திருச்சியில் கரைசேருவாரா திருநாவுக்கரசர்?

அதிமுக மீது அதிருப்தி, திமுக மீது நம்பிக்கையின்மை, பாஜ மற்றும் காங்கிரசுக்கு பெரிய பலம் இல்லாத தொகுதி மற்றும் தேமுதிகவுக்கும் பெரிய அளவிலான ஆதரவாளர்கள் இல்லாத பகுதி என்பதால், திருச்சி லோக்சபா தொகுதியில் யார் வெற்றி பெறுவார் என்பதை இவ்வளவு சீக்கிரம் கணித்துவிட முடியாது.
 | 

திருச்சியில் கரைசேருவாரா திருநாவுக்கரசர்?

அடுத்த மாதம் நடைபெறவுள்ள மக்களவை தேர்தலில், திருச்சி தொகுதியில் களம் இறங்குகிறார், காங்., முன்னாள் மாநில தலைவர் திருநாவுக்கரசர். இவர், புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியை சேர்ந்தவர். 

மக்களவை தொகுதி மறுவரையறை செய்யப்பட்டபோது, புதுக்கோட்டை மக்களவை தொகுதி உடைக்கப்பட்டு, திருச்சி, கரூர், தஞ்சாவூர்,சிவகங்கை, ராமநாதபுரம் மக்களவை தொகுதிகளில் சேர்க்கப்பட்டது. 

இது புதுக்கோட்டை வாசிகளிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இதனால், 2009 மற்றும் 2014ல் நடந்த தேர்தல்களில், புதுக்கோட்டை மாவட்ட மக்கள், நோட்டாவுக்கு அதிக வாக்குகளை வழங்கினர். ஆயினும், அவர்களின் காேரிக்கைக்கு எந்த அரசும், அரசியல்வாதியும் செவிசாய்க்கவில்லை. 

சமஸ்தான அந்தஸ்த்து பெற்றிருந்த புதுக்கோட்டை, மக்களவை தொகுதி அந்தஸ்த்தை இழந்து,10 ஆண்டுகள் ஆகிவிட்டது. இந்நிலையில் தான், அதே மாவட்டத்தை சேர்ந்த, திருநாவுக்கரசர், புதுக்கோட்டை மாவட்டம் அடங்கும் திருச்சி மக்களவை தொகுதியில் காங்கிரஸ் சார்பில் வேட்பாளராக களம் இறங்குகிறார். 

திருநாவுக்கரசர் அரசியலுக்கு வந்த புதிதில், அறந்தாங்கி தொகுதியின் செல்லப்பிள்ளையாக திகழ்ந்தார். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவுடன் நெருங்கிய நட்பு கொண்டிருந்த அவர், அவர்களின் அரசுகளில் அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார். 

ஜெயலலிதாவின் தீவிர ஆதரவாளராக இருந்த அவர், திடீரென தனிக் கட்சி ஆரம்பித்து சில காலங்கள் அதை நடத்தி வந்தார். பின், பா.ஜ.,வில் இணைந்து, ம.பி., மாநிலத்திலிருந்து ராஜ்யசபா எம்.பி.,ஆனார். பதவிக் காலம் முடிந்ததும், உடனே காங்கிரசில் சேர்ந்தார். 

அந்தக் கட்சியின் மாநில தலைவராக இருந்த அவர், சமீபத்தில் அந்த பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டார். இதற்கு காரணம், அவர் தேர்தலில் போட்டியிட விரும்பியதே என, அப்போதே பரவலாக பேசப்பட்டது.


இந்நிலையில், தற்போது, தமிழகத்தில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியலில் அவரது பெயரும் இடம் பெற்றுள்ளது.

ஏற்கனவே, புதுக்கோட்டை தொகுதி எம்.பி.,யாக இருந்துள்ள அவர், தற்போது, அந்த மாவட்டம் அடங்கிய திருச்சி மக்களவை தொகுதியில் களம் காண்கிறார்.

புதுக்கோட்டை மக்களுக்கு நன்கு அறிமுகம் ஆனவர். சாதி ரீதியிலான செல்வாக்கு, தமிழக காங்கிரஸ் தலைவராக இருந்ததால், தான் ஒரு பெரிய தலைவர் என்ற தோற்றம் கிடைக்கும் என்ற நம்பிக்கை, தி.மு.க.,வுடனான கூட்டணி உள்ளிட்டவை அவருக்கு சாதகமாக இருக்கும் என நினைக்கிறார். 

ஆனால், அந்த தொகுதி மக்களுக்கு அவர் ஏற்னவே அறிமுகம் ஆனவர் என்பதை விட, திருச்சி தொகுதிக்கு உட்பட்ட, புதுக்கோட்டை மாவட்ட மக்களின் அதிருப்தியை சம்பாதித்தவர் என்ற பெரிய பின்னடைவு அவருக்கு இன்றும் இருக்கத்தான் செய்கிறது. 

தவிர, அவரின் சொந்த ஊரான அறந்தாங்கி, தற்போது திருச்சி தொகுதிக்குள் வரவில்லை. எனவே, அங்குதான் அவருக்கு செல்வாக்கே தவிர, புதுக்கோட்டை, திருச்சி உள்ளிட்ட இடங்களில் அவரும் ஒரு சாதாரண வேட்பாளரே. 

ஏற்கனவே, திமுக சார்பில் எம்பியாக இருந்த ரகுபதி, தனிக் கட்சி நடத்தி எம்பியான திருநாவுக்கரசர் ஆகியோர், புதுக்கோட்டை எம்பி தொகுதியை மீட்டெடுப்பதில் அலட்சியம் காட்டியதாக அங்குள்ள மக்கள் இன்றும் கோபத்தில் உள்ளனர். 

அதே போல், அதிமுக மீதும் அதிருப்தி இருப்பதாலேயே, சிட்டிங் எம்பி குமாருக்கு மீண்டும் வாய்ப்பு மறுக்கப்பட்டு, அந்த தொகுதியே, தேமுதிகவுக்கு தாரை வார்க்கப்பட்டுள்ளது.

ஆளுங்கட்சியே போட்டியிட விரும்பாத அல்லது பயப்படும் தொகுதியில் திமுகவாவது போட்டியிடுகிறதா என்றால், அதுவும் கிடையாது. அவர்களும் காங்கிரசுக்கு விட்டுக் கொடுத்துவிட்டனர். 

திருச்சியில் கரைசேருவாரா திருநாவுக்கரசர்?

இதனால், அங்கு, தேமுதிக சார்பில், இளங்காேவன் போட்டியிடுகிறார். அவரும் அவ்வளவு செல்வாக்குள்ளவர் என கூறிவிட முடியாது. அதே சமயம், புதுக்காேட்டை சமஸ்தான மன்னர் பரம்பரையை சேர்ந்தவரும், திருச்சி முன்னாள் மேயருமான சாருபாலா தொண்டைமான், தினகரனின் அமமுக சார்பில் களம் காண்கிறார்.

இவர் மீதும் அத்தொகுதி மக்களுக்கு சில அதிருப்திகள் இருந்தாலும், பெண் வேட்பாளர், புதுக்கோட்டை மன்னர் பரம்பரையை சேர்ந்தவர், திருச்சி முன்னாள் மேயர் என்ற சில அம்சங்கள் அவருக்கு சாதகமாக அமையலாம்.

எனினும் இவரும் கண்டிப்பாக வெற்றி பெறுவார் என கூறி விட முடியாது. இப்படிப்பட்ட சூழலில் தான், திருநாவுக்கரசர், திருச்சியை தேர்வு செய்துள்ளார். ஆளுங்கட்சி மீதான அதிருப்தி, பலம் வாய்ந்த போட்டியாளர் இல்லாதது என சில அம்சங்கள் அவருக்கு சாதகமாக அமைந்தாலும், அதையும் தாண்டி அவர் மீதான அதிருப்தியும் மக்கள் மனதில் இருக்கத்தான் செய்கிறது. 

அவரின் சொந்த ஊரான அறந்தாங்கி பகுதி அடங்கிய, ராமநாதபுரம் தொகுதியில் கடந்த முறை போட்டியிட்ட திருநாவுக்கரசர், மாேசமான தோல்வியை தழுவினார். தற்போது, எந்த நம்பிக்கையில் திருச்சியை தேர்ந்தெடுத்துள்ளார் என்பது கடவுளுக்கே வெளிச்சம். 

அதிமுக மீது அதிருப்தி, திமுக மீது நம்பிக்கையின்மை, பாஜ மற்றும் காங்கிரசுக்கு பெரிய பலம் இல்லாத தொகுதி மற்றும் தேமுதிகவுக்கும் பெரிய அளவிலான ஆதரவாளர்கள் இல்லாத பகுதி என்பதால், திருச்சி லோக்சபா தொகுதியில் யார் வெற்றி பெறுவார் என்பதை இவ்வளவு சீக்கிரம் கணித்துவிட முடியாது. 

எனினும், கடைசி வரை எந்த வேட்பாளர் வெற்றி பெறுவார் என்ற திக்... திக்... மனநிலையை, வேட்பாளர்களுக்கு மட்டுமின்றி, தேர்தல் முடிவுகளை ஆர்வமுடன் எதிர் நோக்கியிருக்கும் அரசியல் ஆர்வலர்களுக்கும், திருச்சி தொகுதி வாக்காளர்கள் ஏற்படுத்த உள்ளனர் என்பதே நிதர்சனம். 

newstm.in
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP