்று பெயரிடப்பட்ட போக்குவரத்து கழகங்கள், கடைசியில் தலைவர் பெயர் வைப்பதற்காகவே பிரிக்கப்பட்டன. கடைசியில் ஒவ்வொரு பஸ்சுக்கும் பெயர் வைக்கும் அளவிற்கு தலைவர்கள் பெயர் பெருகிவிட்டதால் அந்த திட்டமே கைவிடப்பட்டது. அப்போது கூட எல்லா தலைவர்கள் பெயர் வைக்கும் போதும் இந்த திட்டம் நன்றாக இருந்தது; நம்ம சாதி தலைவர் பெயர் வைக்க கூடாது என்பதற்காக இந்த திட்டமே வாபஸ்  பெறப்பட்டது என்று கூட விமர்சனம் எழுந்தது. ​

அதே போல இன்னும் சில ஆண்டுகள் கடந்தால் நம் கவுன்சிலர்கள் கூட தவணை முறையில் வீடு பெறுவார்கள். கடைசியில் திட்டமே ஏறக்கட்டப்படும். இதன் காரணமாக அரசை மட்டுமே நம்பிக் கொண்டு இல்லாமல் தலைவர்கள் மீது மரியாதை கொண்டவர்கள் களம் இறங்கி அவர்களுக்கு தேவையானதை செய்ய வேண்டும். எந்த நாடு மகான்களையும், ஞானிகளையும் மதிக்கவில்லையோ. அங்கு அவர்கள் மீண்டும் தோன்ற மாட்டார்கள் என்பார்கள். இன்றைக்கு வாழும் உதாரணமாக இருக்கும் நல்லக்கண்ணு போன்றவர்களை நாம் எந்த அளவிற்கு மதித்து நடக்கிறோமோ, அந்த அளவிற்கு தான் நேர்மையான அரசியல்வாதிகள் தோன்றுவார்கள். இதற்காக மட்டுமாவது அனைவரும் கடமையை செய்ய முன்வர வேண்டும். ​

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP