கோயில் நிலங்கள் என்ன கடைத் தேங்காயா?

மறைந்த முதல்வர் ஜெயலலிதா தயவால் கோயில்களில் ஒரு கால பூஜை தான் நடக்கிறது. தமிழக அரசு சொல்லி இருப்பது போல பட்டாவழங்கினால், அந்த ஒரு கால பூஜைகூட நின்று விடும்.
 | 

கோயில் நிலங்கள் என்ன கடைத் தேங்காயா?

கோயில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம் என்றார் ஒளவையார். இந்தியாவில், குறிப்பாக தமிழகத்தில் கோயில்கள் வழிபாட்டு தலமாக இல்லாமல், மக்களின் வாழ்க்கையில் ஒன்றிப் போனது. போர் உள்ளிட்ட இயற்கை பேரிடர் காலங்களில் கோயில்கள் தான் மக்களின் தங்கும் இடம். 

நுால்கள், நடனம் உள்ளிட்ட கலைகள் அறங்கேறிய சமுதாயக் கூடம் கோயில்கள். மன்னர்கள் தங்களின் ஆட்சி சிறப்பை எதிர்கால சந்ததிகள் புரிந்து கொள்ள கோயில் கட்டினார்கள். அவற்றை பராமரிக்க தேவையான நிலங்களை ஒதுக்கீடு செய்தார்கள். 

இறையீலி நிலங்கள் என்று அவை அழைக்கப்பட்டன. சதுர்வேதி மங்கலம் என்ற ஊர்கள் எல்லாம் பிராமணர்களுக்கு தானம் வழங்கப்பட்ட ஊர்கள். பிராமணர்கள் என்று அல்லாமல் அனைத்து ஜாதியினரும்  கோயில் பணிகளில் பங்கெடுத்தனர். அவர்கள் அனைவருக்கும் நிலங்கள் தானமாக வழங்கப்பட்டன.

இதைத் தவிர வாரிசுகள் இல்லாத சொத்துக்கள் கோயிலுக்கு எழுதி வைக்கப்பட்டன. வாரிசுகளுக்கு சொத்துக்களை எழுதி வைக்க விரும்பாதவர்கள் தங்கள் சொத்துக்களை கோயிலுக்கு எழுதி வைத்துவிடுவார்கள். ஈவே ராமசாமியின் தந்தை கூட, பெரும்பாலான சொத்துக்களை பிள்ளையார் கோயிலுக்கு எழுதி வைத்து விட்டதாக கூறுவார்கள்.

இப்படித்தான் தமிழக கோயில்களில் சொத்துக்கள் சேர்ந்தன. அந்த நிலங்களை அரசோ, அல்லது அதில் இருந்து வந்த வருமானத்தை கொண்டு அறநிலையத் துறையோ வாங்கி சேர்த்தது அல்ல. அவற்றை பாராமரிப்பது மட்டும் தான் அறநிலையத்துறையின் வேலை.

ஆனால் ஆண்டவனையே நம்பாத இந்த பகுத்தறிவுவாதிகள் கண்களை எப்போதும் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள நிலங்கள் கண்ணை  உறுத்திக் கொண்டே இருக்கிறது. இதன் காரணமாக தான் அதிமுக அரசு கோயில் நிலங்களில் 5 ஆண்டுகளுக்கு மேல் வசிப்பவர்களுக்கே பட்டா வழங்கப்படும் என்று கடந்த ஆக. 30ம் தேதி அறிவித்தது. 

கடந்த 8 ஆண்டுகளாக இவர்கள் தான் ஆட்சி செய்கிறார்கள். அதற்கு முன்பு திமுக ஆட்சிதான். அதனால் கோயில் சொத்துக்களை அனுபவிப்பவர்கள் யார் என்று வெட்ட வெளிச்சமாக தெரியும். உண்மையில் கோயில் சொத்துக்கள் எவ்வளவு என்று இன்றைய நிலையில் யாருக்கும் தெரியாது. பல கோயில்களிலேயே வழிபாடு நின்றுவிட்ட நிலையில் அவற்றின் சொத்துக்கள் எது என்று அறிந்து கொள்வது எப்படி?

ஆனால் கணக்கில் உள்ள கோயில் சொத்துக்களை பார்க்கும் போதே கண்ணைக் கட்டுகிறது. அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் 56 மடங்கள், 58 மடங்களுடன் இணைந்த கோயில்கள், 36, 488 கோயில்கள் உள்ளன. இதன் பராமரிப்பில் 4,78,347.94 ஏக்கர் நிலம் கட்டுப்பாட்டில் உள்ளது. ஆனால் இந்த துறையின் மெத்தனம்,அரசியல் தலையீடு இன்ன பிற காரணங்களால் வெறும் 56.68 கோடி ரூபாய் தான் வருமானமாக உள்ளது.

2011ம் ஆண்டு கணக்குப்படி அமிர்தான்ஜன் நிறுவனம் மட்டும், கபாலீசுவரர் கோயிலுக்கு 6 கோடி ரூபாய் பாக்கி வைத்துள்ளது. இது போல தமிழகம் முழுவதும் உள்ள பிரபல கோயில்களில் வருமான பாக்கி மட்டும் ஆயிரக்கணக்கான கோடிகள் பெறும்.

இதைத் தவிர தற்காலிகமாக கோயிலுக்கு சொத்தைஎழுதிவைத்தால் அவற்றை பதிவு செய்து கொள்ள கூட அறநிலையத்துறை முன் வருவதில்லை.கடந்த 2003ம் ஆண்டு மார்ச் மாதம் கொடைக்கானலை சேர்ந்த வி. என்.ஏ.எஸ் சந்திரன் என்பவர் ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புக் கொண்ட தன் சொத்துக்களை பழனி முருகன் கோயிலுக்கு எழுதி வைத்தார். அதை அறநிலையத்துறை முறைப்படி பதிவு செய்யக் கூட முன்வரவில்லை என்பது இவர்கள் செயலுக்கு ஒரு உதாரணம்.

இப்படி பட்டவர்கள் தான் தற்போது 5 ஆண்டுகளுக்கு மேல் கோயில் நிலங்களில் வசிப்பவர்களுக்கு பட்டா வழங்கும் திட்டத்தை அறிவித்துள்ளனர். இதன்படி பார்த்தால், உண்டியல் வருமானம் தான் கோயில் வருமானம் என்றாகிவிடும். தற்போதே மறைந்த முதல்வர் ஜெயலலிதா தயவால் கோயில்களில் ஒரு கால பூஜை தான் நடக்கிறது. தமிழக அரசு சொல்லி இருப்பது போல பட்டாவழங்கினால், அந்த ஒரு கால பூஜைகூட நின்று விடும்.

அறநிலையத்துறை கோயில் நிலங்களில் வசிப்பவர்கள், வாடகைக்கு வசிப்பவர்கள் குறித்து வெளிப்படையாக விளம்பரம் செய்து, அவர்களை காலி செய்ய கூற வேண்டும். அல்லது, கோயில் நிலங்களில் தனியார் செய்துள்ள மாற்றங்களை ஏற்று அதற்கு உரிய தொகையை தனி நபர்களுக்கு வழங்க முன்வர வேண்டும். 

அதை விடுத்து பட்டா வழங்கும் நவடிக்கை மேற்கொள்ளது முறைகேடானது. இதை எதிர்க்க வேண்டிய இந்துக்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தால். கடவுளே கூட அவர்களை மன்னிக்க மாட்டார். சிலர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இதற்கு கோர்ட் என்ன வேண்டுமானாலும் தீர்ப்பு அளிக்கலாம். ஆனால் ஆண்டவன் தீர்ப்பு நேர்மையாக இருக்கும். அதை அனுபவிக்கும் போதுதான் கோயில் சொத்து குலநாசம் என்பது அனைவருக்கும் அறிந்து கொள்ள முடியும்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP