மேன்மை மிகு கலைஞரின் 8 மேற்கோள்கள்!

"முடியுமா நம்மால் என்பது தோல்விக்கு முன்புவரும் தயக்கம். "முடித்தே தீருவோம்" என்பது வெற்றிக்கான தொடக்கம்."
 | 

மேன்மை மிகு கலைஞரின் 8 மேற்கோள்கள்!

அரசியலில் சாணக்கியராக விளங்கி இக்கால தமிழ் மக்களுக்கு அரசியலில் ஈடுபாடு வளர்வதற்கு பெரிதும் காரணமாக விளங்கியவர் கலைஞர் கருணாநிதி. அரசியல் மட்டுமல்லாமல் தமிழ் இலக்கியத்திற்கும் கலைகளுக்கும் பெரும் பங்காற்றினார் கலைஞர். தமிழ் சினிமா உலகிலும் இவரின் கதைகளும் வசனங்களும் தனித்துவம் வாய்ந்தது. இதுபோன்று பல துறைகளில் அவர் நமக்கு அளித்த பொக்கிஷங்கள் எண்ணிலடங்காதது. அந்தப் பொக்கிஷங்களில் இருந்து அவர் நம் வாழ்க்கைக்கு அளித்த சில மேற்கோள்கள் இதோ...

"முடியுமா நம்மால் என்பது தோல்விக்கு முன்புவரும் தயக்கம். "முடித்தே தீருவோம்" என்பது வெற்றிக்கான தொடக்கம்."

திருக்குவளை கிராமத்தில் ஓர் ஏழை குடும்பத்தில் பிறந்த கலைஞர் கருணாநிதி மனதில் எப்போதும் துணிவும் நம்பிக்கையும் கொண்டு வாழ்ந்து வந்ததால்தான் அவர் கால் பதித்த அனைத்து துறைகளிலும் வெற்றி கண்டார். "முடித்தே தீருவோம்" என்ற துணிவு இருந்ததால் தான் திராவிட முன்னேற்ற கழகம் என்ற ஒரு கட்சியை நிறுவி, இன்றும் என்றும் அதன் தாக்கம் தொடர வழிவகுத்தவர். 

"தோழமையின் உயிர் துடிப்பே துன்பத்தை பகிர்ந்து கொள்வதில்தான் இருக்கிறது."

இரு வெவ்வேறு கட்சிகளில் இருந்தாலும், வெவ்வேறு கொள்கைகளை பின்பற்றினாலும் கலைஞரும் - எம்.ஜி.ஆரும் சிறந்த நட்பிற்கு இலக்கணமாக விளங்கினார்கள். கட்சிகளில் போட்டி இருந்தாலும் தன் வாழ்வின் இன்ப துன்பங்களில் இருவரும் கலந்து கொண்டு தமிழக ரசியலில் ஆரோக்கியமாகப் போட்டியிட்டனர். தி.மு.க. ஆட்சியின் போது தான் எம்.ஜி.ஆர் நினைவகம் மேம்படுத்தப்பட்டது. மேலும் ஃபிலிம் சிட்டி மற்றும் மருத்துவ பல்கலைக்கழகதிற்கு எம்.ஜி.ஆர் பெயரை சூட்டியதே கலைஞர்தான்.

"சிரிக்கத் தெரிந்த மனிதன்தான் உலகத்தின் மனிதத் தன்மைகளை உணர்ந்தவன்."

வார்த்தை விளையாட்டுகள் மூலம் நகைச்சுவை கொண்டு வருவதில் கலைஞருக்கு நிகர் கலைஞரே. தனது உடல்நிலை நலிவடைந்து மருத்தவ சிகிச்சைக்கு மருத்துவரிடம் வந்தபோது கூட "மூச்சை விட்டு விட கூடாது என்றுதான் போராடுகிறேன்" என்று நகைச்சுவையாக பேசியதாக கூறப்படுகிறது. அவர் திரைக்கதை வசனங்களில் வரும் நகைச்சுவை சிரிக்க மட்டுமில்லை சிந்திக்கவும் வைத்தது என்பதில் சந்தேகமில்லை. சட்டப்பேரவைகளில் சிரிப்பலைகளை ஏற்படுத்துவதிலும் வல்லவர்.

"துணிவிருந்தால் துக்கமில்லை. துணிவில்லாதவனுக்கு தூக்கமில்லை."

இதுவும் அவரின் தன்னம்பிக்கையையும் தைரியத்தையும் காட்டும் அவரது மேற்கோள்தான். தன் அரசியல் வரலாற்றில்தான் நின்ற தொகுதியில் தோற்றதாக சரித்திரமே இல்லை. அவர் துக்கமில்லாமல் துணிவோடு வெற்றித் தலைவனாக வலம் வந்தார் என்பதற்கு இந்த ஒரு செய்தி போதுமே.

"குச்சியை குச்சியால் சந்திக்க வேண்டும், கூர்வாளை கூர்வாளால்தான் சந்திக்க வேண்டும்."  

இந்தித் திணிப்பை எதிர்த்து கலைஞர் போராடிய போராட்டங்கள் நமக்கு இந்த உண்மையை விளங்க வைக்கும். "மொழிப் போராட்டம்  எங்கள் பண்பாட்டை பாதுகாக்க, இது எமது மக்களின் தன்மானம் மற்றும் எங்களது கட்சியின் அரசியல் கொள்கை. மேலும் இந்தி என்பது உணவு விடுதியிலிருந்து எடுத்துச் செல்லும் உணவு, ஆங்கிலம் என்பது ஒருவர் சொல்ல அதன்படி சமைக்கப்பட்ட உணவு, தமிழ் என்பது குடும்பத் தேவையறிந்து, விருப்பமறிந்து, ஊட்டமளிக்கும் தாயிடமிருந்து பெறப்பட்ட உணவு என்று கூறி அமைதியாக அதேசமயம் ஆழமாகவும் தனது கருத்துகளை முன்வைத்தார்.

"வாழும்போது மனிதர்களை பிரித்து வைக்கும் சாதிவெறி, அவர்கள் இறந்தபிறகாவது தணிந்து விடுகிறதா?"

சாதிவெறி பிடித்து சண்டையிட்டு மாண்ட தமிழர்களை கண்டு வேதனை கொண்ட கலைஞர் தன் மனக்குமுறலை நமக்கு பாடமாக்கினார். சாதியின் பின்னல் சென்று நாம் நம்மை அளித்து விடக் கூடாது என்பதை முழங்குவதில் திராவிட கட்சி பெரிதும் பாடுபட்டது.

"அடிமையாக இருப்பவன் தனக்குக் கீழே ஒரு அடிமை இருக்க வேண்டுமென்று கருதினால், உரிமைகளைப் பற்றிப் பேச அவனுக்கு உரிமையே கிடையாது."

விவாதங்களில் சிறப்பாக பேசக் கூடியவர் கலைஞர். ஒருமுறை சட்டசபையில், "தாழ்த்தப்பட்ட மக்களுக்கு கருவறைக்குள் செல்ல உரிமை இல்லையே" என்று வாதாடினார். "கோயிலுக்கே போகாத கருணாநிதிக்கு இதுபற்றிய கவலை எதற்கு?" என்றனர் காங்கிரஸ் கட்சியினர். "கொலை செய்தவர்கள் மட்டுமா கோர்ட்டுக்கு போகிறார்கள். வாதாடுபவர்களும் தானே போக வேண்டும்" என்று மக்கள் உரிமைக்காக போராடியவர் கலைஞர்.

"புத்தகத்தில் உலகத்தை படித்தால் அறிவு செழிக்கும்; உலகத்தையே புத்தகமாக படித்தால் அனுபவம் தழைக்கும்."

உலகத்தையே புத்தகமாக படித்தவர்களில் கலைஞரை விட திறமைசாலிகள் எவரேனும் உளரோ? மற்றவர்களைப் படிப்பதிலும் கணிப்பதிலும் சிறந்து விளங்கியதால் மட்டுமே கலைஞர் இத்தனை வருடங்கள் வெற்றித் தலைவராக வலம் வர முடிந்தது.

இதுபோன்று அவர் நமக்கு விட்டுச்சென்ற பாடங்கள் நிறைய. இந்தச் சூரியன் இன்னும் ஒளிவீசும் நம் உள்ளத்தில்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP