அங்கீகாரத்திற்காக அமையும் கூட்டணி...!

அங்கீகாரத்திற்காக அமையும் கூட்டணி...! - சிறப்புக் கட்டுரை
 | 

அங்கீகாரத்திற்காக அமையும் கூட்டணி...!

நீ அரிசி எடுத்துவா, நான் உமி எடுத்து வருகிறேன் ரெண்டு பேரும் ஊதி சாப்பிடலாம் என்பது தான் கூட்டணியின் அடிப்படை.

கூட்டணி கட்சிகள் இடையே இட ஒதுக்கீடு இப்படிதான் இருக்கும். உதாரணமாக ஒரு கட்சிக்கு 10 இடங்கள் ஒதுக்கப்படுகிறது என்றால் கட்டாயம் வெற்றி பெறும் இடங்கள் 5, தோல்வி பெறும் இடங்கள் 2, வெற்றி தோல்வி நிச்சயம் இல்லாத இடங்கள் 3 என்று இருக்கும்.  ஒரு ரூபாய் வைத்திருப்பவனை விட 99 ரூபாய் வைத்திருப்பவன் தான் ஒரு ரூபாய் பெற மிகுந்த ஆர்வத்துடன் இருப்பான் என்பதை போல வெற்றி பெறவே முடியாத அரசியல் கட்சிகளை விட வெற்றிக்கு மிக நெருக்கமாக இருக்கும் கட்சிகள் தான் எவன் தோளில் ஏறி ஆட்சியை பிடிக்கலாம் என்ற நினைப்பில் அலைவார்கள். தமிழகத்தில் அந்த நிலையில் இருப்பது திமுக, அதிமுக தான். இந்த 2 கட்சிகள் தான் வரும் தேர்தலில் ஆட்சியை பிடிக்கும் நிலையில் உள்ள கட்சிகள் என வெளிப்படையாக தெரிகிறது.

 இப்போதைய சூழலில் அதிமுக எடப்பாடி, தினகரன், திவாகரன் என்று பிரிந்து இருக்கிறது. மறைந்த முதல்வர் ஜெயலலிதா போகிற போக்கில் எல்லா கூட்டணி கட்சிகளையும் உதறிவிட்டு அதிமுகவை தனித்து விட்டு விட்டு மறைந்தார்.இன்னொரு புறம் கலைஞர் இல்லாத முதல் தேர்தல் .முழுமையான சட்டசபைத் தேர்தல் இது.

கடந்த சட்டசபைத் தேர்தலில் கலைஞர் உடல் நிலை சரியில்லாமலும், ஜெயலலிதா முழுமையான தேர்தல் பணியாற்றிய நிலையிலும் நடந்தது. அந்த தேர்தலில் அதிமுக , திமுக இடையே ஒரு சதவீதம் தான் ஓட்டு வித்தியாசம். மக்கள் நலக் கூட்டணி என்று ஒன்று உருவாகாவிட்டால் கடந்த தேர்தலில் முடிவு மாறியிருக்கும்.  ஆனால் இந்த தேர்தலில் தேமுதிகவில் விஜயகாந்த் பங்களிப்பும் குறைவாக இருக்கும். அதிமுகவின் தேர்தல் கால யுக்திகள் எப்படி இருக்கும் என்பதை ஆர்கே நகர் இடைத் தேர்தலே நன்கு காட்டி விட்டுவிட்டது.  இதே நிலைதான் திமுகவுக்கும், வெற்றி நிச்சயம் என்று இருந்த நிலையில் தினகரனிடம் அக்கட்சி தோற்றது  அதன் நிலைப்பாடும் ஒன்றும் பெரிதாக இல்லை என்பதைத் தான் காட்டுகிறது.

சட்டசபைத் தேர்தலுக்கு முன்னோட்டமாக இருப்பது 20 தொகுதிகளின் இடைத் தேர்தல், லோக்சபா தேர்தல். அதிமுக, திமுக, தேமுதிக ஆகிய கட்சிகளுக்கு இந்த தேர்தல் வழக்கமான ஒன்றுதான். பாஜ, காங்கிரஸ் தவிர்த்த மற்ற கட்சிகளுக்கு தேர்தல் கமிஷனின் அங்கீகாரத்தை தக்க வைத்துக் கொள்ள வேண்டிய கட்டாயம் உள்ளது . இந்தியா சுதந்திரம் பெற்ற காலத்தில் இருந்து உள்ள கம்யூனிஸ்ட் கட்சி கூட அகில இந்திய கட்சி என்ற அந்தஸ்தை இழந்து தற்போது கருணை காலத்தில் உள்ளது. மாநில கட்சி அந்தஸ்து பெற்றவை அதிமுக, திமுக, தேமுதிக ஆகியவை மட்டும் தான், மற்ற அனைவரும் அங்கீகாரம் இழந்து கருணை காலத்தில் தான் வாழ்கிறது. அவர்களுக்கு இந்த தேர்தல் அந்தஸ்து பிரச்னை. அங்கீகாரம் பெற வேண்டியதற்கான வாழ்வா சாவா பிரச்னை.

ஒரு கட்சி தேசிய கட்சியாக அங்கீகரிப்பட  மொத்த மக்களவை இடங்களில் 2 சதவீதம் (11 இடங்கள்) வெற்றி பெற வேண்டும். குறைந்தபட்சம் 3 வெவ்வேறு மாநிலங்களில் வெற்றி பெற வேண்டும். அல்லது மக்களவை, அல்லது சட்டப்பேரவை தேர்தலில் வெவ்வேறு மாநிலங்களில் 6 சதவீதம் ஓட்டு பெற்று 4 எம்பி தொகுதியில் வெற்றி பெற வேண்டும். இதை எதையும் பூர்த்தி செய்யாவிட்டால் 4 அல்லது 5 மாநிலங்களில் அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சியாக இருக்க வேண்டும். இந்த நிபந்தனையை பூர்த்தி செய்ய வேண்டிய அவசியம் இடது சாரி கட்சிகளுக்கு.

மற்ற கட்சிகளுக்கு அவ்வளவு  சிரமம் இல்லை. மாநில கட்சியாக அங்கீகாரம் பெற்றால் போதும், அதற்கு சட்டபேரவைத் தேர்தலில் 3 சதவீத இடங்களில் வெற்றி பெற வேண்டும். அல்லது தமிழகத்தில் உள்ள எம்பி தொகுதிகளில் குறைந்தது 2 இடங்களில் வெற்றி பெற வேண்டும். அல்லது லோக்சபா அல்லது சட்டசபைத் தேர்தலில் 6 சதவீத வாக்குகளுடன் ஒரு எம்பி அல்லது , 2 சட்டபைத் தொகுதியிமல் வெற்றி பெற வேண்டும். அல்லது 8 சதவீத ஓட்டுகள்  பெற வேண்டும்.

இதற்காகத்தான் மதிமுக , விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் திமுகவுடன் கூட்டணி வைத்துக் கொள்ள அலைகின்றன. அப்போது தான் ஒரு சில சீட்டுகள் வெற்றி பெற முடியும். மேலும் அங்கீகாரத்தை பெற முடியும்.  இதை அறிந்து கொண்டு தான் திமுக பொருளாளர் துரை முருகன்  கூட்டணி கட்சிகள், தோழமை கட்சிகள் என்று பேட்டி அளித்து குட்டையை லேசாக குழப்பினார்.  அதற்கு ஏற்ப 2011ம் ஆண்டு அதிமுக கூட்டணியில் பிரச்னை ஏற்பட்டதும் மதிமுக, கம்யூனிட்டுகள்  விஜயகாந்துடன் சேர்ந்து கொண்டதைப் போல தற்போது நிலைப்பாடு எடுக்காமல் துரைமுருகன் சொன்னதை ஸ்டாலின் சொல்லட்டும் என்று கதறின. அதற்கு ஏற்ப மதிமுகவின் கவர்னர்  மாளிகையை முற்றுகையிடும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்ததும் ‘ வெற்றி வெற்றி ’ என்று வைகோ கூச்சல் இடாத குறையாக திமுக கூட்டணிக்கு சம்மதம் கூறியதாக பேட்டியளித்தார்.

அதற்கும் ஆப்பு வைக்கும் நிலையில் முன்னாள் மத்திய அமைச்சர் ராஜா, திமுக கூட்டணியில் அனைத்து கட்சிகளும் உதய சூரியன் சின்னத்திலேயே போட்டியிட வேண்டும் என்றார். அவ்வாறு செய்தால் தேர்தல் கமிஷன் அங்கீகாரம் அம்போதான். இதனால் அதிர்ச்சி அடைந்த கட்சிகள் அவரின் சொந்த கருத்து என்று கூறி சமாளித்துள்ளன.  நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில் என்ன என்ன கொள்கைகள் புறப்பட்டு கூட்டணியை மாற்றிப் போடும் என்பதை காலம் தான் பதில் சொல்லும்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP