ஊழல்வாதிகளைத் தான் தேர்ந்தெடுக்கப் போகிறீர்களா?

குறிப்பாக, ஊழல்வாதியாக கருதும் வேட்பாளருக்கு ஓட்டளிப்பதை தவிர்தாலே, உங்கள் தேர்வு ஓரளவு சரியான தேர்வாக அமையும். இப்படி ஒவ்வொரு தேர்தலிலும் ஊழல்வாதிகளை தவிர்க்க துவங்கினால், இன்னும் சில காலங்களில், தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்கள் ஊழல் செய்யவே அஞ்சுவர். மறு வாய்ப்பு இல்லாமல் போகுமே என்ற பயத்திலேயே, அவர்கள் திருந்தவும் வாய்ப்புள்ளது.
 | 

 ஊழல்வாதிகளைத் தான் தேர்ந்தெடுக்கப் போகிறீர்களா?

உலக அரங்கில் ஜனநாயகத்தை கட்டிக் காக்கும் முக்கிய நாடான இந்தியாவில், அடுத்த மாதம் துவங்குகிறது ஜனநாயக திருவிழா. ஆம்... மக்களவை தேர்தல் 2019. மத்தியில் யார் ஆட்சி அமைக்க வேண்டும் என்பதை தீர்மானிக்கும் தேர்தல் என்பதை விட, நாம் வசிக்கும் தொகுதியின் பிரதிநிதி யார் என்பதை முடிவு செய்ய வேண்டிய தேர்தல் இது. 

அதாவது, நாம் வசிக்கும் தொகுதிக்கு என்ன தேவை? இங்கு என்னென்ன திட்டங்கள் நிறைவேற்றப்பட வேண்டும்? என்ன குறைகள் உள்ளன? வேறென்னவெல்லாம் செய்தால் தொகுதி மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்பதை உணர்ந்த நபராக அந்த பிரதிநிதி இருக்க வேண்டும். 

அனைத்தும் அறிந்தவராக இருப்பது மட்டுமின்றி, அவற்றை செயல்படுத்த முடிந்தவராகவும் இருக்க வேண்டும். எம்.பி.,க்களுக்கு ஒதுக்கப்படும் தொகுதி மேம்பாட்டு நிதியை சரிவர பயன்படுத்துவபவராகவும், மக்கள் தேவையை பூர்த்தி செய்யும் வகையிலான அடிப்படை திட்டங்களை நிறைவேற்றுபவராகவும் இருக்க வேண்டும். 

நாட்டின் கடைக்கோடி கிராம மக்களின் குரலும், தலைநகராம் டெல்லியில், பாராளுமன்றத்தில் ஒலிக்க வேண்டுமானால், இப்படிப்பட்ட ஒருவரைத் தான் தேர்ந்தெடுக்க வேண்டும்.

 ஊழல்வாதிகளைத் தான் தேர்ந்தெடுக்கப் போகிறீர்களா?

ஆனால், அப்படிப்பட்டவர்களை பொதுமக்கள் அல்லது வாக்காளர்கள் அங்கீகரிப்பதில்லை என்பதே நிதர்சனமான கசக்கும் உண்மையாக உள்ளது. ஊழல்வாதிகள், அரசியல்வாதிகளின் வாரிசுகள், பண முதலைகள், கல்வியை விற்கும் சீமான்கள், மருத்துவம் படித்து விட்டு அதன் மூலம் சேவை செய்யாமல், அரசியலில் களம் காண்பவர்கள் இப்படிப்பட்டவர்கள் தான் தேர்தல் களத்தில் இன்று பிரதான போட்டியாளர்கள். 

ஜாதி பெயரில் ஓர் கட்சி, மதத்தின் பெயரில் ஓர் கட்சி, மொழியின் பெயரிலும், இனத்தின் பெயரிலும் மக்களிடையே பிளவை ஏற்படுத்தும் மேலும் சில கட்சிகள். இவர்கள் தான் இந்தியாவை துாக்கி நிறுத்தப்போவதாக அறைகூவல் வேறு. 

கட்சியின் பெயரிலும், ஜாதி சங்கங்கள் பெயரிலும் கட்டப்பஞ்சாயத்து செய்தே பிளைப்பு நடத்தின, அதன் மூலம் வரும் பணத்தில், சொகுசு கார்களில் வலம் வந்து, உங்களை காக்க வந்த கடவுள் நான் என்ற வகையில், திரியும் அரசியல்வாதிகள் தான் அதிகம் பேர். 

மக்களிடம் பிடுங்கிய பணத்தில் ஒரு சிறு தொகையை அவர்களுக்கே கிள்ளி கொடுத்துவிட்டு, அதன் மூலம் ஆட்சியாளன் ஆகத்துடிப்பவர்கள் தான் இன்றைய அரசியல்வாதிகள். 

உண்மையில் மக்களுக்கு சேவையாற்ற வேண்டும் என்ற எண்ணத்துடன் அரசியலுக்கு வந்தவர்களும் வெகு சிலர் இருக்கத்தான் செய்கின்றனர். ஆனாலும், சாக்கடையில் கலக்கப்பட்ட பன்னீர் எப்படி அதன் வாசனையை இழக்கிறதோ, அப்படித்தான் அவர்களும் அடையாளம் தெரியாமல் போய்விடுகின்றனர். 

 ஊழல்வாதிகளைத் தான் தேர்ந்தெடுக்கப் போகிறீர்களா?

கடந்த, 2014 தேர்தலின் போது, தேர்தல் பிரசாரத்தின் முக்கிய அம்சமாக இருந்தது, 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல். நாடு முழுவதும் ஒரே பேச்சு. சினிமா படங்களில் கூட, வெறும் காற்றை விற்றே கோடிகளை குவித்தவர்கள் தான் நம் அரசியல்வாதிகள் என்ற வசனம் இடம் பெறும் அளவுக்கு இமாலய ஊழல் நடந்ததாக கூறப்பட்டது. 

அது தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு, திமுகவை சேர்ந்த, ஆ.ராஜா மற்றும் திமுக தலைவர் கருணாநிதி மகள் கனிமொழி ஆகியோர் சிறை சென்றனர். இந்த வழக்கு, நாட்டில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தியதற்கான முக்கிய காரணங்களில் ஒன்றாக திகழ்ந்தது. மக்கள் மனங்களில் ஊழல்வாதிகள் மீதான வெறுப்பை அப்போதைய தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்தின. 

வழக்கின் முடிவில், குற்றச்சாட்டுக்கு உரிய ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்படாததால், குற்றம் சாட்டப்பட்டவர்களை விடுவிப்பதாக நீதிமன்றம் அறிவித்துள்ளது. 

அதே போல் ஏர்செல் மாக்சிஸ் வழக்கில் கருணாநிதியின் குடும்ப வாரிசுகளான தயாநிதி மற்றும் கலாநிதி மாறன் மீது குற்றம் சாட்டப்பட்டது. இறுதியில், அந்த வழக்கும் புஸ் ஆனது. சட்டவிரோத முறையில் ஹை ஸ்பீட் இன்டர்நெட் வசதியுடைய  பி.எஸ்.என்.எல்., இணைப்பு வழங்கப்பட்டதாகவும் குற்றம்சாட்டப்படட்டது. 

எனினும் இந்த வழக்குகள் மீதான தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்யப்பட்டுள்ளது. அதற்கான விசாரணைகளும் அடுத்தடுத்து நடைபெறவுள்ளன. 

 ஊழல்வாதிகளைத் தான் தேர்ந்தெடுக்கப் போகிறீர்களா?

இந்த நிலையில் தான், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி மீது, ஐ.என்.எக்ஸ்., மீடியா வழக்கில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சட்டவிரோத பணப்பரிவர்த்தனை முறைகேட்டில், அவரது சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன. 

மேலும், ஏர்செல் - மேக்சிஸ் வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. சிதம்பரம் மற்றும் கார்த்தி ஆகியோர் கைதாகாமல் தப்புவதற்காக, நீதிமன்றத்தில் தடை உத்தரவு பெற்று வெளியில் சுற்றி வருகின்றனர். 

இப்படிப்பட்டவர்கள் தான், தற்போது, நீலகிரி, துாத்துக்குடி, மத்திய சென்னை, சிவகங்கை ஆகிய தொகுதிகளில் வேட்பாளர்களாக களம் இறங்கியுள்ளனர். 

இவர்கள் நால்வருமே மிகப் பெரிய சீமான்கள் தான். ராஜா மட்டும், நேரடியாக அரசியல் ஜாம்பவான் குடும்பத்திலிருந்து வராதவராக இருந்தாலும், அந்த குடும்பத்திற்கு தனிப்பட்ட முறையில் மிகவும் நெருக்கமானவர்.

இவர்கள் தேர்தலில் வெற்றி பெற்றால், அவர்களின் தொகுதியை திரும்பி பார்ப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளதா? ஒரு வேளை, இவர்களும், இவர்கள் சார்ந்திருக்கும் கட்சியும் தேர்தலில் வென்று, மத்தியில் ஆட்சியும் அமைத்து விட்டால், நாட்டின் நிலை என்ன ஆகும் என நினைத்துப் பாருங்கள். 

2ஜி போல் மீண்டும் ஓர் 5ஜி; பி.எஸ்.என்.எல்., மற்றும் ஏர்செல் மேக்சிஸ் போல் மீண்டும் ஓர் இமாலய ஊழல். இந்தப் திராவிடத்தின் பெயர் சொல்லி ஓர் குடும்பமும், அந்தப் பக்கம் தேசியம், மதச்சார்பின்மை என்ற பெயரில், மற்றொரு குடும்பமும் மட்டுமே மேலும் மேலும் செழிப்படையும். 

 ஊழல்வாதிகளைத் தான் தேர்ந்தெடுக்கப் போகிறீர்களா?

அப்புறம் எங்கிருந்து மக்களின் குரல் பார்லிமென்ட்டில் ஒலிப்பது. இவர்களுக்கு ஓட்டளித்த பாவத்திற்காக, மக்கள் தங்கள் குரல்வலைகளை தாங்களே நெரித்துக்கொள்ள வேண்டியது தான். அதாவது, மக்களின் தேவைகள் அங்கு பேசப்படாது என்பது அதன் பொருள். 

இது வெறும் மேற்சொன்ன இரு கட்சிகளுக்கு மட்டும் அல்ல, ஊழல் செய்யும் எந்த கட்சியை சேர்ந்த அரசியல்வாதிக்குமானது. எனவே, வாக்காளர்கள், ஓட்டளிக்கும் முன் மிக மிக சிந்தித்து வாக்களிக்க வேண்டும். 

திராவிடம், தேசியம், மாெழி, இனம், ஜாதி என பல காரணிகளைக் கூறி, மக்களை திசை திருப்பி, மூளைச் சலவை செய்ய முயலும் அரசியல்வாதிகளை புறக்கணிக்க வேண்டும். 

தங்கள் தொகுதி பிரச்னையை, தேவையை யார் டெல்லியில் குரல் உயர்த்தி பேசுவாரோ, மக்களை அடிக்கடி யார் சந்திப்பாரோ, மக்களோடு மக்களாக சாதாரண பிரஜையாக, மக்கள் பிரதிநிதியாக யார் இருப்பாரோ அவரை கண்டுபிடித்து, அந்த வேட்பாளருக்கு ஓட்டளிக்க வேண்டும். 

எளியவர் வேடம் போடும் நடிகர்களையும், அவர்களின் பிரதிநிதிகளையும் நம்பி ஏமாறவும் கூடாது. ஆளும் கட்சியாக இருந்தாலும் சரி, எதிர்க்கட்சியாக இருந்தாலும் சரி, சுயேட்சை வேட்பாளராக இருந்தாலும் சரி, மக்களில் ஒருவராய் இருப்பவருக்கு வாக்களிப்பதன் மூலமே, நாம் நம் ஜனநாயக கடமையை சரியாக செய்தவராக இருக்க முடியும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். 

குறிப்பாக, ஊழல்வாதியாக கருதும் வேட்பாளருக்கு ஓட்டளிப்பதை தவிர்தாலே, உங்கள் தேர்வு ஓரளவு சரியான தேர்வாக அமையும். இப்படி ஒவ்வொரு தேர்தலிலும் ஊழல்வாதிகளை தவிர்க்க துவங்கினால், இன்னும் சில காலங்களில், தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்கள் ஊழல் செய்யவே அஞ்சுவர். மறு வாய்ப்பு இல்லாமல் போகுமே என்ற பயத்திலேயே, அவர்கள் திருந்தவும் வாய்ப்புள்ளது. 

அல்லது, இவரை விட இவர் நல்லவர், இவரை விட இவர் நல்லவர் என்ற கணக்கில், நாளடைவில், ஓர் நாள் நல்லவர் மட்டுமே அரசியலுக்கு வரும் நிலையும் உருவாகலாம். 

newstm.in

இந்த கட்டுரையில் இடம் பெறும் கருத்துக்கள் அனைத்தும் கட்டுரையாளரின் சொந்த கருத்துக்களே!
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP