கண் கெடும் முன்பே சூரிய நமஸ்காரம் செய்தால் நல்லது!

தேர்தல் முடிந்த பின், உள்ளதும் போச்சே என புலம்புவதை விடுத்து, அதிமுக - தினகரன் என பிரிந்த நிற்கும் இரு அணியினர் ஒன்றாக செயல்பட்டால், 40லும் வெற்றி பெறுவது மிக சுலபம். ஆனால், இரு தரப்பினரும் தனித்து போட்டியிடுவதால், அது திமுகவுக்கு சாதகமாவே அமையக்கூடும்.
 | 

கண் கெடும் முன்பே சூரிய நமஸ்காரம் செய்தால் நல்லது!

அ.தி.மு.க.,வின் பொதுசெயலராக இருந்த ஜெயலலிதா, கட்சியை கட்டுகோப்பாக வைத்திருந்தது போல், இந்தியாவில் வேறெந்த தலைவரும் கட்சி நடத்தியதில்லை என்றே கூறலாம். அந்த அளவுக்கு கட்சியின் இரண்டாம் கட்ட தலைவர்கள் முதல் அடிமட்ட தொண்டன் வரை, அனைவரும் அவரின் கண் ஜாடையின்றி எதுவும் செய்துவிட முடியாது. அந்த அளவுக்கு ஆளுமை படைந்திருந்தவர் ஜெ.,

அவரின் மறைவுக்குப் பின், அந்த கட்சி பொறுப்பை ஏற்ற சசிகலா, தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அதன் பின் கட்சியை வழி நடத்த நியமிக்கப்பட்ட தினகரனை ஓரங்கட்டுவதாக எண்ணி, ஓ.பி.எஸ்., தர்மயுத்தம் நடத்தினார். விளைவு, அவரின் பின்னால், ஒரு சில எம்.எல்.ஏ.,க்களும், சில தலைவர்களும் மட்டுமே அணி திரண்டனர். 

அதன் பின் சசிகலா ஆதரவுடன், தினகரன் கை காட்டிய பழனிசாமி, முதல்வராக பொறுப்பேற்றார். ஓ.பி.எஸ்.,சுக்கு சற்றும் சளைக்காதவர் என்ற வகையில், அவரும், தினகரனை கழற்றிவிட்டார். ஆனால், இவ்வளவு நடந்தும், தினகரன் எதற்கும் கலங்காது, அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற அமைப்பை நடத்தி வருகிறார். 

கண் கெடும் முன்பே சூரிய நமஸ்காரம் செய்தால் நல்லது!

அ.தி.மு.க.,வை மீட்டெடுப்பேன் என தொடர்ந்து கூறி வரும் அவர், தன் மீதான வழக்குள் மட்டுமின்றி, கட்சியை மீட்டெடுக்கும் வழக்குகளையும் சந்தித்து வருகிறார். இதற்கு நடுவிலும், தொடர் சுற்றுப் பயணங்கள், ஆதரவாளர்களுடனான சந்திப்பு, பத்திரிக்கையாளர் சந்திப்பு, தேர்தல் வேலைகள் என, பலவற்றையும் செய்து வருகிறார். 

அவரின் தனிப்பட்ட செல்வாக்கோ அல்லது எதிர்க்கட்சிகள் கூறுவது போல் டோக்கன் செல்வாக்கோ, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில், தி.மு.க., - அ.தி.மு.க., என இரு கட்சிகளையும் மண்ணை கவ்வ வைத்தார். இப்படிப்பட்டவர், தற்போது, மக்களவை தேர்தலிலும், அ.ம.மு.க.,சார்பில் வேட்பாளர்களை களம் இறக்கியுள்ளார். 

இவர் அறிவித்த வேட்பாளர்களும், மக்களுக்கு முன் பின் தெரியாதவர்கள் அல்ல. திருச்சியில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள சாருபாலா தொண்டைமான், திருச்சியில் ஏற்கனவே மேயராக இருந்தவர். திருச்சி தொகுதிக்கு உட்பட்ட, புதுக்கோட்டை சமஸ்தானத்தை ஆட்சி செய்த மன்னர் பரம்பரையை சேர்ந்தவர். மக்கள் மத்தியில் நன்கு அறிமுகம் ஆனவர். 

கட்டாயம் வெற்றி பெறுவார் என கூற முடியாது என்றாலும், அதிமுக கூட்டணி வேட்பாளரின் வெற்றி வாய்ப்பை பாதிக்கும் வகையிலான ஓட்டுக்களை பெறக்கூடியவர். இந்த தொகுதியில், அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள தேமுதிக வேட்பாளர் இளங்கோவன் களம் இறங்குகிறார். 

அதே போல், தேனி தொகுதியில் போட்டியிடும் ஓ.பி.எஸ்., இன் மகன் ரவீந்திரநாத்துக்கு எதிராக, அமமுக சார்பில், தங்க தமிழ்செல்வன் போட்டியிடுகிறார். இந்த தொகுதியில், இருவர் இடையே கடும் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இப்படி, 40 தொகுதிகளில், கிட்டத்தட்ட, 20க்கும் மேற்பட்ட தொகுதிகளில், பெருவாரியான ஓட்டுகளை பிரிக்கும் வகையில் பலம் வாய்ந்த வேட்பாளர்களைத் தான் தினகரன் களம் இறக்கியுள்ளார். இந்த சமயத்திலும், இபிஎஸ் - ஓபிஎஸ் தரப்பினர் வீம்பு காட்டி, தினகரனை எதிர்ப்பதால் எந்த பயனும் ஏற்படப்போவதில்லை, மாறாக அது, திமுகவுக்கு சாதமாக முடியவே வாய்ப்புள்ளது.

தேர்தல் முடிந்த பின், உள்ளதும் போச்சே என புலம்புவதை விடுத்து, அதிமுக - தினகரன் என பிரிந்த நிற்கும் இரு அணியினர் ஒன்றாக செயல்பட்டால், 40லும் வெற்றி பெறுவது மிக சுலபம். ஆனால், இரு தரப்பினரும் தனித்து போட்டியிடுவதால், அது திமுகவுக்கு சாதகமாவே அமையக்கூடும். 

எனவே, இரு தரப்பினருமே, கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரம் என்றில்லாமல், முன்கூட்டியே சிந்தித்து செயல்பட்டால், அது, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா போன்றோர் கட்டிக் காத்த இயக்கம் வீழ்ந்து விடாமல் பாதுகாக்க உதவும். இதை இரு தரப்பினருமே சிந்தித்து செயல்பட்டால் மட்டுமே முடியும். எனினும், எது நடக்குமாே அது நடந்தே தீரும் என்ற விதியை யாராலும் மாற்ற முடியாது. பொறுத்திருந்து பார்ப்போம், அதிமுகவின் எதிர்காலத்தை. 

newstm.in

இந்த கட்டுரையில் இடம் பெற்ற கருத்துக்கள் அனைத்து கட்டுரையாளரின் சொந்த கருத்துக்களே. 


 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP