Logo

நடப்பது ஜல்லிக்கட்டு தானா...?

நேரலையில் ஜல்லிக்கட்டு காட்டுவதாகச் சொன்னதால், வெகு நாட்கள் கழித்து டிவி பொட்டி முன் ஆர்வமாக அமர்ந்தேன். அப்போ தான் தெரிஞ்சது.......
 | 

நடப்பது ஜல்லிக்கட்டு தானா...?

நேரலையில் ஜல்லிக்கட்டு காட்டுவதாகச் சொன்னதால், வெகு நாட்கள் கழித்து டிவி பொட்டி முன் ஆர்வமாக அமர்ந்தேன். 

“ஏப்பா ஏய்ய்… வாடி வாசல மறைக்காம நில்லுங்கப்பா ஏய்ய்…” என்று மைக்காளர் சவுண்டு விட்டுட்டு இருந்தார். முன்பெல்லாம் இந்த மை பிடித்து பேசுபவர்கள் பேச்சைக் கேட்பதற்கே ஒரு கூட்டம் இருக்கும். அதாவது ஜல்லிக்கட்டின் உக்கிரம், பரபரப்பு தாண்டி இவருடைய நையாண்டி பேச்சு பட்டைய கிளப்பும்.  நிமிஷத்துக்கு நிமிஷம் இவரது உணர்வுகள் மாறும்…

அடியேய்ய்ய்…  காராம்பசுவுக்கு மடியைக் கட்டி மஞ்சுரட்டுக்கு (மஞ்சு விரட்டுக்கு) கூட்டிட்டு வந்துட்டீங்களாடீய்ய்..?  என்னமோ சென மாடு மாதிரி அசையாம அசைஞ்சு போயிட்டிருக்கு…. என்று சீறிப் பாயாத காளைகளைக் கிண்டல் பண்ணும் அதே நேரத்தில்…. 

நடப்பது ஜல்லிக்கட்டு தானா...?

ஏலேய்ய்ய் கட்டம் போட்ட மஞ்ச சட்ட…. அங்குட்டு வடக்குத் தெருவு பக்கம் பொம்பளப் புள்ளைக சொட்டாங்கல்லு வெளையாடிட்டு இருக்குக… அதுக கூட போய் வெளையாடப்பே…. இங்கன விளையாண்டு கைகால்ல அடிகிடி பட்டுடபோது…. என்று காளையைப் பார்த்து லைட்டா பம்மும் இளைஞனைச் சீண்டுவதும்…. செம்ம ரகளை பண்ணுவார். இதே ஆளின் பேச்சால் சில சமயம் வெட்டு குத்தில் வந்து முடியும்…  “ஏன்டா நானும் நாலு வருசமா பாக்குறேன் கொன்னக்குளம் மாயாண்டி காளைய பிடிக்க ஒத்த ஆம்பள கூடயா இல்லாம போயிட்டீங்க…? இந்த வருசமும் புடிக்காட்டி அப்படியே அந்தாளு வீட்டுக்குப் பண்ணைக்குப் (வேலைக்கு) போயிடுங்க அந்த மாட்டுக்கு தண்ணிகிண்ணி வச்சு தாஜா பண்ணி அடுத்த வருசம் பொத்துனாப்புல(மெல்ல, சிரமமில்லாம) புடுச்சுப்புடலாம்… என்றோ, என்ன இருந்தாலும் உத்தங்குடி காளையோட வாலு மசுத்தக் கூட கருப்பாயூரணிகாரய்ங்க புடுங்க முடியாதுன்னு சொல்லிட்டுப் போயிடுவாரு… அன்னிக்கு சாயங்காலமே ரெண்டு ஊருக்காரன்களும் அடிச்சுட்டு கிடப்பார்கள்…. சரி விசயத்துக்கு வருவோம்…

நடப்பது ஜல்லிக்கட்டு தானா...?

அவணியாபுரத்தில் வாடிவாசலே ஒரு ஓரமா வச்சிருந்தாங்க வெளியே வரும் காளைக்கு இடதுபக்கம் இடமே இல்லை. இந்த லட்சணத்தில் நண்பா பாதைய மறைக்காம நில்லுங்கப்பானு மைக்காளர் ரொம்ப டீஸெண்டா பேசுறதா நினைச்சு பேசிட்டிருந்தாரு. கொம்பைப் பிடிக்கக் கூடாது, வாலைத் தொடக் கூடாது என்று வேட்டிகட்டிய PETAகாரராக பேசிக் கொண்டிருந்தார்.

மாடுபிடி வீரர்கள் என்னமோ ஸ்கூல் ஸ்போர்ட்ஸ்டேக்கு வந்த பசங்க மாதிரி மேலே நின்னுக்கிட்டு பேசுற ஆள் பேச்சை அப்படியே கேட்டு டிஸிப்ளினா நடந்துட்டு இருக்காங்க… வாடிவாசலைத் தாண்டி 10 அடி மாடு போயிட்டா கூட விட்டுட்டு வந்துடுறானுக பசங்க… பசங்க தான் அப்படின்னா, ஜல்லிக்கட்டுக்கு வந்த காளைகள் அதை விட அட்டகாசம்…. கோயம்பத்தூர் குண்டு வெடிப்பைக் கண்டிக்கு கி.வீரமணி மாதிரி பட்டும்படாமல் வீரத்தைக் காட்டி துள்ளாமல் துள்ளிட்டு நேர் கோட்டில் ஓடிப் போயிடுதுக. பசங்களும் வீரமணியிடம் பேட்டி கேட்கும் கவர் வாங்கி பத்திரிக்கையாளர்கள் மாதிரி திமிலைத் தொட்டும் தொடாமலும் விட்டுட்டு நிக்கிறானுக. களத்தில் நின்னு விளையாடுற மாடுகள் ரெண்டு சதம் கூட இல்லை. அப்படியே ஒன்னு ரெண்டு நின்னு விளையாடினாலும், அதைச் சீண்டி அதோடு மோதி வீரத்தைக் காட்ட ஒரு பய வர மாட்டேங்குறான். திரும்ப அடுத்த மாடு பிடிக்க வாடிவாசல்க்கே போய் வரிசையில் நிக்கிறான்க. ஜல்லிக்கட்டு நடக்குதா இல்ல டிவி சீரியல் சூட்டிங் ஏதும் நடக்குதான்னு லைட்டா ஒரு சந்தேகம் வந்திடுச்சு. இவ்வளவு சாந்தமா ஒரு ஜல்லிக்கட்டை நான் பார்த்ததே இல்லை. 

எப்படி இந்த மாற்றம் நிகழ்ந்தது? எந்தவொரு பழக்கவழக்கத்தையும் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்திற்கு செய்யாமல் தள்ளிப் போட்டுவிட்டால் போதும் அதன் வீரியம் குறைந்து விடும். ஒரு ஐந்து வருடங்களுக்கு பொதுவெளியில் சிகரெட் பிடிக்கவிடாமல் தடுத்து விட்டோம் என்றால் போதும்,  அடுத்தடுத்த தலைமுறையினர் சிகரெட் பிடிக்கும் வழக்கமே இல்லாமல் செய்து விடலாம். அப்படியாக, கடந்த பத்து வருடங்களாக ஜல்லிக்கட்டுக்குத் தடை தடை என்று விடாமல் கோர்ட்டுகளில் தடை வாங்கி நம் பாரம்பரிய வீரியத்தை மழுங்கச் செய்தது பீட்டாவும் அதன் பின்னணியில் இருக்கும் அந்நிய சக்திகளும். 

பெயரளவில் ஜல்லிக்கட்டு நடத்திட்டு இருக்கிறோம். அடுத்த தலைமுறை இளைஞர்களிடமும் ஜல்லிக்கட்டில் கலந்து கொள்ளும் ஆர்வத்தைக் காணோம். மெல்ல ஜல்லிக்கட்டு இனி அழியுமோ என்ற பயம் கவ்வியிற்று. 

இதுக்கு தான் சொல்றது! நம்ம பாரம்பரியத்தை! நம்ம பண்பாட்டினை கிண்டல் செய்யும் போதே தட்டிடணும். பொறுத்துப் போகிறேன், ஜாலிக்கு சொன்னார்கள் பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டாம், இருந்தாலும் அதிலொரு நியாயம் இருக்கிறது போன்ற நடுநிலை வேசம் எல்லாம் நம் சந்ததியின் நல்வாழ்விற்கு வேட்டு வைத்து விடும். 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP