கண்விழிக்குமா கல்வித்துறை..?

கண்விழிக்குமா கல்வித்துறை..? சம்பந்தப்பட்ட மாணவர்களுக்கு செலுத்த வேண்டிய கல்விக் கட்டணத்தையும் அரசு பள்ளி நிர்வாகத்திற்கு தருவதில்லை இதனால் அவர்கள் இந்த சட்டத்தை அமல்படுத்த விரும்புவதில்லை..
 | 

கண்விழிக்குமா கல்வித்துறை..?

மருத்துவம், கல்வி ஆகியகியவை மனிதகுலம் வாழ்வதற்காக தோன்றிவை. இதனால் தான் பணம், மனமும் கொண்டவர்கள் இந்த இரு துறைகளிலும் தங்கள் பங்களிப்பை செலுத்தினார்கள். மருத்துவமனைகள் அமைக்க இடங்களை தானம் கொடுத்தார்கள். தொட்டால் தீட்டு என்று சொல்லுகிற பிராமணர், குறிப்பாக பிராமண பெண்கள் பட்டுத் துணியை கையில் போட்டு எல்லா ஜாதிக்காரர்களுக்கும் வைத்தியம் பார்த்தார்கள். முடிதிருத்தும் சமுதாயத்தை சேர்ந்தவர்கள் தான் பிரசவம் உள்ளிட்ட அனைத்து சிகிச்சைகளும் அளித்தார்கள். அதனால் தான் அவர்கள் இன்றளவும் மருத்துவசமுதாயத்தை சேர்ந்தவர்கள் என்று அழைக்கப்பட்டனர். 

கல்வியில் சிறந்தவர்கள் தங்கள் வீட்டு திண்ணையையே கல்விக் கூடமாக மாற்றி கல்வி வழங்கினார்கள். இதில் நகரத்தார் பங்கு அதிகம். பொன்னமராவதி செந்தமிழ் கல்லுாரி போன்றவை நகரத்தார் சமுதாயத்தின் கல்வித்தொண்டுக்கு சான்று. அதே போல கிறிஸ்தவ சமுதாயமும் கல்வித்தொண்டில் பெரும்பங்காற்றியது. இன்னமும் சொல்ல போனால் கிறிஸ்தவர்கள் நடத்திய பள்ளிக் கூடங்கள் தான் கல்விக்கு மட்டும் அல்லாமல் ஒழுக்கத்திற்கும் எடுத்துக்காட்டாக விளங்கியது. இதைத் தவிர உடல் வலிமை தேவைப்படும் சமுதாயங்கள் உடற்பயிற்சி, சிலம்பம் போன்றவைகள் கற்றுக் கொடுக்கும் பயிற்சி கூடங்கள் அமைத்தன. அவற்றிக்கு பள்ளிக்கூடம் என்று பெயர் இருந்தது. 

இப்படி மருத்துவத்தையும், கல்வியையும் கண்களாக போன்றிய சமுதாயத்தில் இவை இரண்டுமே இன்று விலைமதிப்பற்ற பொருளாகிவிட்டது. இதனை ஏற்று நடத்த வேண்டிய அரசு பெரும்பாலும் தனியாரை ஊக்குவித்தது. சேவைக்காக இந்த துறையில் இடம் பெற்றவர்கள் வெளியேறி,ஒரு முறை முதலீடு ஓகோ என்று லாபம் என பல கல்வி மருத்துவ வியாபாரிகள் களம் இறங்கிவிட்டார்கள். தங்கள் நடத்துத் தெருவுக்கு வந்தாலும் பரவாயில்லை எங்க தாத்தா தொடங்கிய பள்ளியை மூட மாட்டேன் என்று வைராக்கியமாக வாழ்ந்தவர்கள் இருந்த இடத்தில் பொறியியல் கல்லுாரியில் மாணவர்கள் சேர்க்கை இல்லையா, அவற்றை விற்க விளம்பரம் கொடுக்கும் அளவிற்கு தரம் தாழ்ந்தவர்கள் வந்து விட்டார்கள். 

சமுதாயத்தில் தான் இந்த மாற்றம் என்றால் அதை கவனிக்கும் கல்வித்துறையும் பல விஷயங்களில் தன் கண்களை மூடிக் கொண்டு விட்டது. அதில் ஒன்று தான் கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தில் மாணவர் சேர்க்கை. வாய்ப்பு மறுக்கப்பட்ட, குறைந்த வருமானம் ஈட்டுவோரின் குழந்தைகளுக்கு தனியார் மற்றும் சுயநிதி மெட்ரிக் பள்ளிகளில் 25 சதவீத்ம இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இதில் எல்கேஜி, 6ம் வகுப்பு போன்ற தொடக்க நிலை வகுப்புகளில் எவ்விதமான கட்டணமும் இல்லாமல் மாணவர்கள் சேர்த்துக் கொள்ளப்படுகிறார்கள். சிறுபான்மையினர் நடத்தும் கல்வி நிறுவனங்களுக்கு இந்த சட்டம் பொருந்தாது என்பது வேறு விஷயம்.

மற்ற பள்ளிகள் அரசு சொல்லும் விதிமுறைபடி மாணவர்கள் சேர்க்கை வழங்குவதில்லை. ஒவ்வொரு தனியார் பள்ளிக்கும் அரசு ஒரு கட்டணம் நிர்ணயம் செய்துள்ளது. அதன்படி யாரும் மாணவ, மாணவிகளை சேர்ப்பதில்லை. ஏதேனும் ஒருகாரணம் சொல்லி கட்டணத்தை உயர்த்திவிடுகிறார்கள். அதற்கு அவர்கள் ரசீது கூட கொடுப்பதில்லை. ஆனாலும் சீட்டு கொடுத்ததே பெரிது என்ற நினைப்பில் உள்ள பெற்றோர் அதைப் பற்றியெல்லாம் கவலைப்படுவதில்லை. அனைத்து மாணவர்களுக்கும் இப்படிப்பட்ட நிலை என்றால் க.க.உரிமை சட்டத்தில் சேரும் மாணவர்களுக்கு மட்டும் விதிமுறையா அமலாகும். இங்கு அரசு செலுத்தும் கட்டணத்திற்கும், பள்ளி நிர்ணயம் செய்துள்ள கட்டணத்திற்கும் இடையே உள்ள வேறுபாட்டை பெற்றோர் செலுத்த வேண்டும். 

இதுவே அதிகபட்சம் 10 ஆயிரம் ரூபாய் வரை வருகிறது. ஆனாலும் தனியார் பள்ளியில் படிக்கும் ஆசையில் பெற்றோர் மிகுந்த சிரமத்துடன் இதை செலுத்துகிறார்கள். 

இதை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டிய கல்வித்துறையோ, கண்களை மூடிக் கொள்கிறது. மேலும் சம்பந்தப்பட்ட மாணவர்களுக்கு செலுத்த வேண்டிய கல்விக் கட்டணத்தையும் அரசு பள்ளி நிர்வாகத்திற்கு தருவதில்லை இதனால் அவர்கள் இந்த சட்டத்தை அமல்படுத்த விரும்புவதில்லை.. கிராமப்புறங்களில் மாணவர்கள் சேர்க்கை குறைந்த பள்ளிகள் இந்த திட்டத்திற்கு ஆர்வம் காட்டுகிறார்கள். 

இந்த திட்டம் இல்லாவிட்டால் தங்கள் பிள்ளைகளை அரசு பள்ளியில் சேர்க்கும் பெற்றோர் ஆசை வார்த்தை கூறி தனியார் பள்ளிகளில் வீழ்த்தப்படுகிறார்கள். உண்மையை தெரிந்து இந்த திட்டத்தில் தங்கள் பிள்ளைகளை சேர்க்க முன்வராவிட்டால், ஒரு கட்டத்தில் இந்த திட்டத்திற்கு வரவேற்பு இல்லை என்று அரசு இழுத்து மூடிவிடும். அந்த நிலை ஏற்படும் முன்பே கல்வித்துறை கண்விழித்து திட்டத்தை சரியான படி அமல்படுத்த முன் வர வேண்டும். மேலும் மாணவர்களுக்குவழங்க வேண்டிய கல்வி கட்டணத்தை நிலுவை வைக்காமல் செலுத்த முன்வர வேண்டும். இது தலைமுறைகளுக்கு செய்யும் சேவையாக அமையும். 
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP