பேரறிஞர் அண்ணாவின் பொன்மொழிகள்!

தமிழ், ஆங்கிலம் இரண்டிலும் அனைவரையும் கவரும் சிறந்த பேச்சாளர், எழுத்தாளர்களே வியந்து பார்க்கும் எழுத்தாளர், கைதேர்ந்த நடிகர், தமிழக மக்களுக்காக பல்வேறு திட்டங்களை கொண்டு வந்த மக்கள் நாயகன், தமிழகத்தில் எண்ணற்ற தம்பிகளை உருவாக்கிய 'அண்ணா'.
 | 

அண்ணாவின் பொன்மொழிகள்!

தமிழ் திராவிட கழகத்தை தமிழகத்தில் விதைத்தவர், திராவிடக்கழகத்தின் முதல் பொதுச் செயலாளர், திராவிடக் கழகத்தில் இருந்து வந்த தமிழகத்தின் முதல் முதலமைச்சர், தமிழ், ஆங்கிலம் இரண்டிலும் அனைவரையும் கவரும் சிறந்த பேச்சாளர், எழுத்தாளர்களே வியந்து பார்க்கும் எழுத்தாளர், கைதேர்ந்த நடிகர், தமிழக மக்களுக்காக பல்வேறு திட்டங்களை கொண்டு வந்த மக்கள் நாயகன்,  எல்லாவற்றிக்கும் மேல் தமிழகத்தில் எண்ணற்ற தம்பிகளை உருவாக்கிய 'அண்ணா'. அவர் தான் நமது பேரறிஞர் அண்ணா. 

அவரது 51ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, அவர் மக்களுக்கும், தனது தம்பிகளும் எப்படி இருக்க வேண்டும் என வாழ்க்கைக்கு உதவும் பொன்மொழிகளின் தொகுப்பு இங்கே...

►  போட்டியும்,பொறாமையும், பொய் சிரிப்பும் நிறைந்த இவ்வுலகில் நமது பாதையில் நாம் நேராக நடந்து செல்ல நமக்கு துணையாக இருப்பது கல்வி மட்டுமே.

►  பகுத்தறிவைப் பயன்படுத்துவதில்லை என்றும் முடிவு செய்த பிறகு மனிதனிடம் வாதிடுவது..செத்துப்போன மனிதனுக்கு மருந்து ஊட்டுவதற்கு நிகராகும்.

►  எதிரிகள் தாக்கி தாக்கி தங்கள் வலுவை இழக்கட்டும்.. நீங்கள் தாங்கித் தாங்கி வலுவை பெற்றுக்கொள்ளுங்கள்.

►  சட்டம் ஒரு இருட்டறை; அதில் வக்கீலின் வாதம் ஒரு விளக்கு; அந்த பிரகாசமான விளக்கு ஏழைகளுக்கு கிடைப்பதில்லை.

அண்ணாவின் பொன்மொழிகள்!

►  அழகு ஒரு ஆபத்தான ஆயுதம்; அதனால் ஆளப்படுபவர்கள் ஆண்கள்; ஆள்பவர்கள் பெண்கள்.

►  அஞ்சா நெஞ்சம் படைத்த லட்சியவாதிகள் நாட்டிற்கு கிடைக்கக் கூடிய ஒப்பற்ற செல்வங்கள். ஏனெனில், பணம் வெறும் இரும்புப் பெட்டியில்தான் தூங்கும். ஆனால், இந்தச் செல்வங்களோ மக்களின் இதயப் பெட்டிகள் தோறும் நடமாடுவார்கள்.

►  விதியை நம்பி, மதியை பறிகொடுத்து, பகுத்தறிவற்ற மனிதர்களாக வாழ்வது மிக மிகக் கேடு.

►  புகழை நாம் தேடி சொல்லக்கூடாது; அதுதான் நம்மை தேடி வரவேண்டும்.

►  ஜாதிகள் இருந்தே ஆக வேண்டும் என்று எண்ணுபவர்கள் எவ்வழி உலகம் செல்கிறது என்பதை அறியாத ஏமாளிகள்.

►  பொது வாழ்வு புனிதமானது; உண்மையோடு விளங்கும் உயர் பண்பு தான் அதற்கு அடித்தளமானது.

►  சாதாரண மக்களை யார் வேண்டுமானாலும் ஏய்த்து விட முடியும் என்று நினைக்காதீர்கள். ஒரு சாமானியன் படிப்பறிவு இல்லாது இருக்கலாம் ஆனால் வளமான பொது அறிவு பெற்று இருக்கிறான். எது வெண்ணெய், எது சுண்ணாம்பு என்று வித்தியாசம் கண்டறிய அவனுக்கு தெரியும். 

அண்ணாவின் பொன்மொழிகள்!

►  சீமான்களில் சிலருக்குக் கூட சிற்சில சமயங்களில் ஏழையின் கண்ணீரைத் துடைக்க வேண்டும் என்கிற ஆசை வருவதுண்டு. ஆனால், அந்த ஆசை நிறைவேறுவதில்லை. காரணம், பிரபுக்களின் பட்டுத் துணிகளுக்கு ஏழையின் கண்ணீரைத் துடைக்கும் ஆற்றல் கிடையாது.

►  அறிவுப் பண்ணைக்குப் பணியாற்ற முன் வருபவர்களை நாடு வரவேற்பதில்லை. நையாண்டி செய்கிறது. மதிப்பளிப்பதில்லை. தொல்லை தருகிறது. எனினும் அந்த ஒரு சிலரால்தான் நாடு முன்னேறுகிறது.

►  பகலோனைக் கண்டதும் மலர்ந்திடும் பங்கஜத்தைப் (தாமரைப்) பட்டத்தரசனும்கூட சட்டமிட்டுத் தடுத்துவிட முடியாது. இதுபோலத்தான் உண்மைக் காதல் என்னும் உத்தம உணர்ச்சியை ஓராயிரம் பேர் முயன்றாலும் ஒரு நாளும் அழித்துவிட முடியாது.

►  வைரம் ஜொலிக்க வேண்டுமானால், சாணை பிடிக்கத்தான் வேண்டும். தங்கம் பிரகாசிக்க வேண்டுமானால் தணலில் காய்ச்சத்தான் வேண்டும். ஆம் அதைப்போல், நல்வாழ்வு பெற வேண்டுமானால் நாம் பகுத்தறிவுப் பாதையில் செல்லத்தான் வேண்டும்.

►  பல திறம்பட்ட கருத்துக்கள் உலவி ஒன்றோடொன்று போரிடும் தன்மை படைத்ததோர் போர்க்களம்தான் பேச்சு மேடை. அந்தக் களத்திலே பரிசும் உண்டு, பகையும் உண்டு.

►  கட்டுப்பாடும், ஒழுங்கும் கட்டாயம் நமக்குத் தேவை. இவை சாதாரணமானவை தான். ஆனால், இம்மாதிரி சாதாரண விஷயங்களைக் கொண்டுதான் ஒரு சமூகத்தை எடை போட முடியும்.

►  நமக்கென்ன என்று கூறும் சுயநலமிகளும், நம்மால் ஆகுமா என்று பேசும் தொடை நடுங்கிகளும், ஏன் வீண் வம்பு என்று சொல்லும் கோழைகளுமல்ல நாட்டுக்குத் தேவை. வீரர்கள் தேவை. உறுதிபடைத்த உள்ளங்கள் தேவை.

அண்ணாவின் பொன்மொழிகள்!

►  நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும்; இனி நடப்பவை நல்லவையாக இருக்கட்டும்.

►  பிறருக்கு தேவைப்படும் போது 'நல்லவர்களாக' தெரியும் நாம் தான், அவர்களது தேவைகள் முடிந்தவுடன் 'கெட்டவர்களாகி' விடுகின்றோம்.

►  எதையும் தாங்கும் இதயம் வேண்டும், மறப்போம்; மன்னிப்போம், கத்தியை தீட்டாதே; புத்தியைத் தீட்டு, எங்கிருந்தாலும் வாழ்க, ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம், மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு, மக்கள் தொண்டே மகேசன் தொண்டு என்ற பிரபலமான வரிகள் அண்ணாவினுடையதே..

இந்நாளில் அவரது பொன்மொழிகளை நினைவு கூர்ந்து வாழ்வில் சிறப்போமாக..

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP