இழவு வீட்டுக்காரனின் பொய் அழுகை போன்றதா கோர்ட் தீர்ப்புகள்?

இப்படி எடுத்தேன் கவிழ்த்தேன் என்று நீதிபதிகள் கருத்து சொல்வதுதான் காரணம். அதை விடுத்து நன்கு ஆய்வு செய்து தீர்ப்பளிக்க வேண்டும். அவ்வாறு அளித்த தீர்ப்பில் உறுதியாக இருந்து அதனை அமல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிபதிகள் முடிவுக்கு வந்தால் நல்லது. அவ்வாறு இல்லாவிட்டால் சாவு வீட்டில் சொந்தக்காரன் வரும் போது அழுவது, அதன் பின்னர் டீ, காப்பி சாப்பிட்டு சந்தோஷமாக அடுத்த சொந்தக்காரனை எதிர்பார்த்து அழ காத்திருப்பது போன்று தான் கோர்ட் நடவடிக்கைளும் இருக்கும்.
 | 

இழவு வீட்டுக்காரனின் பொய் அழுகை போன்றதா கோர்ட் தீர்ப்புகள்?

அண்ணாதுரை ஆட்சியில் அறிமுகம் செய்யப்பட்டு, 2003ம் ஆண்டு வரை தமிழகத்தின் சுப்ரபாதமாக ஒலித்தது,  ஊட்டிக்கு போகலாம் உல்லாசமாக இருக்கலாம். விழுந்தால் வீட்டிற்கு, விழாவிட்டால் நாட்டிற்கு என்பது தான். லாட்டரி சீட்டு விற்பனையாளர்கள் தான், தமிழனை தட்டி எழுப்புவார்கள். அதிலும் மாற்றுத்திறனாளிகள், கல்வியறிவு இல்லாதவர்கள் என்ற அடித்தட்டில் இருந்த லட்சக்கணக்கானவர்களுக்கு வேலை வாய்ப்பை வழங்கியது இந்த லாட்டரி சீட்டு விற்பனை.

வேலை செய்தவர்களை விட பல லட்சக்கணக்கானவர்கள் லாட்டரியில் தெருவில் நின்றதால் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா 2003 ஜனவரி 8ம் தேதி அன்று ஒரே நாளில் அனைத்து வகை லாட்டரி சீட்டுகளை விற்கவும் தடைவிதித்தார். பல போராட்டங்கள், வழக்குகள் இந்த தடையை ஆட்டவோ அசைக்கவோ முடியவில்லை. இது அரசு முடிவு எடுத்து அமல்படுத்தியது.

கடந்த ஜனவரி 1ம் தேதி முதல் பிளாஸ்டிக் தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டதும் இப்படித்தான். இப்போது கூட திருட்டுதனமாகத்தான் பிளாஸ்டிக் பயன்படுத்தப்படுகிறதே தவிர்த்து நேரடியாக அதன் பயன்பாடு இல்லை. இதுவும் கூட அரசு முடிவு எடுத்து அமல்படுத்தியது தான்.

அதே நேரத்தில் இன்னொரு புறம் அரசு, ஏனோ தானோ என்று அமல்படுத்தும் திட்டங்களும் உள்ளன.

சாலை விபத்துகளில் முதலிடத்தில் தமிழகம் உள்ளது. அதில் டூவீலர் விபத்துகள் அதிகம். இதனால் ஐகோர்ட் ஹெல்மெட் அணிவது கட்டாயம் என்று உத்தரவிட்டது. ஆனால் இன்று வரை அதை போலீஸ் எந்தவிதத்தில் அமல்படுத்துகிறார்கள் என்பது அனைவருக்கும் நன்கு தெரியும். ஐகோர்ட் எந்த அளவிற்கு கெடுபிடி காட்டுகிறது, அரசு அதனை எப்படி சமாளிக்கிறது என்று தெரியும்.

இதற்கு அடுத்த விஷயம் பிளக்ஸ் பேனர் விவகாரம். 2017ம் ஆண்டு கோவையில் பேனர் விழுந்து சாப்ட் வேர் இன்ஜினியர் சாலை விபத்தில் பலியாகிறார். உடனே கோர்ட் ஆவேசம் அடைந்து பேனர்களை தடைவிதிக்க உத்தரவிடுகிறது. தமிழர்களும் பொங்கி எழுகிறார்கள். காலம் செல்ல செல்ல மீண்டும் தமிழகத்தில் பிளக்ஸ் கலாச்சாரம் மீண்டும் உச்சம் தொட்டது.

கடந்த 12ம் தேதி சென்னையில் சாலை நடுவே இருந்த பிளஸ் பேனர் விழுந்து அதனால் ஏற்பட்ட சாலை விபத்தில் சாப்ட்வேர் இன்ஜினியர் சுபஸ்ரீ பலியாகிறார். உடனே சென்னை ஐகோர்ட் தானே முன்வந்து வழக்கு பதிவு செய்கிறது. பேனர் வைக்க தடைவிதிக்கிறது. 

தன் கட்சிக்காரர் பேனர் வைத்தவர் என்பதால் அரசும் கூட அவரைத் தவிர்த்து லாரி ஓட்டியவரை கைது செய்கிறது. பேனர் அச்சடித்த நிறுவனத்திற்கு சீல் வைக்கிறது. ஆனால் பேனர் வைத்த அதிமுக பிரமுகரை மட்டும் தேடிக் கொண்டே இருக்கிறது. இதற்கும் ஒவ்வொரு முறை ஐகோர்ட்டில் இந்த வழக்கு விசாரணைக்கு வரும் போதும், அரசு ஏதோ ஒரு காரணத்தை  கூறுகிறது. அதை ஐகோர்ட் கேட்டு தலையாட்டி, இந்த பிடி கண்டனம் என்று காரியத்தை முடித்து விடுகிறது.

வழக்கின் தொடக்கத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு 5 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்று கோர்ட் உத்தரவிட்டது.

இதன் இடையே பிளக்ஸ் பேனர் அச்சடிப்பவர்கள் முதல்வரை நேரில் சந்தித்து மனுக் கொடுக்கிறார்கள். கோர்ட்டிலும் வழக்கு தொடுகிறார்கள். இந்த வழக்கில் கருத்து சொன்ன கோர்ட் பேனர் அச்சடிப்பது சட்டவிரோதம் அல்ல; சட்ட விரேதமாக பேனர் அடிப்பது தான் குற்றம் என்று கூறியிருக்கிறது. அதாவது தடை விதித்த கோர்ட் தடுமாறத் தொடங்கி இருப்பதை தான் இது காட்டுகிறது. இனி வரும் காலத்தில் பேனர் வைத்துக் கொள்ளலாம் ஆனால் இப்படி இப்படி விதிமுறைகள் உள்ளன என்று உத்தரவு போட்டு விட்டு இந்த விவகாரத்தை ஏறக்கட்டிவிடும்.

கடந்த சில ஆண்டில் பொதுமக்களே கருவேல மரங்களை அகற்றினர். வறட்சிக்கு இது தான் காரணம் என்று மக்களே இயக்கமாக நடத்தினர். பின்னர் அரசும் கூட இதை கடைபிடிக்க தொடங்கியது. யாரோ ஒருவர் வழக்கு தொர்ந்ததும், இதற்கு இடைக்கால தடை விதித்தது கோர்ட். அதன் பின்னர் இது பற்றிய விவசாரணையே இல்லை.

இப்படி எடுத்தேன் கவிழ்த்தேன் என்று நீதிபதிகள் கருத்து சொல்வதுதான் காரணம். அதை விடுத்து நன்கு ஆய்வு செய்து தீர்ப்பளிக்க வேண்டும். அவ்வாறு அளித்த தீர்ப்பில் உறுதியாக இருந்து அதனை அமல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிபதிகள் முடிவுக்கு வந்தால் நல்லது. அவ்வாறு இல்லாவிட்டால் சாவு வீட்டில் சொந்தக்காரன் வரும் போது அழுவது, அதன் பின்னர் டீ, காப்பி சாப்பிட்டு சந்தோஷமாக அடுத்த சொந்தக்காரனை எதிர்பார்த்து அழ காத்திருப்பது போன்று தான் கோர்ட் நடவடிக்கைளும் இருக்கும்.  

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP