குழப்பமே... உன் பெயர்தான் கல்வித் துறையா?

இத்தனை அனுபவம் இருக்கும் ஆசிரியர்கள், ஒரு தகுதித்தேர்வில் கூட வெற்றி பெற முடியவில்லை என்றால், நம் கல்வித்துறை எவ்வளவு கேவலமாக இருக்கிறது என்பதை உணர்த்துகிறது. அதை சரி செய்ய வேண்டிய கடமை, ஆசிரியர்களுக்கு உள்ளது. அவர்களும் அதை செய்ய முன்வர வேண்டும்.
 | 

குழப்பமே... உன் பெயர்தான் கல்வித் துறையா?

கர்ம வீரர் காமராஜர், தமழிக முதல்வராக இருந்த போது, 10ம் வகுப்பு படித்தவர்கள் மட்டும் தான் அரசு வேலையில் இருக்க வேண்டும் என்று உத்தரவு வந்தது. இதனால், எம்எல்ஏ விடுதியில் பியூனாக இருந்த மண்ணாங்கட்டி வேலையை இழக்கும் சூழ்நிலை ஏற்பட்டது. கண்ணீரும், கம்பலையுமாக ஒரு எம்எல்ஏவிடம் சென்று, ஐயா இந்த வேலையை விட்டு விட்டுவிட்டால் தற்கொலை செய்து கொள்வதைவிட வேறு வழியே இல்லை என்று புரண்டு அழுதார் அந்த பியூன்.

அவர் கிண்டலாக, முதல்வர் அலுவலகத்திற்கு போன் போட்டு 3ம் வகுப்பு படித்தவர் முதல்வராக இருக்கும் போது, எழுதப்படிக்க தெரியாதவன் பியூனாக இருக்க கூடாதா? என்று கேள்வி எழுப்பு என்று கூறுகிறார். அதன்படியே மண்ணாங்கட்டி போன் போட்டு கேட்க, அடுத்த பத்து நிமிடத்தில், முதல்வர் அலுவலகத்தில் இருந்து அதிகாரிகள் எம்எல்ஏ விடுதிக்கு வந்து, சிறிது நேரத்திற்கு முன்பு போன் செய்தது யார் என்று கேட்டு, மண்ணாங்கட்டியை அழைத்து செல்கிறார்கள். 

அவருக்கு உயிரே இல்லை... ஏதோ கேட்க கூடாதை கேட்டு சிக்கலில் சிக்கிவிட்டோம் என்பது மட்டும் அவருக்கு தெரிகிறது. முதல்வர் காமராஜர் முன்பு மண்ணாங்கட்டி நிறுத்தப்படுகிறார். முதல்வரோ வாய்யா வா என்று அழைத்து என் கண்ணை திறந்துவிட்டாய், நீ வேலையில் தொடரலாம். இந்த உத்தரவுஇனிமேல் வேலைக்கு சேர்கிறவர்களுக்கு தான் பொருந்தும் என்று கூறி, அதன் படியே உத்தரவை மாற்றி பிறப்பிக்கிறார். இது வரலாறு. 

தற்போது கல்வித்துறையிலும், இதே போல ஒரு சிக்கல் ஏற்பட்டு இருக்கிறது. ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாத, 1500 பேரின் சம்பளம் நிறுத்தப்பட்டிருக்கிறது. அவர்கள் வேலையில் இருந்து அகற்றப்படலாம் என்ற நிலை. அவர்களில் சிலர், இந்த உத்தரவிற்கு எதிராக நீதிமன்றம் சென்றுள்ளனர். நீதிமன்றம், ஆசிரியர்களுக்கு சம்பளம் மட்டும் வழங்க உத்தரவு இட்டு, அவர்கள் தகுதித் தேர்வில் வெற்றி பெற வேண்டும் என்பதை கட்டாயமாக்கி உள்ளது. 

நேரடியாக பார்த்தால் இது சரி என்றால் கூட, சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் பணியில் சேரும் போது தகுதி கொண்டவர்களாகவே இருந்திருக்கிறார்கள். அதன் பின்னர், அவர்கள் ஒரே பாடபுத்தகத்தை மட்டும் படித்து உருப்போட்டு, நோட்ஸ் எடுத்து பாடம் நடத்தி வந்திருக்கின்றனர். 

இவர்கள் பணியில் சேர்ந்து பல ஆண்டுகள் கழித்து ஆசிரியர் தகுதித்தேர்வில் பாஸ் செய்ய வேண்டும் என்று கூறும் போது, அந்த சிலபஸ் உட்பட எதுவும் ஆசிரியர்களுக்கு தெரியாமல் போய்விடும் வாய்ப்பு உள்ளது. 9 ஆண்டுகள் கால அவகாசம் கொடுக்கப்பட்டது என்று கூறுவதும், அரசின் முடிவுக்கு வலுசேர்ப்பதாகத்தான் அமையுமே தவிர்த்து சம்பந்தப்பட்ட ஆசிரியர்களுக்கு தேர்வு எழுத அது உதவாது. 

காரணம் அவர்களால் கேள்விகளையே புரிந்து கொள்ள முடியாது. பல வீடுகளில் எனக்கு பத்தாம் வகுப்பில் தான் ஏபிசிடியே தெரிந்தது, ஆனால் என் குழந்தை 2ம் வகுப்பிலேயே இங்கிலீஸ் பேசுகிறான் என்று புகலாங்கிதம் அடைகிறார்களே, அந்த நிலை தான் இந்த ஆசிரியர்களுக்கும். 

எந்த துறையில் பணி நியமனம் நிறுத்தப்பட்டாலும், ஆசிரியர், மருத்துவ துறையில் மட்டும் பணி நியமனம் தொடர்ந்து நடக்கிறது. இதில், கல்வித்துறையில் பணி நியமனம் குழப்பமாகவே எப்போதும் நடக்கிறது. ஒரு கால கட்டத்தில், பிஎட் படித்த எஸ்சி பிரிவு ஆசிரியர்கள் இல்லாத நிலையில், அதே பிரிவை சேர்ந்த முதுகலை ஆசிரியர்கள் பணியில் சேர்ந்தனர். 

பின்னர் அவர்களுக்கு பதவி உயர்வு வழங்கும் போது, நாங்கள் அரசுக்கு உதவி செய்யத்தான் தகுதியை குறைத்தைக் கொண்டோம். அதனால் வேலைக்கு சேர்ந்த அன்று முதல் எங்கள் பதவி உயர்வு தேதி நிர்ணயம் செய்ய வேண்டும் என்று போராட்டம் நடத்தினர். 

1980களில் கிராப்ட் டீச்சர் என்று அழைக்கப்படுகிறவர்கள், பத்தாம் வகுப்பு கூட படிக்க வேண்டாம் என்று இருந்தது. அதற்கு பிறகு, இந்த விதிமுறை உருவாக்கினார்கள். அந்த காலகட்டத்தில் ஆசிரியரும், மாணவரும் ஒரே அறையில் தேர்வு எழுதி பத்தாம் வகுப்பு பாஸ் செய்தார்கள். 

ஆசிரியர் சங்க நிர்வாகிகளை தொடர்பு கொண்டால், ஆசிரியர்கள் பணி நியமனத்தில் எத்தனை குழப்பங்கள் உள்ளன என்பது தெளிவாகத் தெரியும். பணி நியமனத்தின் போது கோட்டை விட்டு விட்டு, இப்போது அவர்களை வீட்டுக்கு அனுப்புவது ஒரு அரசு செய்யும் முறையான செயல் அல்ல.

 வேண்டுமானால் அவர்களை பதவி இறக்கம் செய்யலாம். அவர்கள் பணி முடியும் வரை தொடக்கப்பள்ளி ஆசிரியர்களாக பணியாற்ற செய்யலாம். ஒரு சிலர் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர், வட்டார கல்வி அலுவலர் போன்ற பதவி உயர்வே வேண்டாம் என்று எழுதிக்கொடுத்துவிட்டு, சம்பளம் வாங்குவது போல, இவர்களையும் பதவி குறைப்பு செய்யலாம். 

தற்போது முதல் பணி நியமனம் செய்யும் போது, குறிப்பிட்ட விதிகளை அமல்படுத்தி நியமனம் செய்யலாம். அவர்கள் பெற்றோரின் ஆதரவுடன் வாழ்க்கையை நடத்துவதால், இந்த விதிமுறைகள் எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தப் போவதில்லை. 

ஆனால், தற்போது பணியில் உள்ளவர்கள் குடும்பத் தலைவர்கள் என்பதால், அவர்கள் குடும்பமே நடுத் தெருவுக்கு வந்து விடும். அதற்கு பதிலாக, சம்பந்தப்பட்ட ஆசிரியர்களை பதவி இறக்கம், அல்லது மாற்று வேலை வழங்கலாம், அது தான் தர்மம்.

அதே நேரத்தில் இத்தனை அனுபவம் இருக்கும் ஆசிரியர்கள், ஒரு தகுதித்தேர்வில் கூட வெற்றி பெற முடியவில்லை என்றால், நம் கல்வித்துறை எவ்வளவு கேவலமாக இருக்கிறது என்பதை உணர்த்துகிறது. அதை சரி செய்ய வேண்டிய கடமை, ஆசிரியர்களுக்கு உள்ளது. அவர்களும் அதை செய்ய முன்வர வேண்டும். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP