தமிழக அரசியலில் தலைவனுக்கான வெற்றிடம் இவரால் நிரப்பபடுகிறதா? 

இப்படி, ஒரு அரசியல்வாதிக்கு, குறிப்பாக தலைவனுக்கு உள்ள எல்லா குணாதிசயமும் திகழும் தினகரன் இன்னும் சில ஆண்டுகள் களத்தில் இருந்தால், தமிழக வெற்றிடம் தானே நிரம்பி விடுமாே என்ற நம்பிக்கை, தீவிர அரசியலை விரும்பும் பலரது மனதிலும் லேசாக துளிர்விடத்துவங்கியுள்ளது.
 | 

தமிழக அரசியலில் தலைவனுக்கான வெற்றிடம் இவரால் நிரப்பபடுகிறதா? 

தமிழக அரசியலில், 50 ஆண்டுகளுக்கும் மேலாக கருணாநிதியும், கிட்டதட்ட, 47 ஆண்டுகள் எம்ஜிஆர்., மற்றும் ஜெயலலிதாவும் கோலோச்சினர்.மக்களுக்கு மாற்று ஏற்பாடு செய்யத் தேவையான விஷயமே எழவில்லை. அ.தி.மு.க., தோன்றிய பின்னர், பெரும்பாலும் அதன் ஆட்சி தான் நடந்தது. ஜெயலலிதா மீது மக்களுக்கு கோபம் வந்த போது, தி.மு.க., ஆட்சியை பிடித்தது. 

ஜெயலலிதா இறந்த போது கருணாநிதி இருக்கிறார் என்று நினைக்க, அவர் உடல் நிலை இடம் கொடுக்கவில்லை. தொடர்ந்து அவரும் மறைந்த பின்னர், தமிழக மக்கள் யாரைத் தேர்வு செய்வது என்று புரியாத நிலையிலேயே உள்ளனர். அவர்களுக்கு இணையான ஆளுமை தற்போது இல்லை என்றே கூறலாம்.

 அதிமுகவில் பழனிசாமி, பன்னீர் செல்வம் என்று இரட்டை தலைமை இருந்தாலும், இருவரிடமும் தலைமைப் பண்பு இல்லை என்பதாகவே மக்கள் கருதுகின்றனர். கட்சியினரை சமாளிக்கிறார்களே தவிர்த்து, உத்தரவிடும் நிலையில் அவர்கள் இல்லை. 

ஸ்டாலின் நிலையும் அது தான். கருணாநிதி நினைவில்லாமல் மருத்துவமனையில் இருந்தபோது கூட, ஸ்டாலினால், தலைவராக செயல்பட முடியவில்லை. அதை கட்சித் தொண்டர்கள் ஏற்கமாட்டார்கள் என்பதையும் அறிந்திருந்தார். தற்போது, தி.மு.க.,வின் தலைவராக ஸ்டாலின் பொறுப்பேற்றிருந்தாலும், துரைமுருகனின் தயவில் தான் வண்டி ஓடுகிறது. 

மேலும், மருமகன் சபரீசனின் ஆலோசனைப்படித்தான் வேட்பாளர் தேர்வு, சுற்றுப்பயணங்கள் நடைபெறுவதாகவும் ஒரு பேச்சு. இப்படி அதிமுக, திமுகவில் சரியான தலைமை உருவாகாததால், அரசியல் வெற்றிடம் பெரிதாக தெரிந்தது. ஆனால் அதே நேரத்தில், அதிமுகவில் ஏற்பட்ட பிளவுக்குப்பின், சிறிய புள்ளியாக தொடங்கி கொஞ்சம் கொஞ்சமாக டிவிவி தினகரன் தலைவராக உருவாகி வருகிறார்.

ஜெயலலிதா மறைவு வரை, பின்னணியில் மட்டுமே செயல்பட்ட தினகரன், அதன் பின்னர் மீண்டும் நேரடியாக அரசியலில் களம் இறங்கினார். அவருடன் வழக்குகளும் சேர்ந்தே வெளிப்பட்டது.  ஆனாலும் அதற்காக பதட்டப்படாமல், கத்தி கூச்சல் போடாமல், அது வேறு பாதை என்பதைப் போல தன் அரசியல் பயணத்தை தொடர்ந்து நடத்துகிறார். 

ஆர்கே நகர் இடைத் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக களம் இறங்கி, அதிமுக, திமுகவை பின்னால் தள்ளி வெற்றி பெற்றதன் மூலம், மக்களும் இவரிடம் ஏதோ எதிர்பார்க்கிறார்கள் என்பது தெரிகிறது. இத்தனைக்கும், புதிய சின்னம், அதிமுக முழுமையாக கைவிட்ட நிலை, அனைத்கட்சிகளும் பணம் கொடுத்து வாக்காளர்களை கவரும் சூழ்நிலை என தோல்விக்கான எல்லா அம்மசங்களும் குறையாத நிலையில் டிடிவி வெறறி .பெற்றார் என்றால், அவர் அரசியலை எவ்வளவு புரிந்து கொண்டு இருக்கிறார் என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடியும்.

மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்கிறார். அங்கெல்லாம் மக்கள் கூடுகிறார்கள். எந்த இடத்திலும் தினகரன் மீது ஆத்திரப்படும் அளவிற்கு இல்லை. எந்த பதவியிலும் இல்லாத நிலையில் கூட இவரை நம்பி நிர்வாகிகள் நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்கிறார்கள். 

பணம் கொடுத்தால் எல்லாம் நடக்கும் என்று ஒற்றை வரியில் இந்த சம்பவத்தை ஒதுக்கிவிட்டு கடந்து செல்ல முடியாது. அமமுக என்று தற்காலிக கட்சியை தொடங்கி, மாநிலம் முழுவதும் அதனை கட்டுக் கோப்பாக கொண்டு செல்வது தினகரன் திறமையை காட்டும். 

கருணாநிதி தவிர்த்து அனைத்து அரசியல் தலைவர்களும் ஆத்திரப்படும் ஒரு விஷயம் பத்திரிக்கையாளர் சந்திப்பு. ஜெயலலிதா, பத்திரிக்கையாளர்களை சந்திப்பதை தவிர்த்துவிடுவார். கருணாநிதிக்கு போலி பத்திரிக்கையாளர் சந்திப்பும், நிலைய நிருபர்களின் கேள்விக்கு மட்டும் பதில் சொல்வதும் கைவந்த கலை. 

எதிர்த்து கேள்வி கேட்கும் நிருபர்கள், பின்னர் அந்த பதவியில் இருப்பது கேள்விக்குறி. மற்றவர்களை பற்றி சொல்ல வேண்டாம், துா... தொடங்கி, சமீபத்தில் நீதானே இழுபறி அப்படின்ணு போட்ட, உனக்கு தான் முதல் பதில் என்பது வரை பலவிதங்களில் ஆத்திரம் வெளிப்படும். 

பல நேரம் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பே முடிவுக்கு வரும். ஆனால், தினகரன் பாணி வேறு விதமானது ஆத்திரமூட்டும் கேள்வி என்றாலும், நிரந்தர புன்னகையுடன் பதில் இருக்கும். நாங்களே சின்ன கட்சி எங்களிடம் வந்து கேட்கிறீங்க, என்று நக்கல் துள்ளும். எந்த கேள்விக்கும், பாஸ் என்ற பதில் இல்லாமல், எல்லாவற்றிக்கும் ஒரு பதில். 

எத்தனை குற்றச்சாட்டுகள், வழக்குகளை சந்தித்தாலும், தினகரனின் முகத்தில் சிறு பதற்றத்தையும் பார்க்க முடிவதில்லை. பத்திரிக்கையாளர்களை சந்திக்க மறுக்காத அவர், நேரலை நிகழ்ச்சிகளில் கூட மிக தைரியமாக தன் மனதில் பட்டதை சிரித்துக்கொண்டே, வெளிப்படுத்தியவர் தான் தினகரன். 

இப்படி, ஒரு அரசியல்வாதிக்கு, குறிப்பாக தலைவனுக்கு உள்ள எல்லா குணாதிசயமும் பெற்றுள்ள தினகரன், இன்னும் சில ஆண்டுகள் களத்தில் இருந்தால், தமிழக அரசியலில் தலைவனுக்கான  வெற்றிடம் தானே நிரம்பி விடும் என்ற நம்பிக்கை, தீவிர அரசியலை விரும்பும் பலரது மனதிலும் லேசாக துளிர்விடத்துவங்கியுள்ளது.  

எனினும், அவர் தலைவர் ஆவதும், ஆகாததும் மக்கள் கையியில் தான் உள்ளது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP