கஷ்டம் மட்டும் தானே தனி உடமை!

வெற்றிக்காக படும் சிரமம் வேண்டுமானால் தனி உடமையாக இருக்கலாம். ஆனால் அவருக்கு செய்யும் உதவி அவருக்கு மட்டும் பலன் கிடைக்காமல், அவரை போன்ற பலருக்கும் கிடைக்கும் வகையில் பொதுஉடமையாகத்தான் இருக்க வேண்டும்.
 | 

கஷ்டம் மட்டும் தானே தனி உடமை!


அரசியல்வாதிகள், அதிகாரிகள், பல நல்ல உள்ளங்கள் எப்போதும் வானத்தை பார்த்தே நடந்து பழக்கப்பட்டவர்கள். இவர்களுக்கு, தங்களை சுற்றி நடப்பது எதுவும் தெரியாது. ஏதேனும் சம்பவம் நடந்தால் தான், இவர்களு ஊர் உலகத்தில் நடப்பது தெரியும். உடனே பாய்ந்து வந்து உதவி செய்வார்கள். 

பள்ளியில் தீவிபத்து நடந்து விட்டதா, உடனே தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் கீற்றுக் கொட்டகையே இருக்க கூடாது என்பார்கள். பள்ளி வேன் ஓட்டை வழியாக குழந்தை விழுந்து விட்டதா, உடனே தமிழகத்தின் அனைத்து பள்ளி வாகனத்தையும் தர சோதனை நடத்த வேண்டும் என்று தாண்டி குதிப்பார்கள். 

கோயில் வளாகத்தில் உள்ள கடையில் தீவிபத்து ஏற்பட்டதா, கோயில் வளாகத்தில் கடைகள் இருக்க கூடாது, ஏன் கற்பூரம் கூட கொளுத்த கூடாது என்று சட்டம் போடுவார்கள்.

இப்படி ஒரு சம்பவம் நடப்பதற்கு, ஒரு மணி நேரம் முன்பு வரை இருந்த அனைத்து அவலங்களும், சம்பவம் நடந்த நொடியில் தான், பூதாகரமாக தெரியும். இதில், ஊடகங்களின் பங்கு கணிசமானது. 

நிகழ்ச்சி நடக்கும் வரை ஊடகங்களில் அதைப்பற்றிய பேச்சே இருக்காது. அதன் பிறகு, நிலைய வித்வான்கள் ஒன்று கூட அதை அலசி ஆராய்ந்து ஒரு முடிவுக்கு வருவார்கள். நிலைய வித்வான்கள் பேசத் தொடங்கியதும், சம்பந்தப்பட்டவர்களுக்கு வாழ்த்து, பரிசு பொருட்களோ, அர்ச்சனைகளோ குவியும். 

தமிழக விளையாட்டுத்துறையில் மறக்க முடியாதவர் தடகள வீராங்கனை புதுகை சாந்தி.சாப்பாட்டிற்கு கூட வழி இல்லாமல், ஓட்டு வீட்டில் வாழ்ந்தவர் தோஹாவில் நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்றதும், அவரை பெரும் கூட்டமே சுற்றிக் கொண்டது. 

தங்களால் தான் அவர் வெற்றி பெற்றார் என்று சொல்லாத நபர்கள் கிடையாது. அப்போது முதல்வராக இருந்த கருணாநிதி, அவரது வீட்டிற்கு டிவி கொடுத்ததும், நிதி உதவியும் செய்தார். கோயிலில் உற்சவ மூர்த்தியை இழுத்துக் கொண்டு அலைவார்களே அதைப் போலவே ஒரு வாரம் அவரை சுற்றி அலைந்தார்கள். 

சில நாட்களில் அவர் பதக்கம் பெற்றது சர்ச்சையில் சிக்கியது. காக்காய் கூட்டம் போல சாந்தியை தனியே விட்டு விட்டு பறந்து விட்டது. பதக்கம் பெற்ற போது அவரை தலையில் துாக்கி வைத்துக் கொண்டு கொண்டாடிய உள்ளூர் பிரமுகர் ஒருவரிடம், சாந்தி பற்றி விசாரித்த போது, அவர் சின்னபிள்ளையாக இருந்த போது தான் எனக்கு தெரியும். அதன் பின்னர் பார்த்தது கூட இல்லை என்று சொல்லி ஒதுங்கி விட்டார். 

இதே போல தான், மற்றவர்கள் கதையும். வெற்றி பெற்றால் அதற்கு தான் தான் காரணம் என்பதும், சர்ச்சை ஏற்பட்டால் ஏதோ தங்களை கைது செய்து விடப் போகிறார்கள் என்பது போல ஓடி ஒளிந்து கொள்வதும் தான் இயல்பாக உள்ளது. 
சிறுவயதில் இருந்தே மருத்துவம் படிக்க விரும்பிய மாணவி, அது முடியாமல் தற்கொலை செய்து கொண்டார். 

உடனே அவரது குடும்பத்திற்கு உதவி செய்யாவிட்டால், தமிழகத்தில் பிறந்ததே தண்டம் என்று ஓடி சென்று உதவி செய்தனர். அந்த குடும்பத்திற்கு அது உதவியாக இருக்குமே தவிர்த்து, அந்த மாணவி மருத்துவம் படிக்க எந்த வகையிலும் உதவி செய்யாது. 

அதற்கு பதிலாக மருத்துக்கல்லுாரி வைத்துள்ள நபர்கள், தங்கள் கல்லுாரியில் அந்த மாணவியை போல இருப்பவருக்கு இலவச மருத்துவக்கல்வி கிடைக்க வழி செய்யலாம். அல்லது நீட் தேர்வுக்கு இலவச பயிற்சி வழங்கினால் நிச்சயம் சமுதாயத்திற்கு தேவையான உதவியாக இருக்கும். 

இதற்கு ஏதேனும் சாக்கு போக்கு சொல்வர்கள், சென்னை மனிதநேயமையம், ஓய்வு பெற்ற மண்டல வேலைவாய்ப்பக இயக்குனர் சுரேஷ்குமார் போன்றவர்கள் செய்யும் உதவியை பார்த்தால், எவ்வளவு யதார்த்தம் என்பதை உணர்ந்து கொள்ள முடியும். 

சமீபத்தில் கூட, ஒரு விளையாட்டு வீராங்கனையை அனைவரும் தலையில் துாக்கி வைத்துக் கொண்டு ஆடுகிறோம். அவர் போட்டியில் கலந்து கொள்ள செல்லும் போது, டிக்கெட் எடுத்து கொடுத்தவர், ஷூ வாங்கி கொடுத்தவர் எல்லாம் யார் என்றே தெரியாத அளவிற்கு இப்போது அவர் கொண்டாடப்படுகிறார். 

அவர் சிரமப்பட்ட போது செய்யாத உதவிக்கு, தற்போது செய்வது பரிகாரமாக மாறிவிடாது. அதனால் அவருக்கு உதவி செய்ய வேண்டாம் என்று கூறுவதாக எடுத்துக் கொள்ளக் கூடாது. அவரே தன் பேட்டியில் ஒவ்வொரு விஷயத்திற்கும் பலரிடம் உதவி கேட்டுதான் சாதித்துள்ளேன். என்னை போல உதவி பெற முடியாதவர்கள் போட்டிகளில் கலந்து கொள்ளாமலே விலகி விட்டனர் என்று கூறுகின்றார். 

அவர் ஏற்கனவே அரசுத்துறையில் பணியாற்றுகிறார். அவருக்கு பல சிறப்பு சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன. அவர் அணிந்திருந்த ஷூ குறித்து பல தவறான தகவல்கள் பரப்பப்படுகின்றன. அவை எதுவும் உண்மை கிடையாது. இவர், முன்னொரு காலத்தில் என்ன கஷ்டப்பட்டாரோ, அது போல் பலரும் வாய்ப்பு கிடைக்காமலும், கிடைத்த வாய்ப்பை பயன்படுத்த முடியாமலும் தவிக்கின்றனர். 

அவர்களுக்கு நாம் என்ன செய்யப்போகிறோம் என்பதே மிகப் பெரிய கேள்வியாக எழுகிறது. திருச்சியில் ஒரு தனியார் அமைப்பு மாணவ, மாணவிகளிடம் புத்தகங்களை வாங்கி அதை அடுத்த ஆண்டு மாணவர்களுக்கு வழங்குவதை வாடிக்கையாக வைத்துக் கொண்டு இருக்கிறது. 

கண்களைத் திறந்துவைத்துக் கொண்டு தேடினால், இப்படி உதவி செய்வதற்கு பல யோசனைகள் வரும். கிராமப்புறங்களில் இணைய இணைப்புடன் ஒரு கம்யூட்டரை வாங்கி வீட்டு திண்ணையில் வைத்து விட்டால் கூட பல ஐஏஎஸ் ஐபிஎஸ் உருவாக வாய்ப்பு உள்ளது. 

மிகுந்த கஷ்டத்திற்கு பிறகு வெற்றி பெருபவர்கள் ஒரு அடையாளம் தான். அவர் என்னைப் போல பலர் சிரமப்பட்டுக் கொண்டு இருக்கிறார்கள் என்பதை வெளி உலகிற்கு காட்டுகிறார். உண்மையில் அவரைப் போன்று சிரமப்படுகிறவர்களுக்கு உதவி செய்வது தான் நல்ல உள்ளங்களின் நோக்கமாக இருக்க வேண்டும். 

வெற்றிக்காக படும் சிரமம் வேண்டுமானால் தனி உடமையாக இருக்கலாம். ஆனால் அவருக்கு செய்யும் உதவி அவருக்கு மட்டும் பலன் கிடைக்காமல், அவரை போன்ற பலருக்கும் கிடைக்கும் வகையில் பொதுஉடமையாகத்தான் இருக்க வேண்டும்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP