நினைப்பு தான் பொழப்பை கெடுக்கும் ஸ்டாலின்...!

(கடந்த 24ஆம் தேதியோடு, ஆர்கேநகர் இடைத்தேர்தலில் திமுக, எட்டுக் கட்சிகளோடு கூட்டணி அமைத்து வெற்றிகரமான தோல்வியைச் சந்தித்து, ஓராண்டு நிறைவடைந்ததை நினைவுகூறும் வகையில் எழுதப்பட்டது இக்கட்டுரை)
 | 

நினைப்பு தான் பொழப்பை கெடுக்கும் ஸ்டாலின்...!

நினைப்புதான் பொழப்பை கெடுக்கும் என்று ஒரு பழமொழி உண்டு. தமிழ் அறிஞரின் பிள்ளையான ஸ்டாலினுக்கு இதன் பொருள் தெரியாது என்று நிரூபித்தது ஆர். கே நகர் இடைத்தேர்தல்

ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் வலுவான எதிரி இல்லாத தேர்தல் களம் ஆர்கே நகர். இதில் திமுக எளிதில் வெற்றி பெற்று இருக்க வேண்டும். அதற்கு பதிலாக 3ம் இடத்தைதான் பிடிக்க முடிந்தது. அதனால் திமுக பாடம் கற்றதா என்பது பற்றி இன்றளவும் தெரியவில்லை. எவ்வளவு எளிதான வெற்றியை பறி கொடுத்ததிருக்கிறார்கள் என்பதை அறிந்து திமுக தொண்டர்கள் இன்றும் கூட வருந்திக் கொண்டு தான் இருக்கிறார்.

ஜெயலலிதா இறந்ததால் காலியான ஆர்கே நகருக்கு நடைபெற்ற இடைத்தேர்தல் இது . இந்த செண்டிமெண்ட் அதிமுகவிற்கு சாதகமாக இருந்திருக்கலாம் என்ற கருத்து சரி என்றால் கூட திமுக 2வது இடத்தை பிடித்து இருக்க வேண்டும். ஆனால் அதிலும் கோட்டை விட்டு விட்டதால் தான் ஸ்டாலின் திறமையின் மீது சந்தேகம் வருகிறது.

முதன்முதலில் ஆர்கே நகருக்கு இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்ட உடனேயே திமுக வலுவான வேட்பாளரை களம் இறக்கி தேர்தல் வேலைகளை தொடங்கி இருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு எதுவும் செய்யவில்லை. அவ்வளவாக பரிச்சயம் இல்லாத வேட்பாளரையே நிறுத்தியது. அதிலும் அமைச்சர்கள் அனைவருமே களம் இறங்கி தினகரனுக்கு ஆதரவாக வேலை செய்தார்கள். இதை பார்த்தாவது திமுக தன் முனைப்பை கூட்டி இருக்க வேண்டும். ஆனால் வழக்கமான பணியில் கூட தேர்தல் பணியை தொடங்கவில்லை. பணம் கரை புரண்டு ஓடியது. அமைச்சரிடமே 90 கோடி ரூபாய் வரை தேர்தல்  செலவுகள் செய்தது தொடர்பான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதையடுத்து தேர்தல் ஆணையம் அந்தத் தேர்தலையே ரத்து செய்தது.

அப்போதாவது திமுக விழித்துக் கொண்டிருக்க வேண்டும். அவ்வாறு இல்லாமல் அதீத மிதப்பில் மக்களுக்கு நம்மை விட்டால் ஓட்டுப் போட யார் இருக்கிறார் என்று சிந்தித்தது தான் தோல்விக்கு முக்கிய காரணம்.

இரண்டாவது முறை தேர்தல் நடந்த போது அதிமுகவில் மதுசூதனன், சுயேட்சையாக டிடிவி தினகரன் என்று எதிரிகள் இரண்டாக பிரிந்தனர். அந்த நிலையில் திமுக வலுவான வேட்பாளர் ஒருவரை,  தோற்றால் அவமானம் என்று கருதுபவரை, களம் இறக்கி இருக்க வேண்டும். அதற்கு பதிலாக பாவம் மருது கணேஷ் களம் இறங்கினார். அவரை வேட்பாளர் என்று அறிவித்ததுமே, இந்த தேர்தலில் திமுக வெற்றி பெற விரும்பவில்லை என்பது வெளிப்பட்டது. அதோடுகூட திமுக எட்டு கட்சிகளோடு இணைந்து இந்தத் தேர்தலை சந்தித்தது. இடைத்தேர்தலுக்கு கூட்டணி கட்சிகளை நம்பி ஸ்டாலின் களத்தில் இறங்கினால், கடைத் தொண்டனுக்கு தலைவர் மீது எந்த அளவிற்கு நம்பிக்கை உயரும். இதுகூட அறியாதவரா ஸ்டாலின் என்ற எண்ணம் நமக்கு ஏற்படுவதை மறுக்க முடியாது.

அதிகார போட்டியில் வாழ்வா சாவா என்று அதிமுகவின் இரு அணிகளும் பணத்தை அள்ளி இறைத்தார்கள். ஆனால் திருமங்கலம் பாணியை அறிமுகம் செய்த திமுக இதில் வெறுமனே கைகட்டி வேடிக்கை பார்த்தது. அவர்கள் பணம் கொடுக்கிறார்கள். இவர்கள் மட்டும் என்ன சம்பாதிக்காமலா இருக்கப் போகிறார்கள், அவர்களாவது முதல் போட்டு லாபம் பார்க்க முயற்சிக்கிறார்கள், இவர்கள் என்ன வெறும் கையோட வந்துவிட்டு அல்லவா, வெல்லம் திங்க பார்க்கிறார்கள் என்ற நினைப்பை தான், திமுக மீது மக்களுக்கு ஏற்படுத்தியது. அதனால் தான் டெப்பாசி்ட் கூட வாங்க முடியாத நிலைக்கு திமுக இங்கு பலத்த அடி வாங்கியது.

இன்னும் சிலர் இந்த தேர்தலில் திமுக வெற்றி பெறுவதை காட்டிலும், தினகரன் வெற்றி பெற்றால் ஆட்சியில் குழப்பம் வரும், நாம் அதில் பலன் பெறலாம் என்ற நினைப்பில் ஸ்டாலின் இருந்ததாக கூறுகிறார்கள். அதனால் தான் தேர்தல் வேலையை சரியாக கவனிக்க வில்லை என்று திமுகவின் தோல்விக்கு சப்பைக் கட்டு கட்டுகிறார்கள். ஆர்கே நகர் தேர்தல் முடிந்து, இன்றோடு ஓராண்டு நிறைவடைந்த நிலையில் கூட ஸ்டாலின் எதிர்பார்த்ததாக சொல்லப்படும் குழப்பம்,. அதிமுகவிற்குள் ஏற்படவில்லை. அதிமுக அணிகளுக்குள் ஏற்படும் சிறு சிறு மோதல்கள் கூ.ட திமுக விற்கு சாதகமாக அமையவில்லை. அல்லது அதனை சாதகமாக்கி கொள்ளும் சாமர்த்தியம் ஸ்டாலினிடம் இல்லை. ஒரே ஒரு .தொகுதி தேர்தலையே சமாளிக்க முடியாமல் டெப்பாசிடை பறி கொடுத்த திமுக குறிப்பாக ஸ்டாலின் இதே நினைப்புடன் பயணித்தால் லோக்சபா தேர்தலிலும் பல இடங்களில் டெப்பாசிட் தேறாது. ஆனால் ஸ்டாலின் நடவடிக்கை இன்னும் மாறாதது போலவே இருக்கிறது. நினைப்புதான் பொழப்பை கெடுக்கும் என்பதை சீக்கிரம் புரிந்து கொள்வது திமுகவிற்கும், அதன் தோளில் ஏறி உட்கார்ந்து வெற்றிக் கனியைக் கொய்யக்  காத்திருக்கும் கூட்டணி கட்சிகளுக்கும் நல்லது.

(கடந்த 24ஆம் தேதியோடு, ஆர்கேநகர் இடைத்தேர்தலில் திமுக, எட்டுக் கட்சிகளோடு கூட்டணி அமைத்து வெற்றிகரமான தோல்வியைச் சந்தித்து, ஓராண்டு நிறைவடைந்ததை நினைவுகூறும் வகையில் எழுதப்பட்டது இக்கட்டுரை)

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP