தமிழகத்தை தனித்தீவாக மாற்ற முயலும் தீயசக்திகள்: தீர்வுகள் இல்லாத போராட்டங்கள்

ஒரு குடும்பத்தை காப்பாற்ற ஒரு நபரை இழக்கலாம். ஒரு கிராமத்தை காப்பாற்ற ஒரு குடும்பத்தை இழக்கலாம். ஒரு தேசத்தை காப்பாற்ற ஒரு கிராமத்தை இழக்கலாம். அது தவறு இல்லை என்று மன்னருக்கு அறிவுரை கூறுவார் விஷ்ணுசர்மா.
 | 

தமிழகத்தை தனித்தீவாக மாற்ற முயலும் தீயசக்திகள்: தீர்வுகள் இல்லாத போராட்டங்கள்

ஒரு குடும்பத்தை காப்பாற்ற ஒரு நபரை இழக்கலாம். ஒரு கிராமத்தை காப்பாற்ற ஒரு குடும்பத்தை இழக்கலாம். ஒரு தேசத்தை காப்பாற்ற ஒரு கிராமத்தை இழக்கலாம். அது தவறு இல்லை என்று மன்னருக்கு அறிவுரை கூறுவார் விஷ்ணுசர்மா.

வளர்ச்சிக்கான இலக்கணம் இதுதான். குடும்பத்தின் நலனுக்காக இழக்கப்படும் நபரை, அல்லது குடும்பத்தை, கிராமத்தை கேட்டால் அனைவரும் ஏற்றுக்கொள்ளும்  நவசரங்களும் கொண்ட காரணங்கள் கூறுவார்கள். அதையெல்லாம் மீறி, சம்பந்தப்பட்ட பலனை பார்த்து அவர்களை கனத்த இதயத்தோடு இழக்கத்தான் வேண்டும். 

இன்றைக்கு தமிழகத்தின் உயிர் நாடியாக இருக்கும் மேட்டூர் அணை பல கிராமங்களையும், கோயில்களையும் தூர்த்து அமைத்தது தான். எல்லா சாலைகளும்  பல ஏக்கர் நிலங்களை விழுங்கித்தான் உருவாகி உள்ளன. கடந்த காலத்தில் வாழ்ந்தவர்கள் எதிர்காலத்தில் கிடைக்கும் வசதிக்காக அனைத்து கஷ்டங்களையும் பொறுத்துக் கொண்டார்கள். அல்லது அவர்கள் எதிர்ப்பு எடுபடாமல் போயிற்று. அன்று இத்தனை  கிராமங்களை அழித்து ஒரு அணை தேவையா என்று சிந்தனை செய்திருந்தால் இன்று மேட்டூர் அணையே உருவாகி இருக்காது.

அவ்வளவு ஏன் இன்று நாம் சுந்திரமாக வாழ போராடிய மக்கள் யார் என்றே நமக்கு தெரியாத நிலையில் உள்ளோம். தாமிரபட்டயமும் ஒரு சில ஆயிரம் ரூபாய் உதவித் தொகையும் தான் அவர்கள் குடும்பத்தை, சொந்த சுகங்களை இழந்ததற்கு சுதந்திர இந்தியா அத்தகையவர்களுக்கு கொடுத்த விலை. 

இன்றோ வளர்ச்சித் திட்டங்களின் பலனைப் பற்றி கவலைப் படாமல் கூச்சல் இடுகிறோம். மக்கள் வறுமையில் வாடினால் தான், கற்காலத்திற்கு இணையாக வாழ்ந்தால் தான் தாங்கள் வளர்ச்சி பெற முடியும் என்று நினைக்கும் ஒரு கும்பல் வளர்ச்சி திட்டங்களைப் கவலைப்படாமல் அரசியல் செய்வதற்காக அதனால் ஏற்படும் இழப்புகளை பற்றியே தம்பட்டம் அடிக்கிறார்கள்.அதை ஏற்று மக்களும் ஏதோ தமிழ்நாடே அழியப் போகிறது என்று அலறுகிறார்கள். 

தமிழகத்தின் பல ஆண்டுகள் தவிர்க்க முடியாத ஆளுமையாக இருந்த ஜெயலலிதா, கருணாநிதி போன்றவர்கள் தற்போது இல்லை;  அவர்கள் முடிவு செய்துவிட்டால்; எவ்விதமான எதிர்ப்பையும் குறித்து கவலைப் படாமல் திட்டத்தை நிறைவேற்றி முடிப்பார்கள். இதனால் தான் தமிழகம் மாநிலங்களுக்கான தரவரிசைப்பட்டியலில் ஒற்றை இலக்க இடத்தில் உள்ளது. அவர்கள் இல்லாத காரணத்தால் மட்டுமே தற்போது சிறு சிறு குழுக்கள் கூட, அதன் தலைவர் கவுன்சிலர் தேர்தலில் கூட வெற்றி பெற முடியாதவர்களாக உள்ளநிலையிலும் கூட மக்களை   வளர்ச்சி திட்டங்களுக்கு எதிராக திருப்பி விட முடிகிறது.

தமிழகத்தை தனித்தீவாக மாற்ற முயலும் தீயசக்திகள்: தீர்வுகள் இல்லாத போராட்டங்கள் 

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை தொடங்கி 24 ஆண்டுகள் கடந்து விட்டன.  ஆட்சியில் கருணாநிதியும், ஜெயலலிதாவும் தான் இருந்தனர். இந்த ஆலையை மூட வேண்டும் என்று தொடக்கத்தில் இருந்தே வற்புறுத்தியவர்கள் வைகோவும், பொன்ராதாகிருஷ்ணனும் தான். இவர்களில் வைகோ வீதியில் நடத்திய போராட்டங்குளுடன் கூடுதலாக, சட்ட ரீதியான போராட்டத்தையும் முன்னெடுத்தார். ஆனால் இவர்களுக்கு பெரும்பாலான மக்கள் ஆதரவு அளிக்க வில்லை. தற்போது ஏதோ சில குழுக்கள் திடீரென்று முளைத்து மிகப் பெரிய போராட்டங்கள் நடத்தி 13 பேரை காவு வாங்கியுள்ளனர். உண்மையில் அந்த ஆலை தீமைதான் செய்யும் என்றால் இந்த குழுக்கள் நீதிமன்றத்தை நாடி போராட்டத்தை தொடர்ந்து இருக்க வேண்டும். ஆனால் இவர்களுக்கு ஆலை இயங்குகிறதா, இல்லையா என்பதை விட போராட்டம், அதில் தாங்கள் குளிர்காய முடிகிறதா என்பது தான் முக்கியம். 

தமிழகத்தை தனித்தீவாக மாற்ற முயலும் தீயசக்திகள்: தீர்வுகள் இல்லாத போராட்டங்கள்

உலகெங்கிலும்  அணு உலைகள் திறப்பதும், மூடுவதுமாக இருந்து கொண்டுதான் இருக்கின்றன. மின்சாரத்தின் தேவை பல மடங்கு உயர்ந்துவிட்ட நிலையில் அனைத்து விதமான நிலையிலும் மின்சார உற்பத்தி செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. கூடங்குளம் போன்று வாய்ப்பு கிடைத்த பகுதிகளில் எல்லாம் அணு உலைகள் ஏற்படுத்தப்படுகின்றன. இது போன்ற தொழிற்சாலைகள் உருவாகும் போது அதன் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கவலைப்பட்டு, அரசையும், சம்பந்தப்பட்ட நிறுவனத்தையும் .நெருக்கி தேவையானவற்றை செயல்படுத்த வேண்டு்ம். அதை விடுத்து தொழிற்சாலையே வேண்டாம் என்று போராட்டம் நடத்தத்தான் ஆட்கள் தயாராக இருக்கிறார்கள். 
இதே போல தான் மீத்தேன், ஹெட்ரோகார்பன், கெயில் எரிவாயு குழாய் பதிப்பு, நியூட்டரினோ திட்டம் என்று அனைத்தையும் எதிர்த்து போராடுவது ஒரு அன்றாடக் கடமையாகிவிட்டது. 

நீட் உள்ளிட்ட அனைத்து தேர்வுகளையும் நீங்கள் எப்படி ஆங்கிலம் அல்லது இந்தியில் எழுதுகிறீர்களோ, அதன்படியே நாங்களும் ஆங்கிலம் அல்லது தமிழில் எழுதுவோம் என்று தீர்வு கிடைக்கும் வகையில் போராடி இருக்க வேண்டும். ஆனால் போராட்டம் தேர்வே வேண்டாம் என்று திசை திரும்பி விட்டது. 

தமிழகத்தை தனித்தீவாக மாற்ற முயலும் தீயசக்திகள்: தீர்வுகள் இல்லாத போராட்டங்கள்

தற்போது உயர் மின்அழுத்த கோபுரங்களை விவசாய நிலங்கள் மத்தியில் அமைப்பது தொடர்பாக மிகப் பெரிய போராட்டம் சேலம் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் நகரின் வெளியே சென்று பார்த்தால் அனைத்து ஊர்களிலும் விவசாய நிலங்கள் மத்தியில் தான் மின்பாதை செல்லும்.  அங்கெல்லாம் இது வரையில் எந்த விதமான பிரச்னையும் இல்லை. ஆனால் சிறு சிறு குழுக்கள்  இத்தகைய திட்டங்களை தற்போது மக்களை அழித்து ஒழிக்கும் திட்டங்கள் என பிரசாரம் செய்து அரசு மக்களுக்கு எதிராக சதி செய்வதாக பிரசாரங்களை மாற்றிவிட்டன. 
சத்தீஸ்கர் மாநிலத்தில் தொடங்கி அனைத்து மாநிலங்கள் வழியாக ஆந்திரமாநிலம் வரை பணிகள் முடிவு பெற்றுவிட்டன. அங்கு வாழும் மக்கள் எவரும் இத்திட்டத்திற்கு எந்த எதிர்ப்பும் காட்டவில்லை. ஆனால் எல்லாம் தெரிந்த தமிழர்கள் இந்த திட்டத்தை எதிர்க்கிறார்கள். பாதிப்பு ஏற்படும் என்பது உண்மையானால் மற்ற மாநிலத்தவர்கள் எதிர்க்காமல் வாய் மூடி மவுனமாக இருந்தது ஏன் என்ற கேள்விக்கு பதிலே இல்லை தமிழக போராளிகளிடமிருந்து. 

தமிழகத்தை தனித்தீவாக மாற்ற முயலும் தீயசக்திகள்: தீர்வுகள் இல்லாத போராட்டங்கள்

இது போன்ற எல்லா விவகாரத்திலும் வெளிப்படையாக போராடும் ஒருவர் வைகோ, அவருக்கு அரசியலை விட இதில் ஆர்வம் அதிகம் என்பது புரிகிறது. ஆனால் சிறு சிறு குழுக்கள் பெரும்பாலும் ஒரே மாதிரியான முறையில் எப்படி களம் இறங்குகி போராடுகின்றன. அவர்களை பின்புலத்தில் இருந்து இயக்குபவர்கள் யார் என்பது வெளிப்படையாக தெரியவில்லை. சாதாரணமாக ஒரு கட்சி கொடி கட்டவே சுமார் 20ரூபாய் செலவு பிடிக்கும் இந்த காலத்தில் இத்தனை பேரை திரட்டி பல நாள் போராட்டம் நடத்த அவர்களுக்கு எங்கிருந்து பணம் வருகிறது. சரி வெளிநாட்டு பணம் தான் என்றால் அவர்கள் நாட்டில் என்ன ஏழை எளியவர்கள் இல்லவே இல்லையா, அவன் அவன் நாட்டை வி்ட்டு நம் மக்கள் மீது அவர்களுக்கு என்ன அக்கறை. இப்படி கேள்வி எழுப்பிக்.கொண்டே போகலாம். 

அதையும் மீறி இவர்கள் அரசியலில் புகுந்து ஆட்சியை பிடித்து தமிழகத்தை உலகின் முதல் மாநிலமாக மாற்றலாமே என்றால்; அதற்கும் அவர்கள் தயாராக இல்லை. மொத்தத்தில் நாட்டில் குழப்பம் நிலவிக் கொண்டே இருக்க வேண்டும். ஆட்சியாளர்கள் மீது அவநம்பிக்கை, வாழ்க்கையில் அவநம்பிக்கை என்று அவநம்பிக்கையே மக்களின் ஆதாரமாக இருக்க வேண்டும். அப்போது தான் வளர்ச்சி தடைபடும். இதுதான் போராளிகள் என்ற பெயரில் இயங்கிவரும் போர்வையாளர்களின் ஒற்றை திட்டம். 

மக்களும் கூட வளர்ச்சி வேண்டுமா வேண்டாமா என்று முடிவு செய்து கொள்ள வேண்டும். வளர்ச்சி தேவை என்றால் அதற்கான விலையை கட்டாயம் கொடுத்தே தீர வேண்டும். அவ்வாறு இல்லை என்றால் புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே உள்ள மெய்வழிசாலையில் இன்று வரை மின்சாரமே இல்லாமல் வாழ்கிறார்கள். அவர்கள் போலவே நாமும் வாழ்வதற்கு கற்றுக் கொள்ளவேண்டு்ம். 

அரசாங்கம் கூட மக்களுக்காகாத்தான் வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்துகிறோம் என்பதை உணர வேண்டும். ஒரு திட்டத்தை செயல்படுத்தும் போது அதனால் ஏற்படும் பாதிப்பு, கிடைக்கும் பலன் ஆகியவற்றை மக்களிடையே தெளிவாகப் புரியும்படி உணர்த்த வேண்டும். பாதிப்பை மிகவும் குறைத்து திட்டத்தை அமல்படுத்த வேண்டும். கண்ணை மூடிக்கொண்டு கமிஷனை மட்டும் கணக்குபார்த்து திட்டத்தை அமல்படுத்துவது அரசாங்கத்தின் மீது மக்களுக்கு  நம்பிக்கை இழக்க செய்யும். அதே போல எல்லாவற்றையும் ஆய்வு செய்து திட்டத்தை அமல்படுத்திய பின்னர் அதை நிறுத்துவது, திட்டத்தின் பூர்வாங்க வேலைகளை மட்டும் செய்து அப்பாவி மக்களின் நிலத்தை பிடுங்கி கொண்டு பின்னர் அதை தொடங்காமல் விடுவது போன்ற நடவடிக்கைகளை அரசு கைவிட வேண்டும். 

சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மக்களின் பாதுகாப்பு முக்கியம் என்பதை கருத்தில் கொண்டே திட்டங்களை நிறைவேற்ற வேண்டும். குறைந்த முதலீடு அதிக லாபம் என்று எண்ணாமல், தானும் வாழ்ந்து , தொழிற்சாலைகள் அமைந்துள்ள இடத்தில் வாழும் மக்களும் வாழ்க்கை தரத்தில் உயர வேண்டும் என்று கருத வேண்டும். 

வளர்ச்சி திட்டம் என்பது பனைமரத்தை நட்டு வளர்ப்பது போன்றது. பனைமரத்தை நட்டவன் பார்த்து சாவான் என்பதை போல ஒரு திட்டம் நிறைவேறும் போது அதனால் பாதிக்கப்பட்ட தலைமுறையே பலன் அனுபவிக்காமல் கூட போய்விடலாம். ஆனால் அவனின் வாரிசுகளுக்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்க வேண்டும். இது அனைவரின் கூட்டு முயற்சியால் மட்டுமே நடக்கும். 

அதைவிடுத்து எல்லாவற்றையும் எதிர்த்துக் கொண்டே இருப்பது மக்களுக்கு நலன் தராது. அவ்வாறு தொடர்ந்து எதிர்க்கும் போது தொழில் தொடங்க நினைப்பவர்கள் வேறு மாநிலங்கள், ஏன் வேறு நாடுகளை நோக்கி கூட சென்று விடுவார்கள். அந்த காலகட்டத்தில் தமிழகம் ஒரு தனித் தீவாக மாறிவிடும் என்பது நிச்சயம். இதைத்தான் போராளிகளான போர்வையாளர்கள் உருவாக்க நினைக்கிறார்கள். மக்கள் விழித்துக்கொள்ள வேண்டும். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP