கடவுள் இருக்கிறார்.... இவர்களின் வடிவில் உலாவிக்கொண்டிருக்கிறார்!

தான் செய்யும் உதவி, தனக்கும் தன்னால் பலன் பெறும் நபர்களுக்கும் மட்டும் தெரிந்தால் போதும் எனக் கூறிய அவர், ‛‛தங்களைப் போன்றவர்களின் ஊக்குவிப்பு ஒன்றே போதும்; அதுவே எனக்கு கிடைக்கும் மிகப் பெரிய விருது. என் மனத் திருப்திக்காய் இதை செய்கிறேன். நான் செய்யும் உதவிகளை பார்த்து, என் நண்பர்கள் சிலரும் அவர்களால் முடிந்த உதவிகளை செய்ய துவங்கியுள்ளனர். அதுவே எனக்கு கிடைத்த பெரிய வெற்றி’’ என்றார்.
 | 

கடவுள் இருக்கிறார்.... இவர்களின் வடிவில் உலாவிக்கொண்டிருக்கிறார்!

பறவைகள், விலங்குகள் கூட தங்கள் இனத்தை சேர்ந்த மற்றொரு உயிரினம் அல்லல்படும் போது, தங்களால் இயன்ற உதவியை செய்கின்றன. ஒரு காகம், மரத்தின் கிளையில் தொங்கும் கயிற்றில் சிக்கிக் கொண்டால் போதும், அது அங்கிருந்து மீண்டு வரும் வரை, நுாற்றுக் கணக்கான காகங்கள், அந்த மரத்தை சுற்றியே வட்டமடிக்கும். 

சிக்கிக் கொண்ட காகத்தை மீட்டெடுக்க தங்களால் நேரடியாக எதுவும் செய்ய முடியாமல் போனால் கூட, அவ்விடத்தில் தொடர்ந்து சத்தமிட்டபடி வட்டமிடுதலின் மூலம், மனிதர்களின் கவனத்தை ஈர்த்து, அதன் மூலம், அந்த காகத்திற்கு உதவியை தேடித்தருவது, காக்கை இனத்தின் சிறப்பான குணங்களில் ஒன்றாகும். 

ஆம்...மேற்சாென்னது வெறும் உவமை அல்ல. நான் நேரில் கண்ட உண்மை சம்பவம். அண்ணா நகர் டவர் பூங்காவில் நான் கண்ட நேரடி காட்சி அது. காண்போரை வியப்பில் ஆழ்த்திய அபூர்வம். மரக்கிளையில் கயிற்றில் சிக்கிய காகம், அங்கிருந்த மனிதர்களின் உதவியால் மீண்டு வரும் வரை, வட்டமிட்ட காகங்களின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து கொண்டே இருந்ததே தவிர, குறையவில்லை. 

இப்படி, பறவையினங்களும், விலங்கினங்களும், தன்னலமற்ற உதவி எனும் பாடத்தை மனிதர்களுக்கு சத்தமின்றி கற்றுக்கொடுக்கின்றன. இதையெல்லாம் பார்த்தும், உதவி என்ற சொல்லின் அடிப்படை அர்த்தம் கூட தெரியாதவர்கள் நம்மில் பலரும் இருக்கத்தான் செய்கிறோம். 

கடவுள் இருக்கிறார்.... இவர்களின் வடிவில் உலாவிக்கொண்டிருக்கிறார்!

ஆதரவற்று, பாதசாரிகளின் உதவியை நாடி, அவர்களின் தயவில் தினசரி பொழுதை கழிக்கும் பலரையும் தினமும் காணும் நம்மில் சிலர், சில சில்லரைகளை அவர்கள் மீது வீசிவிட்டு செல்கிறோம்; பலர் அதையும் செய்வதில்லை. அவர்களை கண்டும் காணாமல் சிலர் செல்கையில், அதுபோன்ற நபர்கள் ஆபத்தானவர்கள், அவர்களை பார்ப்பதும், அவர்களை கடந்து செல்வதுமே பாவம் என்ற நினைப்பில் செல்வோரும் இருக்கத்தான் செய்கின்றனர். 

இப்படிப்பட்ட சமுதாயத்தில், கல்லுாரி படிப்பை முடித்து, எதிர்கால கலெக்டர் என்ற கனவை சுமந்து, அதற்கான முயற்சியை தொடர்ந்து கொண்டிருக்கும் இளம்பெண், சென்னை அண்ணா நகரின் முக்கிய பகுதிகளில், பிளாட்பாரங்களில் வசிக்கும் ஆதரவற்றோரை அரவணைக்கும் காட்சி, என் கண்களில் கண்ணீர் வர வழைத்தது. 

ஆம்... அன்றொரு நாள் மாலைப் பொழுது, அண்ணா நகர் ஐயப்பன் கோவில் அருகே நடந்து சென்று கொண்டிருந்தேன். கோவிலின் எதிர்ப்புறம் உள்ள நடைபாதையில், சில ஆதரவற்ற முதியவர்கள் அமர்ந்திருப்பர். அவர்களில் பலருக்கு அதுதான் வீடு. கன மழையானாலும் சரி, கோடை வெயிலானாலும் சரி, சூறைக்காற்றானும் சரி, வறண்ட வானிலை ஆனாலும் சரி. அந்த நடைபாதை தான் அவர்களின் நிரந்தர வசிப்பிடம். 

கடும் போக்குவரத்து நெரிசல் காரணத்தால், சற்றே நடைபாதை மீது ஏறி நடக்க ஆரம்பித்தேன். அப்போது நான் கண்ட காட்சி என் மனதை உலுக்கியது. 22 -23 வயதுடைய ஒரு இளம் பெண். நடைபாதையில் ஆதரவற்று, நோய்வாய்பட்ட நிலையில், கை கால்களில் கட்டுடன் அமர்ந்திருந்த முதிவருக்கு, தன் கையால் கோவில் பிரசாதம் வழங்கிக் கொண்டிருந்தார். 

கடவுள் இருக்கிறார்.... இவர்களின் வடிவில் உலாவிக்கொண்டிருக்கிறார்!

அவரும் அந்த இளம் பெண்ணின் கைகளை தொட்டு, அந்த சந்தனத்தை தன் நெற்றியில் பூசி, துளசியை வாயில் போட்டுக் கொண்டார். அத்தோடு நிற்கவில்லை. அந்த முதியவரின் புண்பட்ட கால்களை தொட்டு, ‛‛இதற்கு வைத்தியம் பார்த்தீர்களா. டாக்டர் என்ன சொன்னார் தாத்தா? மருந்தெல்லாம் ஒழுங்காக சாப்பிடுகிறீர்களா?’’ என உரிமையுடன் வினவினார். 

அவரும் தன் சாெந்த பேத்தி தன்னிடம் பரிவு காட்டியது போன்ற உணர்வில் மகிழ்ச்சியுடன் தலையாட்டினார். அது மட்டுமில்ல, அந்த முதியவரிடம் இருந்த பழைய மாத்திரை அட்டைகளை வாங்கிச் சென்று, அடுத்த 30 நாட்களுக்கு தேவையான மூன்று வகை மாத்திரைகளை தன் சாெந்த செலவில் வாங்கியதுடன், அவருக்காக சூடான இட்லியும் வாங்கித் தந்தார். 

இதையெல்லாம் பார்த்து ஆச்சரியத்தில்  உறைந்த எனக்கு, 15 நிமிடங்கள் கடந்து சென்றதே தெரியவில்லை. சரி, இந்த பெண்ணுக்கு மிகவும் பரிச்சயம் ஆனவர் போல... அதற்காகத்தான் இவருக்கு இப்படி உதவி செய்கிறார் என நினைத்தேன். ஆனால், அங்கு காத்திருந்தது இன்னொரு அதிர்ச்சி கலந்த ஆச்சரியம். 

அந்த முதியவர் மட்டுமின்றி, அவரைப் போன்ற பலருக்கும், அந்த இளம் பெண்... ஏன் மாணவி என்றே கூறலாம், தொடர்ந்து பல மாதங்களாக உதவி வருகிறார். தாய், தந்தையர் படிப்பு செலவுக்காக அவருக்கு கொடுக்கும் பணத்தின் ஒரு பகுதியை, இது போன்ற ஆதரவற்றோருக்கு உதவ செலவழித்து வருகிறார். 

இத்தனைக்கும் அவர் ஒன்றும் ‛அப்பாடக்கர் பேமிலி’ எல்லாம் கிடையாது. சாதாரண நடுத்தர வர்க்கத்தை சேர்ந்தவர். கணிதவியலில் முதுகலை பட்டம் பெற்று, தற்போது, யு.பி.எஸ்.சி., எனப்படும் மத்திய பணியாளர் தேர்வாணையம் நடத்தும் போட்டித் தேர்வுகளுக்கு தயாராகி வருகிறார். 

நான் பார்த்தது போலவே, அவர் உதவி செய்ததை வியப்புடன் பார்த்த இன்னும் சில பெண்கள், ‛‛இந்த காலத்திலும் இப்படி ஒரு பெண்ணா’’ என ஆச்சரியத்துடன் தங்கள் மைண்டு வாய்சை சத்தமாகவே பேசிச் சென்றனர். 

கடவுள் இருக்கிறார்.... இவர்களின் வடிவில் உலாவிக்கொண்டிருக்கிறார்!

இத்தனை பெரிய காரியத்தை மிக எளிமையாக, எவ்வித ஆர்ப்பாட்டமும் இன்றி செய்து கொண்டிருந்தார் என்பதை பார்த்து எனக்கு மேலும் வியப்பு. இந்த காலத்தில் பெரும்பாலோனோர் செய்ய துணியாத காரியத்தை தான் தனியாக செய்கிறோம் என்ற துளி ஆர்ப்பாட்டமோ, மமதையோ, கர்வமாே எதுவும் இன்றி மிக எளிமையுடன், சிரித்த முகத்துடன் அந்த உதவியை செய்து கொண்டிருந்தார். 

முதியவரிடம் விடை பெற்று அவர் வீடு திரும்பும் நேரத்தில் அவரை சந்தித்து பேசினேன். நம்மிடம் இருப்பது பலரிடம் இல்லாததை கண்டு தான் பல முறை வருத்தம் அடைந்திருப்பதாக கூறிய அவர், ஆதரவற்ற நிலையில் இருக்கும் இது போன்றவர்களுக்கு தன்னால் முடிந்த உதவியை இவ்வாறு செய்வதன் மூலம் திருப்தி அடைவதாக தெரிவித்தார். 

தன் பெற்றோர் தரும் பணத்தில் குறைந்த எண்ணிக்கையிலான நபர்களுக்கு மட்டுமே உதவி முடிவதாகவும், சிவில் சர்வீசஸ் தேர்வில் வெற்றி பெற்று, மத்திய அரசு பணியில் அமர்ந்த பின், தன் சொந்த சம்பாத்தியத்தில், அதிக நபர்களுக்கு உதவ முடியும் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் அவர் கூறினார். 

கடவுள் இருக்கிறார்.... இவர்களின் வடிவில் உலாவிக்கொண்டிருக்கிறார்!

ஆர்ப்பாட்டம் சிறிதும் இன்றி, புன்னகை புரியும் முகத்துடன், ஆதரவற்றோரிடன் துயர்துடைக்கும் அவர் பற்றி, எனக்கு தெரிந்த ஊடகவியலாளர்களிடம் தெரிவித்து, அவரைப் பற்றிய ‛ஸ்பெஷல் ஸ்டோரி’ வெளியிடலாம் என நான் நினைத்த போது, அதற்கு அவர் அன்புடன் மறுப்பு தெரிவித்துவிட்டார். 

தான் செய்யும் உதவி, தனக்கும் தன்னால் பலன் பெறும் நபர்களுக்கும் மட்டும் தெரிந்தால் போதும் எனக் கூறிய அவர், ‛‛தங்களைப் போன்றவர்களின் ஊக்குவிப்பு ஒன்றே போதும்; அதுவே எனக்கு கிடைக்கும் மிகப் பெரிய விருது. என் மனத் திருப்திக்காய் இதை செய்கிறேன். நான் செய்யும் உதவிகளை பார்த்து, என் நண்பர்கள் சிலரும் அவர்களால் முடிந்த உதவிகளை செய்ய துவங்கியுள்ளனர். அதுவே எனக்கு கிடைத்த பெரிய வெற்றி’’ என்றார்.

இப்படிப்பட்டவர் தன்னை ஊடக வெளிச்சத்திற்கு ஆளாக்கி கொள்ள விரும்பாவிட்டாலும், அன்பு, கருணை அதிலும் அடக்கம் என வாழும் இவரின் நற்செல்களையாவது பகிர்ந்து கொள்ள வேண்டும் என விரும்பினேன். அதன் விளைவே இந்த கட்டுரை.

இது, குறிப்பிட்ட அந்த இளம் பெண்ணுக்காக எழுதப்பட்ட கட்டுரை மட்டுமல்ல. அவரைப் போல், நம் கண்களுக்கு தெரியாமல், உலகின் பல பகுதிகளிலும் மனிதாபிமானத்துடன் ‛உதவி’ என்ற ஒற்றை சொல்லுக்கு உயிர் கொடுத்துக்கொண்டிருப்போருக்கு சமர்ப்பணம். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP