ஆன்மிகம் நோக்கி செல்கிறதா தமிழக அரசியல் ??

பண்டு தொட்டே மனிதர்களை நெறிப்படுத்துவதில் ஆன்மிகம் முக்கிய இடம் வகித்தது. அதிலும் இந்தியர்கள் வாழ்க்கையில் கேட்கவே வேண்டாம். இதனால் தான் சுதந்திரப் போராட்ட காலத்திலும் ஆன்மீகம் இணைந்தே இருந்தது. காந்தி நாள் தோறும் பிரார்த்தனை கூட்டங்கள் நடத்தினார். திலகரின் விநாயகர் சதுர்த்தி கூட போராட்டத்தின் ஒரு நிலைப்பாடாகவே மாறியது.
 | 

ஆன்மிகம் நோக்கி செல்கிறதா தமிழக அரசியல் ??

பண்டு தொட்டே மனிதர்களை நெறிப்படுத்துவதில் ஆன்மிகம் முக்கிய இடம் வகித்தது. அதிலும் இந்தியர்கள் வாழ்க்கையில் கேட்கவே வேண்டாம். இதனால் தான் சுதந்திரப் போராட்ட காலத்திலும் ஆன்மீகம் இணைந்தே இருந்தது. காந்தி நாள் தோறும் பிரார்த்தனை கூட்டங்கள் நடத்தினார். திலகரின் விநாயகர் சதுர்த்தி கூட போராட்டத்தின் ஒரு நிலைப்பாடாகவே மாறியது.

இந்த காலகட்டத்தில் ஆங்கிலேயேர்கள் தங்களின் தேவைக்காக கைதூக்கிவிடப்பட்ட சமுதாயம் தான் பிராமணர்கள். அவர்களைப் பார்த்து வசதி வாய்ப்புள்ள மற்ற சமுதாயத்தவர்களும் கல்லுாரி கல்வியில் உயர் இடத்திற்கு வந்தனர். இது இரு சமுதாயத்தவர்கள் இடையே போட்டியை ஏற்படுத்தியது. காங்கிரஸ் கட்சியில் பாரம்பரிய வழக்கங்கள் தொடர்ந்து வரவே, அதில் வெறுப்புற்று, தாங்களும் பிராமணர்களை போல சமுதாயத்தில் இடம் பிடிக்க வேண்டும் என்றும் அதற்கு ஆங்கிலேயேர்களின் ஒத்துழைப்பு அவசியம் என்று கருதினர். இதில் பலர் மேற்கொண்ட முயற்சிகள் தோல்வி அடைந்த நிலையில் தியாகராய செட்டி, எம். நாயர் ஆகியோர் 1916ம் ஆண்டு நீதிகட்சியை தொடங்கினர். அந்த கட்சி சார்பில் 1920ம் ஆண்டு சென்னை மாகாணத்திற்கு நடந்த சட்டமன்றத் தேர்தலில் நீதிக்கட்சி வெற்றி பெற்றது. பனகல் அரசர், சுப்பராயலு ரெட்டியார் ஆகியோர் முதல்வராக இருந்தனர்.

கட்சியின் தொடக்கமே பிராமணரை எதிர்த்து என்ற காரணத்தால் அவர்களின் ஆளுமைக்கு அடிப்படையான இறை நம்பிக்கை எதிர்ப்பை தங்கள் நிலைப்பாட்டாக நீதிக்கட்சி மாற்றிக் கொண்டது. இதில் ஈவேரா இணைந்த பின்னர் தீவிர நாத்திகவாதம் தலைதூக்கியது. இதனால் அடித்தட்டு மக்கள் தலைவர்களாக மாறினர். இட ஒதுக்கீடு முறை அமல்படுத்தப்பட்டது. இதன் விளைவாக பிராமணர்கள் இருந்த இடத்தில் மற்றவர்கள் இடம் பெற்றனர்.

ஈவேரா காலத்தில் தேர்தலில் போட்டியில்லை என்று முடிவு செய்யப்பட்டது. இதனால் அவருக்கு சமரசம் தேவையில்லாமல் இருந்தது. அரசின் ஆதரவை மட்டும் நிரந்தரமாக கொண்டிருந்தார். அதன் பின்னர் தேர்தல் அரசியல் தேவை என்று உணர்ந்த அண்ணாதுரை திமுகவை தொடங்கினார். அது வரையில் கடவுள் இல்லை என்ற கொள்கை வீழ்ச்சியை தொடங்கியது. முதல்படியாக ஒன்றே குலம், ஒருவரே தேவன் என்று சரிந்தது. இந்த காலகட்டத்தில் திமுகவில் கருணாநிதி இருந்ததால் அவர் நாத்திகவாதத்தையே தொடர்ந்தார்.

காந்தி இஸ்லாமியர்கள் ஒத்துழைப்பு இல்லாவிட்டால் சுதந்திரம் பெற முடியாது என்று எண்ணி அவர்களை சரிகட்டிக் கொண்டிருந்தார். அதே பாணியில் சிறுபான்மையினர் ஓட்டு கிடைத்தால் வெற்றி பெறலாம் என்று கருணாநிதி அவர்களை தாஜா செய்ய தொடங்கினார். தன் சொந்த வாழ்க்கையில் இந்து மதத்தின் மீது ஏற்பட்ட வெறுப்பு, ஆட்சியை பிடிக்க விரும்பி சிறுபான்மையினரை சந்தோஷப்படுத்தும் நிலை என்று இந்து விரோத்தை தன் அரசியலின் அடிநாதமாக கொண்டார் கருணாநிதி. ஆனால் திமுகவில் இருந்து அதிமுக பிரிந்ததும் எம்.ஜி.ஆர் பகுத்தறிவை விட்டு வெளியேறி விட்டார். மூகாம்பிகை பக்தராகவே மாறிவிட்டார். ஜெயலலிதா அதை விட ஒரு படி மேலே சென்று சட்டசபையிலேயே தான் பிராமண பெண் என்று அறிவித்தார்.

தற்போது கருணாநிதியும் இல்லை, ஜெயலலிதாவும் இல்லை. இதனால் அவர்கள் கடைபிடித்த நிலைப்பாடுகளும் தற்போது பலன் தருமா என்பது சந்தேகமே. அவர்களின் முக்கியமான நிலைப்பாடு பகுத்தறிவு.

ஜெயலலிதா சிகிச்சையில் இருந்த போது அதிமுக தொண்டர்கள் போகாத வழிபாட்டு தலங்கள் இல்லை. செய்யாத வழிபாடுகள் இல்லை. அதே நேரத்தில் கருணாநிதி நோயில் விழுந்த போது வீ்ட்டில் வழிபாடு நடத்தும் திமுகவினர் கூட பகுத்தறிவு முகமூடி போட்டுக் கொண்டதால் தங்களுக்கு வாழ்வு அளித்த தலைவருக்கு வெளிப்படையாக வழிபாடு நடத்த முடியாத நிலை ஏற்பட்டது.

இவர்கள் இரண்டு பேரும் இறந்த பின்னர் பகுத்தறிவு என்ற கொள்கை அவசியமா என்ற கேள்வி எழுந்து இருக்கிறது. மூட நம்பிக்கை, பிராமண மேலாதிக்கம் போன்றவை இன்று ஒவ்வாத விஷயங்களாக மாறிவிட்டன. பிராமண மேலாதிக்கம் என்றால் அதை கேட்டவன் அலுவலகத்தில், நிறுவனத்தில் அவர்களை தேடித்தான் பார்க்க வேண்டி உள்ளது. பள்ளி, கல்லுாரிகளில் பிராமண மாணவர்களை தேடித்தான் பார்க்க வேண்டி உள்ளது. வம்படியாக தேடி கண்டு பிடித்து பார்த்தீரா பிராமணர் ஆதிக்கம் என்று கூற வேண்டிய நிலை வந்து விட்டது.

பகுத்தறிவு பேசிய திமுகவின் முதல் கட்ட தலைவர்கள் குடும்பத்தினர் கோயிலுக்கு செல்வது சமூக ஊடங்களில் வலம் வந்து கேலிக்குள்ளாகிறது. ஸ்டாலின் ஸ்ரீரங்கத்தில் நெற்றி பொட்டை அழித்ததை (பகுத்தறிவு), பசும் பொன்னில் விபூதியுடன் வலம் வந்ததை, ஸ்டாலின் மனைவி,கனிமொழியின் தாய் இருவரும் கோயில்களில் வழிபட்டதை, கனிமொழியின் பகுத்தறிவு பேச்சுக்களை, துரைமுருகன் மகன் நெற்றியில் விபூதி பூசியதை, திருமாவளவன் கோயிலை விமர்சனம் செய்ததை, அவரே கும்பாபிஷேகத்திற்கும் விமானத்திற்கும் தீர்த்தக்குடத்தை எடுத்துக் கொண்டு சென்றதை, ஆசிரியர் வீரமணி திருமணத்தில் தாலி எடுத்துக் கொடுத்ததை, அவ்வப்போது மாறும் சீமான் கொள்கைகளை என சமூக ஊடங்கள் உடனுக்குடன் பரவ விட்டு இவர்கள் நடிக்கிறார்கள் என்று மக்களுக்கு புரிய வைத்து கொண்டிருக்கிறது.

இன்னொரு புறம் இந்துக்களின் கட்சி என்று முத்திரைக்குத்தப்பட்ட பாஜக அதையும் மீறி வட இந்தியா முழுவதும் வெற்றி பெறுகிறது. கட்டாயம் அந்த கட்சிக்கு கிறிஸ்தவ, இஸ்லாமியர்கள் ஓட்டு போட்டு இருப்பார்கள். அவ்வாறு இல்லை இந்துக்கள் மட்டும் தான் ஓட்டுப் போட்டார்கள் என்று கூறினால் அது கிறிஸ்தவ, இஸ்லாமியர்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் செயல். அதே நேரத்தில் மதசார்பற்ற தன்மையை தூக்கி பிடித்த காங்கிரஸ் கட்சியும் மற்ற மாநில கட்சிகளும் தோல்வியை தழுவுகின்றன. இந்த காரணம் தமிழகத்தில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. முதல்முறையாக எடப்பாடி, பன்னீர், ஸ்டாலின் இன்ன பிற தலைவர்கள் முதல்வர் வேட்பாளராக சட்டசபைத் தேர்தலை சந்திக்க இருக்கிறார்கள். இந்த கால கட்டத்தில் பகுத்தறிவு பேசுவது ஓட்டை பெறுமா என்ற சந்தேகத்தை திமுக மனதில் ஏற்படுத்தி இருக்கிறது. இதனால் தான் திமுக வீரமணியை பிரச்சாரத்திற்கே வர வேண்டாம் என்று வேண்டிக் கேட்டுக் கொண்டது.

இந்த சூழ்நிலையில் அதிமுக பகுத்தறிவு குறித்து பிரச்சாரம் செய்யப்போவதில்லை. திமுக அதனை மேற்கொள்ளும். இதனால் இந்துக்களின் ஆதரவாளர்கள் ஓட்டு அதிமுகவிற்கும், நாத்திகர்கள், சிறுபான்மையினர் ஓட்டு திமுகவிற்கும் விழும் என்று நம்பலாம். ஆனால் நடிகர்கள் ரஜினி, கமல் சட்டசபைத் தேர்தலில் போட்டியிடுவோம், தேவைப்பாட்டால் இணைந்தும் போட்டியிடுவோம் என்று அறிவித்தது, அதிமுக, திமுக இரு கட்சிகளையும் அதிர்ச்சியடைய செய்தது.

அதிமுகவில் எடப்பாடி, பன்னீர் செல்வம் ஆகியோர் தான் தலைவர்கள் என்பதால் அமைச்சர்கள் தங்கள் பயத்தை, தங்கள் தைரியத்தை வெளிப்படையாக பேட்டி கொடுத்து கடந்து செல்கிறார்கள். ஆனால் நடிகர் ரஜினி, கமலை எதிர்ப்பது தங்களுக்கு பெருமை இல்லை என்று ஸ்டாலின் உட்பட திமுக தலைவர்கள் நினைப்பதால் உள்காயமாக, எவ்வளவு அவர்கள் அடித்தாலும் தாங்கிக் கொள்ளும் நிலையில் தான் நடிக்க வேண்டியுள்ளது.

இந்நிலையில் பகுத்தறிவுவாதிகள், அறிவுஜீவிகள் ஓட்டுகளை நடிகர் கமலும், ஆன்மீகவாதிகள், பக்தர்கள், விசிலடிச்சான் குஞ்சுகள் என்று கூறுபவர்கள் ஓட்டுக்களை ரஜினியும் கவர்வதற்கு வாய்ப்புகள் அதிகம உள்ளது. இது போன்ற அபாயத்தில் திமுக பகுத்தறிவு நிலைப்பாட்டை எடுத்தால் அந்த கட்சிக்கு இழப்பு தான் ஏற்படும்.

இதனால் தான் சில காலத்திற்கு முன்பு நடந்த மதிமுக மாநாட்டில் வைகோ இந்துக்கள் எதிர்ப்பை கைவிட வேண்டும் என்று தற்போதுள்ள அரசியல் நிலையை அப்போதே போட்டு உடைத்தார். திமுகவை விட தற்காலத்தில் பகுத்தறிவின் அடையாளமாக திகழும் வைகோ இந்த அளவிற்கு மாறிவிட்டார். அவர் ஸ்டாலினுக்கு தான் ஆலோசனை கூறுகிறார். ஸ்டாலின் அதை ஏற்றால் பகுத்தறிவுக்கு அத்துடன் மங்களம் பாடிவிட வேண்டியதுதான். அவ்வாறு இல்லாவிட்டால் எந்த காரணம் கொண்டாவது திமுக தோல்வி அடைந்தால் தானே பகுத்தறிவு மறைந்து விடும். எது நடந்தாலும் சட்டசபைத் தேர்தலுக்கு பின்னர் தமிழகத்தில் ஆன்மிக அரசியல்தான் கொடிகட்டி பறக்கும் என்பது மட்டும் நிச்சயம். 

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP