இந்தி திணிப்பு எதிர்ப்பு, திராவிட நாடு...: அறிஞர் அண்ணா நினைவுகள்

இந்தி திணிப்புக்கு எதிராக போர் கொடி தூக்கியது, தமிழ்நாடு என்று அழகுதமிழில் மாநிலத்திற்கு பெயர் சூட்டியது என அறிஞர் அண்ணா என்றதும் அளவான சிரிப்புடனான அந்த காஞ்சிபுரத்தானின் முகத்தோடு இவை அனைத்தும் தான் நம் கண் முன் வரும் நினைவுகள்.
 | 

இந்தி திணிப்பு எதிர்ப்பு, திராவிட நாடு... அண்ணா நினைவுகள்

பெரியாரின் தளபதி,காஞ்சித் தலைவன் என்று இன்றளவும் தமிழ் சமூகம் போற்றும் அண்ணாதுரையை நவீன தமிழகத்தின் சிற்பி என்றே கூறலாம். தமிழகத்தின் அரசியல் வரலாற்றில் இருந்து அழிக்க முடியாது திராவிட முன்னேற்ற கழகத்தை நிறுவி வரலாற்றை மாற்றியது, இந்தி திணிப்புக்கு எதிராக போர் கொடி தூக்கியது, தமிழ்நாடு என்று அழகுதமிழில் மாநிலத்திற்கு பெயர் சூட்டியது என அறிஞர் அண்ணா என்றதும் அளவான சிரிப்புடனான அந்த காஞ்சிபுரத்தானின் முகத்தோடு இவை அனைத்தும் தான் நம் கண் முன் வரும் நினைவுகள். 

மறைந்து 51 ஆண்டுகள் கடந்த பின்பும் தமிழகத்தின் அரசியலில், தமிழக அரசியல் கட்சிகளின் கொள்கைகளில் அண்ணாவின் தாக்கம் தவிர்க்க முடியாது ஒன்றாக இருக்கிறது. இப்படி போற்றப்படும் அண்ணாதுரை குறித்த நினைவுகளை திரும்பி பார்ப்போம்...

இந்தி திணிப்பு எதிர்ப்பு, திராவிட நாடு... அண்ணா நினைவுகள்

பிறன் துயர் தன் துயர்

வெவ்வேறு காலகட்டங்களில் பெரியாரின் தளபதிகளாக இருந்தவர்கள் பட்டுக்கோட்டை அழகிரி, அண்ணாதுரை மற்றும் கி.வீரமணி. இதில் பட்டுக் கோட்டை அழகிரி உடல் நலம் குன்றிய போது அண்ணா செய்த செயலை இன்றளவும் பலரும் சிலாகித்து பேசுவர். மேடை பேச்சுகளில் வித்தகரான அண்ணாவை கூட்டங்களில் பேச பலர் அழைத்துக் கொண்டு இருந்த காலக்கட்டம் அது. அப்போது தன்னை யாரேனும் கூட்டங்களில் பேச அழைத்தால் பட்டுக்கோட்டை அழகிரிக்கு 100 ரூபாய் மணியாடர் செய்துவிட்டு அந்த ரசீதை தன்னிடம் கொண்டு வந்து காட்டினால் தான் தேதி கொடுப்பதாகச் அண்ணா கூறியுள்ளார். அதன் பின்னர் அண்ணாவின் கோரிக்கையை ஏற்று பலரும் மணியாடர் செய்தாக திமுக வட்டாரம் கூறுவதுண்டு.

இந்தி திணிப்பு எதிர்ப்பு, திராவிட நாடு... அண்ணா நினைவுகள்

இதுதான் அண்ணா!.

அண்ணாவுக்கு உடல்நலம் குன்றிய போது அமெரிக்காவுக்கு சிகிச்சை பெற சென்றிருந்தார். சிகிச்சை முடிந்து நுங்கம்பாக்கம் வீட்டில் தங்கி இருந்த காலகட்டத்தில் அண்ணாவை பார்க்க பேராசிரியர் என்று தற்போது அழைக்கப்படும் க. அன்பழகன்  செல்கிறார். அப்போது அண்ணாவின் படுக்கையைச் சுற்றி பத்துப் பன்னிரெண்டு புத்தகங்கள் உள்ளன, அவற்றில் ஒன்றை எடுத்து இதுதானே உங்களுக்கு மிகவும் பிடித்த புத்தகம்? என்று பேராசிரியர் கேட்கிறார்... அதற்கு எனக்குப் பிடித்து என்னவாகப் போகிறது இனிதான் நான் படித்ததை என்னால் தொண்டர்களிடம் பகிர்ந்துகொள்ள முடியாதே? என்று வேதனைப்பட்டிருக்கிறார் அண்ணா. தனது செயலால், தன்னால் மற்றவர்களுக்கு என்ன நலன் என்பதை எண்ணும் குணம்  அண்ணாவின் அடையாளமும் கூட. 

மெட்ராஸ் மாகாணம் அல்ல 'தமிழ்நாடு'

மெட்ராஸ் மாகாணம் என்பதை தமிழ்நாடு என அழகு தமிழில் பெயர் சூட்டி சட்டசபையில் அப்போதைய முதல்வராக இருந்த அறிஞர் அண்ணா தீர்மானம் கொண்டு வந்தார். இதனை இரண்டு முறை காங்கிரஸ் கட்சி எதிர்த்தது. ஆனால் அந்த கட்சியின் எம்எல்ஏக்களே தமிழ் வாழ்க என்று சொல்லவேண்டிய கட்டாயத்திற்கு அன்றைய தினம் ஆளானார்கள்.

இந்தி திணிப்பு எதிர்ப்பு, திராவிட நாடு... அண்ணா நினைவுகள்

அரசின் சின்னத்தில் முன்பு இருந்த சத்யமேவ ஜெயதே  வாய்மையே வெல்லும் என்று மாற்றப்பட்டதும் இதன் பிறகு தான். 

இவரது ஆட்சிக்காலத்தில் தான் இரண்டாம் உலகத் தமிழ் மாநாடு சென்னையில் 1968 இல் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. அம்மாநாட்டை ஒட்டியே பழந்தமிழ்ப் புலவர்களுக்கும், இருபதாம் நூற்றாண்டில் வாழ்ந்த பெருங்கவிஞர்களுக்கும், ஐரோப்பிய நாடுகளிலிருந்து வந்து தமிழ்த் தொண்டாற்றிய மேனாட்டு அறிஞர்களுக்கும் சிலைகள் நிறுவப்பட்டன. அம்மாநாட்டின் விளைவாக உருப்பெற்றது தான் சென்னை தரமணியில் இருக்கும் உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம்.

தமிழ் உணர்வு

1963க்கு முன்பே பல முறை தமிழகத்தில் மொழி போராட்டம் நடைபெற்று வந்தது. இந்நிலையில் 1965 ஜனவரியில் இந்திய ஆட்சி மொழியாக இந்தி மட்டுமே இருக்கும் என்ற 1963ம் ஆண்டின் ஆட்சி மொழி சட்ட மசோதாவால் மீண்டும் போராட்டம் உருவானது. இதனால், அண்ணா தலைமையில் இயங்கிய திமுகவின் போராட்டம் தீவிரமானது. 

இந்தி திணிப்பு எதிர்ப்பு, திராவிட நாடு... அண்ணா நினைவுகள்

1962ம் ஆண்டு நாடாளுமன்றத்தில் இந்தியை தேசிய மொழியாக அறிவிப்பதற்கான தீர்மானம் நிறைவேற்ற கூட்டம் கூடியது. அப்போதைய ஆளுங்கட்சியை சேர்ந்தவர் இந்தியாவில் அதிகமாக மக்கள் பேசும் மொழி இந்தி, இதனால் இந்தியை தேசிய மொழியாக அறிவிக்க வேண்டும் என்றார். மேலும் இதற்கு ஏன் பலரும் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள் என்று புரியவில்லை என்று கூறிவிட்டு ஆளுங்கட்சி உறுப்பினர் அமர்ந்தார். அதற்கு அண்ணா அளித்த பதில் அவையை அதிர வைத்தது. 

அதிகமான மக்கள் பேசுகின்றன மொழி தான் தேசிய மொழியாக இருக்க வேண்டும் என்று சொல்கிறீர்கள். அப்படி பார்த்தால் நம் நாட்டில் அதிகமாக இருக்கும் பறவை காகம் தான், பிறகு ஏன் மயிலை தேசிய பறவையாக வைத்துள்ளோம் என்று கேட்டார். 

மேலும் நாட்டில் எலிகள் இல்லாத மாநிலமே இல்லை. எனவே இனி புலிக்கு பதிலாக எலியை தேசிய விலங்காக மாற்றிவிடலாமா? என்றும் பதிலே அளிக்க முடியாத கேள்விகளை எழுப்பினார். 

அண்ணாவை இந்தி எதிர்பாளர் என்று கூறுவது சரியாக இருக்காமு. அவர் சமத்துவத்தை விரும்புபவர். இந்திய நாட்டில் இந்தி பேசும் பகுதிகளில் பிறந்தவருக்கு அவரது தாய்மொழியில்  கிடைக்க கூடிய வாய்ப்பு, மற்ற மொழிகளில் பேசுபவர்களுக்கு கிடைக்க வேண்டும் என்பது தான் அவரது கருத்தாக இருந்தது. ஆங்கிலத்தை புறக்கணிப்பது மிக பெரிய தீங்கை விளைவிக்கும் என்பதில் உறுதியாக இருந்தார் அண்ணா. 

இந்தியா முழுக்க பள்ளிகளில் ஆங்கிலம் கற்பிக்கப்படும்போது அது ஏன் தொடர்பு மொழியாக இருக்கக்கூடாது? உலகத்தொடர்புக்காக ஆங்கிலத்தையும் உள்நாட்டு தொடர்புக்காக இந்தியையும் தமிழர்கள் ஏன் கற்கவேண்டும்? என்ற அண்ணாவின் கேள்விக்கு சர்வதேச அளவில் வெற்றிகளை குவிக்கும் தமிழர்கள் தான் பதில்.

அரசியலில் இளைஞர்கள்...

சுதந்திர போராட்டத்திற்கு பிறகு தமிழகத்தில் இளைஞர்களை அரசியல் களத்திற்கு இழுத்த பெரும் சக்தியாக திகழ்ந்தவர் அண்ணா. இந்த 'அண்ணா'வை பின்பற்றும் தம்பிகள் பலரை உருவாக்கினார். அவர்களுக்கு கல்வி அளித்தார். எழுத களம் அமைத்து தந்தார், பேச மேடைகளில் ஏற்றிவிட்டார். எழுத்தும் பேச்சும் தானே இன்றளவும் தமிழக அரசியலை ஆட்டி வைத்துக் கொண்டு இருக்கிறது...

இந்தி திணிப்பு எதிர்ப்பு, திராவிட நாடு... அண்ணா நினைவுகள்

இப்படி தான் வளர்த்த தம்பிகளை அதிகாரத்தில் உட்கார வைக்கவும் அண்ணா தவறவில்லை. சட்டப்பேரவைக்குள் வர வேண்டியதுதானே என்று அண்ணாவை பார்த்து காமராசர் ஒருமுறை சவால் விடுத்தார். இதற்கான பதிலையும் தனது தம்பிகளிடம் இருந்தே பெற்றார் அண்ணா. திருச்சியில் திமுக நடத்திய மாநாட்டில் இதே கேள்வியை தொண்டர்களிடம் கேட்டு 1962ம் ஆண்டு தேர்தலில் போட்டியிட்டு வென்றார். 

அவருக்கு உறுதுணையாக அப்போது இருந்த தம்பிகளை பட்டியலிட வேண்டுமா என்ன? 

நவீன அரசியல் இயக்கம்

அமைப்பு ரீதியாகவும் தத்துவார்த்த ரீதியாகவும் தன் காலத்திற்குப் பிறகும் கூட வலிமையாக இருக்கும்படியான ஒரு அரசியல் இயக்கத்தை கட்டியெழுப்புவதற்கு ஒரு தலைவனுக்கு மிக நவீனமான பார்வை வேண்டும், அது அண்ணாவிடம் நிறையவே இருந்தது. இளைஞர்களின் மனதில் நம்பிக்கையை விதைத்து, சாதி மத பேதங்களை கடந்து அவர்களை ஒரு தத்துவத்தின் குடையின்கீழ் ஒருங்கிணைத்து, அரசியல் களத்தில் வெற்றி பெறச் செய்து அதிகார நிழலில் அமரவைத்து ஒரு தலைமுறையையே செழுமைப் படுத்தியவர் அண்ணா. 

திராவிட நாடு கோரிக்கை

திராவிட நாடு’ என்ற பிரிவினைக்கான காரணங்களை அண்ணா நாடாளுமன்ற மேலவையில் 1962-ல் முன்மொழிந்தபோது, அனைவரும் அதிர்ந்துபோனார்கள். 1962ல் இந்திய-சீனப் போரின்போது அண்ணா இந்தக் கோரிக்கையை நாட்டின் ஒருமைப்பாட்டைக் கருதிக் கைவிட்டார். “வீடு இருந்தால்தான் ஓடு மாற்ற முடியும்” என்று ஒரே வரியில் அளித்த விளக்கம் எல்லோரையும் சிந்திக்கத் தூண்டியது. இது போன்று அண்ணா எண்ணற்ற சொற்றொடர்களைத் தமிழுக்கு வழங்கியுள்ளார்.

இந்தி திணிப்பு எதிர்ப்பு, திராவிட நாடு... அண்ணா நினைவுகள்

கலை ஆர்வம் 

1949ல் திமுக தொடங்கிய போது பொதுவாழ்வில் ஈடுபடுபவர்கள் எவ்வாறு இயங்க வேண்டும் என்பதற்கு இலக்கணம் வகுக்கும் வகையில் ‘நல்லதம்பி’என்ற திரைப்படத்தை அளித்தார். கலைவாணர் நடித்த இந்தத் திரைப்படம், இன்றைய அரசியலுக்கும் பாடமாக அமைகிறது. அண்ணா திரைத் துறையிலிருந்து பொதுவாழ்வுக்கு வந்தவர் அல்ல. திரைத் துறையைச் சமூக-அரசியல் சீர்த்திருத்தத்துக்கு ஒரு கருவியாகப் பயன்படுத்தியவர். குடியரசு, நம் நாடு, திராவிட நாடு, காஞ்சி உள்ளிட்ட பல தமிழ் ஏடுகளிலும், ஹோம் லேண்ட், ஹோம் ரூல் ஆகிய ஆங்கில வார ஏடுகளிலும் பன்னாட்டு அரசியல் தொடங்கி இந்நாட்டு அரசியல் வரை பல்துறைகளில் அவர் ஆங்கிலத்தில் வடித்தெடுத்த கட்டுரைகள், தலையங்கங்கள் இன்றும் ஆய்வுக்குரிய கலைக்களஞ்சியமாகவே விளங்குகின்றன.

உலகத்திலேயே 4வது பெரிய இறுதி ஊர்வலம் அறிஞர் அண்ணாவுடையது தான். தலைவன் இருக்கும் போது கும்பிடு போட்டுவிட்டு பிறகு பல்டி அடிக்கும் பலரை பார்த்திருக்கிறோம்... பார்த்துக்கொண்டு இருக்கிறோம். ஒரு தலைவனை எப்படி வழியனுப்ப வேண்டும் என்று உலகிற்கு காட்டியது தமிழ் சமூகம். ஒரு தலைவன் எப்படி இருக்க வேண்டும் என்பது காட்டியவர் அண்ணா!

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP