வீட்டில சொல்லிட்டு வாங்க விளம்பரம் தேடலாம்..

திமுக ஆட்சியில் இல்லாத போது வீதிக்கு 4 சமுக ஆர்வலர்கள் உருவாகி உலாவருவார்கள். இவர்கள் தமிழர்களுக்காக, விவசாயிகள், தலித்துகள், சுற்றுச்சூழலுக்காக போராடுபவர்கள். இவர்களை எதிர்ப்பவர்களை திமுக எதிர்க்கும்.
 | 

வீட்டில சொல்லிட்டு வாங்க விளம்பரம் தேடலாம்..

திமுக ஆட்சியில்  இல்லாத போது வீதிக்கு 4 சமுக ஆர்வலர்கள் உருவாகி உலாவருவார்கள். இவர்கள் தமிழர்களுக்காக, விவசாயிகள், தலித்துகள், சுற்றுச்சூழலுக்காக போராடுபவர்கள். இவர்களை எதிர்ப்பவர்களை திமுக எதிர்க்கும்.

இது போன்றவர்கள் கடந்த காலங்களில் ஜியோ, யூ டியூப் போன்ற குடிசை தொழில்கள் வளராத நிலையில் மிகவும் குறைவாகவும், வெளி உலகிற்கு தெரியாத நிலையிலும் இருந்தார்கள். முகேஷ் அம்பானி என்ற தமிழர் குறுந்தொழில் உரிமையாளர் ஜியோவை தொடங்கியதற்கு பின்னாலும், அதன் வழியே யூ டியூப், வாட்ஸ் அப், பேஸ்புக், டுவிட்டர் போன்ற இதர குடிசைத் தொழில்கள் வளர்ச்சி பெற்றதும் செல்போன் வைத்திருப்பவர்கள் எல்லாம் சமுக செயற்பாட்டாளராக மாறிவிட்டனர்.

இவர்களில் முகிலன், பாரிசாலன், பியூஷ்மானுஷ் போன்ற முழுநேர சமுக செயற்பாட்டாளர்கள் தவிர ஒன்று இரண்டு வீடியோக்கள் அப்லோடும் பகுதிநேர சமுக செயற்பாட்டாளர்கள் லட்சக்கணக்கிலும் வந்துவிட்டார்கள்.

உணர்ச்சி பொங்க பேசி அதை யூ டியூபில் அப்லோட் செய்து தமிழனாக இருப்பவர்களை பகிர செய்து பணம் பார்க்கபவர்கள் தான் இந்த சமுக செயற்பாட்டாளர்கள்.

இவர்களின் நடவடிக்கைக்கு உரம் போட்டது தூத்துக்குடி போராட்டம். அது சரியா, தவறா என்று விவாதத்திற்குள் செல்லவில்லை. ஆனால் போலீசார் நடத்திய துப்பாக்கி சூடு நம் சமூக செயற்பாட்டாளர்களை சுற்றி ஒளிவட்டத்தை ஏற்படுத்தி விட்டது.

இதன் காரணமாக அவர்கள் எதை செய்தாலும் தமிழர்களின் பாதுகாப்பிற்காக செய்வதாக மாறிவிட்டது.

இதற்கு கடந்த ஆண்டு பாரிசாலன் பரவ விட்ட வீடியோவே உதாரணம். கடந்த 27–5–2018 வேலுாரில் தன் பல்சர் பைக் சர்வீஸ் செய்வதற்காக அங்குள்ள ஷோருமில் விடுகிறார். மீண்டும் 10 நாள் கழித்து பைக் குறித்து பாரிசாலன் போனில் கேட்ட போது அது தயாராவிட்டதாகவும், ரூ. 7000 செலுத்த வேண்டும் என்று கூறியிருக்கின்றனர். போனில் வாக்குவாதம் ஏற்படவே, அவரை நேரில் வர சொல்லி உள்ளார்கள் ஷோரும் நிர்வாகத்தினர். அங்கு சென்ற பாரிசாலனுக்கும், ஷோரும் நிர்வாகத்திற்கும் வாக்குவாதம் ஏற்பட்டு பாரிசாலனை அவர்கள் தாக்கி விரட்டிவிட்டனர். தமிழர்களின் வாழ்வியல் போராளிக்கு ஏற்பட்ட இந்த நிலைக்கு பிறகு தமிழகம் அமைதிப் பூங்காவாக இருப்பதா என்று பாரிசாலனே பொங்கி எழுந்து பேஸ்புக் நேரலையில் தெலுங்கர்கள் நடத்தும் பைக் .ஷோரும் உரிமையாளர்கள் தமிழனை தாக்கி விட்டார்கள். நீங்கள் தான் ஆதரவு தர வேண்டும் என்று கூறுகிறார். பின்னர் அது தெலுங்கன் இல்லை, மார்வாடி பனியா கும்பல் என்று .வேற ஸ்டேட் பற்றி கூறுகிறார்.

இவரின் பைக் விவகாரம் 2 மாநில பிரச்னையாக மாற்றி தனக்கு ஆதரவு தளத்தை பரிசோதிக்கிறார். தமிழர்கள் தன் தளபதிக்காக நல்ல வேளை பொங்கி எழவில்லை.

கடந்த மாதங்களுக்கு முன்பு வரை யார் என்றே தெரியாத முகிலன் மாயமாகி, திரும்பி வந்து கற்பழிப்பு வழக்கில் உள்ளே போன பிறகு அவரை தெரியாவிட்டால் தமிழனே இல்லை என்ற சூழ்நிலை. இதனால் ஏற்கனவே வெளிச்சத்தில் இருந்தவர்கள் புகழ் மங்கவே மீண்டும் அதனை தங்கள் பக்கம் திருப்ப பல முயற்சிகளில் இறங்கி உள்ளனர்.

அதில் ஒன்று தான் சமீபத்தில் பியூஷ்மானுஷ் செய்தது. சமூக செயற்பாட்டளர்கள் உலகிலேயே முதல்முறையாக பொருளாதாரம் குறித்த சில கேள்விகளை கேட்பதற்காக சேலம் பாஜக அலுவலகத்திற்கு செல்கிறார். சேலம் பாஜக அலுவலகம் என்றால் அது கமலாலயம், அறிவாலயம் போன்ற கட்சி அலுவலகம் அல்ல, நம்ம ஊர்ல திமுக, அதிமுக, கம்யூனிஸ்ட்கள், திக அலுவலகங்கள் இருக்கிறதே அது போன்றது தான் அதுவும்,

இந்த அலுவலகத்திற்கு தான் பியூஷ்மானுஷ் பொருளாதாரம் குறித்த கேள்வி கேட்கப் போகிறார். கடைசியில் அது அடிதடியில் முடிந்து பாவம் பியூஷ் காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார். எல்லாம் வல்ல இறைவன் அவரை விரைவில் குணப்படுத்தட்டும். கேள்வி கேட்க சென்றவர் பேஸ்புக் லைவ்வில் ஒளிப்பரப்பி கொண்டே இதனை செய்தது அவர் விளம்பரம் தேடத்தான் இதை செய்தார் என்று வெட்ட வெளிச்சம் ஆக்கிவிட்டது. 

வந்தான் அடிச்சான் முடிஞ்சு போச்சு என்று பழையஎமலையூர் மம்பட்டியான் படத்தில் கவுண்டமணி சொல்லுவதை போல சம்பவத்திற்கு முடிவுரை எழுதாமல் அதன் பின்னரும் பலர் தங்களுக்கு தோன்றியதைஎல்லாம் வீடியோ எடுத்து போட்டு விளம்பரம் தேடிக் கொண்டு இருக்கிறார்கள்.

அட்டரஸ் இல்லாதவர்கள் இப்படி செய்கிறார்கள் என்று பார்த்தால் திமுக தலைவர் ஸ்டாலின் கூட கருத்து சுந்திரம் பறிபோனதாக கருத்து சொல்லி இருக்கிறார்கள்.

திமுக எவ்வாறு கருத்துசுந்திரத்தை பாதுகாத்தார்கள் என்பதற்கு சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழத்தில் கருணாநிதிக்கு டாக்டர் பட்டம் கொடுத்த 1974 ம் ஆண்டு மறைந்த மாணவர் உதயகுமார் தொடங்கி கவுன்சிலர் லீலாவதி, தா. கிருஷ்ணன் என்று ஒவ்வொருவர் வரலாறாக பார்த்தால் புரியும். எஸ்வி சேகர் பெண் பத்திரிக்கையாளர்  குறித்து கூறிய கருத்தை சுந்திரத்தின் வெளிப்பாடாக பார்க்காமல் சென்னை கமலாலயத்தில் போராட்டம் நடத்தியவர்கள் தான் நம் திமுகவினர்.

எது எப்படியோ பியூஸ் தாக்கப்பட்டது கருத்து சுந்திரத்திற்கு எதிரானது தான். இந்த சம்பவம் தமிழகத்தில் கருத்து சுந்திரத்தை பாதுகாக்க எவ்வளவு பேர் இருக்கிறார்கள் என்பதை நமக்கு எடுத்து காட்டிவிட்டது.

இனி திமுக அலுவலகத்திற்கு நேரில் சென்று உதயநிதிக்கு திமுகவில் இருக்கும் மற்ற இளைஞர்களை விட  மாநில இளைஞர் அணி செயலாளராக கூடுதல் தகுதி என்ன இருக்கு என்று கேட்கலாம். கருணாநிதியை கொல்லப்பார்க்கிறார் என்று தானே திமுகவை விட்டு வைகோவை நீக்கினீர்கள், இப்போது ஏன் கூட்டு சேர்ந்து இருக்கிறீர்கள் என்று கேட்கலாம்.

அதிமுக அலுவலகத்திற்கு நேரில் சென்று சசிகலா உதவியால் தானே எடப்பாடி முதல்வராக அமர்ந்தார். இப்போது ஏன் அவரை கட்சியில் இருந்து நீக்கினீர்கள் என்று கேட்கலாம். திமுக அலுவலகத்திற்கு சென்று பெரியாருக்கு சிலை வைத்த அளவிற்கு மணியம்மையாருக்கு சிலை வைக்கவில்லையே நீங்கள் ஆணாதிக்க வாதிதானே, பெண்ணிய விரோதி தானே என்று கேள்வி கேட்கலாம்.

இடதுசாரிகள் அலுவலகத்திற்கு சென்று திமுக, அதிமுக என்று மாறி மாறி கூட்டணி வைக்கிறீர்களே இவர்கள் முதலாளி வர்க்கமா, தொழிலாளி வர்க்கமா என கேட்கலாம். எவ்வளவு நாளைக்குதான் மற்றவர்கள் விளம்பரம் தேடுவதை வேடிக்கை பார்ப்பது. கருத்து சுந்திரத்தை பாதுகாக்க இத்தனை பேர் இருக்கும் நிலையில் நாமே களம் இறங்கிவிடலாம். ஒரு விஷயம் அவ்வாறு போகும் போது வீட்டில் சொல்லிவிட்டு வாருங்கள். சட்டைப்பையில் விசிட்டிங் கார்டு வைத்துக் கொள்ளுங்கள். இவை எல்லாம் அவசியம். பல அலுவலங்கள் முட்டு சந்துபோலதான் இருக்கிறதாம். 

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP